பாரதி போற்றி ஆயிரம் – 12 (Post No.4528)

Date: 22  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-50 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4528

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

  பாடல்கள் 83 முதல் 87

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 83 முதல் 87

பாரதிக்கு வெற்றி மாலை

 

சுப்ரமண்ய பாரதிக்கு வெற்றிமாலை சூட்டுவோம்

சொன்னவாக்குப் பின்னமின்றிச் சொந்தஆட்சி நாட்டினோம்
இப்ரபஞ்ச மக்கள்யாரும் இனியவாழ்த்துக் கூறவே

இன்றுநந்தம் பரததேவி ஏற்றபீடம் ஏறினாள்.

சுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்

சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி

சத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.

ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை

அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்
பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்

பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ?

அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்

அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்
கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மைஎண்ணம் மாற்றினான்

கேடிலாது மோடிசெய்யும் காந்திமார்க்கம் போற்றினான்.

அமைதிமிக்க தமிழ்மொழிக்கிங் காற்றல்கூட்ட நாடினான்

அறிவுமிக்க தமிழர்தங்கள் அச்சம்போக்கப் பாடினான்
சமதைகண்டு மனிதருக்குள் ஜாதித்தாழ்வை ஏசினான்

சமயபேதம் இல்லையென்ற சத்தியத்தைப் பேசினான்.

 

 

நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

பாரதி போற்றி ஆயிரம் – 11 (Post No.4524)

Date: 21  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-33 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4524

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 11

  பாடல்கள் 75 முதல் 82

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

        நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 75 முதல் 82

 

பாரதி ஓர் ஆசான்

 

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளிப்

பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையே நீக்க
உற்றடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்

வுலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய்’ என்று

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட

தெய்வகவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.

அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே

அடிமைமனம் கொண்டிருந்த அச்சம் போக்கி
வெஞ்சமரில் வேல்பகைவர் வீசி னாலும்

விழித்தகண்ணை இமைக்காத வீரன் போல
நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி

நேர்மையுடன் சுதந்தரத்தை நினைக்கச் செய்து
விஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த

வித்தகனாம் பாரதிஓர் ஆசான் மெய்தான்.

சாதிமதச் சழக்குகளைப் பற்றிக் கொண்டு

சமுதாயம் சீரழியும் தன்மை போக்க
நீதிநெறி நிறைந்தகுண ஒழுக்க வாழ்க்கை

நீங்காது நிற்பவரே மேலோர் என்னும்
போதனையே மூச்சாகப் பொழுதும் பாடிப்

புதுயுகத்தை நம்முளத்தில் புகுத்தி வைத்த
சாதனையால் எப்போதும் எல்லா ருக்கும்

சத்தியமாய்ப் பாரதிஓர் ஆசான் தானே!

கண்ணிரண்டில் ஒருகண்ணைக் கரித்தாற் போலும்

கைகால்கள் இரண்டிலொன்றைக் கழித்தாற் போலும்
பெண்ணினத்தை ஆணினத்திற் குறைந்த தாகப்

பேசிவந்த நீசகுணம் பெரிதும் நீங்கப்
பண்ணிசைக்கும் மிகப்புதுமைக் கவிகள் பாடிப்

பாவையரைச் சரிநிகராய்ப் பாராட் டும்நல்
எண்ணமதை நம்மனத்தில் இருக்கச் செய்த

ஏற்றத்தால் பாரதிஓர் ஆசான் என்போம்.

‘மனைவிமக்கள் சுற்றத்தார் மற்றும் இந்த

மாநிலத்தில் காணுகின்ற எல்லாம் மாயை’
எனவுரைக்கும் கொள்கைகளின் இழிவைக் காட்டி

இல்லறத்தில் தெய்வஒளி இருக்கச் செய்தால்
நினைவிலுறும் முத்தியின்பம் தானே வந்து

நிச்சய்மாய் நம்மிடத்தில் நிற்கும் என்ற
புனிதமுள்ள தமிழறிவைப் புதுக்கிச் சொன்ன

புலவன்அந்த பாரதிநாம் போற்றும் ஆசான்.

உழைப்பின்றி உண்டுடுத்துச் சுகித்து வாழும்

ஊதாரி வீண்வாழ்க்கை மிகுந்த தாலே
பிழைப்பின்றி வாடுகின்ற ஏழை மக்கள்

பெருகிவிட்டார் நாட்டிலெனும் உண்மை பேசித்
தழைப்பின்றிப் பலதொழிலும் தடைப்பட் டேங்கத்

தானியங்கள் தருகின்ற உழவும் கெட்டுச்

செழிப்பின்றி வாழ்கின்றோம் இதனை மாற்றும்
செய்கைசொன்ன பாரதிஓர் சிறந்த ஆசான்.

கொலைமேவும் போர்வழியை இகழ்ந்து கூறிக்

கொல்லாமை பொய்யாமை இரண்டும் சேர்ந்த
கலைவாணர் மெய்த்தொண்டர் கருதிப் போற்றும்

காந்திஎம்மான் அருள்நெறியைக் கனிந்து வாழ்த்தும்
நிலையான பஞ்சகத்தைப் பாடித் தந்து

நித்தநித்தம் சன்மார்க்க நினைப்பைக் காட்டும்
தலையாய தமிழறிவை நமக்குத் தந்த

தவப்புதல்வன் பாரதிஓர் ஆசான் தானே!

தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்

தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்

இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி

அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்

ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.

 

நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 10 (Post No.4520)

Date: 20  DECEMBER 2017

 

Time uploaded in London- 8-19 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4520

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 10

  பாடல்கள் 62 முதல் 74

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 62 முதல் 74

பாரதி எனும் பெயர் !

பாரதி எனும்பெயரைச் சொல்லு–கெட்ட

பயமெனும் பகைவனை வெல்லு.
நேரினி உனக்குநிகர் இல்லை–உடன்

நீங்கும் அடிமைமனத் தொல்லை.

சுப்ரமண்ய பாரதியின் பாட்டு–பாடிச்

சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.
ஒப்பரிய தன்மதிப்பை ஊட்டும்–அதுவே

உன்பலத்தை நீஉணரக் காட்டும்.

துள்ளிக் குதித்துவரும் சந்தம்–செயல்

தூண்டித் துணைபுரியச் சொந்தம்.
அள்ளிக் கொடுத்தபெரும் உறவோன்–நம்

அருமைப் பாரதியை மறவோம்.

அன்பு நிறைந்ததமிழ் மொழியில்–செயல்

ஆண்மை குறைந்ததெனும் வழியின்
தென்பு மறைந்துழன்ற போதில்–நல்ல

தீரம் கொடுக்கவந்த தூதன்.

அமைதி குலவும்தமிழ்ச் சொல்லில்–பல

ஆற்றல் புகுத்திவிட்ட வல்லன்
நமது பாரதியின் பாட்டே–தமிழ்

நலத்தைக் காக்கும்ஒரு கோட்டை.

இனிமை யான தமிழ்ப் பா¨–அதில்

‘இல்லை வேகம்’ எனும் ஓசை.
முணகிப் பேசும்ஒரு வகையை–வென்று

முழங்கும் பாரதியின் இசையே.

முன்னோர் பெருமைமட்டும் பேசிப்–புது

முயற்சி ஒன்றுமின்றிக் கூசிச்
சின்னா பின்னமுற்று வாடும்–நாம்

சீர்திருந்தக்கவி பாடும்.

அடிமைப் படுகுழியில் வீழ்ந்தோம்–வெறும்

அரிசிப் புழுக்களெனத் தாழ்ந்தோம்.
கொடுமை கண்டுமனம் கொதித்தான்–கவி

கொட்டி வீரியத்தை விதைத்தான்.

ஊனைப் பெரியதெனக் கொண்டோம்–ஆன்ம

உணர்வை விற்றுருசி கண்டோம்.
மானம் போகும்என்ற நிலமை–தனை

மாற்றும் பாரதியின் புலமை.

பண்டைச் சிறப்புகளைப் பாடிக்–கிழப்

பாட்டிகள் கூட்டமெனக் கூடி
அண்டிப் பதுங்கிவிட்ட நாட்டில்–நவ

ஆர்வம் வளர்த்தவன் பாட்டே.

தீரன் அறிவுரையை இகழ்ந்து–வெறும்
திவசம் நடத்திமட்டும் மகிழ்ந்து,
பேரைக் கெடுத்துவிட மாட்டோம்–எனும்
பிரதிக்ஞை பூண்டுவரம் கேட்போம்.

கவிஞன் வாக்குறுதி பலிக்கும்–நம்

கவலை தீர்ந்துநலம் ஜொலிக்கும்
புவியில் கீர்த்தியுடன் வாழ்வோம்–வெகு

புதுமை யாகஅர சாள்வோம்.

வாழ்க பாரதியின் அருமை–அதில்

வளர்க தாய்மொழியின் பெருமை.
வாழ்க வையகத்தில் யாரும்–பிணி

வறுமை அச்சமற்று வாழ்க.

***

 

நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 9, நாமக்கல் கவிஞர் பாடல்கள் (Post No4514)

Date: 19  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-58 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4514

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 9

  பாடல்கள் 52 முதல் 61

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 52 முதல் 61

 

 

பாரதி பாட்டு

 

அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்

அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்

பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,
‘நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை

நீக்காமல் விடுவதில்லை!’ எனமுன் வந்து
துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்

தூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.

படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்

பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்

துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,
‘எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை

இப்பொழுதே இக்கணமே!’ என்றென் றார்த்திங்(கு)
அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்

அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்!

புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்

புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்
சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே

தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி
எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி

‘இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!’ என்று
பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்

பண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.

எத்தாலும் பணந்தேடி இன்பம் நாடி

உண்டுடுத்தே இறப்பதனை இகழ்ந்து தள்ளிப்
பித்தாகித் தான்பிறந்த பரத நாட்டின்

பிணிவீட்டல் ஒன்றினுக்கே பாடிப் பாடி
முத்தாதி மணிகளெனும் சொற்க ளோடு

முப்பழத்தில் சுவைகூட்டி முனிவி லாது
சத்தான வீரத்தின் சாறும் சேர்த்துக்

கவிசமைத்த பாரதியின் தகைமை என்னே!

நடித்தொழுகித் துதிபாடி நலங்கள் நாடி

நரைத்திறந்து மறைந்திடும்நா வலர்போ லன்றி
வெடித்தெழுந்த பக்தியோடு பரத நாட்டின்

விடுதலைக்குப் பாடுவதே வெறியாய்க் கொண்டான்
இடித்தெழுந்து தேன்பொழியும் சொற்க ளோடும்

இளங்கதிரும் முழுமதியும் இணைந்தா லென்னப்
பொடித்துடலம் புளகமுற அச்சம் போக்கிப்

புகழ்புரியும் பாரதியின் புலமை தானே.

‘மேனாட்டுப் புதுமொழிகள் வளர்ந்து நாளும்

மிகக்கொழுத்துப் பளபளத்து மேன்மை மேவ

மிக்கசுதைப் பழந்தமிழ்த்தாய் மெலிந்தா’ளென்றும்
தாய்நாட்டைத் தமிழ்மொழியை மறந்தீர் ஐயோ!

தமிழர்களே! தளதளத்து மூச்சு வாங்கித்

தலைவணங்கி உடல்சுகித்தீர் தவத்தால் மிக்க
வானாட்டுத் தேவர்களும் அறிந்தி டாத

வளமிகுத்துச் செழுசெழுத்து வாழ்ந்த நாட்டை

வறுமைதரும் அடிமையினில் வைத்தீ ரென்று
பாநாட்டிப் பலவழியிற் பாடிப் பாடிப்

படித்தவுடன் பதைபதைக்க வீர மூட்டும்

பாரதியின் பாடல்களின் பண்தான் என்னே!

“பாலொழுகும் சிறுகுதலை மகனைப் பார்த்துப்

‘படையெடுத்தார் பகையாளர்; மகனே! நீபோய்
வேலொழுகும் போர்களத்தில் வெல்வா யன்றேல்

வெம்படையை மருமத்தில் வாங்கென்’ றேவும்
சீலமிகும் பெண்மணிகள் திகழ்ந்த நாட்டைச்

சிற்றடிமைக் கொப்பிவிற்றுத் தின்றீர்!” என்று
தாலுழுது பறைசாற்றித் தமிழ்ப்பா வோதித்

தட்டியெழப் பாரதிதான் கவிசெய் தானே!

‘அருமகனைத் தேர்க்காலில் அரைத்த வேந்தும்

பழியஞ்சித் தன்கையை அரிந்த கோனும்
தருமமிலை கோவலனைக் கொன்ற தென்று

தானறிந்த அக்கணமே சவமாய் வீழ்ந்த
பெருமையுள்ள திறல்வேந்தர் பின்னே வந்தீர்

பித்தடிமைக் குற்றேவல் பிழைத்தீர்’ என்றே
உருகிமனம் விரிந்துயரும் கவிக களாலே

உணர்வளித்த பாரதியின் உரைதான் என்னே!

பாரிமுதற் சடையப்ப வள்ள லென்று

பாவலர்கள் நாவிலுறை பலபேர் வாழ்ந்து
சீரிலகும் தமிழ்மொழியின் இனிய ஓசை

திசையனைத்தும் போயலிக்கச் செய்த நாட்டில்
ஊறியநற் சுவையழுகும் கவிக ளாலே

ஊக்கமிகத் தமிழ்நாட்டிற் குணர்வைத் தந்த
பாரதியார் மிகக்கொடிய வறுமை மேவப்

பார்த்திருந்த தமிழுருற்ற பழிதான் என்னே!

சோற்றினுக் கறிவை விற்றுத்

தூர்த்தரைப் புகழ்ந்து பாடிச்
சோம்பரைச் செல்வ ரென்று

தொழுதுடல் சுகித்து வாழ்ந்து
கூற்றினுக் குடலம் போகக்

குப்பையிற் கவிகள் சோரக்
குறிவிடா திறந்து போகும்

கவிகளின் கூட்டம் சேரார்
வேற்றவர்க் கடிமை நீங்கும்

விடுதலை வரமே வேண்டி
வீரமும் ஞானம் பொங்கச்

சக்தியின் வேள்வி பாடி
நாற்றிசைத் தமிழ ரெங்கும்

நாட்டினைப் பணியச் செய்த
நாவலர் சுப்ர மண்ய

பாரதி நாமம் வாழ்க!

நாமக்கல் கவிஞர்: நாமக்கல் கவிஞர் என்று நாடறிந்த கவிஞரின் இயற்பெயர் வெ.ராமலிங்கம் பிள்ளை (தோற்றம் 19-10-1888 மறைவு 24-8-1972. பழைய சேலம் மாவட்டத்தில் மோகனூரில் பிறந்தவர். சிறந்த காந்தியவாதி. 1932இல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர். ஏராளமான நூல்களை இயற்றியவர். இவரது கவிதைகள் எளிமையாகவும் சுவையாகவும் பொருள் தெளிவுடனும் இருக்கும். ஆரிய-திராவிட வாதம் பொய் என்று நிறுவிய மாபெரும் தமிழர்.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

வேதங்கள் பற்றி கம்பன் தரும் வியப்பான தகவல் (Post No.4508)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 DECEMBER 2017 

 

Time uploaded in London-  15-37

 

Post No. 4508

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நால் வேதங்கள் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். சில இடங்களில் வேதங்களின் உயர்வு எவ்வளவு என்பதைக் காட்ட அவைகளை உவமையாகவும் பயன்படுத்துகிறான். ஒரு பொருளை உவமையாகப் பயன்படுத்துவதானால் அது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்க வேண்டும். கம்பன் பாடல்களில் இருந்து வேதம் பற்றித் தமிழர்கள் என்ன கருதினர் என்பதை அறிய முடிகிறது. கம்பன் நமக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன்.

 

புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்

என்னும் ஈது அருமறைப் பொருளே

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி

மாதவம் அறத்தொடு வளர்த்தார்

எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்

ஏழ் உலகு ஆள் இடம் என்றால்

ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு பாகம்

உறைவு இடம் உண்டு என உரைத்தல்

——பால காண்டம்

பொருள்

 

இப்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மறு பிறவியில் அடைவது சொர்க்கம் என்று சொல்லப்படும் இச் செய்தி அருமையான வேதங்கள்  கூறும் உண்மைப் பொருளே ஆகும். இவ்வுலகில் இராமனைத் தவிர வேறு யார் தருமத்துடன் சிறந்த தவத்தையும் வளர்த்தார்கள்? நினைப்பதற்கும் அரிய நற்குணங்களின் நாயகனான இராமன், இனிமையாக வீற்றிருந்து இந்த ஏழு உலகங்களையும் ஆளுகின்ற நகரம் அயோத்தி. இதைக் காட்டிலும் சிறந்த எல்லாப் போகங்களுக்கும் இருப்பிடமான வேறோர் உலகம் உள்ளது என்று சொல்ல முடியுமோ முடியாது.

‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ (சுவர்க்கம்)- என்பது அருமையான வாசகம்; இது வேதத்தின் சாரம் என்று கம்பன் மொழிவதும் சிறப்பு.

 

xxxxxxxxxxxxx

காலத்தால் அழியாத மறை!

தாள்படாக் கமலம் அன்ன தடங் கணான் தம்பிக்கு அம்மா

கீழ்ப்படா நின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்

நாட்படா மறைகளாலும் நவைபடா ஞாநத்தாலும்

கோட்படாப் பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான்.

கிட்கிந்தாக் காண்டம், அனுமப் படலம்

பொருள்

காம்பை விட்டு நீங்காத செந்தாமரை மலர்களைப் போல பெரிய கண்களையுடைய இராமன்,  தம்பியான இலக்குவனுக்கு, ஐயனே! கால எல்லைக்குட்படாத, கீழ் நிலைக்குத் தாழாத, ஒளியில் குறைவில்லாத, அழியாத வேதங்களாலும், குற்றம் உண்டாக இடமில்லாத அறிவாலும் கொள்ளப்படாத தத்துவ நிலையே இந்தக் குரங்கின் வடிவத்தில் வந்துள்ளதாகும் என்று இராமன் வியந்து சொன்னான்.

 

அதாவது ‘காலத்தால் அழியாத உயர்ந்த வேதம்’ என்று வேதம் புகழப்படுகிறது.

xxxxx

வேதத்தின் உயர்வு

 

மேவ   அரும் உணர்வு முடிவு இலாமையினால்

வேதமும் ஒக்கும் விண்புகலால்

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்

திண்பொறி அடக்கிய செயலால்

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்

சூலத்தால் காளியை ஒக்கும்

யாவரும் தன்னை எய்துதற்கு அரிய

தன்மையால் ஈசனை ஒக்கும்

 

—–பாலகாண்டம்

 

பொருள்:

அந்த மதில், அறிவினால்  முடிவு காண முடியாதிருப்பதால் வேதங்களை ஒத்திருக்கும்;

விண்ணுலகத்தை எட்டுவதால், தேவர்களை ஒத்திருக்கும்;

போர்ப்பொறிகளை தன்னுள் மறைத்து வைத்திருப்பதால் முனிவர்களை ஒத்திருக்கும்;

காவல் தொழிலில் கலைமானை வாஹனமாக உடைய துர்கா தேவியை ஒத்திருக்கும்;

தன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளியை ஒத்திருக்கும்;

 

யாரும் தன்னை அணுக முடியாத நிலையில் ஈசனை ஒத்திருக்கும்.

 

 

நல்ல கற்பனை! அயோத்தி மாநகரின் மதிலை வர்ணிக்க வந்த கம்பன் அதன் உயர்வு பற்றி ஒப்பிடுகையில் அறிவினால் முடிவே காண முடியாத வேதங்களுக்குச் சமம் என்கிறான்.

 

இந்தப் பாடலில் உள்ள விஞ்ஞான விஷயமான இடிதாங்கி பற்றியும் துர்கையின் வாஹனமான கலைமானுடன் இந்தியா முழுதும் எங்குமே துர்கை சிலை கிடைக்காதது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன். கலைமகளின் வாஹனம் மான் என்று தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் பாடிப் பரவியபோதும் ஓரிடத்திலும் இப்படிப்பட்ட சிலை கிடைக்காதது அதிசயமே. முஸ்லீம் படைகள் அடித்து உடைத்த சிலைகளில் இதுவும் அடக்கம் போலும்.

 

xxxxxxxxxxxx

வேதம் பொய்க்குமோ?

 

அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்

நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே

வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ

இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்

சடாயு உயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம்

 

பொருள்:

துன்புற்ற என்னிடம் வந்து அஞ்சாதே என்று தைரியம் சொன்னவனான ஜடாயு தோல்வி அடைவதா? நரகத்துக்கு உரியவனான  இராவணன் வெற்றி அடைவதா?  தருமம் வெல்லும் என்று வேதங்கள் கூறுவது பொய்யாகுமோ? பாவம் வெற்றி பெறுமா? இந்த ஊரில் தர்மம் என்பது இல்லாமல் போய்விட்டதா? என்று சீதை புலம்பினாள்

 

இதில் நாம் கவனிக்க வேண்டியது ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற கருத்தாகும். இதைக் கம்பன் மேலும் சில இடங்களில் வலியுறுத்துகிறான். இது வேதம் சொல்லும் கருத்து என்பது இந்துக்களின் நம்பிக்கை.

xxxxx

வேத பாராயணம்

கிட்கிந்தா காண்டத்தில் கிட்கிந்தைப் படலத்தில் ஒரு காட்சி வருகிறது:

அருக்கிய முதல வான அருச்சனைக் கமைந்தயாவும்

முருக்கிதழ் மகளிர் ஏந்த முரசு இனம் முகிலின் ஆர்ப்ப

இருக்கு இனம் முனிவர் ஓத இசை திசை அளப்பயானர்த்

திருக்கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான்

 

பொருள்:

கலியாண முருக்க மலரைப் போன்ற சிவந்த உதடுகளை உடைய வானர மகளிர் , அர்க்யம் முதலாக உள்ள அர்ச்சனைக்கு அமைந்த அனைத்தையும் கைகளில் ஏந்தி வரவும், பேரிகை முதலிய கருவிகள் இடி போல ஒலிக்கவும்,  முனிவர்கள் இருக்கு வேதம் முதலான நால் வேதங்களையும் பாராயணம் செய்தபடி வரவும், இசை எல்லாத் திசைகளிலும் பரவும், புதிய செல்வச் சிறப்பைக் கண்டு தேவர்களும் திகைக்குமாறு, சுக்ரீவன், இலக்குவனின் எதிரில் சென்றான்.

 

வானர சாம்ராஜ்யத்திலும் வேத பாராயணம் செய்யும் முனிவர்கள் இருந்ததும், அவர்கள் நாகரீகமிக்க சமுதாயத்தில் உள்ளதைப் போலவே மன்னன் பவனியில் வேத பாராயணம் செய்தவாறு வந்தனர் என்பதும் நல்லதொரு காட்சி.

 

எங்கள் மதுரையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருவீதி உலா வருகையில் இது போல பிராமணர்கள் வேத பாராயணம் செய்தவாறு வருவர். பின்னால் ஓதுவா மூர்த்திகள் தேவாரம், திருவாசகத்தை ஓதியவாறு வருவர்.இது கிட்கிந்தையிலும் நடந்தது!

 

 

உபநிடதம், வேதாந்தம் பற்றியும் பல பாடல்களில் பேசுகிறான் கம்பன்; அவைகளைத் தனி ஒரு கட்டுரையில் தருவேன்.

TAGS:– கம்பன், வேதம், உவமை, உயர்வு, பொய், நாட்படா மறை

 

–SUBHAM—

பாரதி போற்றி ஆயிரம் – 7 (Post No.4505)

Date: 17  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-18 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4505

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 37 முதல் 42

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாடல்கள் 37 முதல் 42

37

தேன்கவிகள் தேவை

பொழுது விடியப் புதுவையி லோர்வீட்டில்
விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து
மாடிக்குப் போவார்; கடிதங்கள் வந்திருக்கும்.
வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்.
சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார்.
முன்னால் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படித்ததுண்டா இல்லையா என்று
வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை.

அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளறுகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச் சுடர்க்கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவதுண்டோ நாங்கள்பெரும் பாக்கியத்தை?
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம்
போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்.
தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார்.
மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட் டரைஇருக்கும்
கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்.
பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்.
சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியின்
ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும்.
வாசித்தார் ஐயர், மலர்முகத்தில் வாட்டமுற்றார்.
“என்னை வசனமட்டும் நித்தம் எழுதென்று
சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்.
பாட்டெழுத வேண்டாமாம்; பார்த்தீரா அன்னவரின்
பாட்டின் பயனறியாப் பான்மையினை” என்றுரைத்தார்.

பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் `சோர்வெ’ன்னும்
காரிருளில் கால்வைத்தார்; ஊக்கத்தால் மீண்டுவிட்டார்.
“பாட்டின் பயனறிய மாட்டாரோ நம்தமிழர்?
பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?”
என்று மொழிந்தார், இரங்கினார், சிந்தித்தார்
“நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை”என்றார்.

நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின்
பாட்டின் சுவையறிவோர் பற்பலபே ராகிவிட்டார்.
ஆங்கிலம் வல்ல கசின்ஸ்என்னும் ஆங்கிலவர்
“நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை
ஆங்கிலத்தில் ஆக்கி அகிலஅரங் கேற்றுகின்றேன்
பாங்காய் எனக்குநல்ல பாட்டெழுதித் தாருங்கள்”
என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
அன்றளித்தார். எம்மை அபிப்பிரா யம்கேட்டார்.
“வேண்டும் எழுதத்தான் வேண்டும்”என்றோம். பாரதியார்,
“வேண்டும்அடி எப்போதும் விடுதலை” என்
றாரம்பஞ் செய்தார்; அரைநொடியில் பாடிவிட்டார்.
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வெளியாகித்
தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின்
கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ்விளைத்தே
எண்ணூறாண் டாய்க்கவிஞர் தோன்றவில்லை இங்கென்ற
வீ.வீ.எஸ்.ஐயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
ஆங்கிலவர் பாரதியின் ஆர்ந்த கவித்தேனை
வாங்கியுண்ணக் கண்டபின்னர் வாயூறிச் சென்னைத்
தினசரியின் ஆசிரியர் “தேவையினித் தேவை,
இனியகவி நீங்கள் எழுதுங்கள்” என்றுரைத்தார்;
தேவையில்லை என்றுமுன் செப்பிட்ட அம்மனிதர்
தேவையுண்டு! தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!
“தாயாம் தமிழில் தரும்கவியின் நற்பயனைச்
சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
அயலார் சுவைகண் டறிவித்தார், பின்னர்
பயன்தெரிந்தார் நம்தமிழர்” என்றுரைத்தார் பாரதியார்.
நல்ல கவியினிமை நம்தமிழர் நாடுநாள்
வெல்ல வருந்திரு நாள்.

பாடல்கள் 38 முதல் 41

பாரதி உள்ளம்

சாதி ஒழிந்திடல் ஒன்று – நல்ல

தமிழ் வளர்த்தல்மற் றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்

பாதி துலங்குவ தில்லை.
சாதி களைந்திட்ட ஏரி – நல்ல

தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே – நல்ல

தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார்என் னிடத்தில் – அந்த

இன்ப உரைகளென் காதில்
இன்றும் மறைந்திட வில்லை – நான்

இன்றும் இருப்பத னாலே!
பன்னும்நம் பாரதி யாரின் – நல்ல

பச்சைஅன் புள்ளத்தி னின்று
நன்று பிறந்தஇப் பேச்சு – நம்

நற்றமிழர்க் கெழில் மூச்சு!

மேலவர் கீழவர் இல்லை – இதை

மேலுக்குச் சொல்லிட வில்லை
நாலு தெருக்களின் கூட்டில் – மக்கள்

நாலா யிரத்தவர் காணத்
தோலினில் தாழ்ந்தவர் என்று – சொல்லும்

தோழர் சமைத்ததை உண்பார்.
மேலும்அப் பாரதி சொல்வார் – “சாதி

வேரைப் பொசுக்குங்கள் என்றே.

செந்தமிழ் நாட்டினிற் பற்றும் – அதன்

சீருக்கு நல்லதோர் தொண்டும்
நிந்தை இலாதவை அன்றோ! – எந்த

நேரமும் பாரதி நெஞ்சம்
கந்தையை எண்ணுவ தில்லை – கையிற்

காசை நினைப்பதும் இல்லை.
செந்தமிழ் வாழிய! வாழி – நல்ல

செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார்.

 

 

 

பாடல் 42

செந்தமிழ் நாடு

(செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)

தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத் தார்உரைத்தார்
தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்று
பலநண்பர் வந்து பாரதி யாரை
நலமாகக் கேட்டார்; அதற்கு நம்ஐயர்
என்கவிதான் நன்றா யிருந்திடினும் சங்கத்தார்
புன்கவிஎன் றேசொல்லிப் போட்டிடுவார்; போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும்! ஆதலினால்,
உங்கட்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்.
அந்தவிதம் ஆகட்டும்என்றார்கள் நண்பரெலாம்.
செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத்
தேன்வந்து பாயுது காதினிலேஎன்
றழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார்! இசையோடு பாடினார்!
காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் அஃதிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு!

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

****

 

‘ஆயிர நாமத்து ஐயா சரணம்’: கம்பன் சொன்ன சஹஸ்ரநாமம் (Post No.4503)

‘ஆயிர நாமத்து ஐயா சரணம்’: கம்பன் சொன்ன சஹஸ்ரநாமம் (Post No.4503)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 16 DECEMBER 2017 

 

Time uploaded in London-  10-04 am

 

 

Post No. 4503

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இந்துக்களிடையே மிகவும் புகழ் பெற்றது விஷ்ணு சஹஸ்ரநாமம். இது, திருமாலின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. ஆயிரம் என்றும் 1008 என்றும் ஆண்டவனின் பெயர்களை எழுதினாலும் அதற்கு ஆயிரம் என்றே சுருங்கச் சொல்லுவர்.

 

இது கம்பன் காலத்தில் , அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ் நாட்டில் நன்கு பிரபலம் அடைந்திருக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம், மஹாபாரத்தில் உள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டில் பாராயணம் செய்யப்பட்டிருக்கும்.

சிவன் சஹஸ்ரநாமம்

 

 

ஏனெனில் கம்பருக்கும், அவருக்கு முந்தைய கொம்பருக்கும், அதவது அப்பர் என்னும் திருநாவுக்கரசருக்கும் முன்னரே சிவ சஹஸ்ரநாமமும் பிரயோகத்தில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அப்பர், சம்பந்தருக்கு முன் வாழ்ந்த மாணிக்க வாசகர்,

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை

உருநாமறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்

 

ஒரு நாமம் ஓரூருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்

திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

 

என்று திருவசகத்தில் செப்புவார்.

 

அவருக்குப் பின்னர் வந்த அப்பர் பெருமான்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்

பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்

………….. (ஆறாம் திருமுறை) என்று மாணிக்கவாசகரின் சொற்களை எதிரொலிக்கிறார்.

 

 

சமண சஹஸ்ரநாமம்.

இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில், நாடுகாண்  காதையில் சமணர்களின் சஹஸ்ரநாமம் பற்றி உரைக்கிறார்:

 

சாரணர் வாய்மொழிகேட்டு, தவமுதல்,

காவந்திகை தலைமேற்கொண்டு

ஒருமூன்று அவித்தோன் ஞானத்

திருமொழிக்கு அல்லது என் செவியகம் திறவா

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு

நாமம் அல்லது நவிலாது, என் நா

 

–என்று கவுந்தியடிகளின் வாயிலாக உரைப்பார்

 

பொருள்:

தவ முதல்வியாகிய கவுந்தியடிகளும் சாரணர் உரைத்த வாய்மையான உபதேசங்களை எல்லாம் கேட்டனர். தம் கைகளைத் தலைமேற் குவித்துக் கொண்டனர். “என் செவிகள் காமம், க்ரோதம், லோபம் என்ற மூன்றினையும் கெடுத்தோனாகிய அருக தேவன் ஓதிய ஞானத் திருமொழிக்கு அல்லது

பிறவற்றிற்குத் திறக்காது; காமனை வென்றோனின் 1008 திருநாமங்கள் அல்லது வேறு எதனையும் என் நா நவிலாது.

 

 

விஷ்ணு  சஹஸ்ரநாமம்

கம்பனின் சொற்கள், சொற்றொடர்கள் ஒவ்வொன்றையும் அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்துப் பார்த்து, படித்து ரஸிக்க வேண்டும். அவனும் சஹஸ்ரநாமத்தைத் தக்க இடத்தில் பயன்படுத்துகிறான்

 

பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை

மாயிருங்கரத்தால் மண்மேல் அடியுறையாக வைத்து

தீயன சிறியோர் செய்தல் பொறுப்பது பெரியோர் செய்கை

ஆயிரநாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்

 

பொருள்

பரந்த இருளை ஒழிக்க வல்ல தெய்வத் தன்மை கொண்ட கதிரவனையும் தன் ஒளியால் மட் டம்தட்டும் பிரகாசம் உடைய ஒரு மாலையை தன் கைகளால் எடுத்துவந்து தரைமீது காணிக்கைப் பொருளாக வைத்துச் “சிறியவர் தீயவை செய்தால் அவற்றைப் பொறுத்துக் கொள்வதே பெரியோர் செயலாகும்”, ஆயிரம் பெயர்களை உடைய ஐயனே! அடைக்கலம்! என்று ராமனின் அடிகளில் வீழ்ந்தான் வருணன்.

 

 

இதில் திருமாலின் சஹஸ்ரநாமத்துடன் வேறு சில சுவையான விஷயங்களும் உள.

 

ஒளிவீசும் ரத்தின மாலையுடன் வருணன் வந்த செய்தி, அக்காலத்திலேயே மாலை போடும் வழக்கத்தைக் காட்டுகிறது. சங்கராச்சார்யார் போன்ற பெரியோர்கள் கழுத்தில் மாலை போடாமல் அதை அவருடைய பாத கமலங்களில் சமர்ப்பிப்பர். அது போல இராம பிரானின் திருவடிகளில் மாலையை வைக்கிறான் வருணன். அவ்வளவு மரியாதை.

பிழை பொறுத்தல்

அடுத்ததாக சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே (வெற்றி வேற்கை) என்றும் மொழிகிறான்.

 

பிழை பொறுக்க வேண்டுதலை அவ்வையாரின் வெற்றி வேற்கை முதல் கந்தசஷ்டிக் கவசம் வரை காண்கிறோம். அதைக் கம்பனும் இப்பாடலில் புகுத்தியுள்ளான்.

 

தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்

***

பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி

—மாணிக்கவாசகர் திருவாசகம்

 

பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே—- அப்பர்

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

—– பட்டினத்தார்

அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை

அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

________

பிழையே பொறுத்து இருதாளிலுற்ற

பெரு வாழ்வு பற்ற அருள்வாயே

——— அருணகிரிநாதரின் திருப்புகழ்

 

–SUBHAM–

 

பாரதி போற்றி ஆயிரம் – 6 (Post No.4500)

Date: 16  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-22 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4500

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 31 முதல் 36

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாடல்கள் 31 முதல் 36

31

புதுநெறி காட்டிய புலவன்

தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே!
வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன்!
வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம்
இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற்
கென்னைத் தலைமை ஏற்கும் வண்ணம்
செய்தமைக்கு நன்றி செலுத்து கின்றேன்.

உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும்
வானொலி நிலையம் வாழ்கென வாழ்த்தினேன்!
இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம்.
எக்கா ரணத்தால்? என்பீ ராயின்,
ஊர்ஒன் றாகி உணர்வொன் றாகி
நேர்ஒன்று பட்டு நெடுநாள் பழகிய
இருவரிற் சுப்பிர மணிய னென்று
சொற்பா ரதியை சோம சுந்தர
நற்பா ரதிபுகழ்ந்து சொற்பெருக் காற்றுவார்;
அன்றியும் பாரதி அன்பர் பல்லோர்
இன்றவன் கவிதை எழிலினைக் கூறுவார்.

இங்குத் தலைமை ஏற்ற நானும்
திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல்
பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில
கூறுவேன்; முடிவுரை கூறுவேன் பின்பே.
கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம்
தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ?
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்ற தன்றோ?
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித்
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?
துருக்கர் கிருத்துவர் சூழ்இந் துக்களென்
றிருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவோன் வேண்டுமென் றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்!
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க
விக்டர் யூகோ மேவினான் அன்றோ?
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்த மிழ்த்தேர்ப் பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில்நீக்கப் பாடி வந்தநிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வா றென்பதை எடுத்துரைக் கின்றேன்:
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்
பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும்
கடவுளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங்
கிடஎழு துவதும் ஏற்கா தென்றும்
பொய்ம்மதம் பிறிதெனப் புழுகுவீர் என்றும்
கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்
பழமை அனைத்தையும் பற்றுக என்றும்
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத் தனைநிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண் ணால்என் றறைக என்றும்
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்
மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
முன்னால் நிலையிலே முட்டுக என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்
புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்
நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்!
அந்தப் படியே அவரும் ஒழுகினர்.
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ்!
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்.
விழுந்தார் விழித்தே எழுந்தார் எனஅவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்!
“வில்லினை எடடா – கையில்
வில்லினை எடடா – அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா”
என்று கூறி, இருக்கும் பகையைப்
பகைத் தெழும்படி பகர லானான்.
“பாருக்குள்ளே நல்லநாடு – இந்தப் பாரதநாடு”
என்பது போன்ற எழிலும் உணர்வும்
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்!
இந்நாடு மிகவும் தொன்மை யானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்:
“தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்”
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்கு கின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்:
“முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – அவள்
செப்பும் மொழிபதி னெட்டுடையாள் – எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்”
இந்நாட் டின்தெற் கெல்லை இயம்புவான்:
“நீலத்திரை கடல் ஓரத்திலே – நின்று
நித்தம் தவம்செய் குமரி யெல்லை”
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு
மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர்:
“இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதம்திரு இரண்டுமாறிப் பழிமிகுத் திழிவுற்றாலும்
விதம்தரு கோடிஇன்னல் விளைத்தெனை யழித்திட்டாலும்
சுதந்திர தேவிநின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.”
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடு வீர்கள்:
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு”
“விடுதலை! விடுதலை! விடுதலை!”
“மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே” என்றறைந்தார் அன்றோ?
பன்னீ ராயிரம் பாடிய கம்பனும்
இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை.
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்:
“செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே” – என்றான்.
சினம்பொங்கும் ஆண்டவன் செவ்விழி தன்னை
முனம்எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான்:
“வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா – அங்கு
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது
வேலவா” என்று கோலம் புதுக்கினான்.
பெண்உதட் டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லி யுள்ளான் சொல்லு கின்றேன்:
“அமுதூற்றினை யொத்த இதழ்களும் – நில
வூறித் ததும்பும் விழிகளும்”
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு
வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்.
“முனைமுகத்து நில்லேல்” முதியவள் சொல்இது.
“முனையிலே முகத்துநில்” – பாரதி முழக்கிது!
“மீதூண் விரும்பேல்” மாதுரைத் தாள்இது.
“ஊண்மிக விரும்பு” – என உரைத்தான் பாரதி.
மேலும் கேளீர் – “கோல்கைக் கொண்டுவாழ்”
“குன்றென நிமிர்ந்துநில்” “நன்று கருது”
“நினைப்பது முடியும்”, நெற்றி சுருக்கிடேல்”
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப்
பாய்ச்சு கின்றான் பாரதிக் கவிஞன்!
அன்னோன் கவிதையின் அழகையும் தௌிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுதும் எடுத்துக் கூற
இயலா தென்னுரை இதனோடு நிற்கவே.

( அனைத் திந்திய வானொலித் திருச்சி நிலையத்தில் 5-வது கவியரங்கில்
தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது. 1946 )

 

 

32, 33

பாரதியாரும் பையனும்

கொஞ்ச வயதுடையான் அவன்

கூனற் கிழவனைப் போல

அஞ்சி நடந்து சென்றான் ஐயர்

ஆரடா தமி என்றார்!

அஞ்சலி செய்து நின்றான் ஐயர்

அவனிடம் உரைப்பார்

நெஞ்சு நிமிர்ந்து நட! – உன்

நேரில் அச்சேவலைப் பார்!

 

சொன்னசொல் பையனுளம் தனில்

சுடர் கொளுத்திடவே,

முன்னைய கூனல் நடைதனை

முற்றும் அகன்றவனாய்ச்

சென்னி தனை நிமிர்த்திக் கொஞ்சம்

சிரிப்பையும் காட்டிச்

சன்னத்த வீரனைப் போல் அந்தச்

சாலை வழி நடந்தான்

 

             34,35

திருப்பள்ளியெழுச்சி

(திருப்பள்ளியெழுச்சி என்ற பாடலை பாரதி ஏன் பாடினார்?)

நற்பெரு மார்கழி மாதமோர் காலை

    நமது நற் பாரதி யாரோடு நாங்கள்

பொற்பு மிகும் மடு நீரினில் ஆடிட[

    போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்

பெற்ற முதுவய தன்னை யார் ஐயரே,

      பீடு தரும் திருப்பள்ளி யெழுச்சி தான்

சொற்றிறத் தோடு நீர் பாடித் தரு கெனத்

     தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே

 

நீல மணி யிருட்காலை அமைதியில்

  நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையில்

கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால்,

  கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில்,

காலை மலரக் கவிதை மலர்ந்தது;

   ககன முழுமையும் தேனலை பாய்ந்தது!

ஞானப் பொழுது புலர்ந்த தென்றார்ந்த

    நல்ல தமிழ்க் கவி நாமடைந்தோமே!

 

36

 

ஸ்ரீ சி. சுப்ரமண்ய பாரதியார் புகழ்
 (தில்லானா மெட்டு) இராகம் நாட்டை, தாளம் ஆதி

பல்லவி

தோயுந்தேன் கவிதரு நம்
சுப்ரமண்ய பாரதியைச் செப்புக தினம் (தோ)

அநுபல்லவி

சுவை நிலாவை நாம் எலாம் மிக வின்பத்தால்
சொந்தத் தமிழ் நாடாம் இந்தப் பெருவானில் சந்தித்தோமே
(தோ)

சரணம்

ஓய்ந்த தமிழரிடம் உணர்வினை யூட்டும்
உலக மனிதர் சமம் என நிலை நாட்டும்
தீயமறை வகற்றி அகத்தெழில் கூட்டும்
செகம் பெறும் ஒவ்வொரு பாட்டும்

தாகிடஜெம் தாகிடஜெம் தகும்தரிகிடக்க தத்தரிகிடதக
தளாங்கு தகதிக தொக ததிங்கிண த்தோம் – தளாங்கு
ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம். (தோ)

 

****

கவிஞரைப் பற்றிய குறிப்பு

பாரதிதாசன்: (தோற்றம்: 29-4-1891 மறைவு: 21-4-1964) பாரதிதாசன் புதுவையில் பாரதியார் வசிக்கும் போது அவரை நேரில் அறிந்தவர்; அவருடன் நன்கு பழகியவர். பாரதியாரால் உத்வேகம் பெற்று புதுநடை கொண்டு பாடல்களை இயற்ற ஆரம்பித்தவர். பாரதிதாசன் என்ற பெயரே அவரைப் பாரதியின் தாசனாக அறிமுகப்படுத்துகின்ற நிலையில் வேறு ஒரு அறிமுகமே அவருக்குத் தேவையில்லை.

*****

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

 

கடலுக்குள் முனிவர்கள்? கம்பன் சொல்லும் அதிசய செய்தி புரியவில்லை (Post No.4497)

கடலுக்குள் முனிவர்கள்? கம்பன் சொல்லும் அதிசய செய்தி புரியவில்லை (Post No.4497)


Written by London Swaminathan 

 

Date: 15 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8-52 am

 

 

Post No. 4497

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்ப ராமாயண யுத்த காண்டத்தில் வருணனிடம் கடலில் வழிவிட வேண்டும் படலத்தில் கம்பன் சொல்லும் சில விஷயங்களுக்கு பொருள் விளங்கவில்லை. அதிசய விஷயங்கள் அவை. எப்போதும் நல்ல விளக்கம் தரும் வை மு கோபால கிருஷ்ணமாசாரியரும் கூட இதற்கு விளக்கம் சொல்லாமல் பொருள் மட்டும் தந்துவிட்டுப் போய்விடுகிறார்.

 

கடல் தெய்வமான வருணன் ராமனுக்கு வழி விடாததால் ராமன் கோபத்தில் அம்புகளைத் தொடுக்கிறான்.

ராமன் விட்ட தீ அம்புகள் கடல் நீரைக் குடிக்கத் தொடங்கின. அப்பொழுது கடலுக்குள் இருந்த முனிவர்கள் வெளியேறினர் என்று கம்பன் சொல்கிறான். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்திருந்த கதைகளை நாம் புராணங்களின் வாயிலாக அறிவோம். ஆனால் கடலுக்குள் இருந்து தவம் செய்யும் முனிவர்கள் பற்றிக் கம்பன் சொல்லுவது வியப்பாக இருக்கிறது. இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை.

 

இதோ அந்தப் பாடல்

மங்கலம் பொருந்திய தவத்து மாதவர்

கங்குலும் பகலும் அக்கடலுள் வைகுவார்

அங்கம் வெந்திலர் அவனடிகள் எண்ணலால்

பொங்கு வெங்கனல் எனும் புனலில் போயினார்

பொருள்

மங்கலம் பொருந்திய தவத்தை உடையவர்கள் அந்த கடலுக்குள் இரவும் பகலும் தங்கி இருப்பர். அவர்கள் அந்த பரந்தாமனின் திருவடிகளை என்றும் நி னைந்து உருகும் இயல்புடையவர். இதனால் ராமனின் அம்புகளால் கருகாமல், உடல் வெந்து போகாமல், துன்பம் இல்லாது நடந்து போயினர்

 

முனிவர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாததில் அதிசயம் ஏதும் இல்லை. கடல் மீது நடந்ததில் அதிசயம் ஏதுமில்லை. இதெல்லாம் முனிவர்களுக்குக் கைவந்த கலைகள். ஆனால் கடலுக்குள் அல்லும் பகலும் தவம் செய்கின்றனர் என்பது புதிய செய்திதானே?

 

பாலைவனத் தீவு பற்றிய சுவையான செய்தி

 

வருணன் வராததால் கோபமுற்ற ராமன் பிரம்மாஸ்திரத்தை ஏவ மந்திரம் சொல்லி விடுகிறான். உடனே ஈரேழு புவனங்களும் அதிர்ந்தன. வருணன் பயந்து ஓடோடி வந்து அதை நிறுத்தச் சொல்லி வேண்டுகிறான். துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டை, ரவையை யாரும் நிறுத்தமுடியாது. இது போல இந்து மதத்திலும் சில விதிகள் உண்டு கடவுளேயானாலும் சொன்ன சாபத்தை ‘வாபஸ்’ வாங்க முடியாது. ஆனால் அதற்கு பரிகாரம், விமோசனம் சொல்லலாம். அது போல பிரமாஸ்திரத்தை மந்திரித்துவிட்டால் அதைப் பிரயோகித்தே ஆக வேண்டும்.

 

 

ராமனும் இதை வலியுறுத்தி, கடலுக்குப் பதிலாக வேறு ஒரு இலக்கு (Target) சொல். அங்கே இதை அனுப்பி விடுகிறேன் என்று சொல்கிறான். அவன் உரைத்ததைக் கேட்ட வருணன் மொழிந்தான்:

 

மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார்

அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர்

தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார்

மன் உமிழ் கணையை வெய்யார் மேல் செல விடுதி என்றான்

 

பொருள்

மன்னவனே! மரு காந்தாரம் என்னும் ஒரு தீவில் வாழ்கின்ற அவுணர்கள் (demons) நூறு கோடி உள்ளனர். அவர்கள் தின்னத் தொடங்கினால் உலகம் அழிந்துவிடும் அவர்கள் அவ்வளவு கொடியவர்கள். எனக்கும் அவர்கள் தீமை செய்கின்றனர். ஒளிவீசும் உன் அம்பை அந்தக் கொடியவர்கள் மீது விடுவாயாக என்று வருணன் வேண்ட ராமனும் அவ்வாறே செய்தான். அதுவும் ஒரு நொடிப்பொழுதில் மருகாந்தாரம் என்னும் தீவிலுள்ள அரக்கர்களைச் சாம்பலாக் கிவிட்டு ராமனிடம் திரும்பி வந்தது.

 

முன்னொரு கட்டுரையில் ராமனின் அம்புகள், திருமாலின் சுதர்சன சக்கரம் ஆகியன ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வைத்திருக்கும் பூமராங் (boomerang) ஆயுதங்களின் முன்னோடி என்று விளக்கி இருக்கிறேன்.

 

அதுபோலவே பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம் (Nuclear weapon) என்றும் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை எழுதினேன். ஏனெனில் மஹாபாரதத்தில் இது கர்ப்பத்திலுள்ள கருவையும் அழிக்கவல்லது என்று எழுதி இருக்கிறது. இது அணு ஆயுத ரேடியேஷன்/ கதிரியக்கத்தால் (Nuclear Radiation) மட்டுமே நடக்கக்கூடியது.

 

கம்ப  ராமாயணத்தில் இந்த பிரம்மாஸ்திரம் அவுணர்களைச் சாம்பலாக்கியது என்று சொல்கிறார். அதில் அதிசயம் ஏதும் இல்லை. ஆனால் மரு காந்தாரம் என்னும் தீவு எங்குள்ளது? என்பதே ஆராய்ச்சிக்குரிய விஷயம். மரு என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பாலைவனம் என்று போ பொருள்; ஆனால் மரு காந்தாரம் என்னும் பாலைவனத் தீவு எங்கே உள்ளது? என்று தெரியவில்லை. வால்மீகி ராமாயணத்தை ஆங்

கிலத்தில் மொழிபெயர்த்த ஹரிப் ப்ரசாத் சாஸ்திரி இதை ராஜஸ்தானிலுள்ள பாலைவனம் என்கிறார். அது பொருத்தமாகத் தோன்றவில்லை.

 

முதலில் அந்த இடத்தின் பெயர் த்ருமகுல்யம் என்றும் பின்னரே அதற்கு மரு காந்தாரம் என்று பெயர் ஏற்பட்டு மூவுலகிலும் பிரசித்தம் அடைந்தது என்றும் வால்மீகி ராமாயணம் செப்பும்.

 

வால்மீகி மேலும் சில வியப்பான செய்திகளைச் சொல்லுகிறார். ராமனின் பிரம்மாஸ்திரம் விழுந்தவுடன் பிரம்மாண்டமான சப்தம் எழுந்தது என்றும் பூமியிலிருந்து தண்ணீர் ஊற்றுக்கள் பீறிட்டெழுந்தன என்றும் உடனே அந்த இடத்துக்கு மருகாந்தாரம் என்னும் பெயரிட்டு இங்கு வாழ்வோருக்கு நோய் நொடிகள் தோன்றா; இந்த   இ டத்தில் பாலும் தேனும் ஓடும்; காய்கனிகள் பூத்துக் குலுங்கும் என்று ராமன் ஆசிர்வதித்ததாகவும் வால்மீகி இயம்புகிறார்.

 

பூகோள ரீதியில் இது இந்து மஹா சமுத்திரத்தில் ஒரு தீவாக இருக்க வேண்டும். ஏனெனில் ராமன் விட்ட பிரம்மாஸ்திரம் கிழக்கு திசையில் சென்றது. அந்தமான் தீவுகளின் எழில்மிக்க மணற்பாங்குடைய ஒரு தீவாக இது இருக்கலாம்.

 

மருகாந்தாரம், த்ரம குல்யம் போன்ற பெயர்கள் வேறு எங்காவது வருகிறதா என்றும் ஆராய்தல் அவசியம்.

 

TAGS:- பிரம்மாஸ்திரம், அணு ஆய்தம், மரு காந்தாரம், பாலைவனம்

சுபம்—

 

பாரதி போற்றி ஆயிரம் – 5 பாரதி பாமாலை (Post No.4495)

Date: 15  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-38 am

 

COMPILED BY S NAGARAJAN

 

Post No. 4495

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

  பாடல்கள் 25 முதல் 30

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

 

பாரதி பாமாலை

ம.க.சிவசுப்பிரமணியன்

 

பாடல் எண்: 25 முதல் 30

 

1

தெய்வம் அறிவென்றார் தாழ்வுயர்வு சாதியிலே

செய்தல் சிறியோர் செயலென்றார் – உய்வதற்கே

வீரம் துணையென்றார் வீட்டின்பம் காட்டுகவிக்

கார மணிவிப்பேன் யான்

 

2

ஒன்றே யிறையென்றார் ஒற்றுமைதான் நம்மவர்க்கே

யென்றுந் துணயென்றா ரெல்லோர்க்கும் – நன்றாகும்

கல்வி வளர்க்கும் கருத்துறுவீர்  என்றகவிச்

செல்வர் தமிழுக்குச் சேய்

 

 

3

பாட்டுத் திறத்தாலே பாருலகைப் பாலிக்கும்

நாட்டமது கொண்டோனை நானிலத்தில் – கூட்டுவித்த

எல்லாம் வலனாம் எழிலிறைக்கே வாழ்த்துக்கள்

சொல்வோம் பெறுவோம் சுகம்

 

 

4

கூற்றம் வருமென்றுக் கூவிக் கலங்காதீர்!

ஆற்றுவீர் நற்பணிகள் அஞ்சாதீர் – போற்றுவீர்

தெய்வம் உளதென்பீர்! தேறுவீர்! என நமக்கே

உய்யவழி சொன்னான் உணர்ந்து.

 

 

5

காக்கை குருவிஎங்கள் கூட்டமென வுரைத்தான்

யாக்கை புரந்திவிடுவீர் யாவருமே! – நோக்கமது

ஓங்குகவே என்றென்றும் ஒன்றிடுவீர் என்றினைய

பாங்குரைக்கும் பாரதியின் பா.

 

 

6

எத்திக்கும் முத்தமிழை ஏற்றமுறச் செய்வதுவும்

தித்திக்கும் கல்வி திகழ்வதுவும் – சித்திக்கும்

நல்லறமே நாட்டில் நிலவுதலும் வேண்டுமென்று

சொல்லியவர் செந்தமிழர் சொத்து.

 

 

தமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:

ம.க.சிவசுப்பிரமணியன்: ‘வித்துவான்’ பட்டம் பெற்றவர். சொல்வன்மை உடையவர். சேதுபதி  உயர்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுபவர்.

****

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.