ராம நாம மஹிமை: 4 சுவையான கதைகள்

Compiled by London swaminathan

Post no.1887

Date: 24 May 2015; London Time: 17-39

தெய்வத்தின் பெயரில் என்ன இருக்கிறது? என்று எண்ணுவோருக்கு சுவாமி ராமதாஸ், ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ சத்திய சாய் பாபா ஆகியோர் சொன்ன நான்கு கதைகளைப் படித்தால் தெய்வ நாம மகிமை புரியும்.

வறட்டியிலும் கடவுள் பெயர்

ஒரு ஆஸ்ரமத்தில் ஒரு சாமியார் இருந்தார். அவருக்குப் பணிவிடை செய்துவந்த ஒரு பெண்மணி அந்த ஆசிரமத்தின் கோ சாலையில் (பசுத் தொழுவம்) கிடைக்கும் சாணியை எருவாகத் தட்டி உலர்த்தி எடுப்பது வழக்கம். எப்பொழுதும் இறைவனின் பெயரைச் சொல்லிய வண்ணம் இருப்பார். அந்தக் கட்டிடத்துக்கு அருகேயிருந்த ஒரு வீட்டிலுள்ள ஒரு பெண்ணும் இப்படி எரு வறட்டி செய்வது வழக்கம். ஒரு நாள் நல்ல வெய்யில் அடித்து எல்லாம் காய்ந்த போது கடும் காற்று வீசி இரண்டு பெண்மணிகளின் வறட்டியும் கலந்து விட்டன. ஆசிரமத்துக்கு அடுத்தவீட்டுப் பெண், நிறைய எரு வறட்டிகள் தன்னுடையது என்று உரிமை கோரினாள். அது பொய் என்பது தெரிந்தும் நிரூபிக்க வழி தெரியவில்லை. எது யாருடையது என்பதை எப்படிச் சொல்ல முடியும்?

இந்த வழக்கு விவகாரம் சாமியார் காதில் விழுந்தது. அவர், இரண்டு பெண்மணிகளையும்  அழைத்து “கவலையே வேண்டாம், நானே கண்டு பிடித்துவிடுவேன்” என்றார். எல்லோருக்கும் ஒரே வியப்பு. சாமியாராவது, வறட்டியைக் கண்டு பிடிப்பதாவது! அவருக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று வேடிக்கை பார்க்க வந்தனர்.

அவர் ஒவ்வொரு வறட்டியாகத் தன் காதுக்கு அருகே கொண்டு சென்றார். முடிவில் இரண்டு கூறுகள் இருந்தன. ஒரு பகுதியைக் காட்டி அதுவே ஆஸ்ரமத்தைச் சேர்ந்த பெண்ணுடையவை என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொன்னார்.

ஆஸ்ரமப் பெண்மணி உலர்த்திய சாணத்தில் தெய்வ நாமம் கேட்டதாகவும் அடுத்த வீட்டுப் பெண்ணின் வறட்டிகளில் அப்படி ஒலி கேட்கவில்லை என்றும் விளக்கினார். ஒருவர் எந்தச் செயலைச் செய்தாலும் அப்பொழுது கடவுளின் பெயரை ஜபித்தால் அந்த சக்தி அவர் தொடும் பொருளில் எல்லாம் ஏறும். சாணியாக இருந்தாலும் அதன் சக்தியைக் காணலாம்!!

–சுவாமி ராமதாஸ் சொன்ன கதைகள்

அனுமனுக்குக் கிடைத்த முத்து மாலை

ராமநவமி என்பது ராமனின் அவதார நாள். அது கோடை காலத்தில் வரும். அப்போதெல்லாம், பாபா கொடைக்கானலில் இருப்பது வழக்கம். ஒரு ராம நவமியின்போது ராமர் பட்டாபிஷேக தினத்தில் அனுமனுக்கு சீதை அளித்த முத்து மாலையை, பாபா, தனது அபூர்வ சக்தியால் வரவழைத்து எல்லோருக்கும் காட்டினார். அதன் விவரமாவது:

(இதை சத்திய சாய் பாபா சொன்னபடி தருகிறேன்).

ராமர் முடி சூட்டிக் கொண்ட நாளில், அவர்  எல்லோருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார். அங்கு வந்த எல்லோரும் பரிசுகளைப் பெற்றனர். ஆனால் அனுமார் பக்கமே ராமர் திரும்பவில்லை. சீதைக்கு ஒரே கவலை. எங்கேயாவது ராமர் மறந்து விடப் போகிறாரே என்று எண்ணி அவர் காதில் கிசுகிசுத்தார், “அனுமனை மறந்து விடாதீர்கள்” என்று. உடனே ராமரும் சீதை காதில் கிசுகிசுத்தார், “எனக்குத் தெரியும்; நான் மாருதியை (அனுமன்) மறக்கவில்லை. அவன் எதைக் கொடுத்தாலும் வாங்க மாட்டான். அவன் எவ்வளவு விலை உயர்ந்த பொருளானாலும் அதைப் பொருட்படுத்தமாட்டான்” என்றார்.

சீதைக்கு அந்த பதில் திருப்தி தரவில்லை. தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை எடுத்து அனுமனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அனுமன் ஒரு சந்தேகப் பார்வையுடன் அதை வாங்கிக் கொண்டார்.

எல்லோர் முன்னிலையிலும் ஒவ்வொரு முத்தாகக் காதில் வைத்துக் கேட்பது, சில முத்துக்களைக் கடித்துச் சுவைப்பது – என்று மாறி மாறி செய்தார். சீதைக்கு ஒன்றும் புரியவில்லை. சரிதான்! குரங்கு புத்தியைக் காட்டிவிட்டது என்று நினைத்து, அனுமனே அது முத்து மாலை என்றாள்.

அனுமன் மிகப் பணிவுடன் சொன்னான்: அன்னையே எனக்குத் தெரியும். எனக்கு முத்து வைரம் எல்லாவற்றையும் விட ராம நாமமே உயர்ந்தது. சில முத்துக்களில் மட்டுமே ராமனின் திரு நாமம் ஒலிக்கக் கண்டேன். அவைகளைப் பத்திரமாக வைத்துவிட்டு, ஏனையவற்றைச் சுவைத்துப் பார்த்தேன்” என்றார்.

இந்த பதிலும் சீதைக்குத் திருப்தி தரவில்லை. சீதையின் முகக் குறிப்பால் எண்ணத்தைக் கண்டு பிடித்த சொல்லின் செல்வன் ஆஞ்சநேயன், அன்னையே, உங்கள் சந்தேகத்தை நீக்குகிறேன். இதோ பாருங்கள்; எனது முடிகளில் ஒன்று (ரோமம்). இதை ராமனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கீழே போட்டார். சீதை அதைத் தன் காதருகே கொண்டு சென்றபோது ராம நாமம் அதிலிருந்து ஒலிக்கக் கண்டு வியந்தாள்.

இந்தக் கதையைச் சொன்ன பிறகே சத்திய சாய் பாபா அந்த முத்து மாலையை வரவழைத்தார். அங்கிருந்த மாணவர்களிடம் அதைக் கொடுத்து பரிசீலிக்க்ச் சொன்னார். அவர்கள் பரிசோதித்ததில் பல முத்துக்களின் மீது அனுமனின் பல்தடம் தெரிந்தது. பின்னர் மாலையை வாங்கி அது வந்த வழியிலேயே மாயமாய் மறையும்படி செய்தார்.

–ரேடியோ சாய் வழங்கிய செய்தி.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நமக்கு அளிக்கும் செய்தி: சாணியானாலும், முடியானாலும் இறைவன் நாமத்தால் அவைகளும் அந்த சக்தியைப் பெறுகின்றன.

மேலும் இரண்டு கதைகளை நாளை காண்போம்.

அரிய பஞ்சமுக வாத்யம்!

പഞ്ചമുഖമിഴാവ്൧

Written by London swaminathan

Research article no.1885,

Date: 24 May 2015; London Time: 7-44 am

((படங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன;நன்றி))

பஞ்சமுக வாத்யம் என்னும் தோல் கருவி ஒரு அரிய இசைக் அருவி. இது தேவாரத்தில் “குடமுழா” என்று குறிப்பிடப் படுவதிலிருந்து ஒரு காலத்தில், சோழநாட்டில் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டது தெரிகிறது.

இது பஞ்ச உலோகத்தால் ஆகியது. அதன் அடிப்பகுதி கடம் என்னும் வாத்தியம் போல பெரிய பானை வடிவத்தில் இருக்கும். அதற்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் வட்ட வடிவில் இருப்பதால் அதை வட்டத் தட்டு என்பர். இதைப் பசுத்தோல் போற்றி மூடி இருப்பர். ஒவ்வொரு முகத்தின் – வட்டத் தட்டின் – மீதும் மூடப்பட்டதோலின் கனமும் வேவ்வேறு அளவில் இருப்பதால் இது வெவ்வேறு ஒலியை எழுப்பும். அதாவது ஐந்து முகங்களும் ஐந்து விதமான ஓசையை எழுப்பும்.

இதை சிவன், தாண்டவம் ஆடும் போது, நந்திகேசுரர் வாசிப்பார்.

மயிலை.வேங்கடசாமி எழுதிய ஒரு பழைய கட்டுரையில் கொடுத்த தகவல்களைத் தொகுத்துத் தருகிறேன்:

இது அதிக கனமான கருவி. ஆகையால் மரச் சட்டத்தின் மீது அதை வைத்து, சட்டத்தின் கீழ் சக்கரங்களைப் பொருத்தி இருக்கிறார்கள். இதனால் இதை எங்கேயும் எளிதில் வண்டி போல உருட்டிச் சென்றுவிடலாம்.

சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஐந்து வகையான தொழில்களைப் புரிகின்றன என்று சைவ ஆகமங்கள் சொல்லும். இந்த ஐந்து முக, ஐந்து தத்துவ விஷயங்களை விளக்குவதே பஞ்ச முக வாத்யம் ஆகும்.

IMG_3721 (2)

அதாவது சிவனுடைய பஞ்ச க்ருத்யங்களை – ஐந்து தொழில்களை—ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் — என்னும் ஐந்து செயல்களை விளக்க நடராஜப் பெருமான் ஐந்து வகை நடனங்களை ஆடினார். ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு ஒலிகள் தேவைப் பட்டதால் ஐந்து முகங்களிலும் தோலின் மென்மையும், பருமையும் அதற்குத் தக அமைக்கப்படது.

ஐந்து முகங்களுக்கும் நான்கு திசைகளின் பெயர்களையும், நடுவில் உள்ள முகத்தை ஆகாய திசை என்றும் சொல்லுவர்.

கீழேயுள்ள பட்டியலைப் பார்த்தால்  இது விளங்கும்:

ஆக்கல் – சதியோஜாதம்- மேற்கு

காத்தல் – வாமதேவம்- வடக்கு

அழித்தல் – அகோரம் – தெற்கு

மறைத்தல் – தத்புருஷம் – கிழக்கு

அருளல்- ஈசானம் – வானம்

சில பஞ்சமுக வாத்யங்களில் பாம்பு, மலர்கள் போன்ற சித்திர வேலைப் பாடுகளும் உள.

எனது கருத்து:

நம்முடைய இசைக் கருவிகள் இந்து மத தத்துவங்களை விளக்க வந்தவை என்பது மிகவும் வியப்பான விஷயம். இப்படி ஒவ்வொரு இசைக் கருவியையும் ஆராய்ந்தால் புதிய விஷயங்கள் புலப்படலாம். இதை எழுதுவதற்க்குக் காரணம், மஹா பாரதப் போர் துவங்கும்போது வாசித்த ஆறு சங்குகளின் பெயர்களை பகவத் கீதையில் காணலாம். அதில் கிருஷ்ணன் ஊதிய சங்கின் பெயர் பாஞ்சஜன்யம் (கீதை -15). இதிலும் ஐந்து ஒலிகள் பற்றிய குறிப்பு உளது.கிருஷ்ணனின் புல்லாங்குழலிலும், சரஸ்வதியின் வீணையிலும் பல தத்துவங்கள் இருகின்றன.

“தவம் செய்த தவம்” என்ற அருமையான நூலில், தொல் பொருட் துறை அறிஞரும் வரலாற்றுப் பேரறிஞருமான டாக்டர் இரா.நாகசாமி கீழ்கண்ட தவலை எழுதியுள்ளார்: இன்றும் கூட கேரளத்திலும் தமிழ்நாட்டில் திருவாரூர், திருத்துறைப் பூண்டி ஆகிய இடங்களிலும் இந்த வாத்தியம் பூஜை நேரத்தில் வாசிக்கப்படுவதை அற்கிறோம்:

“நந்திகேசுவரர் சிறந்த நாட்டியசார்யராக மட்டும் இல்லாமல் சிறந்த இசை ஆசிரியராகவும் திகழ்ந்திருக்கிறார். அம்பலத்தரசர் ஆடுகின்ற போது நந்தி மத்தளம் வாசிக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தமிழ்நாட்டில் பல சிற்பங்களும் ஓவியங்களும் இக்காட்சியைச் சித்தரிக்கின்றன. “குடமுழா நந்தீசனை வாயில் காப்பாகக் கொண்டார்” என்பது தேவாரம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது. இதை பாரசவர் என்ற குலத்தோர் வாசிக்கின்றனர். அண்மையில் கிடைத்த “பஞ்சமுக வாத்தியலக்ஷணம்” என்னும் சுவடியில் இது நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. ஆதலின் வாத்ய சாஸ்திரங்களிலும் நந்திகேசுவரர் சிறந்தவர் என்பது தெரியவருகிறது”.

(தவம் செய்த தவம் — என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்நூலில் காஞ்சி மஹா பெரியவர் பற்றி உள்ள பல அரிய தகவல்களை அரிய டாக்டர் நாகசாமியின் http://www.tamilartsaademy.com வெப்சைட்டுக்குச் செல்லவும்.)

-சுபம்-

IMG_3722 (2)

நந்திகேஸ்வரர், பஞ்சமுக வாத்யம் வாசிக்கும் காட்சி.

சரஸ்வதி அருள் பெற்ற கவிஞர் கண்ணதாசன்!

Written by London swaminathan

Post no.1879, Date: 21 May 2015.

இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 2

By ச.நாகராஜன்

சரஸ்வதி அருள் பெற்ற கவிஞர்!

மடை திறந்த வெள்ளம் போல வாயைத் திறந்தவுடன் கவிதை வெள்ளமாகப் பொழிய வேண்டுமெனில் அதற்கு முதல் காரணம் இறைவனின் திருவருள் தான் என்பதைக் கண்ணதாசன் மிக நன்றாக உணர்ந்திருந்தார்.

 

அவரிடம் நெருங்கிப் பழகி அவரது உதவியாளராக இருந்த இராம.முத்தையா கண்ணதாசனைப் பற்றிக் கூறுவது இது:-

அவர் அடிக்கடி சொல்லிக் கொள்வது; “எனக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியால் தான், நான் எதையும் சிந்திக்க, எழுதவும் முடிகிறது!” என்றுஒரு வேளை நான் மகாகவி பாரதியின் மறு பிறப்பாக இருப்பேனோ, என்று கூட அவர் சிந்தித்துப் பார்ப்பார்.’ஆகவே நானும் சிறு வயதிலேயே இறந்து விடுவேனோ என்றும் பயப்படுவார்.”

 

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை.

எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வந்து விழுகின்ற போது அதை அவர்களாலேயே நம்ப முடியவில்லைஇதை நாமா எழுதினோம் என்று! அருளாளர்களும் இதே போலவே உணர்கின்றனர்.

ஓரிரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு பார்ப்போம். வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் துள்ளி வர அற்புத கவிதைகளை மழையெனக் கொட்டிய மஹாகவி பாரதியார், “ மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்  மனோன்மணி யென் மாசக்தி வையத்தேவிஎன்று கூறி இறைவி தன்னுள் இருப்பதை உணர்ந்து பேசுகிறார்.(பாரதி அறுபத்தாறுமுதல் கடவுள் வாழ்த்துப் பாடல்)

 

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்என்று வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் மகான் அருணகிரிநாதர் முருகனே தனக்குத் தானே தன் மூலம் அனைத்தையும் படைத்துக் கொண்டதாகச் சொல்கிறார். (கந்தர் அனுபூதிபாடல் 17)

 

திருமூலரோ, ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்கிறார். (திருமந்திரம் பாடல் 81)

இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

 

இளையராஜா பெற்ற வாழ்த்து

இசைஞானி இளையராஜா அற்புதமாக இந்தக் கருத்தை இப்படிப் பதிவு செய்கிறார்:-

இசையமைப்பாளனாக அறிமுகமான பின், அதேஅருண் பிரசாத் மூவிஸில்எனது இரண்டாவது படமானபாலூட்டி வளர்த்த கிளிக்குப் பணியாற்ற நேர்ந்த போது, கவிஞர் என்னைப் பார்த்ததும், “நீதானா அந்த இளையராஜா! நான் அப்பவே நெனச்சேன், நீயாகத் தான் இருக்குமென்று!” என்று தன் உள்ளம் திறந்த வாழ்த்தையும் கூறி, என்னை வரவேற்கும் விதத்தில், ‘கண்ணோட கண்ணுஎன்ற பாடலில்,

வா, ராஜா, வா!”

என்ற தனது வாழ்த்து முத்திரையையும் பதித்தார்.

 

கவிஞர் சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர். அவருடைய வாக்குப் பொய்த்ததே இல்லை! அதற்கு எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘பாட மாட்டேன்என்ற அடிகளைப் பாடியதால் தான், கே.ஆர்.ராமசாமி அந்தப் பாடலுக்கப்புறம் பாடவே முடியவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததே.”

 

இளையராஜாவின் ஏற்றத்திற்கு ஒரு காரணம் கவிஞரிடம் அவர் வாங்கிய ஆசிகள் என்பதையும் அவர் வாக்கில் சரஸ்வதி குடி கொண்டிருந்தாள் என்பதையும் அவரே இப்படி, “கவிஞர் என் கனவில் வந்தார்; பாடல் எழுதினார்!” என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

 

 

நீண்ட நாள் வாழ வேண்டும்

தனது இலக்கியப் பணிக்கு நீண்ட வாழ்நாளை அவர் எதிர்பார்த்து இறைவனிடம் யாசித்தார். அவன் தருவானோ இல்லையோ, என்ன நினைக்கின்றானோ என்று ஒரு பதிவையும் அவரே செய்து விட்டார்.

கவிஞரின் ஐம்பதாவது பிறந்த தினம் வந்த போது பிறந்த நாள் காண்பதில் பிழை இலை என்கிறார்:-

இறந்த நாள் அனைத்தும் எண்ணி இனி வரும் நாளை எண்ண

பிறந்த நாள் காணு கின்றோம் பிழை இலை; ஆயின் வாழ்வில்

சிறந்த நாள் கணக்குப் பார்த்துத் தேர்ந்துகொண் டாடல் வேண்டும்

பறந்த நாள் இனி வராது பாக்கி நாள் நன்னாளாக!”

என்கிறார்.

 

 

கண்ணதாசனைப் பற்றிக் கண்ணதாசன்!

தனது வாழ்க்கையை சிறந்த நாள் கணக்குப் பார்த்துஅவரே ஒரு மதிப்பீடும் செய்து கொள்கிறார் இப்படி:-

ஐம்புலன் ரசித்த வாழ்வு அறம் மறம் நிறைந்த வாழ்வு

ஐம்பொறி துடித்த வாழ்வு ஆயிரம் படித்த வாழ்வு

ஐம்பதை நெருங்கும் போது அகம்புறம் கணக்குப் பார்த்து

பைம்புகழ் இனியும் காண பரமனே அருள்வானாக!”

இதை விட, கண்ணதாசனை இன்னொருவரால் மதிப்பிட்டு விட முடியுமா என்ன. அழகான மதிப்பீடு! அளவான மதிப்பீடு! அறத்தின் அளவிலான மதிப்பீடு!

ஐம்புலனையும் ரசிக்க வைத்து, பாவ புண்ணியத்தைக் கலந்து, ஐம்பொறிகளையும் துடிக்க வைத்து, ஆயிரக் கணக்கான நூல்களைப் படித்து, அதைத் தமிழில் முடிந்த வரை வடித்து பைம்புகழ் கண்ட கவிஞர் இன்னும் நெடுங்காலம் வாழ இறைவனை இப்படி வேண்டுகிறார்:-

 

ஆண்டுகள் ஐம்பதாகும் ஆரம்பம் திருநாளாகும்

ஆண்டுகள் அறுபதானால் அந்தியில் நன்னாளாகும்

ஈண்டு யான் ஐம்பதாண்டை இனிதுற வரவேற்கின்றேன்

நீண்ட நாள்  வாழ ஆசை நிமலன் என் நினைக்கின்றானோ!”

நீண்ட நாள் வாழ ஆசைப்பட்ட கவிஞர் அறுப

தைக் கூடப் பார்க்கவில்லை; நிமலனின் நினைப்பு அப்படி இருந்தது!

சரி, நீண்ட நாள் வாழ வரம் கேட்ட கவிஞர் மரணம் கண்டு அஞ்சினாரா! இதையும் வாத, பிரதிவாதம் செய்ய அவர் இடம் கொடுக்கவில்லை, பதிலை அவரே கூறி விட்டார்!

அது அடுத்த அத்தியாயத்தில் ..

                             –தொடரும்

 

பைபிள் தோன்றியது எப்போது?

பழைய பைபிள்- கோடெக்ஸ் சைனடிகஸ்

தொகுத்தவர்- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்- 1863; தேதி 13 மே 2015

லண்டன் நேரம்: 19-55 

இப்பொழுது கிறிஸ்தவ மதத்தினர் போற்றிவரும் பைபிள் எனும் கிறிஸ்தவ வேதப் புத்தகம் இன்றைய நிலையில் உருவாக்கப்பெற்றது கிறிஸ்து இறந்து 633 ஆண்டுகளுக்குப் பின்னர்தான்! டோலிடோ என்னும் இடத்தில் கி.பி.633-ல் நடந்த கூட்டத்தில் இது இறுதி வடிவம் பெற்றது. அதற்கு முன் பலவிதமான கதைகளும், ஏசுவின் வாழ்வு பற்றி பல வாக்குவாதங்களும் நடந்திருக்கின்றன.

பழைய ஏற்பாட்டைக் குறித்து 2048 பாதிரிமார்களும், புதிய ஏற்பாட்டைக் குறித்து 50 சுவிசேஷங்களும் ஒன்றுக்கொன்று ஒவ்வாத முறையில் தர்க்கமிட்டுக் கொண்டிருந்ததை அறிந்து கான்ஸ்டன்டைன் மன்னர் கி.பி.335-ஆம் ஆண்டில் நைஸ் என்னும் இடத்தில் ஒரு மாபெரும் மகாநாட்டினைக் கூட்டி அதில் 1730 பாதிரிமார்களின் கூற்றுகளையும், 46 பாதிரிமார்கள் வைத்திருந்த சுவிசேஷங்களையும் நெருப்பிலிடும்படி ஆணையிட்டார். பாக்கியிருந்தவற்றில் அந்த மன்னர் ஒப்புகொள்ளும் விஷயங்களை மட்டும் அங்கீகாரம் செய்து அதைக் கடவுளின் வாக்கியம் என்றும் அனைவரும் பின்பற்றவேண்டும் என்றும் கட்டளையிட்டார். இது கிறிஸ்தவ வேதப் புத்தகம் பற்றிய சரித்திரச் சான்றுகள் அடிப்படையில் எழுதப்பட்ட உண்மையாகும். இதன் முழு விவரத்தை ஹெரால்டு ஷெர்மன் எழுதிய நீ இறந்த பின் வாழ்கிறாய் (You Live After Death) என்ற புத்தகத்தில் 104ஆம் பக்கம் முதல் 115ஆம் பக்கம் வரை காண்க—திருஞான சம்பந்தர் மடத்தின் ஆதீன கர்த்தர் வெளியிட்ட பிரசுரம், 1-9-1966

அஷ்டமி, நவமி பற்றி சத்ய சாய் பாபா

தொகுத்தவர்- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்- 1862; தேதி 13 மே 2015

லண்டன் நேரம்: 19-12

வளர்பிறையின் எட்டாவது, ஒன்பதாவது நாட்களாகிய அஷ்டமி, நவமி திதிகளை நல்லவை அல்ல என்று மக்கள் கருதுவது மிகவும் தவறாகும். ஏனெனில் உண்மை இதற்கு நேர் மாறானது. இவ்விரு நாட்களும் இவ்வுலகில் அவதாரங்கள் தோன்றிய திரு நாட்களைக் குறிப்பனவாகும். கண்ணன் எட்டாம் நாளாகிய அஷ்டமியிலும், ராமன் ஒன்பதாம் நாளாகிய நவமியிலும் தோன்றினர்.

கண்ணன் தோன்றிய ரோகிணி நட்சத்திரம் யோக ஆற்றலைப் பெறுவதோடு தொடர்புடையது. இராமர் தோன்றிய புனர்பூசம், சரணாகதி நெறியோடு தொடர்புடையது. அதாவது இந்த நட்சத்திரத்தில் தோன்றியவன் எளிதில் இரக்கம் கொண்டு, தன்னிடம் அடைக்கலமாக வந்த யாருக்கும் தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்யும் இயல்பினன்.

சாதனையைத் தொடங்குவதற்கு இந்த நாட்களைத் தேர்ந்தெடுங்கள்; பூசை செய்யவும், வழிபாடு செய்யவும், நீங்களே தேர்ந்தெடுத்த கடவுள் வடிவத்தை நாடுவதற்கும் இந்நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இந்நாட்களுடனும், நட்சத்திரங்களுடனும் கெட்டவற்றைத் தொடர்பு படுத்தாதீர்கள். நீங்கள் இவற்றை மதித்து வழிபடுங்கள். இந்நாளில் இதுவே என் அறிவுரையாகும்

–பிரசாந்தி, அக்டோபர் ,1965

சிந்து சமவெளியில் ராமாயண முத்திரை!!

Written by London swaminathan

Research Article No.1849; Date: 6 May 2015

Uploaded at London time: 21-25

வென்றி வேந்தரை வருக என்று உவணம் வீற்றிருந்த

பொன் திணிந்த தோட்டு அரும்பெறல் இலச்சினை போக்கி

நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு நல்லோய்

சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச்செப்ப

–அயோத்தியா காண்டம், மந்திரப் படலம்

பொருள்: அரண்மனையை அடைந்த தசரதன், வெற்றி வேந்தர்களை இங்கே வாருங்கள் என்று அழைக்கும் பொன்னால் அமைந்த ஓலைகளை, கருடன் திகழும் முத்திரையை இட்டு அனுப்பினான். இன்பு வசிட்டனை நோக்கி, உத்தமரே, நீர் சென்று, சித்திர வேலைப்பாடு அமைந்த பெருமை பொருந்திய மகுடத்தைச் செம்மையாக ராமனுக்குச் சூட்டுவதற்கு வேண்டிய செயல்களை முறைப்படி கவனிப்பீர்களாக என்று கூறினான்.

சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகளில் பல கருட முத்திரைகள் கிடைத்திருக்கின்றன. வேத கால, புராண கால , இதிஹாச கால இலக்கியங்கள் முழுவதிலும் பருந்து, கருடன், கழுகு உருவங்களே அதிகம் காணப்படுகின்றன.

வேதத்தில் சொன்னது போல கரிகால் சோழன் பருந்துவடிவ யாகம் செய்ததை சங்க இலக்கியப் பாடலில் முன்னரே கண்டோம். கிரேக்க அரசன் வடமேற்கு இந்தியாவில் வைத்த கருட ஸ்தம்பம் (கருடன் தாங்கிய தூண்) பற்றியும் அவன் தன்னை பரம பாகவதன் (பகவான் விஷ்ணுவின் மஹா பக்தன்) என்று அழைத்துக் கொண்டது பற்றியும் முன்னரே எழுதி விட்டேன். விஷ்ணுவின் வாஹனம் கருடன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ராமாயணத்துக்கும் சிந்து சமவெளிக்கும் உள்ள பல தொடர்புகளையும் எழுதிவிட்டேன். கந்தர்வர்கள் சிந்து சமவெளியை ஆண்ட பொழுது ராமனின் மகன்களும், சகோதரர்களும் அப்பகுதியில் அவர்களுடன் சண்டையிட்டு வென்றதை ராமாயணம் பகர, கந்தர்வர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த சண்டையை மஹாபாரதம் செப்புகிறது. சிந்து சமவெளியை ஆண்ட ஜயத்ரதன், அம்பரீசன் ஆகிய மன்னர்கள் பெயர்களையும் சம்ஸ்கிருத இலக்கியங்கள் நுவலும்.

சங்க இலக்கியத்தில் சிந்து நதி பற்றியோ அந்தச் சமவெளிப் பகுதி பற்றியோ குறிப்புகள் எதுவும் இல. ஆனால் சம்ஸ்கிருத இலக்கியத்திலோ ஏராளமான குறிப்புகள் உள.

இந்தப் பின்னணியில் கருட முத்திரைகள் சிந்து வெளியில் கிடைத்திருப்பதும் அதை ராமாயணம் உரைப்பதும் எனது ஊகங்கள உறுதிப்படுத்துகின்றன.

நான் கூறுவது:–

சிந்து சமவெளி நாகரீகம் வேத கால இந்துக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. அது இன்றைய இந்துமதம் போலவே பலதரப்பட்ட இந்துக்களை உடைத்தாயிருந்தது. அதில் கந்தர்வர்கள் உள்பட பலர் ஆட்சி செய்த்ருக்க வாய்ப்பு இருந்தது. நமக்குக் கிடைத்த இதிஹாசம் அதை அதிகமாக கந்தர்வர்களுடன் தொடர்பு படுத்துகிறது. 18 கணங்களில் ஒரு பிரிவினரே கந்தர்வர். அவர்களைத் தவிர மேலும் 17 பிரிவுகள் இருந்ததை புராணங்களும் சங்கத் தமிழ் புறநானூற்று உரையும் உறுதிப்படுத்துகிறது.

சிந்து வெளி முத்திரைகளில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம வடிகட்டி, சோமரஸ வடிகட்டி என்பதை பல ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்ளத் துவங்கிவிட்டனர். ஆரிய—திராவிட இனவெறி வாதம் பேசி பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் பறங்கித்தலையன் (வெள்ளைக் காரர்) மனப்பான்மையால் சிந்து சமவெளி ஆய்வு தடம்புரண்டு போனது. இப்பொழுது அதை மேலும் தண்டவாளத்தில் ஏற்றிவைக்க கருடன் முத்திரை – ராமாயணத் தொடர்பு உதவும்!

வேதத்தில் கருடன்

வேதத்தில் அதிகமாகப் புகழப்படும் பறவை பருந்து,கருடன்,கழுகு வகைப் பறவைகளே.சுபர்ண, ஸ்யேன, க்ருத்ர, பலாக முதலிய பறவைகள் ஏராளாமான இடங்அளில் வருகின்றன. பருந்து வடிவ யாக குண்டம், சோம லதையை (சோமக் கொடி வகைத் தாவரம்) கருடன் கொண்டுவந்தது முதலிய இடங்களில் அதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப் படுகிறது. ராமாயணத்தில் ஜடாயு-சம்பாதி என்ற கருட இன மக்கள் குறிப்பிடப்படுவது போலவே ரிக்வேதத்தில் கருடன்  -சோமக் கொடி சம்பவமும் கருடன் இன மக்களைக் குறிப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

வாழ்க ரகுகுல கருட முத்திரை! வளர்க சிந்துவெளி ஆய்வு!! தகர்க ஆரிய-திராவிட இனவெளியாளர்; மலர்க ஏக பாரதம்!

சிந்து/ சரஸ்வதி சமவெளி பற்றிய எனது முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளில் இதுவரை எவரும் சொல்லாத பல புதிய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். படிக்க! சிந்திக்க!

முதலில் வந்தது ராமாயணமா? மஹாபாரதமா? பெரிய குழப்பம்!!!

Written by London swaminathan

Research Article No.1846; Date: 5 May 2015

Uploaded at London time: 8-55 am

(கர்நாடகத்திலலுள்ள கோவில்களில் காணப்படும் ராமாயண , மாபாரத சிற்பங்களின் படங்கள்–   ஒரு ஆங்கிலேயர்  எழுதிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை;நன்றி)

பரசுராமன் குழப்படி!

பரசுராமன், அனுமன் போன்ற சில கதா பாத்திரங்கள் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு இதிஹாசங்களிலும் வருவதால் ராமன் கதையும் கிருஷ்ணன் கதையும் ஏக காலத்தில் அல்லது அடுத்தடுத்து நிகழ்ந்தது போலத் தோன்றுகிறது. பல அர்ஜுனன்கள், பல பரசுராமன்கள் இருந்ததால் இந்தக் குழப்பம். பரசுராமன் வென்றது கார்த்தவீர்ய அர்ஜுனன். மஹாபாரத அர்ஜுனனோ சுமார் 400 ஆண்டுகள் பின்னால் வாழ்ந்தவர். ஆகவே ராமாயண—மஹாபாரத இடைவெளி குறைந்தது 500 ஆண்டுகளாவது இருக்க வேண்டும். இந்துக்களின் யுகக் கணக்குப்படி பார்த்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். ஆக பலரும் பரசுராமன் போல க்ஷத்ரிய எதிரியாக இருந்ததால் அவரை பரசுராமன் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர் என்று கொள்வதே பொருத்தம்.

உண்மையில் ராமாயணம் முதலில் நிகழ்ந்தது மட்டுமல்ல. முதலில் எழுதப்பட்டதும் ராமாயணமே! இதோ இதற்கான ஆதாரங்கள்.

1.மஹாபாரதத்தில் சுருக்கமாக ராமாயணம் உள்ளது. ஆனால் ராமாயணத்தில் மஹாபாரதத்தின் சுவடே கிடையாது. ஆகையால் வால்மீகி எழுதிய பின்னர், அதைச் சுருக்கமாக மஹாபாரதத்தில் சேர்த்தாரென்பதே நமது முடிவு.

2.ராமாயணத்தில் ராமனை சீதை, “ஆரிய” (மதிப்பிற்குரிய ஐய) என்றும் ராவணனை அரண்மனைக் காவலர்கள் “ஆரிய” என்று அழைப்பதும் ராமாயணத்தின் பழமையைக் காட்டும்.

3.ராமாயணத்தில் குரங்கு மனிதர்கள் (அனுமன்), கரடி மனிதர்கள் (ஜாம்பவான்), கழுகு மனிதர்கள் (ஜடாயு) ஆகியோர் வருகின்றனர். இவை மஹாபாரதத்தில் இல்லை. உண்மையில் குரங்கு, கழுகு, கரடி என்பன அவர்கள் அணிந்த முகமூடி அல்லது பச்சை குத்திக் கொண்ட சின்னத்தையே குறிக்கும். ஆனால் அது நடந்து மிகவும் அதிக காலம் உருண்டோடிவிட்டதால், முதலில் வாய் மொழியாக ராமாயணத்தைப் பரப்பிய  பௌராணிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதை மிகைப்படுத்தி பிராணிகளும் உதவி செய்ததாகச் சொல்லிவிட்டனர். எப்படியாகிலும் இத்தகைய சின்னங்களை அணிந்தோர்  மாஹாபாரத காலத்தில் இல்லை! மாபாரத  காலத்தில் நாகரீகம் வெகுவாக முன்னேறிவிட்டது.

3.லங்காதேவி, லங்கிணி, மைநாக பர்வதம் போன்ற குறுக்கீடுகளும் ராமாயணத்தின் பழமையைக் காட்டும். இது போன்றவை மஹாபாரதக் கதைகைளில் இரா.

  1. ராமாயணத்தில் அடிக்கடி 60,000 மனைவியர், 60,000 ஆண்டு தசரதர் ஆட்சி என்ற மரபுத் தொடர்கள் (Idioms and Phrases) இவை மஹாபாரதக் கதைகைளில் இரா.

“வனம் கண்ட வால்மீகி”, “ரணம் கண்ட வியாசர்”

5.ராமாயணத்தை எழுதியது “வனம் கண்ட வால்மீகி”, மாபாரதத்தை எழுதியது “ரணம் கண்ட வியாசர்” (ரணம்=போர்). அதாவது ராமாயணம் என்பது பொதுவாக இற்கையோடு இயைந்த வாழ்வு. மாபாரத காலமோ போட்டி, பொறாமை மிகுந்த நகர வாழ்வு.

6.ராம-ராவண யுத்தத்தில் வியூஹம் போன்ற ராணுவ முன்னேற்றங்களைக் (Military Formations) காண முடியாது. மாபாரதத்தில் சக்கர, பத்ம வியூஹம், பட்டாளத்தை எண்ணிக்கை வாரியாகப் (divisions of Army) பிரிக்கும் (7 அக்ஷௌகிணி, 11 அக்ஷௌகிணி) முன்னேறிய உத்திகளைக் காணலாம். இப்படி மாறுவதற்கு இரண்டுக்கும் இடையே மிக அதிக காலம் ஆகி இருக்க வேண்டும். முப்பதுக்கும் மேலான தலைமுறை வித்தியாசம் இருப்பதாக புராணங்கள் பகரும்.

“பாடியது” (ballads) ராமாயணம், “எழுதியது” மாபாரதம்

7.குசனும் லவனும் “பாடியது” (ballads) ராமாயணம்; அவர்களுக்கு தனது ஆஸ்ரமத்தில் பாடக் கற்பித்தவர் குயில் எனப் புகழப்படும் வால்மீகி முனிவர் ஆவார் (“வந்தே வால்மீகி கோகிலம்”).

வியாசர் “எழுதியது” மாபாரதம். கி.மு.800 வாக்கில் எழுந்த ஹோமரின் இலியட், ஆடிஸிக்கு முன் பாடல் வடிவில் இருந்த கதைகளையே ஹோமர் (Homer) என்பவர் கிரேக்க மொழியில் முதல் நூலாக எழுதினார். அதற்கு முன்னரே நூறுக்கணக்கான நூல்களைப் பெற்றிருந்தது சம்ஸ்கிருதம்!! ஆகவே பாடல் வடிவ ராமாயணம் அதற்கும் முந்தையது! மாபாரதம் என்பது, அக்காலத்தில் வழங்கிய பல்வேறு விஷயங்கள் அழிந்து போய்விடக் கூடாதென்பதற்காக வியாசரால் (compiled) தொகுக்கப்பட்டது. வியாசர் என்றால் கட்டுரை (Essayist, Compiler) எழுதுபவர் என்று பொருள்.

8.வால்மீகி ராமாயணத்தில் சாதாரண தர்மத்தைக் காண்கிறோம். மாபாரதத்தில் பெரிய தத்துவ (கீதை) போதனைகளைக் காண்கிறோம். உபநிஷத காலத்தை ஒட்டி எழுந்த ராமாயணத்தில் இதைச் சொல்லத் தேவ எழவில்லை. திரேதா யுகத்தில் 50 சதவிகிதம் நல்லது இருந்தது. கலியுகத்துக்குச் சற்று முன்னர் இருந்த மாபாரத காலத்தில் அதர்மம் ஓங்கவே உபதேசம், தத்துவ போதனைகளைச் சொல்ல வேண்டி இருந்தது.

  1. ராமாயணத்தில் 24,000 ஸ்லோகங்களைக் காண்கிறோம் மாபாரதமோ உலகிலேயே பெரிய இதிஹாசம்; அதில் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உள. “எழுதாமல்” இவ்வளவு பெரிய விடயங்கள் நீடித்திருக்க வாய்ப்பில்லை.

10.மாபாரதத்தில் தெளிவாக 29 நாடுகள் பிரிக்கப்பட்டிரு  ப்பதைக் காண்கிறோம். மன்னர்களின் பெயர்களும் உள. ஆனால் ராமாயணத்தில் இப்படி இல்லை. இரண்டுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது.

11.பூகோள ரீதியில் கிஷ்கிந்தா போன்ற இடங்களும், பின்னர் இந்திய சரித்திரத்தில் அல்லது புவியியலில் இல்லை. ஆனால் மாபாரதம் குறிப்பிடும் இடங்கள் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றன.

12.ராமாயணம் அளிக்கும் செய்தி எளிமையானது: “சத்தியத்தைக் கடைப்பிடி, அடுத்தவன் மனைவி மீது கைவைக்காதே”. மாபாரதத்தில் ஏராளமான மோதல்கள், போட்டி, பொறாமைகள், சூழ்ச்சிகள் முதலியவற்றைக் காண்கிறோம் அதாவது தர்மம் மிகவும் கீழ் நோக்கிச் செல்வதைக் காண்கிறோம்.

13.மாபாரதத்தில் பழமையான சொற்கள் இருப்பதைக் கொண்டும், ராமாயணத்தில் எளிமையான சொற்கள் இருப்பதைக் கொண்டும் சிலர் மாபாரதமே பழையது என்பர். உண்மையில் வியாசர் வேதத்தைக் கரைத்துக் குடித்தவர். அதைத் தொகுத்தவர்; நான்காகப் பகுத்தவர். ஆகையால் வேத காலச் சொற்கள் அவர் நாவில் நடமாடியதில் வியப்பதற்கொன்றும்  இல்லை. மேலும் பழைய காலத்தில் இருந்த பல விஷயங்கள் அழியக் கூடாதென்பதற்காக அவர் காலத்தில் நிலவிய அத்தனை விடயங்களையும் மாபரதக் கதையில் பின்னிப் பிணைந்தவர் வியாசர். ஆகையால் பழமையையும் புதுமையையும் ஒருங்கே காணலாம்.

14.மாபாரதத்தில் ஆக்கியானம், உபாக்கியானம் எனப் பிரிவுகள் உண்டு. ராமோபாக்கியானமும் அதில் ஒன்று. இது போல ஏராளமான கதைகள் சொருகப்பட்டுள்ளன. ஆனால் ராமாயனத்திலோ உப கதைகள்— வேறு கதைகள்– சொருகப்படவில்லை. காண்டம், சர்கம் என்று பிரித்து சொல்லவந்த ஒரே காவியத்தை மட்டும் வரைந்தார் வால்மீகி.

  1. மாபாரதத்தில் ஜோதிஷம், வைத்தியம்,வானசாத்திரம், தனுர்வேதம் முதலியன வளர்ச்சி அடைந்த நிலையில் காணப்படுகின்றன.. இது தவிர பல நுணுக்கமான விஷயங்கள் உள்ளன. அவைகளை இன்னொரு கட்டுரையில் காண்போம்.

இந்துக்கள் கண்டுபிடித்ததை வெளிநாட்டினர் மீண்டும் “கண்டுபிடித்த” விநோதம்!!

Compiled by London swaminathan

Article No.1842 Date: 2 May 2015

Uploaded at London time: 13-52

உலகம் உருண்டையானது என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

சூரியனை பூமி சுற்றுகிறது என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

கிரஹணம் எப்படி ஏற்படுகிறது என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

சந்திரனின் மீது படும் சூரிய ஒளியே அதன் பிரகாசத்துக்கு காரணம் என்பதை யார் முதலில் சொன்னார்கள்?

 

—–இது போன்ற பல கேள்விகளுக்கு விடை வேண்டும் என்று என்சைக்ளோபீடியாவுக்குப் போனீர்களானால் உங்களுக்கு தவறான தகவலே கிடைக்கும். இவை அனைத்தும் ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் ஏற்கனவே உள்ளன. அதுவும் வெள்ளைக்காரர்கள், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்த்த பகுதிகளில் உள்ளன. இருந்தபோதிலும் இவைகளை இன்னும் கலைகளஞ்சியங்களில் ஏற்றவில்லை!!!!

அதுமட்டுமல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கத் தமிழ் பாடல்களிலும் கடல் சூழ் மண்டிலம் என்று நிறைய இடங்களில் வருகிறது. பூகோளம், ககோளம் என்ற சொற்கள் சம்ஸ்கிருதத்தில் வருகின்றன. கோளம் என்பதில் இருந்தே ‘குளோப்’ (பூமி உருண்டை) என்ற சொல் வந்தது.

வேத இலக்கியத்தில் வரும் 27 நட்சத்திர முறையை ஐரோப்பியர்கள் ரிக் வேத காலமான கி.மு 1700-ல் அறிந்திலர். ஆகவே நாம் யாரிடமும் வானவியலையோ சோதிட சாத்திரத்தையோ கடன் வாங்கவும் இல்லை. இந்துக்கள் வெளி நாட்டில் இருந்து வந்து இங்கு குடியேறவும் இல்லை.

ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளை தனித்தனியே ஆராய்ந்ததில் வேதத்தின் காலம் கி.மு.4500—க்கு முன் என்று கண்டறிந்தனர். இருவரும் ஒருவர் மற்றொருவரை அறியாமல் செய்த ஆராய்ச்சியில் கிடைத்த வியத்தகு முடிவு இது. இன்னும் கொஞ்சம் காலத்தில் மேலை உலகமும் இதை ஒப்புக் கொள்ளும்.

1.வானசாத்திரம் பற்றிய படிப்பை ரிக் வேத முனிவர்கள் நட்சத்திர வித்யை என்றும் வானசாத்திர வல்லுனர்களை ‘நட்சத்திர தர்ச’ அல்லது ‘கணக’ என்றும் அழைத்தனர். சங்கத் தமிழரும் ‘கணி’ என்றே அழைத்தனர்.

2.ரிக் வேதகால ரிஷிகள் பிருத்வி=பூமி, அந்தரிக்ஷம் (நடு), தியௌ (வானம்) என்று மூன்றாகப் பிரித்தனர் (1 -115-1, 2-40-4 etc).

3.பூமி வட்ட வடிவமானது என்றும் அது அந்தரத்தில் தொங்குகிறது என்றும் ரிஷிகள் கூறினர் ( RV 1-33-8; 4-55-3). சதபத பிராம்மணமும் பூமியை பரிமண்டலம் என்று கூறுகிறது. சங்கத் தமிழரும் மண்டிலம் என்றே கூறினர்.

4.பூமி சுற்றுகிறது என்றும் அது சூரியனால் நிகழ்கிறது என்றும் அவர்களுக்குத் தெரியும். பகல், இரவு, பருவ காலம் ஆகியனவும் சூரியனால் நிகழ்கிறது என்பதும் வேதங்களில் உள்ளது ( RV 6-58-1, 1-95-3).

5.நிலவு என்பது சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கிறது என்பதையும் ரிஷிகள் கூறுகின்றனர் (9-71-9).

6.குதிரைக்கு 34 -விலாஎலும்புகள் (17+17) இருப்பதாக(RV 1-161-18) வேதம் கூறுவதும் வானசாத்திரக் குறிப்பு என்று சில வெளி நாட்டினர் எழுதியுள்ளனர். ஐரோப்பிய குதிரைகளுக்கு 36 விலா எலும்புகள் என்பதால் ரிக்வேத கால இந்துக்கள் இந்த நாட்டில் தோன்றிய குதிரைகள் பற்றியே பேசியதும் அவர்கள் இங்கே தோன்றியவர்க ளேயன்றி வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பதும் தெளிவாகிறது. அண்மையில் நடந்த ஆய்வில் காண்டாமிருகம், குதிரைகள் இங்கு தோன்றியதற்கான பாஸில் அச்சுகளும் (படிம அச்சு) கிடைத்திருக்கின்றன.

7.ஒரு ஆண்டை 12 ராசிகளாக/ 12 மாதங்களாகப் பிரித்ததும் வேத கால விற்பன்னர்களே. சூரியனின் போக்கை அனுசரித்து தட்சிணாயனம், உத்தராயணம் என்றும் ஆண்டை இருகூறாகப் பிரித்தனர். ஆறு பருவங்களாகப் பிரித்தனர். தொல்காப்பியமும் ஆறு பருவப் பிரிவையே கூறுவதால்  இந்துக்கள் ஐரோப்பாவில் இருந்து குடியேறவில்லை என்பது தெளிவாகிறது. ஐரோப்பாவிலும் பிற நாகரீகங்களிலும் ஆறு பருவப் பிரிவுகள் கிடையாது.

8.நட்சத்திரங்களை 27 ஆகவும் அபிஜித் என்னும் நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக இருந்த காலத்தில் 28 ஆகவும் பிரித்திருந்தனர்.

9.ஆண்டுத் துவக்கத்தை மார்ச்/ஏப்ரலிலிலும், டிசம்பரிலும்/மார்கழி (மாசானாம் அஹம் மார்கசீர்ஷம்—பகவத் கீதை) இந்துக்களின் நூல்கள் கூறுவதால் அவர்கள் வெவ்வேறு நட்சத்திர நிலைகளை அறிந்ததும் அவ்வளவு பழைய காலத்தில் அவர்கள் வாழ்ந்ததும் தெரிகிறது வானாவதாரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் மூவடியால் உலகத்தை அளந்த குறிப்பும் வேதத்தில் உள்ளது இதுவும் வான சாத்திரக் குறிப்பு என்ற ஒரு விளக்கம் உளது.

10.ஒரு சில குறிப்புகளை மட்டும் வைத்து வேத கால நாகரீகத்தை மதிப்பிட முடியாது. அவர்கள் வான சாத்திரம் முதல் பிராணி இயல், மருத்துவம் வரை கூறும் எல்லா விஷயங்களையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் — அவர்கள் கூறும் பிரம்மாண்டமான எண்களைப் பார்க்கையில் — இன்று கம்ப்யூட்டர்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருக்கும் பூஜ்யம் முதலியவற்றைக் கண்டு பிடித்ததைப் பார்க்கையில் — எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறொன்றும் அறியோம் என்ற கருத்ததைத் தொனிக்கும் ரிக்வேதத்தின் கடைசி துதியைப் பார்க்கையில் —- உலகிலேயே அதிக நாகரீகம் வாய்ந்தவர்கள் வேத கால இந்துக்களே என்று துணியலாம்.

11.சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வணத்திலும் உள. அது பூமி, நிலவின் நிழல்களால் ஏற்படுவதையும் கூறி இருக்கின்றனர்.

இது எனது ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம். முழு விவரம் வேண்டுவோர், சில தினங்களுக்கு முன் வெளியான ஆங்கிலக் கட்டுரையைக் காணவும்.

வேதத்தில் தமிழ் உணவுகள்: வடை, பாயசம், பிட்டு!!

Written by London swaminathan

Research Article No: 1830

Date: 27 April 2015; Uploaded in London at 10-13 am

ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1830

கட்டுரையாளர்; லண்டன் சுவாமிநாதன்

தேதி: 27 ஏப்ரல், 2015  லண்டன் நேரம்:காலை 10-13

(This is already uploaded in English)

சங்கத் தமிழ் இலக்கியத்தில் இட்லி, வடை, பொங்கல், தோசை இல்லாதது நமக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆயினும் ஊன் (மாமிசம்) பற்றியும், மது பற்றியும் வேறு பல சாப்பாடு வகைகள் பற்றியும் உள்ளன. சங்கத் தமிழ் இலக்கியங்களில் பிராமணர் வீட்டுக்குப் போனால் என்ன கிடைக்கும், மன்னர்கள் வீட்டுக்குப் போனால் என்ன கிடைக்கும் என்பனவற்றைத் தெள்ளத் தெளிவாகப் பாடி வைத்துள்ளனர். பிராமணர் தெருவில் கோழியோ நாயோ இரா என்றும் துல்லியமாகப் பாடி வைத்துள்ளனர். அவர்கள் முழுக்க முழுக்க ‘வெஜிட்டேரியன்’ என்பதை இவ்வளவு அழகாகச் சொல்லுகின்றனர். ஆயினும் பாரி முதலிய வள்ளல் பிறருக்கு அளித்த “நான் வெஜ்” – வகைகளையும் புகழத் தவறவில்லை. அதுவும் புலனழுக்கற்ற அந்தணாளன் என்று பாடப்பெற்ற கபிலர் என்னும் பிராமனப் புலவர் ஊன் ஊனவைப் பாராட்டினார்!! ஏனெனில் தமிழ் மன்னர்களோ பாணர், கூத்தர், விறலியரோ பிரியாணி இல்லாமல் வாழ முடியவில்லை. ஏராளமான பாடல்களில் பிரியாணிக்கு புகழ்மாலை!

மேலை நாட்டில் கொஞ்சம் வெய்யில் கூடுதலானால் உடனே தோட்டத்தில் பாய் விரித்து, ‘சேர்’ போட்டு,  நண்பர்களைக் கூட்டி, ‘பார்பிக்யூ; (கம்பியில் கோர்த்துச் சுட்ட மாமிச வகையறா, தொகையறாக்கள்) ‘பார்ட்டி கொடுப்பார்கள். இது கூட சங்கத் தமிழ் பாடலில் உள்ளது. இட்லி, வடை, சாம்பார் இல்லதது பெருங்குறையே! ஆனால் புளிக் குழம்பு உள்ளது. நிற்க! சொல்லவந்ததோ வேறு விஷயம்.

வேதத்தில் பிட்டு,அப்பம் ஆகியன உள்ளது. மதுரையில் பிட்டு விற்ற கிழவிக்கு சிவன் எப்படி உதவினார் என்பதையும், அவர் மீது பாண்டியன் போட்ட அடி, அங்கிருந்த எல்லார் முதுகிலும் விழுந்தது என்பதையும் மாணிக்கவாசகர் வரலாற்றின் மூலம் அறிவோம். இந்தப் பிட்டு என்ற தமிழ் சொல் வேதத்தில் உள்ளது.

அபூப என்று நெய்யப்பம், ஆப்பம் ஆகியன குறிப்பிடப் பட்டுள்ளன. இன்று வரை மலையாள தேசத்திலும், பிராமணர் வீட்டுக் கல்யாண சீர் வரிசையிலும் இந்த அப்பத்தைக் காணலாம். தமிழர்கள் விரும்பிச் சாப்பிடும் உளுந்து வடை, பருப்பு வடைகளை பிராமணர்கள் இறைவனுக்குப் படைக்கையில் (நைவேத்யம் செய்கையில்) – மாஷாபூபம் முதலிய சொற்களைப் பயன்படுத்துவதால் இன்றும் இது சம்ஸ்கிருத, தமிழ் சொற்களில் அப்படியே பயிலப்படுகிறது என்பது தெளிவு. இது தவிர நாம் இடியப்பம், குழியப்பம் என்று காலப் போக்கில் பல அப்பங்களைக் கண்டு பிடித்து அறுசுவை உணவுகளில் சேர்த்துவிட்டோம்.

சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சொன்னது போல வேதம் கி.மு 4000- க்கு முந்தையது என்று கொண்டால் 6000 ஆண்டுகளாக சில சொற்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இருப்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம்.

அந்தக் காலத்தில் ரிஷி முனிவர்கள் வீட்டுக்கு வந்தாலோ, அல்லது நாம் அவர்களுடைய பர்ணசாலைகளுக்கு (இலை/ஓலை வீடு) போனாலோ அங்கே “மது பர்க்கம்” கொடுக்கப்படும். இப்போது நாம் யாரவது வீட்டுக்கு வந்தால் காப்பி, தேநீர் அல்லது பழரசம் (ஜூஸ்) கொடுப்பது போல. மதுபர்கத்தில் தயிரும், தேனும் இருக்கும். இப்போது ஸ்ரீகண்ட் என்ற இனிப்பு செய்வது போல அந்தக் காலத்திலும் இதைச் செய்திருக்கிறார்கள் இப்போதும் குஜராத் முதலிய இடங்களில் ஸ்ரீகண்ட் கிடைக்கிறது.

இப்போது நாம் சாதத்துடன் பலவகைப் பொருட்களைக் கலந்து எலுமிச்சம்பழச் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், எள்ளுஞ்சாதம், தேங்காய்ச் சாதம், பிரியாணி, பால் சோறு என்று செய்வது போல வேத காலத்தில் பலவகை ஓதனம் (சோறு அல்லது களி) செய்தது பற்றிய குறிப்புகளும் நிறைய இருக்கின்றன.

இப்போது கிராமப்புறங்களில் அம்மன் உற்சவங்களில் கூழ், கஞ்சி வார்த்துக் கொண்டாடுவது போல அந்தக் காலத்தில் கஞ்சி, கூழ் செய்த குறிப்புகளும் உண்டு. வேதத்தில் குறிப்பிடும் தானியங்களின் பட்டியல் நீண்ட பட்டியலாகும்.

பத்து வகை மீன்களும் குறிப்பிடப்படுகின்றன. நீர், மீன், மயில், முதலிய சொற்கள் வேதத்தில் இருப்பதைக் கொண்டு பலரும் ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள் இருப்பதாக எழுதி வந்தனர். ஆனால் நீர் என்ற சொல் கிரேக்க மொழியிலும் உள்ளது. ஆகையால் தமிழும் வடமொழியும் ஒரே மூலத்தில் இருந்து வந்த மொழிகள் என்ற கொள்கையே சரியென்று படுகிறது. அதனால்தான் இப்படி பல சொற்கள் இரண்டு மொழி இலக்கியங்களிலும் இருக்கின்றன. வ்ரீஹி என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து அரிசி (ரைஸ்) வந்தது அல்லது அரிசியிலிருந்து வ்ரீஹி வந்தது என்றும் சொல்லலாம். மூல மொழி ஒன்றே என்பதற்கு பிட்டு, அப்பம் என்பனவும் சான்றாகத் திகழ்கின்றன.

பசு, காளை மாடு, பால் (பயஸ், ஆயச,க்ஷீர, துக்த) ஆகியவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தி மக்களை நாகரீகப் படுத்தியது வேத கால இந்துக்களே. பசுவுக்கும் பாலுக்கும் வேதங்கள் கொடுக்கும் மரியாதையை உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் காணமுடியாது. வேதங்களில் பசு-கன்று இடையிலுள்ள அன்பை (வாத்சல்யம்) உவமையாகவும் பல இடங்களில் காணமுடியும். பசுவை ஒரு தாய் நிலைக்கு (கோ மாதா) என்பதை எந்த நாட்டு இலக்கியத்திலும் கான முடியாது. இன்று பால் உணவு இல்லாத இடமே இல்லை.

பால் (பயஸ், பாயச) பொருட்கள் பற்றி தனியே ஒரு கட்டுரை வரைவேன்.

மேற்கோள்கள்:

Apuupa (RV 3-52-7; RV 10-45-9), Satapatha Brahmana (2-2-3-12; 4-2-5-19)

வேதத்தில் கடலும் கப்பலும்!!

Olympias under Oar,

Research Paper No.1804; Date: 16th April 2015

Written by London swaminathan

Uploaded from London at  20–15

வேதங்களில் சொல்லப்பட்ட எல்லா விஷயங்களின் பட்டியலைப் பார்ப்பவருக்கு வியப்பு மேலிடும். உலகில் இவ்வளவு விஷயங்களை வேறு எந்தப் பழைய நூலிலும் காண முடியாது. சொல்லப் போனால், நூல் என்பதே சம்ஸ்கிருதம் தவிர வேறு எங்கும் அப்போது கிடையாது. கி.மு 1700 ஆம் ஆண்டு என்று இப்போது தேதி குறிக்கப்படும் ரிக் வேத காலத்துக்கு சுமார் ஆயிரம் வருடம் கழித்துத்தான் கிரேக்க மொழியில் நூல் வந்தது. கிட்டத்தட்ட அதை ஒட்டித்தான் பைபிளும் எழுதப்பட்டது. மற்ற மொழிகளில் லத்தீன் மொழியில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் புத்தகங்கள் வந்தன. தமிழில் தொல்காப்பியம் கி.மு. முதல் நூற்றாண்டில் வந்தது என்பர். ஆக ரிக் வேதத்துக்குப் பக்கத்தில் வைத்து ஒப்பிடக் கூடிய நூல்கள் இல்லை. சுமேரிய, எகிப்திய மொழிகளில் சுவரிலும், பேப்பரிலும், களிமண் பலகையிலும் இதற்கு முன் எழுதப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் அவைகள் நூல் என்ற இலக்கணத்துக்குள் அடங்குமா என்பது கேள்விக்குறியாகத் தொக்கி நிற்கும்.சீன மொழியிலும் உண்டு ஆனால் நூல்கள் இல்லை.

காலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் விஷயங்களுக்கு வருவோம். முன்னர் பல கட்டுரைகளில் நான் குறிப்பிட்ட டெசிமல் சிஸ்டம் (தசாம்ச முறை) — மிகப் பெரிய எண்கள்— மொழிகள் பற்றிய உவமைகள் — முப்பதுக்கும் மேலான பெண் தெய்வங்கள் — யாப்பிலக்கணத்துக்கும் முப்பதுக்கும் மேலான நதிகளுக்கும் பெண்களின் பெயர்களைச் சூட்டி அவர்களை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றியது — கிரேக்க மொழியில் நூல் எழுதத் துவங்குவதற்கு முன்னரே ஜனகர் கூட்டிய உலக தத்துவ மஹாநாட்டில் கார்கி வாசக்னவி என்ற பெண்மணி கலந்து கொண்டு மிகப்பெரிய அறிஞரைக் கேள்வி கேட்டது — ரிக்வேத முடிவில் உலக அமைதிப் பாடலை வைத்து அதை அழகாக முடிப்பது — உலகிற்கு 1,2,3 என்ற எண்களைக் கற்பித்தது —- இவைகளை எல்லாம் பார்ப்பவருக்கு உலகின் மிக மிக நாகரீக முதிர்ச்சி பெற்ற நாடு இந்தியாதான் என்பது தெரிகிறது, புரிகிறது. இதை, இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக முதலில் வேதம் படிக்க வந்த மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றோரும் கூட சொல்லிவைத்தனர்.

ship1

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சில “அறிஞர்கள்” (??????) வேதத்தில் சொல்லப்படும் சமுத்ரம் கடலே அல்ல, அது வெறும் குளம், வேதத்தில் சொல்லும் நூறு துடுப்புக் கப்பல், கப்பலே அல்ல–இப்படியெல்லாம் பிதற்றி வந்தனர். இதற்கு அவர்கள் கூறியதெல்லாம் எதிர்மறைச் சான்றுகள். அதாவது கடல் பற்றி அதைச் சொல்லவில்லை, இதைச் சொல்லவில்லை, உப்பு பற்றியே சொல்லவில்லை என்றெல்லாம் சொல்லி எதைச் சொல்ல வில்லையோ அதை ஆதாரமாகக் காட்டுவது. இதை உலகில் அறிஞர்கள் ஏற்பதில்லை. சங்கத் தமிழில் உள்ள முப்பதாயிரம் வரிகளில் தமிழர்கள் மலஜலம் கழித்த பாடலே இல்லை. ஆகவே தமிழர்கள் சாப்பிட்டார்களே தவிர, என்றும் மலஜலம் கழித்ததே இல்லை என்று அசட்டுப் பிசட்டு என்று எழுதி டாக்டர் பட்டம் பெறுவதற்கு சமம் இது. இப்படிதான் வெள்ளைத்தோல் அறிஞர்கள் தத்துப் பித்து என்று உளறி வைத்துள்ளனர். உண்மையில் தமிழர்களும் வடக்கே இருந்தவர்களும் போய்த்தான் உலகம் முழுதும் மொழி அறிவையும் நாகரீகத்தையும் பரப்பினர்.

முந்தைய கட்டுரைகளில் பல எடுத்துக் காட்டுகள் கொடுத்துள்ளேன். பாரத மக்கள் உலகம் முழுதும் சென்றனரே தவிர, பாரதத்துக்குள் நாம் குடியேறவில்லை. இதை அறியாத அரை வேக்காடுகள் உளறிக்கொட்டி கிளறி மூடின. தமிழர்கள் வடமேற்கில் இருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் உளற, ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தனர் என்று மாக்ஸ்முல்லர் உளற, இந்தியர்கள் குழம்பிப் போய்விட்டனர்! இந்தக் குழம்பிய குட்டையில், திராவிடங்கள் மீன் பிடிக்கப் பார்த்தன. இப்பொழுது அவர்களுக்கு எல்லாம் சங்கத் தமிழ் இலக்கியம் செமை அடி கொடுத்து வருகிறது. புற நானூற்றில் எந்தப் பாட்டை எடுத்தாலும் அதிலுள்ள நம்பிக்கை ஏற்கனவே சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. திருக்குறளில் எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அது ஏற்கனவே வடக்கே உள்ளது. யாரும் யாரையும் ‘’காப்பி’’ அடிக்கவில்லை. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை. ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒரே மாதிரித்தானே சிந்திப்பர்!

பழங்கால உலக மொழிகள் எல்லாம் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளில் இருந்து வந்தவையே என்று முந்தைய கட்டுரைகளில் பல எடுத்துக் காட்டுகளைக் கொடுத்தேன். இது கப்பல் தொடர்பான கட்டுரை என்பதால் இன்னும் ஒரு பொருத்தமான உதாரணத்தைப் பார்ப்போம். கப்பல் என்ற தமிழ் சொல்லில் இருந்து ஷிப் என்ற ஆங்கிலச் சொல் வந்தது:- கப் (பல்)= ஸ்கிப்= ஷிப்; இதே போல நாவ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து நேவி என்ற ஆங்கிலச் சொல் வந்தது: நாவ்=நேவி=நேவல்.

ஆக இந்திய மூல மொழி இரண்டு கிளையாகப் பிரிந்து தமிழ் சம்ஸ்கிருதம் என மலர்ந்து, வளர்ந்து உலக மொழிகளைத் தோற்றுவித்தன.

கப்பல், கடல் பற்றிய குறிப்புகளைப் பார்க்கையில், வேத காலத்தில் மிகப் பெரிய கடல் வாணிபம் நடந்ததும் தெரிகிறது. ஆங்கிலக் கட்டுரையில் எல்லா குறிப்புகளையும் கொடுத்துள்ளேன். இங்கு முக்கிய குறிப்புகளை மட்டும் தருகிறேன்:–

1.வேதத்தில் வரும் நாவ் (படகு, கப்பல்) என்ற சொல்தான் இன்று உலகம் முழுவதும் கடற்படை (நேவி) என்ற சொல்லில் பயன் படுத்தப்படுகிறது. (RV 1-97-8)

2.வேதத்தில் குறைந்தது எட்டு முறை குறிக்கப்படும் விஷயம், நடுக் கடலில் தத்தளித்த பூஜ்யு என்பவரை அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய செய்தியாகும். அவருடைய கப்பல் நூறு துடுப்புகள் உடைய கப்பல்.   RV 1-116-5; 1-117-14

3.பிராமணர்களைத் தொல்லைபடுத்துவதால் அழியும் நாடு கடலில் உடையும் கப்பலைப் போன்று அழிகிறது என்று அதர்வ வேதம் கூறும் (AV 5-19-8)

ship35

4.சமுத்ரம் (பெருங்கடல்) என்ற சொல் நிறைய இடங்களில் வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

5.கடல் செல்வங்கள் பற்றிய குறிப்புகளும் உள (RV 1-47-6; 7-6-7; 9-97-44)

6.முத்தும் பலவகைக் கடற்பயன்களும் குறிப்பிடப்படுகின்றன (RV 1-48-3, 1-56-2; 4-55-6)

7.தொலை தூரப் பிரதேசங்களுக்கு வாணிபத்தின் பொருட்டுச் சென்ற குறிப்புகளும் உள. இன்றும் தமிழர்கள் பயன்படுத்தும் வணிகம் சென்ற சொல்லே ரிக்வேதத்தில் இருந்து வந்த சொல்லே! (1-56-2; 4-55-6; RV 1-48-3)

8.வருணனும் வசிட்டனும் நடுக்கடலுக்கு கப்பலில் சென்றதை ஒரு பாடலில் காண்கிறோம் (RV 7-8-3)

9.சரஸ்வதி நதி கடல் வரை வருவதை ஒரு துதியும் இந்தியாவின் இருபுறம் உள்ள கடல்களை இன்னொரு துதியும் குறிப்பிடுகின்றன RV 10-136-5

10.மிகப்பெரிய இயற்கை அதிசயம் பல்லாயிரம் நதிகள் நீரைக் கொண்டுவந்து கொட்டினாலும் கடல் நிறைவதில்லை; எல்லை மீறுவதும்இல்லை என்று வேதம் துதி பாடுகிறது. சங்க இலக்கியத்தில் பரணரும் அதைப் பாடியுள்ளார் (RV 5-16-7)

  1. ரிக்வேதம் ஒரு மத நூல் என்றபோதிலும் 15 வகையான மீன்களின் பெயர்கள் அதில் உள்ளன.

12.ரிக் வேதத்திலும் தமிழின் பழைய நூல் தொல்காப்பியத்திலும் வருணன், கடல்வாழ் மக்களின் தெய்வம் என்று கூறப்படுகிறது.

13.தென் மாவட்டங்களில் கடலோரமாக வாழும் பரதவர்களுக்கும், ரிக் வேதத்தில் மிகவும் புகழோங்கிய பரதகுலத்துக்கும் தொடர்பு உண்டா என்றும் ஆராய வேண்டும்

14.வருணனை மேற்கு திசையின் அதிபனாக பிற்கால நூல்கள் வருணிக்கின்றன. மேற்கு திசையில் துவாரகா துறைமுகத்தில் இருந்து கிருஷ்ணர் நடத்திய கடற்படைத் தாக்குதல்களை “இந்து தெய்வங்களின் கடற்படைத் தாக்குதல் என்ற கட்டுரையில் கொடுத்துள்ளேன்

ship2

15.இந்துக்களுக்குக் கடல் என்பதே தெரியாது என்று சொன்னவர்களின் வாயில் அடிக்கும் வகையில் கடலுக்கு அடியில் மூழ்கிய துவாரகா கண்டுபிடிக்கப்பட்டது. தெற்கே ராமர் கட்டிய பாலம் ‘’நாசா’’ எடுத்த புகைப் படத்தில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணர் 125 ஆண்டுகள் வாழ்ந்து ஒரு வேடனால் கொல்லப்பட்ட அன்று, பெரிய சுனாமி தாக்குதல் ஏற்பட்டு துவாரகை கடலில் மூழ்கியதை விஷ்ணு புராணம் கூறுகிறது. அதே கி.மு3102-ஐ ஒட்டிதான் துவாரகை மூழ்கியதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆக இந்துமத நூல்கள் சொன்னதை கடல் அகழ்வாராய்ச்சிகளும் நிரூபித்துவிட்டன.

16.உலகம் முழுதும் உள்ள கடல்கள் இந்து ரிஷிகளின் பெயர்களில் உள்ளன: காஸ்பின் கடல்=காஸ்யப ரிஷி, ஏட்ரியாடிக் கடல் = அத்ரி மகரிஷி, ஏஜியன் கடல் = அகஸ்திய மஹரிஷி, பிளாக் ஸீ/ கருங்கடல்= வருணனின் நிறம் கருப்பு என்று வேதம் வருணிக்கிறது.

கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க.

(கப்பல் படங்களுக்கும் கட்டுரைக்கும் நேரடித் தொடர்பு இல்லை)