அபூர்வ ராமாயண படங்கள்: பாலகாண்டம்

தொகுத்தவர்:லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:1795; தேதி 13 ஏப்ரல் 2015

லண்டனில் பதிவு செய்த நேரம்: காலை 8-25

படம்1.ஒரு வேடன் , ஆணும் பெண்ணுமாகக் கூடியிருந்த இரு பறவைகளில் ஒன்றை அம்பு எய்து கொன்றான். அதைப் பார்த்த வால்மீகி அவனைச்  சபித்தார். அந்த சாபம், அவர்   அறியாமலே கவிதையாக மலர்ந்தது. உடனே பிரம்மா   தோன்றி,  நீ  ராமன்    என்னும், உத்தம   அரசனின்  கதையை எழுதலாமே  என்றார். அப்பொழுதுதான்  உலகம் வியக்கும் வால்மீகி ராமாயணம் தோன்றியது. 24,000 செய்யுட்களாக வடிவெடுத்தது. (பறவைகளைக் கொல்வது வேடர்களினன்  தொழில். ஆயினும் ஆணும் பெண்ணுமாகக் கூடியிருக்கையில்,  எந்த மிருகத்தையும் கொல்லக்  கூடாதென்று,   இந்துமத நூல்கள் தடை விதிக்கின்றன).

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவார்க்கே. –(பால. காப்பு 12)

e0aeb0e0aebfe0aeb7e0af8de0aeafe0aeb8e0af8de0aeb0e0af80e0aea9e0ae95.jpg (960×960)

படம்2.உலகம்  வியக்கும் வண்ணம், ஆட்சி புரிந்த கோசல மன்னன்   தசரதனுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை. ரிஷ்ய சிருங்கரென்ற முனிவர் நாட்டுக்குள் நுழைந்தால் நல்லது என்றும்  அவர் புத்ர காமேஷ்டி யாகம் செய்தால் குழந்தைப் பேறு உண்டாகுமென்றும் பெரியோர்கள் சொன்னார்கள். பெண்ணென்றால்  என்ன என்றே தெரியாமல் காட்டுக்குள் வசித்து வந்த முனிவரை அழகிகள் மயக்கி அழைத்து வருகின்றனர்.

img_2767.jpg (2448×2448)

படம்3.புத்ர+ காம + இஷ்டி யாகம் செய்த உடனே ஒரு அற்புதம் நிகழ்கிறது. யாகத் தீயிலிருந்து ஒரு தேவன் வெளியே வந்து அற்புத  இனிப்புப் பாயசக் குடத்தைத் தருகிறான். அதை தசரதன், தனது மூன்று மனைவிகளுக்கும் பிரித்துத் தருகிறான். இதற்குப் பின்னர், கௌசல்யா என்பவள், இராம பிரானையும், கைகேயி என்பவள் பரதனையும், சுமித்திரை என்பவள் லெட்சுமணன், சத்ருக்னனனாகிய இரட்டைப் பிள்ளைகளயும் பெறுவதற்கு இந்தப் பாயசம்    உதவுகிறது.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். –(பால. காப்பு 13)

img_2768.jpg (2448×2448)

படம்4.விசுவாமித்திரனென்ற முனிவன் ((விசுவ+மித்திரன் = உலக நண்பன்)) வந்து, உனது மகன் ராமனை என்னுடன் பாதுகாப்புக்காக   அனுப்பு என்கிறார். தசரதனுக்கு பயம்,  நானே வருகிறேனே, சின்னப் பையன்கள்  எதற்கு? என்கிறார். ஆயினும் வசிஷ்டர் சொன்னவுடன்  ராம லெட்சுமணர்களை அனுப்பி வைக்கிறார். முக்காலமும் தெரிந்த முனிவன்  வசிட்டனுக்கு  இதிலும் நண்மை  உண்டு  என்று தெரிகிறது.

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையார் அவர்

தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே–(பாலகாண்டம் பாயிரம் 1)

img_2769.jpg (2448×2448)

படம்5.காட்டில் நுழைந்தவுடன் தாடகை என்னும்  அரக்கி வருகிறாள். “பெண்  என்பதால் நான் கொல்ல மாட்டேன்” – என்கிறார். அவளொரு பெண்ணே இல்லை , இராட்சஸி என்று  விசுவாமித்திரன் சொன்னவுடன் ராமன்  அவளை ஒரே அம்பில் கொல்கிறார்.

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்

உய் வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ

மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்

கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்

img_2770.jpg (2448×2448)

படம்6.காட்டில் சுபாஹு, மாரீசனென்ற  இரண்டு அரக்கர்கள் யாகசாலை மீது தாக்குகின்றனர். உடனே ராமன், சுபாஹுவைக் கொல்கிறான். மாரீசனைக் கடலில் தொலைவில் தூக்கி எறிகிறான்.

படம்7.கௌதம  முனிவர் தனது மனைவி அகலிகையுடன் காட்டில் வசித்து வந்தார். அவர் வெளியே சென்ற பொழுது இந்திரன் , முனிவர் வேடத்தில் வந்து அகலிகையை மான பங்கப்  படுத்துகிறான். இதனால் கோபமமடைந்த கௌதமர் தனது மனைவி கல்லைப் போல சித்தப் பிரமை பிடித்தவளாக  இருக்குமாறு சபிக்கிறார். தான் தவறு செய்யவில்லை என்று மன்றாடுகிறாள். இந்துமதம் சத்தியத்தின்   அஸ்திவாரத்தின் மீது  அமைந்ததால் கடவுளே ஆனாலும்  ஒரு சொல் சொன்னால், அதைத் திருப்பிப் பெற முடியாது;மாற்ற முடியாது. ஆனால் மாற்று வழி கண்டு பிடித்து அதன் மூலம் வெளியேற  உதவலாம். ராமன் காலடி பட்டவுடனே, உனக்கு சாப விமோசனம் கிடைக்குமமென்று கௌதமர் கூறுகிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சம்பவத்தை விளக்குமமோவியம் மதுரை- திருப்பறங்குன்றக் கோவிலில்   இருந்ததாகச் சங்க இலக்கியம் செப்புகிறது.

img_26691.jpg (2448×2448)

படம்8.ராமனின் கை வண்ணத்தை தாடகை வதத்திலும், கால் வண்ணத்தை அகலிகை சாப விமோசனத்திலும் கண்டதைக் கம்பன் அழகாகப் பாடுகிறான். ராமன், பின்னொரு காலத்தில், தனது ஆஸ்ரமத்துக்கு வருவார், என்பதை முக்காலம் உணர்ந்த கௌதமர் முன்னரே  அறிந்தது இந்த சம்பவத்தால் தெரிகிறது. நாம் ஒரு மலையின் மீது நின்று நதி ஓடுவதைப் பார்த்தால் நம்மைக் கடந்து சென்ற நதி, கடக்கும் நதியின் நீர், இனி நம்மை நோக்கி எதிர் வரப் போகின்ற நீர் ஆகியவற்ரைப் பார்ப்பது போல முனிவர்கள் காலத்துக்கு வெளியே சென்று “சென்ற காலம், நிகழ் காலம், வரும் காலம், ஆகியவற்றைப் பார்க்க முடியும். இது காலம் பற்றிய சார்பியல் கோட்பாட்டைக் கொடுத்த, ஐன்ஸ்டைனுக்கும் தெரியாத விஷயம்!!

img_2794.jpg (2448×3264)

படம்9.இராம லெட்சுமணர்களை ஜனகன் என்னும் விதேக நாட்டு மன்னனிடம் விசுவாமித்திரர் கூட்டிக் கொண்டு செல்கிறார். இந்த  இளைஞன் என்னிடமுள்ள சிவ தனுஷை முறித்தால்  அமிழ்தினும் இனிய எனது மகள்  சீதையை மணம் முடிப்பேன் — என்கிறான்  ஜனகன். ராமன் வில்லை எடுத்தவுடனே  அதில் நாணேற்றி வெற்றி பெறுகிறார்.வில் முறிந்தும் போகிறது. “எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்” — என்று கம்பன் பாடுகிறார். அதாவது வில்லை எடுத்ததைத் தான் மக்கள் பார்த்தனர். அடுத்த நிமிடம், அது முறிந்த சப்தம்தான் மக்களுக்குக் கேட்டது. அவ்வளவு வேகத்தில் ராமன் செயலைச் செய்து  முடித்தார்.

img_2576.jpg (2448×2448)

படம்10.பரசுராமன், ஒரு பிராமணர். அவரது தந்தைக்கு, க்ஷத்ரியர்கள் தீங்கு இழைத்ததால், அவர் 21 முறை  தாக்கி, அரசர்கள்  எல்லோரையும்   அழிக்கிறார். ராமரும் க்ஷத்ரியரென்பதால் கோபக் கனல் பொங்க, அவரை எதிர்க்கிறார். எல்லோரும் விட்டுவிடுங்கள்” – என்று கெஞ்சுகின்றனர். சிவ தனுஷென்னும் வில்லை முறித்த ராமன், என்னிடமுள்ள விஷ்ணு தனுஷென்னும் வில்லை முறித்தால் போய் விடுகிறேன் என்கிறார். இராமன் அதை நொடிப் பொழுதில் முடிக்கவே, அவர் வந்த வழியே போய் விடுகிறார்.

IMG_2575

swami_48@yahoo.com

இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!

rukmini2

ருக்மிணியை   கிருஷ்ணர் கடத்திச் செல்லும் படம்

Written by London swaminathan

Research article No. 1786; Date 8th April 2015

Uploaded from London at   காலை 9-32

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

-தொல்.பொருளதிகாம்– 1038

இந்துமதம் ஒரு அழகான மதம். அதில் காதல்,கடத்தல் திருமணங்களும் உண்டு. மொத்தம் எட்டு வகையான திருமணங்களை மனு நீதி நூல் குறிப்பிடுகிறது. வேதகாலம் முதல் இதிஹாச புராண காலம் வரை இந்த எட்டு வகை மணங்களும் இருந்தன. இதில் இன்னும் ஒரு சுவையான விஷயம் தமிழில் மிகப் பழைய நூலான தொல்காப்பியமும் இதைக் குறிப்பிடுகிறது. அடுத்த வரியிலேயே அறம் பொருள் இன்பம் (தர்ம, அர்த்த, காமம்) என்பதையும் குறிப்பிடுகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே தர்மம் இருந்தது என்பதை தொல்காப்பியர் முடிந்த இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார். நிற்க.

1.உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் விமதா என்பவன் புருமித்ர என்பவரின் மகளான காமத்யுவைக் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டதைப் பாடி வைத்துள்ளனர் முற்கால ரிஷிகள் ( ரிக் வேதம் 1-112-19, 1-116-1; 1-117-20; 10-39-7; 10-65-12).

2.கிருஷ்ண பரமாத்மா, அவர் மீது காதல் கொண்ட ருக்மிணியைக் கடத்திச் சென்று கல்யாணம் முடித்தார்.

3.கிருஷ்ணரின் தங்கை சுபத்ராவை அர்ஜுனன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள கிருஷ்ணரே உதவினார்.

4.மஹாபாரதத்தில் பீஷ்மர், காசிராஜனின் புதல்விகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா அக்கிய மூவரையும் கடத்திச் சென்று இருவரை விசித்ரவீர்யனுக்கு மணம் முடித்தார்.

bhishma-amba-ambika-ambalika-300x225

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூவரையும் பீஷ்மர் கடத்தும் காட்சி

அந்தக் காலத்தில் காதல், கடத்தல் பற்றிய பல சுவையான விஷயங்களை இந்தக் கதைகள் சொல்லுகின்றன. புராணங்கள் பொய்க்கதைகள் அல்ல, அக்கால உண்மைச் சம்பவங்களை அப்படியே சொன்னவை என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.

கடத்தல் திருமணங்களை ராக்ஷச வகைத் திருமணங்கள் என்பர்.

ருக்மிணியின் தந்தையான ருக்மி, தன் புதல்வியை சிசுபாலனுக்கே கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார். ஆனால் அவளுக்கு கண்ணன் மீது காதல். ஆகையால் அவர் கடத்திச் சென்றார். இதனால் சிசுபாலனுக்கும், கண்ணனுக்கும் ஜென்மப் பகை ஏற்பட்டது.

சுபத்ராவை துர்யோதணனுக்குக் கொடுக்க வேண்டும் என்று பலராமன் எண்ணினார். அது அவருடைய தம்பியான கண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அர்ஜுனனை ஒர் பிராமணன் போல வேஷம் போட்டு பல நாட்களுக்கு அரண்மனையில் தங்க வைத்தார். பின்னர் சுபத்ராவைக் கடத்திச் செல்ல உதவியும் செய்தார். அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை வேண்டாம் என்று சொல்ல எந்தப் பெண்ணும் துணிய மாட்டாள். ஆனால் இது கிருஷணருக்கும் பலராமனுக்கும் இடையே உரசலை உண்டாக்கியது.மஹாபாரதப் போரில் எந்தப் பக்கமும் சேர மாட்டேன் என்று சொல்லி பலராமன் தீர்த்த யாத்திரைக்குப் போய்விட்டார்.

subhadra

சுபத்திரையை அர்ஜுனன் கடத்தும் படம்

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூன்று பேரழகிகளை நித்திய பிரம்மச்சாரியான பீஷ்மர் கடத்திச் சென்றார்.எதற்காக? பாண்டு வம்சம் தழைக்க வேண்டும் என்று வளர்ப்புத் தாயார் சத்தியவதி சொன்னதால். ஆனால் மூவரில் அம்பா என்ற பெண், “நான் ஏற்கனவே ஷால்வ மன்னரைக்  காதலிக்கிறேன்” என்றாள். உடனே பீஷ்மர் அவளை விடுவித்து, “போய் வா மகளே” என்றார். ஆனால் ஷால்வ மன்னனோ “பிச்சை கேட்டுப் பெண் எடுப்பவன் நான் அல்ல, போய் விடு” என்று அவளை அனுப்பி வைத்தான். இதனால் வெகுண்டெழுந்த அம்பா, பீஷ்மருக்கு கடும் சாபம் போட்டாள்.

“பெண் சாபம் பொல்லாதது. குடும்பத்தையே வேரோடு அழிக்கும்” — என்று மனு தனது நீதி நூலில் எச்சரித்தது சரியாகப் போயிற்று. “பெண்கள் எங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களோ அங்கேதான் தெய்வங்கள் வாழும்” — என்று மனு ஒரு ஸ்லோகத்தில் திட்டவட்டமாகச் சொன்னது ஏன் என்று புரிகிறது.

மிக வியப்பான விஷயம் நாம் சினிமாக்கதைகளில் பார்ப்பது போலவே அந்தக் காலத்திலும் நடந்திருக்கிறது. நமது சமய நூல்கள் பல நீதிகளைப் புகட்ட இந்த உண்மைக் கதைகளை அப்படியே உள்ளதை உள்ளவாறு இயம்பின. காதலும், கடத்தலும் இப்படி வாழ்நாள் முழுதும் ரணங்களை, தீராத பகையை உண்டாக்கும் என்பதையும் இவை தெள்ளிதின் விளக்கும்.

rukmini

எட்டு வகைத் திருமணங்கள்

மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் 20 ஆவது ஸ்லோகம் முதல் எட்டு வகைத் திருமணங்களை விளக்குகிறார். அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் சிங்காரவேலு முதலியார் இவைகளை விரிவாக அளித்துள்ளார். ஆயினும் 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் என்னும் புகழ்பெற்ற தமிழ்ப் பார்ப்பன உரைகாரர் எழுதிய தொல்காப்பிய உரையில் முழு விவரங்களையும் தருகிறார்.

1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8).பைசாசம் — என்ற எட்டுவகை திருமணம் பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன. இக் கட்டுரையின் தொடர்ச்சியில்  — இரண்டாவது பகுதியில் — எட்டு வகைத் திருமணங்கள் பற்றிய முழு விவரங்களையும் காண்போம்.

ஒரு தாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்!

rama raibow

ஸ்ரீ ராமர் படம்

Article written by S NAGARAJAN

Post No. 1782; Date 7th April 2015

Uploaded from London at 6-12 am

 

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 17

by ச.நாகராஜன்

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்!

 rama immaiyee

நாராயணா என்னும் நாமம்!

 

நாராயணா என்னும் நாம மகிமையை திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் கூறியிருப்பதை அறியாதவர் இருக்க முடியாது. பெற்ற தாயினும் ஆயின செய்யும் அந்த எட்டெழுத்து மந்திரம், குலம் தரும் செல்வம் தரும், அனைத்து நலன்களையும் தரும்! அவர் அருளிய பாடலைப் பார்ப்போம்:-

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயாராயினவெல்லாம்                          

நிலம் தரச் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலமளிக்கும்           

வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்                  

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்

 

இப்படிப்பட்ட அரும் நாமம் கொண்ட மஹாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளதை நமது புராணங்கள் அழகுற விளக்குகின்றன.

 

திருமால் பெருமைக்கு நிகரேது!

மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மனிதருக்கு வாழும் நெறியைக் காட்டிய அவதாரங்களில் ராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் தனிச் சிறப்பைப் பெற்ற அவதாரங்கள்.

இந்த பத்து அவதாரங்களையும் பார்த்து மகிழ ஒரு பாட்டு பிறந்தது – திருமால் பெருமை என்னும் படத்தில்.

1968ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் இந்த மாதிரி படங்களை எடுப்பதற்கென்றே பிறந்தவர் என்று சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஏ.பி.நாகராஜன். இதில் பத்து அவதாரச் சிறப்பையும் ஒவ்வொரு வரியில் அமைத்துத் தர வேண்டும். யாரால் முடியும்? வேறு யார் – கண்ணதாசன் தான் பாடலை இயற்றியுள்ளார்.

கணீர் என்ற குரலில் டி.எம்.சௌந்தரராஜன் இனிமையாகப் பாடலைப் பாட காட்சியின் பின்னணியில் பத்து அவதாரங்களையும் கண்டு மகிழலாம். சிவாஜிகணேசனும் பத்மினியும் இந்தக் காட்சியில் தோன்றுகின்றனர். சிவாஜி பாட பத்மினி அருகில் இருந்து துதிக்கும் காட்சி இது. சிவகுமார் புன்சிரிப்புடன் தெய்வத் தோற்றத்தைக் காட்டுகிறார். ஆவியே அமுதே என்று இறைவனை விளித்து சிவாஜி பத்து அவதாரங்களையும் வர்ணிக்கும் பாடல் அற்புதம் தான்! ராம அவதாரம் என்று பாடியவாறே வில்லை சிவாஜி அபிநயித்துக் காட்டி ராமரின் ஏற்றத்தைக் காட்டுகிறார்! பல ராமன் என்று கூறிப் பின்னர் பலராமன் என அவதாரத்தைச் சொல்லும் போது இந்தச் சொல்லை சிலேடையாகப் பயன்படுத்தி இருக்கும் கண்ணதாசனின் கவித்துவத்தைப் பளீரென மின்னலடித்துக் காட்டுவதாக விளங்குகிறது!

ramakoti beauty

நீண்ட இனிய பாடல் 4 நிமிடம் 43 வினாடிகள் நீடிக்கிறது.

திருமால் பெருமைக்கு நிகரேது – உன்றன்

திருவடி நிழலுக்கு இணையேது

பெருமானே உன்றன் திருநாமம் – பத்து

பெயர்களில் விளங்கும் அவதாரம்     (திருமால் பெருமைக்கு)

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் தன்னைக்

காப்பதற்கே கொண்ட அவதாரம் – மச்ச அவதாரம்

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் – எங்கள்

அச்சுதனே உந்தன் அவதாரம் – கூர்ம அவதாரம்

பூமியைக் காத்திட ஒரு காலம் – நீ

புனைந்தது மற்றொரு அவதாரம் – வராக அவதாரம்

நாராயணா என்னும் திருநாமம் – நிலை

நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் – நரசிம்ம அவதாரம்

மாவலி சிரம் தன்னில் கால் வைத்து – இந்த

மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம் – வாமன அவதாரம்

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் – என்று

சாற்றியதும் ஒரு அவதாரம் – பரசுராம அவதாரம்

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும்

உயர்வினைக் காட்டிய அவதாரம் – ராம அவதாரம்

ரகுகுலம் கொண்டது ஒரு ராமன் – பின்பு

யதுகுலம் கண்டது பலராமன்  – பலராமன்

அரசுமுறை வழிநெறி காக்க – நீ

அடைந்தது இன்னொரு அவதாரம் – கண்ணன் அவதாரம்

விதி நடந்ததென மதி முடிந்ததென

வினையின் பயனே உருவாக

நிலை மறந்தவரும் நெறியிழந்தவரும்

உணரும் வண்ணம் தெளிவாக,

இன்னல் ஒழித்து புவி காக்க – நீ

எடுக்க வேண்டும் ஒரு அவதாரம் – கல்கி அவதாரம்  (திருமால் பெருமைக்கு)

 

 ramakoti

சீதையே இலட்சிய இந்தியா :ஸ்வாமி விவேகானந்தர்!

“சீதாயா சரிதம் மஹத்” என்பார் வால்மீகி. இராமாயணத்திற்கு வால்மீகி தந்த பெயர் சீதையின் சரிதம் என்பது தான்!

சீதையே இலட்சிய இந்தியா என்றார் ஸ்வாமி விவேகானந்தர்:  “Sita is typical of India – the idealized India”

ஸ்வாமிஜியின் அமுத மொழிகள் ராமரின் ஏற்றத்தையும் சீதையின் மாபெரும் மஹத்துவத்தையும் இப்படிச் சித்தரிப்பதைக் காணலாம்:-

Rama and Sita are the ideals of the Indian nation. All children, especially girls, worship Sita. The height of a woman’s ambition is to be like Sita, the pure, the devoted, the all-suffering!”

“Sita is the name in India for everything that is good, pure, and holy; everything that in woman we call woman”

ஆக வழிவழியாக பாரதப் பெண்மையின் லட்சியமாக சீதை திகழ்வதையும் அப்படிப்பட்ட ஒரே தாரத்தைப் பெற்றுப் போற்றி குடும்பம் நடத்துவதற்கான வாழ்வு நெறியை ராமன் காண்பிப்பதையும் ராமாயணம் நமக்கு உணர்த்துகிறது.

இதைத் தமிழ் திரையுலகம் அவ்வப்பொழுது அழகுறச் சித்தரித்து வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் திருமால் பெருமை பத்து அவதார மகிமையையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டது எனலாம்!

*****************

கலியுக அறிகுறி- குருமார்கள் குலிங்க பக்ஷி போலத்திரிவர்!! 8 வயதில் குழந்தை பெறுவர்!

PloverCrocodileSymbiosis

Research Article written by London swaminathan

Post No. 1774; Date 4th April 2015

Uploaded from London at  13-10 (லண்டன் நேரம்)

கல்கி புராணம்

சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் கு.அனந்தாசாரியார் – 1903 — விலை12 அணா

 

சென்ற வாரம் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று கல்கி புராணத்தைப் படித்தேன். அதிலுள்ள சில சுவையான விஷயங்களைத் தருகிறேன். கூடிய மட்டிலும் கு.அனந்தாசாரியார் 1903-ல் பயன்படுத்திய சொற்களை அப்படியே தருகிறேன். குலிங்க பக்ஷி பற்றி கல்கி புராணம் கூறுவது முன்னர் நான் எழுதிய “மஹா பாரதத்தில் ஒரு அதிசயப் பறவை” (ஜூலை1, 2014) என்ற கட்டுரையில் சொன்ன பூலிங்கப் பறவையே என்பதும் தெரிந்தது. இது பற்றி வைஷ்ணவப் பெரியார் ஸ்ரீ வேதாந்த தேசிகன் (கி.பி 1268—1370) எழுதிய தயா சதகத்தில் வரும் சுவையான விஷயத்தையும் கீழே படியுங்கள்:–

ஓ, சூத முனிவரே! மனிதர்கள் முப்பதடிப் பிரமாணமுள்ளவர்கள்,கலி யுகத்தில் முடிவில் மூன்றங்குலப் பிரமாணமாகி விடுவர்.

கலியுகத்தில், ஜனங்கள் அன்ன விக்ரயம் (விற்பது) செய்வார்கள்; அந்தணர்கள் மந்திரங்களை விற்பார்கள்; ஸ்த்ரீகள் பதிவ்ரதா தர்மத்தை (கற்பை) விற்பார்கள்.

பிராமணர்கள், வேதங்களைக் கீழ்ப்பட்ட ஜாதியினருக்குச் சொல்லிப் பிழைப்பர். பிராமண ஸ்த்ரீகள் மோர், தயிர், பால் விற்பார்கள்; வைஸ்யர்கள் எல்லோரும் மாமிசம் விற்பார்கள்

symbiosis

மானுக்குதவி செய்யும் பறவை

கலியுகத்தில் பிராமணாதி மூன்று வர்கத்தினர் ஸ்வதர்மத்தை இழந்து வயிறு நிறைப்பதிலும், மாதர்களைப் புணர்வதிலும் ஆசை கொள்வர்.  சூத்திரர்கள் நற்செய்கை, நல்லொழுக்கம் உள்ளவர்களாயிருப்பார்கள்.

ஸ்த்ரீகள் (பெண்கள்) எல்லோரும் எட்டாவது வருஷத்தில் புத்திரர்களைப் பிரசவிப்பார்கள்- நியாயாநியாயாயமில்லா மல் (நியாயம்+ அநியாயம்) புருஷர்களைப் புணருவார்கள்.

மாதர்கள் யாவரும் பன்றிபோல் பத்து எட்டு குழவிகளைப் பெறுவார்கள். இரு கரத்தாலும் சிரத்தை (தலையை) சொறியப்போகிறார்கள்.

ஓ, புத்திமானே, மாதர்கள் புருஷனை வஞ்சனை செய்து, புருஷனுக்கு முன் உண்ணுதலும், உறங்குதலும் செய்யப்போகிறார்கள்

பூமிகளெல்லாம் சுரமில்லாமல் சுவல்பப் பலனாய் பலிக்கப்போகிறது. கொடிகள் யாவும் செழிப்பாக வளர மாட்டா.

Kalki

கல்கி அவதாரம்

விவாக ரத்து அதிகரிக்கும்!

ஜனங்களைப் பிணிகள் பீடிக்கப் போகிறது. விதவைகள் ஒரு புருஷனை மணந்து சந்ததியுண்டு பண்ணுவர். சுமங்கலி ஸ்த்ரீக்கள் புருஷனோடு சண்டையிட்டு விதவைகளைப் போல் ஆவர் (டைவர்ஸ்- விவாக ரத்து அதிகரிக்கும் என்று சொல்வதாக நான் அர்த்தம் செய்கிறேன். பம்பாய், கலகத்தா, டில்லி, சென்னை ஒவ்வொரு நகரத்திலும் ஆண்டுக்கு 8000 விவாகரத்து வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்த நம் முன்னோர்களை எண்ணி வியக்கிறேன்)

கலியுகத்தில் கொடையாளிகள், தரித்திரர்களாகவும் கிருபணன், தனிகனாகவும், பாபி, தீர்க்கயுஸ் உடையவனாகவும், நல்லவன் அல்பாயுஸ் உள்ளவனாகவும், அல்ப ஜாதிகள் மஹாராஜாவாகவும், உத்தம குணத்தினர் அவர்களுக்குப் பணிவாகவும் இருப்பர்

பெருங்காற்று- சுவல்ப மழை- க்ஷாமம் உண்டாகும்

எல்லா ஜனங்களும் வேதாந்தம் பேசுவர்- ஒருவரும் தத்துவத்தை அறியார். அந்தணர்கள் வெகுவாக வாதம் பண்ணுவர். வேஷத்தில் மட்டும் அந்தணர்களாக இருப்பர்.

கலியுகத்தில் மனிதர்கள் பொய்யை சத்தியமாகவும், மெய்யை அசத்தியமாகவும் செய்வர். வேத மார்க்க கர்மங்களை தூஷிப்பர் – நீதியை அனுசரியார்.

Hippo and Oxpeckers - Highly Commended - Paula Martin

நீர் யானைக்குதவும் பறவைகள்

குலிங்கப் பறவைகளும் குருமார்களும்

கலியுகத்தில் சில குருமார்கள், நித்திய கர்மங்களை இழந்து இதரர்களுக்கு மாத்திரம் ஞானத்தைப் போதித்து குலிங்க பக்ஷிக்கள் போல் சஞ்சரிப்பார்கள்.

எனது கருத்து

குலிங்க பறவை பற்றிய ஒன்றிரண்டு கதைகள் மஹாபரதத்தில் வருகின்றன. ஆனால் அவை மேற்கூறிய குருமார்கள் விஷயத்தில் பொருந்தாததால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் எழுதிய தயா சதக மேற்கோளைப் பார்த்தேன். மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இதோ அந்த ஸ்லோகமும் அதன் விளக்கமும்:–

மாசாஹசஸ் உக்தி கந கஞ்சுக வஞ்சித அந்ய

பத்யத்ஸு தேஷு விததாமி அதி சாஹசானி

பத்மா சஹாய கருணே ந ருணத்ஸி கிம் த்வம்

கோரம் குலிங்கம் சகுநே: இவ சேஷ்டிதம் மே (ஸ்லோகம் 94)

பொருள் விளக்கம்:

தயாதேவியே! சாஹசச் செயல்களைச் செய்யாதே என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு – உத்தமன் போல வேஷம் போட்டு —  அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நான் சாஹசச் செயல்களில் இறங்குகிறேன். குலிங்கப் பறவை போல நான் செய்யும் சாஹசச் செயல்களை நீ கண்டிக்காமல் இருப்பது ஏன்? (என்னை சரியான பாதையில் செலுத்துவது தாய் போன்ற உனது கடமை இல்லையா?)

குலிங்கம் என்னும் பறவை கத்துவது — மா ஸாஹஸம் குரு—

சாகசம் செய்யாதே – என்று சொல்லுவது போல இருக்குமாம். இப்படிச் சொல்லிக்கொண்டே, கொட்டாவி விடும் சிங்கத்தின் வாயில் புகுந்து அதன் பற்களில் சிக்கியுள்ள மாமிசத் துண்டுகளை இழுக்குமாம். சிங்கம் வாயை மூடினால் அதற்கு என்ன நேரிடும்?

(வேதாந்த தேசிகர் மிகப் பெரிய மஹான். பணிவின் காரணமாகவும் நம்மைப் போன்றோருக்கு அறிவுறுத்தவும் தன்னைக் குலிங்க பறவைக்கு ஒப்பிடுகிறார். மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் தன்னை நூற்றுக்கும் மேலான பாடல்களில் நாயுடன் ஒப்பிட்டுப் பாடியிருப்பதை நினைவிற் கொள்ளுதல் பொருத்தம்)

இரு வகை பிராணிகள் இடையே நிலவும் ஒத்துழைப்பை உயிரியல் விஞ்ஞானிகள் ‘’சிம்பியாஸிஸ்’’ என்று அழைப்பர். முதலையின் வாயில் சிக்கும் மாமிசத் துண்டுகளை எடுத்து சுத்தம் செய்யும் ப்ளோவர் பறவைகளின் வரவுக்காக முதலைகள் வாயைத் திறந்துகொண்டு காத்திருக்கும். அவைகளுக்கு ஒரு தீங்கும் செய்யா. ஆனால் சிங்கம் புலி போன்ற மிருகங்களிடையே இப்படி நடப்பதாக பதிவு செய்யப்படவில்லை. இந்தியக் காடுகளில் இத்தகைய செயல்கலைக் கண்ட நம் முன்னோர்கள் தக்க இடத்தில் அதை உவமையாகப் பயன்படுத்துவது சிறப்புடைத்து.

time1

ஏற்கனவே ஆதி சங்கரர் ஒரு நாலு வரிப் பாட்டிலேயே நான்கு பறவைகளை உவமையாக்கியது பற்றியும் தத்தாத்ரேயர் இருபதுக்கும் மேலான பறவை, விலங்குகள், பூச்சிகளிடமிருந்து தான் கற்ற போதனைகளை பாகவத புராணத்தில் சொல்லியிருப்பதையும், மரத்தின் மீது ஏறும் அதிசய அங்கோல மர விதைகள் பற்றி ஆதி சங்கரர் பாடியிருப்பது பற்றியும் பல கட்டுரைகளில் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

இனி, கல்கி புராணத்தில், மேலும் உள்ள விஷயங்களைக் காண்போம்:–

கலியுகத்தில் பிராமணாதி வர்ணத்தினர் நித்திய கர்மங்களை இழந்து, அதர்மங்களைச் செய்து சாராயம், கள், மாம்ஸம் முதலான தாமஸ பதார்த்தங்களைப் புசித்து உலகத்து ஜனங்கள் (அவர்களை) நிந்திக்கப் போகிறார்கள்.

கலியுகத்தில் வித்தியா குருவென்றும், மந்திரோபதேசக்  குருவென்றும், சிஷ்யன் என்கிற பேதமுமில்லாமல் நாம வாசகத்தால் மட்டும் பேதத்தை அடைந்து ஆசார்யப் பத்தினியை சீஷனும், சிஷ்ய பத்தினியை குருவும் அனுபவிக்கப் போகிறார்கள்.

கலியுகத்தில் எவன் தனிகனோ (பணக்காரன்) அவன் நல்ல குலத்தில் பிறந்தவனாகிறான் (கருதப்படுவான்). தரித்ரனானவன் துஷ் குலத்தில் பிறந்தவனாகிறான் (கருதப்படுவான்).சிலவிடங்களில் ஜாதி பேதமில்லாமல் இருக்கும்.

கலியில் மிருகங்கள் முதலிய ஜந்துக்களின் வயிற்றில் விசித்திர கர்மமும், கலியுக முடிவில் மனுஷ்ய யோனியில் அல்ப மிருகங்களும் உண்டாகப் போகின்றது.

kaliyuga_spencer_sass

யோகிகளுக்குள் சிறந்தவரான சூத புராணிகன், கலியுக தர்மம் யாவையும் ரிஷிகளுள் சிறந்தவரான  வியாச மாமுனியிடத்தில் கேட்டு, பரம ஆச்சரியத்தை அடைந்து மறுபடியும் கிருத யுக தர்மத்தைக் கேட்டார்.

(இதற்குப் பின்னர் கிருதயுக தர்மம் பற்றி வருகிறது. இது 1903 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அடைப்புக் குறிக்குள் இருப்பது எனது விளக்கங்கள்).

கலைமகளோ செல்வக் கடல் மகளோ பூவின் தலைமகளோ!

2sitakalyan

Article No.1770; Date 3rd  April 2015

Written by S NAGARAJAN

Uploaded at 7-18 am (London Time)

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 16

ச.நாகராஜன்

வைதேகி ராமன் கைசேரும் காலம்!

 

பவளவல்லி கரம் தொட்டான் உவந்து!

பாரத தேசத்தில் பிறந்தோர் அனைவருக்கும் சீதையின் கல்யாணம் என்பது அவர்களின் வாழ்க்கையில் இணைந்து விட்ட ஒரு அற்புதமான விழா ஆகும். இன்று நடக்கும் கல்யாணங்களில் கூட சீதா கல்யாண வைபோகமே என்று பாடுவது கண்கூடு.

ஆக இப்படிப்பட்ட கல்யாணத்தைக் கவிஞர்கள் வர்ணிக்காமல் இருக்க முடியுமா!

இராமாயண வெண்பா என்ற அரிய காவியத்தை இயற்றிய மதுரையைச் சேர்ந்த மதுரகவி ஶ்ரீனிவாஸ ஐயங்கார் சீதையின் அழகை வர்ணித்து அதை ராமன் எப்படி எண்ணி மகிழ்ந்தான் என்பதை இப்படிக் கூறுகிறார் கடிமணப் படலத்தில்:

கலைமகளோ செல்வக் கடல்மகளோ பூவின்

தலைமகளோ என்னத் தழைந்து – குலவி

உடல் பூரித்து உள்ளம் உவந்தான் ஓண் செம் கேழ்

மடல் பூரித்து உற்ற தோள் மன்               கடிமணப் படலம், பாடல் 429

தேவாதி தேவனான ராமபிரானுக்கு தெய்வத் திருமகளான சீதையை செங்கை நீர் வார்த்து கன்யாதானம் செய்யும் புண்ணியத்தைப் பெற்றான் ஜனக மன்னன்.

தேவாதி தேவனும் அத் தெய்வத் திருமகளும்

ஓவாது உறைந்து ஆங்கு உயர்கமல்ப் – பூவாரும்

மங்கையுடன் மேவி மகிழ்நீர் எனச்சனகன்

செங்கைநீர் வார்த்தான் தெளிந்து                  பாடல் 448

இருவரும் ஒருவரின் ஒருவர் கரம் பற்றும் காட்சியே காட்சி!

அதை கவிஞர் வர்ணிக்கும் பாங்கு இது:-

வெய்ய கனல்வாய் விதித்த விதி யாவும்

செய்து முடித்துச் செழும் கரத்தான் – நெய்யமைந்த

ஆகுதிகண் தேர்ந்தான் அரும் பவளவல்லி கரம்

ஓகையோடு தொட்டான் உவந்து   பாடல் 450

IDOL RAMA

கங்கை அமரன்இளையராஜாஎஸ்.ஜானகி கூட்டணி

 

இந்த வைதேகி ராமன் கைசேரும் சோபன நிகழ்வை பகல் நிலவு படத்தில் வரும் ஒரு பாடல் சித்தரிக்கிறது. படம் வெளியான ஆண்டு 1985. படத்தை இயக்கியவரோ பிரபல டைரக்டர் மணிரத்னம். அவரை ஒரு நல்ல டைரக்டர் என இனம் காண்பித்த படம் இது.

சரத்பாபு ராதிகாவிடம் சலங்கையைக் காட்டி இது சலங்கை அல்ல; இதுவே மாங்கல்யம் என்கிறார். அதைக் காலில் கட்டிக் கொண்டு ராதிகா நடனமாடுகிறார். ஒரு அபிநயத்துடன் கூடிய பாடலாக இது மலர்கிறது. இசை அமைத்தவர் இளையராஜா. பாடலைப் பாடியவர் எஸ்.ஜானகி. பாடலை இயற்றியவர் கங்கை அமரன். நல்ல கூட்டணி தானே இது!

கோவில் பிரகார மண்டபத்தில் பிரதானமாக ராதிகா நடனமாடும் காட்சியமைப்பில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு பரதநாட்டியக் கலையைக் கற்றுக் கொண்டு ஆடிக் காட்டுவதைப் பார்க்கிறோம்.

ramakoti beauty

வைதேகி ராமன் கைசேரும் காலம்!

பாடல் இது தான்:-

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே     வையம் வானகம் யாவும் தோரணம்

மெய்யை மெய் தொடும் காதல் காரணம்

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே    ஆ..ஆ..

காவேரி நீர் போல ஓடும் ஆடும்

கல்யாண ராகங்கள் பாடும்

காணாத கோலங்கள் யாவும் காணும்

கண்ணொடு மோகங்கள் கூடும்

ஏதோ ஓர் பொன் மின்னல் என்னுள்ளிலே

ஏதேதோ கூறாதோ பூந்தென்றலே

காதோடு ஆனந்தம் கேட்கின்றதே

ஏன் என்று என் உள்ளம் பார்க்கின்றதே   (ஸ்வர வரிசை)

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே         (ஸ்வர வரிசை)

பூவான மிருதங்கம் எங்கும் பொங்கும்

புரியாத லயம் கூட சங்கம்

கூவாத குயில் தந்த சந்தம் சிந்தும்

குறையாத சுகம் எந்தன் சொந்தம்

நான் காணும் ஆனந்தம் ஆரோஹணம்

வான் தூவும் பூவெல்லாம் அவரோஹணம்

சங்கீத தாளங்கள் போடும் மனம்

சந்தோஷ ராகங்கள் பாடும் தினம்

மிதிலையில் வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

வையம் வானகம் யாவும் தோரணம்

மெய்யை மெய் தொடும் காதல் காரணம்

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

கோவில் பிரகார மண்டபம், தெப்பக்குள மைய மண்டபம் என எல்லா இடங்களிலும்

நடனம் தொடர்கிறது.  கதாநாயகியின் சந்தோஷமும் புரிகிறது!

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியின் மனநிலையைச் சித்தரிப்பதற்கும் அவ்வப்பொழுது ஏற்படும் திருப்பங்களுக்கு உதவவும் ராமரும் சீதையும் தொடர்ந்து கை கொடுத்து வந்திருக்கின்றனர்!

****************

வில்வம், துளசியின் மகிமை!!

tulsi

Tulsi Worship= இல்லந்தோறும்  துளசி மாடம்

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமி நாதன்

ஆய்வுக் கட்டுரை எண்—1768; தேதி 2 ஏப்ரல் 2015

லண்டனில் கட்டுரை ஏற்றப்படும் நேரம்—காலை 8- 36

மரங்களுக்கு வணக்கம், நமஸ்காரம்!

இந்துக்கள் பூமியை வணங்கினர், உழக்கூடிய நிலத்தை வணங்கினர், நீர் நிலைகளை வணங்கினர் காடு மலைகளை வணங்கினர், செடி-கொடி-மரங்களை வணங்கினர், பறவைகள் ,மிருகங்களை வணங்கினர். இது எல்லாம் மூட நம்பிக்கைகளா? இல்லை. புறச் சூழல் என்பதை பயபக்தியுடன் அணுக வேண்டும் என்ற மனப் பரிபக்குவமே இந்த வழிபாட்டை ஏற்படுத்தியது.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்து பூமியில் காலடி வைக்கும் முன் அதனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு காலடி வைப்பர் (பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே). மரங்களை வெட்டும்போதும், கிணறு வெட்டும் போதும் இதே அணுகு முறையே. அதாவது உன்னை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளமாட்டோம். உன்னை பூண்டோடு அழிப்பது எங்கள் நோக்கமல்ல. எங்களைப் போலவே நீயும் சாஸ்வதமக இருக்கவேண்டும் என்பதே அவர்தம் கொள்கை!

மேலும் எந்த மரம் செடி கொடிகளுக்கு மருத்துவப் பலன்கள் அதிகமோ அவை மேலும் அதிகமாகப் போற்றப்படுகின்றன. மருத்துவப் பலன் கருதி அவைகளை அழித்துவிடக் கூடாதென்பத ற்காக இப்படிப் புனிதத்துவம் ஊட்டினரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. சோம லதை என்னும் அபூர்வ, மனதைச் சுத்திப்படுத்தும், வேத கால மூலிகை அடியோடு அழிந்துவிட்டது! இந்த சோமக் கொடியைப் போற்றி வேதத்தில் ஏராளமான துதிகள் உள்ளன.(விவரங்களை எனது பழைய கட்டுரையில் காண்க)

pipal.jpgworship

பிள்ளை பெற அரச மர வழிபாடு

Aswaththa Tree (Peepal/Pipal) Tree Worship

கீழ்கண்ட செய்யுட்களே இதற்குச் சான்று பகரும்:

அரசமர வழிபாடு

மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபினே

அக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:

அடியில் பிரம்மனும். நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவபெருமானும் நிலைபெற்ற அரச மரமே உனக்கு நமஸ்காரம்.

அரச மர வழிபாடு வேதத்திலும், சிந்து சமவெளியிலும் காணப்படுகிறது.

tulsi2

துளசி வழிபாடு

யந்மூலே சர்வ தீர்த்தானி யந்மத்ய சர்வதேவதா:

யதக்ரே சர்வ வேதாச்ச துளஸீம் தாம் நமாம்யஹம்

 

அடியில் எல்லா புண்யக்ஷேத்ரங்களும் , நடுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நுனியில் சகல வேதங்களும், நிலைபெற்ற ஒப்பற்ற துளசி தேவியை நான் நமஸ்கரிக்கிறேன்.

 

 

தர்ப்பை வழிபாடு

குசமூலே ஸ்திதோ ப்ரம்மா குச மத்யே து கேசவ:

குசாக்ரே சங்கரம் வித்யாத் சர்வே தேவா: சமந்த இதி

தர்ப்பையின் அடியில் பிரம்மனும், நடுவில் விஷ்ணுவும், நுனியில் சங்கரனும் இருக்கிறார்கள்.

தர்ப்பைகளின் தச வித (பத்து வித) புற்கள்:

குசா: காசா யவா தூர்வா கோதூமாஸ் சாத குந்துரா:

உசீரா வ்ரீஹ்யோ முஞ்சா தச தர்பாஸ்ச பல்பஜா:

குசம், நாணல், யவை, அருகு, கோதுமை, நீர்முத்தக் காசு (கோரை), வழல், நெற்பயிர், முஞ்சிப் புல், விச்வாமித்ரம் இவை பத்து வகை புற்கள் ஆகும்.

தர்ப்பையின் தேவர்கள்

குஸாஸ்து ரௌத்ரா விக்ஞேயா கௌசம் ப்ராஹ்மம் ததா ஸ்ம்ருதம்

ஆர்ஷந்து தௌர்வமாக்யாதம் வைஸ்வாமித்ரம் து வைஷ்ணவம்

இன்னன்ன தர்பைகளுக்கு இன்னன்ன தேவதைகள் என்பதை அறிக:

குசா: = ரௌத்ரர்கள்

கௌசம் = ப்ராம்மம்

தௌர்வம் = ஆர்ஷம்

வைஸ்வாமித்ரம் = வைஷ்ணவம்

இவை தவிர வில்வ அஷ்டகம், துளசி ஸ்தோத்திரம் என்ற துதிகளும் இருக்கின்றன.

தர்ப்பை, துளசி, வில்வம் ஆகியவற்றை எந்த நேரத்தில், எப்படிப் பறிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகள் இருக்கின்றன. சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட தமிழ் கலைக் களஞ்சியமான அபிமான சிந்தாமணியில் இவற்றைக் காணலாம்.

Bilva(Maredu)

மூவிதழ் கூவிளம் = வில்வம் படம்

வில்வத்தின் மகிமை

வில்வத்தின் மகிமையை தமிழ் செய்யுட்களிலும் காணலாம்:

கூவிளம் ஒன்று சாத்தின் குலவு சாலோகமாகும்

கூவிளம் இரண்டு சாத்தின் குலவு சாமீபமாகும்

கூவிளம் மூன்று சாத்தின் குலவு சாரூபமாகும்

கூவிளம் நான்கு சாத்தின் கூடுஞ் சாயுச்சந்தானே

சிவபெருமானுக்கு வில்வம் ஒன்று சாத்தினால் சிவலோக பதவியும், இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும் மூன்று சாத்தினால் அவன் உருப் பெறலாம், நான்கு வில்வ இதழ்கள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பர் பெரியோர்.

வில்வமே புனிதனாகும், விளம்பு வில்வத்தின் மிக்காம்

வில்வமுள் சக்தியாகும், வில்வத்தின் கோடு வேதம்

வில்வவேர் பதினோர் கோடி, வியனுத்திரரேயாகும்

வில்வமேத்துநர்க்கே தேவர் மெய்வடிவுவாகுமன்றே

பொருள்: பத்திரங்களில் வில்வம் சிவசொரூபம், மரத்தின் முட்கள் சக்தி சொரூபம், கிளைகள் வேதம், வேர் 11 கோடி ருத்திரர்கள், வில்வ மரத்தை வணங்குவோர் தெய்வ வடிவைப் பெறுவர்.

vilva tree

Vilva/Bilva Tree worship = வில்வ மரத்தின் படம்

பஞ்ச வில்வம் எனப்படும் ஐந்து வில்வங்கள்

வில்வம், கிளுவை, விளா, வெண்ணொச்சி, மாவிலங்கை. இவைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பௌர்ணமியில் சிவனுக்குச் சாத்தினால் மெய்ஞ்ஞானம் ஏற்படும் என்பர் சான்றோர்.

இலைகளைக் கொண்டு இறைவனைப் பூஜிப்பதன் பெருமையை பகவத் கீதையில் (9—26) கண்ணபிரானும், புறநானூற்றில் (பாடல் 106) கபிலரும் செப்புவதை “புறநானூற்றில் பகவத் கீதை” என்ற கட்டுரையில் தந்துள்ளேன்.

தமிழ்நாட்டில் தலம் தோறும் ஒரு குறிப்பிட்ட மரம் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகளில் 21 இலைகளால் பிள்ளையாரை பூஜிக்கிறோம், இதை எல்லாம் பார்க்கையில் தாவரங்களுக்கு தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவதை அறிய முடிகிறது (21 இலைகளின் பட்டியலை வேறு ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்).

pipal sacred   circumambulate the peepal tree

Tree Worship is popular in India! You get fresh oxygen which purifies your blood very fast!!

swami_48@yahoo.com

கோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல்

meeenakshi

Written by London Swaminathan

Research Article No.1765;  Dated 1April 2015.

Uploaded at London time 8-50 (GMT 7-50)

கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக் கோயில், திருக்கோயில்

தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. ஆயினும் மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சைப் பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோவில் கோபுரங்கள் எல்லாம் சுமார் 1000 ஆண்டு பழமையுடையவைதாம். அதற்கு முன் தமிழ் நாட்டில் கோவில்கள் இருந்தனவா? அவை எப்படி இருந்தன?

பிள்ளையார்பட்டி, மஹாபலிபுரம், திருப்பறங்குன்றம், நரசிங்கம் முதலிய ஊர்களில் மலைகளில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட  கோயில்களும் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு ஏற்பட்டவையே. அப்படியானால் அதற்கு முன் என்ன மாதிரி கோயில்கள் இருந்தன?

சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் என்ன என்ன கோவில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் எல்லாம் உள்ளன. ஆயினும் கோவில்களின் தோற்றத்தை நாம் அறியோம். அப்பர் என்ற திருநாவுக்கரசர் தமிழிலும், வராஹமிகிரர் சம்ஸ்கிருதத்திலும் அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அப்பர் பாடிய தேவாரத்தில் கரக்கோயில், இளங்கோயில்,கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என்று பலவகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார்.

இந்தத் தகவலை 1968 ஆம் ஆண்டு இரண்டாவது உலகத் தமிழ்நாட்டு மலரில் எழுதிய தொல் பொருட்துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி தமிழில் கோயில் என்பதற்கு பழங்காலத்திலேயே பல சொற்கள் இருந்ததையும் பட்டியலிட்டுள்ளார்.

டாக்டர் இரா.நாகசாமி இன்னும் ஒரு அரிய பாட்டினையும் பிங்கலந்தை நிகண்டிலிருந்து 1968 ஆம் ஆண்டுக் கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்:–

கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்

கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை

பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும் – பிங்கலந்தை 29

 

அதாவது தெய்வத் திரு உருவங்கள் செய்ய இந்த பத்து பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கோவில்கள் மரம் செங்கற்களால் கட்டப்பட்டன. அவை எல்லாம் பருவமழை, வெயில் போன்ற காலநிலையாலும், முஸ்லீம் படை எடுப்புகளாலும் அழிந்து போயின. இன்றும் கூட கேரளம் முதலிய மாநிலங்களில் மரக் கோயில்கள் இருப்பதைக் காணலாம்.

gopura darsan

அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை (6-71)

பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும்

பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும்

கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்,

கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,

இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்

இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்,

திருக்கோயில் – சிவன் உறையும் கோயில் சூழ்ந்து,

தாழ்ந்து, இரைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே.

அப்பர் குறிப்பிடும் பலவகைக் கோவில்கள் என்ன என்று கூட நமக்குத் தெரியாது. அவர் காலத்தில் சிவபெருமானுக்கு 78 பெரிய கோயில்களும் மற்ற பல வகைக் கோயில்களும் இருந்தது தெரிகிறது. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் 300-க்கும் மேலான புனிதத் தலங்களின் பெயர்களைச் சொல்லுகின்றனர். அப்பர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில். அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத சம்ஸ்கிருத என்சைக்ளோபீடியாவில் 20 வகைக் கோவில்களைக் குறிப்பிடுகிறார். வெறுமனே பெயர்களை மட்டும் சொல்லாமல் அவற்றின் நீள, அகலம், கருவறையின் (கர்ப்பக் கிருஹம்) அளவு ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.

ஒரு அத்தியாயம் முழுதும் கோவில் பற்றி எழுதிவிட்டு மிகவும் அடக்கத்துடன் கார்கர் என்பவர் விரிவாக எழுதிய விஷயத்தை தாம் சுருக்கமாகச் சொல்லியதாகக்  கூறுகிறார். இதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பலவகை வடிவங்களில், உயரங்களில் கோபுரங்களை எழுப்பும் மாபெரும் எஞ்சினீயர்கள் இமயம் முதல் குமரி வரை இருந்தது தெரிகிறது.

tv malai

வராகமிகிரர் எழுதிய பலவிஷயங்களில் ஒரு சில குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:-

“நிறைய தண்ணீர் பாயும் குளங்களுடனும் அழகான நந்தவனங்களுடனும் கோவில்களைக் கட்ட வேண்டும்.

ஒருவருக்கு புகழும் புண்ணியமும் கிட்ட வேண்டுமானால் கோயில் கட்ட வேண்டும்.

யாகம் செய்வோர், கிணறு வெட்டுவோர் ஆகியோருக்குக் கிடைக்கும் புகழ் கோவில் கட்டுவோருக்குக் கிடைக்கும்.

ஆற்றங்கரை,கடற்கரை, காடு, மலை, வனாந்தரம் ஆகிய இயற்கைச் சூழலில் கோவில் அமைவது மிகவும் விசேஷம்.

கோவில்கள் இருபது வகைப்படும். அவையாவன:–

மேரு, மந்தரா, கைலாச, விமானச் சந்த, நந்தன, சமுத்க, பத்ம, கருட, நந்திவர்த்தன, குஹராஜ, குஞ்சர, வ்ருஷ, ஹம்ச, சர்வதோபத்கர, கட, சிம்ஹ, வ்ருத்த, சதுஸ்கோண, ஷோடசரி, அஷ்டசரி.

மேரு என்னும் வகைக் கோவில் 12 நிலைக் கோபுரமும் அறுகோண வடிவமும் உடையவை. அகலம் 32 முழம்,  உயரம் 64 முழம்”.

இதுபோல 20 வகைக் கோவில்களுக்கும் நீள, அகல, உயரங்களைச் சொல்லிவிட்டு கர்ப்பக் கிரஹ அளவுகளையும் கொடுக்கிறார். பல்வகை கட்டிடக் கலை சொற்களையும் உபயோகிக்கிறார். இல்லாத ஒரு விஷயத்தை அவர் கற்பனை செய்து எழுதமுடியாது. இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் எந்த அளவுக்கு நமது கட்டிடக் கலைத்திறன் 1500 ஆண்டுஅளுக்கு முன் இருந்தது என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.

இதுவரை தமிழ்- சம்ஸ்கிருத மொழிகளில் கிடைக்கும் தகவல்களை யாரும் ஒப்பிட்டு ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. பாண்டியர்களில் மிகவும் பழையவனான பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி கோவிலை வலம் வரும் போதும், பிராமணர்கள் ஆசி வழங்கும் போதும் மட்டுமே அவன் குடையும் தலையும் தாழ்ந்து வணங்கும் என்று புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர் (புறம்-6). சிலப்பதிகாரத்தில் உள்ள கோவில்களின் பட்டியலை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். எவரேனும் இரு மொழி இலக்கியங்களில் வரும் கோவில்கள ஒப்பிட்டு ஆராய்வது பலன் தரும்.

வாழ்க அப்பர், வராஹமிஹிரர்!! வளர்க கோவில் கலை!!

அண்ணாமலை அதிசயம்!!

ramana

ரமண மஹரிஷி படம்

Post No.1759; Date 30th March 2015

This is written by my brother S Nagarajan for Jnana Alayam- Tamil Magazine: swami

ப்ரணவ தேஹம் பெற்ற மஹான்கள்!

 

 

ஞான ஆலயம் ஏப்ரல் 2015 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நன்றி:ஞான ஆலயம்

மிகப் பெரும் அருளாளரான பகவான் ரமண மஹரிஷியைப் போற்றித் துதிக்கும் சிறப்புக் கட்டுரை! (ரமண மஹரிஷி அவதார தோற்றம்: 30-12-1879 சமாதி: 14-4-1950

ச.நாகராஜன்

ramana-stamp

Ramana Stamp– ரமணர் தபால் தலை

வள்ளலாரும் ரமணரும்

ஹிந்து மதத்தின் மகத்தான சிறப்புக்களில் ஒன்று, அது சுட்டிக் காட்டும் பேருண்மைகளை அனாயசமாக நிரூபிக்கும் மகான்கள் பாரதத்தின் பல இடங்களிலும் அவ்வப்பொழுது தோன்றிக் கொண்டே இருப்பது தான்! இவர்களுள் மிக பிரம்மாண்டமான நிலையை எய்தியதோடு தம்மை அப்படிப்பட்ட பெரும் நிலையை எய்தியவர்கள் என்று சிறிதும் காண்பிக்காமல் மிக எளிமையாக வாழ்ந்து அருளுரை பகர்ந்த இருவர் வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகளும் பகவான் ரமண மஹரிஷியும் ஆவர்.இவர்கள் மிக சமீப காலத்திலேயே வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம். ஆகவே இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்களும் செய்திகளும் முழு விவரங்களுடன் தேதி வாரியாக அதிகாரபூர்வமாக நம்மிடையே உள்ளது.

வள்ளலார் உடலுடனேயே ஜோதி மயமாக ஆகி விட்டவர். ரமண மஹரிஷியோ தான் மறையும் அதே கணத்தின் போது தன் ஜோதி ஸ்வரூபத்திற்கு, வானில் பறந்து செல்லும் ஜோதியை சாட்சியாக காண்பித்துச் சென்றவர்.

 

ramana-maharshi

முற்றும் துறந்த ஞானி ரமணர்

மூன்று தேகங்கள்!

வள்ளலார் மனித தேகத்தின் மூலமாகப் பெறக்கூடிய அரிய மூன்று நிலைகளைத் தன் பாடல்களில் தன் அனுபவத்தின் வாயிலாக வடித்துள்ளார். மிக மிகத் தூய்மையாக இருக்கும் நிலையில் ஒருவர் எய்துவது சுத்த தேகம். அதற்கு அடுத்த நிலை பிரணவ தேகம். இதற்கும் அடுத்த உயரிய நிலை ஞான தேகம்.இதை அவர் அடைந்துள்ளதற்கு அவர் சித்தி வளாகத்தில் உடலோடு தன் அறையில் புகுந்து பின் மறைந்த சம்பவமே சான்றாகும்.

ரமணரின் பிரணவ தேகம்

ரமண மஹரிஷியின் வாழ்வில் அவர் பிரணவ தேகத்துடன் இருந்ததை அவரது அணுக்கத் தொண்டர்களுள் ஒருவரான குஞ்சு சுவாமிகள் இப்படி விவரிக்கிறார்:-.

“பகவானுக்கு சில நேரங்களில் திடீரென மின்னலடித்தாற்போல தன் தேகம் மறைந்து அணுக்களாகச் சிதறிப் பரந்து, புகை போன்று ஒரு உருவெளித் தோற்றம் உண்டாகி அதன் பிறகு பனித்துகள் போன்று ஒன்று சேர்ந்து மறுபடியும் தெரியுமாம். இவ்வநுபவம் ஒரே நிலையில் இருக்கும் போதும், ஆகாரம் இல்லாமல் தேகம் ஒடுங்கி இருக்கும் போதும் உண்டாகுமாம். இவ்வாறு அணுக்களாக விரிந்து தேகமற்று பஞ்சபூதத்துடன் கலந்து விடும் நிலைக்கு “பிரணவ தேகம்” எனப் பெயராகும்.

ஒரு முறை பகவான் ரமணர் உபவாசமாக இருந்து பிரணவ தேஹி ஆகி விடலாம் என்ற எண்ணத்துடன் தனித்து ஒருநாள் காலையில் திருவண்ணா மலையில் உள்ள பச்சையம்மன் கோவில் பக்கம் காட்டிற்குள் புகுந்து செல்ல ஆரம்பித்தார். அச்சமயம் சிறு பையனாக இருந்து வேத பாடசாலையில் படித்து வந்த வாசுதேவ சாஸ்திரி ரமண மஹரிஷியைப் பார்த்து விட்டு ஓடி வந்து இப்படித் தனியாக வந்திருக்கிறீர்களே, வாருங்கள் விருபாக்ஷிக்குப் போகலாம் என அழைத்தார். அதற்கு அவர், ‘ நான் காட்டிற்குள் இரண்டு நாள் தங்கி விட்டு வருகிறேன், நீ போ” என்று பதில் கூறினார். இதைக் கேட்ட வாசுதேவன் அழ ஆரம்பித்தார். பகவான் அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த சமயம் ஈசான்ய மடத்தின் அதிபதியான சாத்தப்ப சுவாமிகள் யதேச்சையாக அங்கு வர, பகவானைப் பார்த்து விட்டுத் தம்முடன் அவரை அழைத்துச் சென்றார். பகவானை நம்மிடம் பல காலம் இருக்கச் செய்யக் காரணமானவர் சாத்தப்ப சுவாமிகளே!

பகவான் இப்படிச் செல்ல முயலும் போதெல்லாம் அன்னை மீனாட்சி அவரைச் செல்ல அனுமதிக்கவில்லை. இதை பகவானே,”இங்கு இருக்கும்படி சொல்லி இம்சைப் படுத்தறா” என்று கூறி அருளி இருக்கிறார். கோடானு கோடிப் பேர்கள் கடைத்தேற அனுப்பப்பட்ட பகவானை அவ்வளவு சீக்கிரம் ப்ரணவ தேஹியாக மாற அன்னையின் ஆணை இல்லை என்பது ஜீவர்களின் மீதுள்ள மீனாட்சியின் எல்லையற்ற கருணைக்கு ஒரு உதாரணம்!

tv malai

திருவண்ணாமலை கோவில் படம்

அண்ணாமலை அதிசயம்

அன்னை மீனாட்சி அவருக்குப் பல அற்புத காட்சிகளைக் காண்பித்ததில் சிலவற்றை அவரே மிக அரிதாக அன்பர்களிடம் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்று திருவண்ணாமலை பற்றிய அதிசயம்!

ஒரு நாள் சாக்கிர, சொப்பனம் இரண்டும் இல்லாத நிலையில் பகவான் விருபாக்ஷி குகையில் இருக்கும் போது, தாம் மலையில் உள்ள ஒரு குகையினுள் நுழைந்து சென்றார். அங்கே பர்ணசாலைகளும் ரமணீயமான தடாகங்களும், பூத்துக் குலுங்கும் மரம், செடி, கொடிகளுமாக அதி அற்புதத்துடன் விளங்கும் காட்சியைக் கண்டார். அது புதிய இடமாக இல்லாமல் தான் முன்பே பார்த்துப் பழகிய இடமாக அவருக்கு ஒரு காட்சி தோன்றிற்று. பின்னர் அடியண்ணாமலை கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் திருப்பணி செய்து கொண்டிருந்தவர்கள் கோவிலின் கிழக்குப் பக்கத்திலிருந்து மலைக்குள் ஒரு சுரங்கம் செல்வதைக் கண்டு ஓடோடி வந்து பகவானிடம் அதைத் தெரிவித்தனர். மறுநாள் பகவான் கிரி பிரதக்ஷிணம் செய்யும் போது அச்சுரங்கம் இருக்கும் இடம் சென்று அதைப் பார்த்தார். அது தான் முன்னர் கண்ட காக்ஷியில் இருந்ததைப் போலவே இருப்பது கண்டு மனதிற்குள் வியந்தார்.வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. அதை எந்த வித சோதனையும் செய்யாமல் உடனே மூடச் சொன்னார். ஆனால் அதே காட்சியை அருணாசல மாகாத்மியம் விவரிப்பதைக் கண்டு அந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்தைத்  தமிழில் மொழி பெயர்த்தார்.

நமது அறநூல்கள் உரைக்கும் அனைத்துமே வார்த்தைக்கு வார்த்தை உண்மை தான் என்பதை ரமண மஹரிஷி போன்ற பெரும் மகான்கள் சொல்லும் போது தான் அந்த உண்மையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொண்டு பிரமிக்க முடிகிறது.

ramana_maharshi-30

குடையாளி – ஆன்மீகக் கொடையாளி !!

எந்த நிலை என்று சொல்ல முடியாத அரிய நிலை

பகவானின் ஆழத்தை அளக்க முயன்றவர்களுள் மாபெரும் மஹானான சேஷாத்திரி ஸ்வாமிகளும் ஒருவர். ஒரு நாள் அவர் பகவானின் முன்னிலையில் அபூர்வமாக வந்து நெடுநேரம் அமர்ந்திருந்தார். இருவரும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் இருந்தனர்.

பின்னர் சேஷாத்திரி ஸ்வாமிகள் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து விட்டார்.

“ஹூம், இவர் எப்படிப்பட்ட சொரூபம் கொண்டவர் என்று பார்க்கலாம் என்று பார்த்தேன். விடவே இல்லையே!” என்று அவர் கூறி வியந்தார்.

மஹா பெரிய மஹானான சேஷாத்திரி ஸ்வாமிகளே வியக்கும் ஒரு பெரிய உயரிய நிலையைக் கொண்ட அருளாளர் நம்மிடையே வாழ்ந்து வந்தார்; இன்றும் அவரை நினைப்பவர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் என்பது நமது பாக்கியமே, அல்லவா!

3bd17-ramanaspose

***************

ஒரு நிமிட ராமாயணம், பாகவதம், மஹாபாரதம்!

IMG_2564

சபரி – ராமன் சந்திப்பு

Article No.1754; Date:- 28  March, 2015

Written by London Swaminathan

Uploaded at London time  6-19 (GMT)

 

நூறு ஆண்டுகளுக்கு முன் எல்லா இந்துக் குழந்தைகளுக்கும் வீட்டிலுள்ள பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் நிறைய நீதிக் கதைகள் சொல்லுவார்கள். இவ்வாறு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியவுடன் இரவு நேரம் ஆகிவிட்டால் குழந்தைகள் தாமாகவே அவர்களிடம் செல்லுவர். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி பல நல்ல பாடல்களையும் ஸ்லோகங்களையும் சொல்லிக் கொடுப்பர். ஒரே ஸ்லோகத்தில் ராமாயணம், பாகவதம், மஹாபாரதம் முதலியவற்றையும் கற்றுத்தருவர்.

18 புராணங்கள், 12 ஜோதிர்லிங்கத் தலங்கள், தமிழில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நூல்கள் ஆகியவற்றுக்கான பாடல்களையும் மாணவர்கள் அறிவர். பாடல் வரிகள் என்பன பத்திரிகைகளில் உள்ள துணைத் தலைப்பு அல்லது பெரிய தலைப்புகள் போன்றன. சிறு வயதிலேயே இவைகளைப் பயிற்றுவித்தால் அதை அவர்கள் மறக்கவே  மாட்டார்கள்.

இந்தவகையில் ஏக ஸ்லோக (ஒரே பாட்டில்) ராமாயணம், ஏக ஸ்லோக பாகவதம், ஏக ஸ்லோக மஹாபாரதம் என்பன முக்கியமானவை.

hanuma crossing

ஏக ஸ்லோக ராமாயணம்

 

ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

பொருள்: ஆதியில் ராமன் காடு செல்லல்

பொன் மானைக் கொல்லல்

சீதா தேவி கடத்தல்

ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்

வாலீ அழிவு,

கடல் தாண்டல்

இலங்கை எரிப்பு

பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ராமாயணம்

 

 butter krishna

ஏக ஸ்லோக பாகவதம்

 

ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,

மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

 

கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்

சைதத் பாகவதம்  புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

 

பொருள்: ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

கோபியர் வீட்டில் வளர்ப்பு

மாயா உருவ பூதனையின் அழிவு

கோவர்த்தன மலையின் உயர்வு

கம்ச, கௌரவர்கள் அழிவு

குந்தீ மகன் காப்பு

இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

 ganesh writing

 

ஏக ஸ்லோக மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

 

பொருள்: ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு

அரக்கு மாளிகை எரிப்பு

சூதாட்டத்தில் நாடு இழப்பு

காட்டில் சுற்றல்

மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு

ஆநிரை கவர்தல்

போரில் அழிவு

சமாதான உடன்படிக்கை மீறல்

பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்

இதுவே மஹா பாரதம்

pandavas

பஞ்ச பாண்டவர் படம்

அனைவரும் கற்போம்! இந்து தர்மம் காப்போம்!!

 

இராமாயண வெண்பா!

IMG_2564

Rare Pictures of Ramayana from Picture Ramayana

Shabari worshipping Rama

Article No.1751; Date:- 27  March, 2015

Written by S NAGARAJAN

Uploaded at London time  8-19 GMT

 

28-3-2015  ஶ்ரீ ராம நவமி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது! ராமரின் அருள் வேண்டி அவர் பாதம் பணிவோம்; நலம் பெறுவோம்! லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து!

.நாகராஜன்

 

 

இராமாயண நூல்கள்

ஆதி கவி வால்மீகி ராமாயணத்தைப் பற்றிய பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இராமாயணத்தை பல்வேறு கவிஞர்களும் காவியங்களாகத் தங்கள் தங்கள் மொழியில் இயற்றியுள்ளனர். பல்வேறு நாடுகளில் இன்று புழக்கத்திலிருந்து வரும் இராமாயணக் கதைகளும் ஏராளம். கம்ப இராமாயணம், துளஸி இராமாயணம், பவபூதியின் உத்தர ராம சரிதம், வாசிஷ்ட இராமாயணம், ஆனந்த ராமாயணம் என்று நூல்களின் பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இராமாயண வெண்பா

இந்த வரிசையில் தமிழில் வெண்பாவைக் கொண்டு மட்டுமே இயற்றப்பட்டுள்ள அரிய நூல் இராமாயண வெண்பா. இதை இயற்றியவர் சமீப காலத்தில் மதுரையில் வாழ்ந்த மதுரகவி ஶ்ரீநிவாசையங்கார் என்பவர். இவர் வாழ்ந்த காலம் 1863-1937 என்பது தெரிய வருகிறது. இயற்றுவதற்கு மிகவும் கஷ்டமான வெண்பா பாக்களால் அமுதூறும் அழகிய சொற்களால் இராமாயணத்தை இயற்றியுள்ளது ஒன்றே இவரது அரிய புலமைக்கு ஒரு சான்றாகும்.இருபதாம் நூற்றாண்டில் மதுரையில் உள்ள சிறிய கிராமத்தில் இவர் வாழ்ந்திருந்தார் என்பதையும் தனது இந்த நூலை தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைத்திருந்தார் என்பதையும் நாம் அறிய முடிகிறது. கிட்கிந்தா காண்டம் முடிய 1853 வெண்பாக்களும், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டத்தில்  2061 வெண்பாக்களும் அடங்கியுள்ள அரிய நூல் இது!

IMG_2560

Hanuman crossing the Ocean

நூலின் பெருமையை முதல் பாடலே நன்கு விளக்கி விடுகிறது!

உலகம் புகழ் அமுதம் ஒப்பாகும் தூய
நலன்மலிரா மாயணத்தை நன்கு – நிலன்மிசையான்
வெண்பாவால் பாடி வினைகடிய எப்பொழுதும்
கண்பாராய் மாருதிநீ காண்….   பாடல் 9

‘அமுதத்திற்கு ஒப்பாகும்; தூய நலன் மலி இராமாயணம்’ என்று இராமாயணத்தைப் புகழ்ந்து துதித்து அதை வெண்பாவால் பாட அனுமனைத் துதிக்கிறார் கவிஞர்.

ஆழ்வார்கள் பாடிய பாடல்களில் தெரிந்தெடுத்த அமுதூறும் சொற்களை நூல் முழுவதும் ஆங்காங்கே பார்க்க முடியும்.

கவிச் சுவையும் சொற் சுவையும் பொருள் சுவையும் உள்ள பாடல்களில் சுந்தர காண்டத்தில் உள்ள சில பாக்களை இங்கு பார்ப்போம்.

தவம் இருந்த தையல்!

எண்ண லெழுத லிசைத்த லெழின்மலர்ப்பூங்

கண்ணுறவே நோக்கல் கவினறிதல் – உண்ணுதலோ

டெல்லா மிராம னெனத் துயிலுங் கொண்டறியாள்

பொல்லா மணிநேரப் பொன்            —–சுந்தர காண்டம் பாடல் 120

எண்ணுதல், எழுதல், இசைத்தல், கண்ணுற நோக்கல், கவின் அறிதல், உண்ணுதல் இவை எல்லாம் சீதைக்கு இராமன் என்ற எண்ணம் தான் என்பதைச் சொல்லி அவள் தூங்காமல் தவம் இருந்ததை துயிலும் கொண்டறியாள் என்ற வார்த்தைகளால் சொல்லி சீதையின் தவத்தை கவிஞர் அற்புதமாக ஒரே வெண்பாவில் விளக்கி விடுகிறார்.

IMG_2568

Ravana attacking Jatayu

அனுமன் சீதையைக் கண்ட காட்சியைக் கவிஞர் இப்படி நயத்துடன் கூறுகிறார்:

இலக்கணமுஞ் சீரு மெழிலு மியல்புஞ்

சொலத்தகுந்த மற்றைத் துறையுஞ் – சிலைப்புயத்தான்

எம்பிரான் சொற்ற எமதனையே யென்றறிந்தான்

வம்புலாந் தார்க்கான் மகன்               — சுந்தர காண்டம் பாடல் 142

“எம்பிரான் சொன்ன எம் அன்னை சீதை இவளே தான்” என்பதை இலக்கணமும் சீரும் அழகும், அவள் இயல்பும், இதர துறைகளும் காட்டி விடுவதை பல்துறை வித்தகனான அனுமன் அறிந்து கொண்டான்.

IMG_2572

Ramayana donning garments to go to forest

யான் செய்த தவமோ!

சீதையைக் கண்ட அனுமன் வியக்கிறான்!

யான் செய்த மாதவமோ வன்றே லருளுடையான்

தான் செய்த வாடாத் தனித்தவமோ – வான் செய்த

நல்லுலகு செய் தவமோ நாகாப திர்தவமோ

சொல்லரிய தென்றான் துதித்து

நான் செய்த தவமா? அருள் உடையான் செய்த தவமா? வான் உலகு செய்த தவமா? நாகாபதிர் தவமோ? என்று மகிழ்கிறான் அனுமன்.

இராவணன் காம வெறியுடன் சீதையை அணுகி அவள் காலில் விழுவதையும் சீதா பிராட்டி வெகுண்டு அவனைக் கடிந்து துரத்துவதையும் மதுர கவி கவிஞர் விவரிக்கும் பாங்கே அலாதி!-

அணியிழாய்! காதல் அடங்காததாக , பிணி அகல வாழ்வி! எனப் பேணி – மணி வாள் முடி கீழ் உறவே முழு மாமலை போல அடி மேல் வீழ்ந்தான் அயர்ந்து!

IMG_2576

Rama breaking the Bow (Shiva Dhanus)

ஏடா! மாடே! பேயே! முடி பத்தும் விழும்! திண்ணம் இது!

சீதை கூறுகிறாள்:-

ஏடா! நிருதற் கிறையே யிரக்கமிலா

மாடே! யறிவிலாவன் பேயே – நாடாமல்

என் சொன்னாய் வாழ்நாட் கிறுதியேன் செய்வாய்

வான் மின் செய்த தென்ன விரைந்து

ஆழிமழைக்கண்ண னருத னாடவர் கோன்

பாழியந்தோள் வீரன் படு சரத்தா – லேழைமதி

நின்முடிகள் பத்துநிலன் வீழுந் திண்ணமிது

கன்மனத்தா யெனவழிவாய் காண்!

ஏடா, இரக்கமிலா மாடே, வன் பேயே என்ற இந்த சுடு சொற்கள் போதாதா ராவணன் அழிவிற்கு!

என் தெய்வமும் நீ; செல்வமும் நீ!

அனுமன் அண்ணல் ராமனைப் பற்றிக் கூற அதைக் கேட்ட சீதை கூறுகிறாள்:-

எங்கோ மகனுக் கிருந்தூது வந்தெனது

பங்கமெலாம் நீத்துயிரும் பாலித்தாய் – இங்குனக்குச்

செய்யுங் கைமாறுளதோ தெய்வமுநீ செல்வமுநீ

அய்யனுநீ யன்னையுநீ யால்!

“என் கோமனுக்காக தூது வந்து என் பங்கம் நீத்து உயிர் பாலித்தாய். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். என் தெய்வம் நீ! செல்வமும் நீ! என் தந்தை நீ! என் தாயும் நீயே” என்ற சீதா பிராட்டியின் வார்த்தைகள் நம்மை உருக்குகின்றன!

அழகு ஊறும் அமுதச் சொற்களை உடைய இராமாயண வெண்பாவில் சில பாக்களைப் படிக்கும் போதே அதை முழுவதும் படிக்கும் ஆர்வம் எழும்.

rama

Ramayana Sculptures from South East Asia

கம்பனுடன் கலந்து வாழி

இறுதியாக நூலின் முடிவில் உள்ள வாழ்த்துப் பாவில் கம்பனையும் மறக்கவில்லை கவிஞர்.

வாழி அனுமந்த நகர் வாழி மதுரகவி

வாழியவன் நூல்கள் வழிவழியே –வாழியவே

இம்பர் இராமாயண வெண்பா இன்னுரை

கம்பனுடன் வாழி கலந்து

காலம் காலமாகத் தோன்றி வரும் இராமபிரான் அடியார்களில் அற்புதமாக சமீபத்தில் மதுரையில் தோன்றி அழியாத நூலைத் தந்துள்ள மதுரகவி ஶ்ரீநிவாசையங்காரை வணங்கி அவர் நூலை  வாழ்த்தி மகிழ்வோம்!

************

குறிப்பு:-

இந்த நூலை www.projectmadurai.org என்ற தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அரும் பணியைச் செய்துள்ள மதுரை தமிழ் இலக்கிய  மின் தொகுப்புத் திட்டத்தின் பொறுப்பாளர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்து அரும் பணி ஆற்றியோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அவர்களுக்கு தமிழ் உலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. நன்றி!