சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்! (Post No.4823)

Date: MARCH 17,  2018

 

 

Time uploaded in London- 5-15 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4823

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

 

 

ஞான ஆலயம் குழு வெளியீட்டுப் பத்திரிகையான ஸ்ரீ ஜோஸியம் மாத இதழில் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்!

 

ச.நாகராஜன்

ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நமது சாஸ்திரங்கள் நுட்பமானவை. பல நூற்றாண்டுகளில் கிடைத்த அனுபவத்தாலும், உள்ளுணர்வாலும் மனித குலத்திற்கு நலம் பயக்கும் நாட்களையும் நட்சத்திரங்களையும் மஹரிஷிகள் கண்டு அதை ஜோதிடம் உள்ளிட்ட சாஸ்திர நூல்களில் தொகுத்து வழங்கியுள்ளனர்.

 

தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.

 

பஞ்சக நட்சத்திரங்களும் பஞ்சக் யோகமும்!

 

அவிட்டம் , சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் பஞ்சக் என்று அழைக்கப்படுகின்றன. பஞ்சகம் என்றால் ஐந்து. இந்த ஐந்து நட்சத்திரங்கள் உள்ள ராசிகள் கும்பமும் மீனமும் ஆகும். சந்திரன் இந்த ராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சக் கால் என அழைக்கப்படுகிறது. இதை பஞ்சக யோகம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறும்.

இந்த நட்சத்திரங்களில் (அவிட்டம் கடைசி இரு பாதங்கள் மட்டும்) புல், மரம் வெட்டக் கூடாது.

தென் திசையில் பயணம் மேற்கொள்ளக் கூடாது

படுக்கை அமைக்கக் கூடாது

புதிய பிஸினஸ் துவங்கக் கூடாது

பிரேத தகனம் கூடாது. (அப்படியானால் ஐந்து நாட்கள் எப்படி ஒரு பிரேதத்தை தகனம் செய்யாமல் வைத்திருப்பது என்ற கேள்வி எழும். இப்படி எரித்தால் இன்னும் ஐந்து மரணம் வரும் என்பதாலேயே இது சொல்லப்படுகிறது. என்றாலும் பிரேதத்தை தகனம் செய்யும் போது பரிகாரமாக இன்னும் ஐந்து மலர், மாவு ஆகியவற்றினாலான உடல்களையும் சேர்ந்து எரிப்பது மரபு.

சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும். சுப காரியம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் உரிய பரிகாரத்தைத் தெரிந்து கொண்டு செய்வது வழக்கம்.

பஞ்சக காலம் என்பது மாதம் ஒரு முறை அதாவது 27 நாள் சுழற்சியில் வரும். இதை முன்னதாகவே கணித்து நமது திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.

 

புத்தாடை அணிவதற்கான தினங்கள்!

 

புதன், வியாழன், வெள்ளி ஆகிய  கிழமைகளில் புத்தாடைகளை அணிய வேண்டும்.

  • முகூர்த்த மார்த்தாண்டம்

 

புத்தாடை அணிவதற்கான நட்சத்திரங்கள்!

 

அவிட்டம், புனர்பூசம்,ஹஸ்தம்,சித்ரா,ஸ்வாதி,விசாகம், அனுஷம்,பூசம்,அஸ்வினி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் புத்தாடை அணிய வேண்டும்.

– முகூர்த்த மார்த்தாண்டம்

 

எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் பொதுவான விதிகள்!

 

1)பணம் (செல்வம்), உறவினர், நிலை, தொழில், படிப்பு ஆகிய ஐந்தும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் ஒன்றை விட ஒன்று அதிக சிறப்பு வாய்ந்தது என்று கொள்ள வேண்டும்.

– மனுஸ்மிருதி, பவிஷ்ய புராணம், யாக்ஞவல்ய ஸ்மிருதி, கூர்ம புராணம்

2) எல்லா தார்மீக காரியங்களிலும் முதலில் நவக்ரஹ சாந்தி செய்ய வேண்டும். – வைஸ்வாரம்ப ஸ்மார்த்த சூத்ரம்

3) வீட்டின் ஸ்தீரி இல்லாமல் ஒரு யக்ஞ காரியமும் செய்யக் கூடாது.

-ஆனந்த ராமாயணம்

4) பாடம் படித்தல் (ஓதுதல்), தேவி பூஜை, வஸ்திரம், நகை அணிதல்,ஆகியவற்றை வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

-கருட புராணம்

 

சந்தியாகாலத்தில் செய்யக் கூடாதவை

 

சந்தியாகாலத்தில் 1) உணவு உண்ணக் கூடாது 2) உடல் உறவில் ஈடுபடக்கூடாது 3) உறங்கக் கூடாது 4) வேதம் ஓதக் கூடாது.

சத்வாரி கலு கர்மாணி சந்த்யாகாலே விவர்ஜியேத் |

ஆஹாரம் மைதுனம் நித்ராம் ஸ்வாத்யாம் ச சதுர்தகம் ||

  • ஸ்மிருதி சந்தர்ப: – 76

 

இப்படி நுணுக்கமாக அனைத்து விஷயங்களையும் நமது சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

 

அனைவரும் அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற முடியாது என்பதாலேயே இதில் விற்பன்னராக உள்ள சாஸ்திர பண்டிதர்கள் அல்லது ஜோதிடரைக் கலந்தாலோசித்து அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும் என்ற எளிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

 

குடும்ப புரோகிதர், குடும்ப ஜோதிடர் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னரே ஒரு காரியத்தைச் செய்வது என்ற நடைமுறை சிக்கலான விஷயங்களை ஒரு குடும்பம் எதிர்கொள்ள நேரிடாதவாறு பாதுகாத்தது.

இன்றும் இதை நடைமுறையில் அனுஷ்டிப்போர் சிக்கலின்றி வாழ்வதைப் பார்க்கலாம்.

 

 

***

 

 

ஜோதிடம் பலிக்குமா? குட்டிக்கதை (Post No.4817)

Pictures are from Facebook; posted by Lalgudi Veda

Written by London Swaminathan 

 

Date: 15 MARCH 2018

 

Time uploaded in London – 6-08 am

 

Post No. 4817

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மதியால்  விதியை வெல்லலாம்

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

விதியை மதியால் வெல்லலாம். இதற்கு ஒரு நல்ல கதை உண்டு.

 

திருமூலர் சொல்கிறார்:

கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-

 

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர்

 

பொருள்:

தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் தத்துவ ஞானிகள். இந்த மெய்ஞானிகள், பூர்வ ஜன்ம தீவினைப் பயனை தவிர்ப்பர். இனி வரும் வினைகளையும் தகர்த்து விடுவர்; அதாவது வினைக்கான கர்மங்களைச் செய்ய மாட்டார்கள். இவை அனைத்தும் சிவன் அருளாலே கிட்டுவதாகும். அதாவது இறைவன் அருள் இருந்தால் விதியை வெல்லலாம்.

நாயன்மார்களும் — குறிப்பாக அப்பர் சம்பந்தர், சுந்தரர்—, மேலும் மாணிக்கவாசகரும், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களும் இறையருளால் தீய வினைகள் பொடிபடும், தீயினில் தூசாகும் என்று பாடினர். மார்க்கண்டேயன், சத்தியவான் சாவித்திரி போன்ற புராணக் கதைகளும் அப்படியே மொழிகின்றன.

 

ஒரு ஊரில் ஒரு ஏழை வசித்து வந்தான்; எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. எல்லையில்லாத வறுமையில் வாடினான். எல்லோரும் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் பிரபல ஜோதிடனைப் பார்க்கும்படி யோஜனை கூறினர். அவனும் அதற்குச் சம்மதித்தான்.

பக்கத்து ஊர் ஜோதிடனைப் போய்ப் பார்த்தான். அவன் ஏழையின் ஜாதகத்தைப்  பார்த்தவுடன்  முகத்தில் ஈயாடவில்லை’ -ஒரே திகில்; ஆயினும் அதை வெளிக்காட்டாமல் அந்த ஏழையைப் பார்த்து ”முடிந்தால்” நாளைக்கு வந்து பாருங்கள் என்றான்.

அவனும் கட்டாயம் வருகிறேன் என்று செப்பிச் சென்றான்; ஜோதிடனுக்கோ மனதுக்குள் ஒரே நகைப்பு! ஏனெனில் ஜாதகப்படி அந்த ஏழையின் வாழ்வு முடிந்துவிட்டது; அவன் எந்த நேரமும் இறக்க நேரிடும். மறுநாள் அவன் வரவே முடியாது என்பது ஜோதிடத்தில் தெரிந்த உண்மை.

 

அந்த ஏழை வீட்டுக்குத் திரும்புகையில் பேய் மழை கொட்டியது. அவன் ஒரு பாழடைந்த கோவிலில் தங்கினான். மழை நிற்கவே இல்லை. அவன் ஏழையானாலும் ஒரு பக்தன். ஆகவே அவன் மனத் திரையில் பல காட்சிகள் ஓடின. அட டா ! நான் பாழடைந்த கோவிலில்   அல்லவா நிற்கிறேன். கடவுளுக்கும் இவ்வளவு கஷ்டமா? நாளை நான் ஒரு லாட்டரிச் சீட்டு வாங்குவேன். எனக்கு மட்டும் பரிசு விழுந்தால், முதலில் இந்தக் கோவில் மண்டபத்தைப் புதுப்பிப்பேன்; பின்னர் தமிழ்நாட்டிலேயே உயர்ந்த ராஜ கோபுரம் கட்டுவேன்; சிதம்பரம், மதுரை, ஸ்ரீரங்கம், திருப்பதி போல பொற்கூரை போட்டு தங்க கோவில் ஆக்குவேன்; அதற்கும் பின் பணம் மிச்சம் இருந்தால் என்னைப் போன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்வேன் என்று எண்ணிக் கொண்டே போனான். மழையும் நின்றது. வீட்டுக்குச் சென்றான்.

 

மறு நாள் பொழுது புலர்ந்தது; ஆவலோடு ஜோதிடர் வீட்டுக்குச் சென்றான்; ஜோதிடருக்கு முன்னை விட திகில்!! வந்தவன் நேற்று வந்த ஏழையா? அல்லது அவனது ஆவியா? என்று.

 

ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை அமரச்  சொன்னார். பின்னர் அந்த ஏழைதான் வந்திருக்கிறான், அவனது ஆவி அல்ல என்று பேச்சைத் துவக்கினான்; மனதுக்குள் ‘இவன் நேற்றே இறந்திருக்க வேண்டுமே ! எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறான்’ என்று வியப்பு.

 

ஜோதிடர்– ஏழை சம்பாஷணை

 

தம்பி; நேற்று நீ வீட்டிற்குச் சென்றது முதல் இன்று வரை நடந்ததைச் சொல் என்றான் ஜோதிடன்.

 

ஏழை:-

நான் வீடு திரும்பியபோது பேய் மழை கொட்டியது. ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கிவிட்டு வீடு திரும்பினேன்.

 

 

ஜோதிடன்:–

அது என்ன கட்டிடம்?

 

பாழடைந்த கோவில்

 

ஓ அங்கே யாராவது சாது சந்யாசியைப் பார்த்தாயா?

 

இல்லை என்னைத் தவிர அங்கு ஒரு ஈ எறும்பு கூட இல்லை.

 

அப்படியா? ஆச்சர்யமாக இருக்கிறதே! வேறு ஏதாவது நடந்ததா? ஏதேனும் அற்புதம் ஆச்சர்யம்……

 

இல்லவே, இல்லை.

 

பின்னர் எப்ப டிப் பொழுதைக் கழித்தாய்?

 

ஓ அதுவா? நான் ஒரு மனக் கோவில் கட்டினேன்- என்று சொல்லி முழு எண்ணக் க் கோர்வையயும் சித்தரித்தான்.

 

ஜோதிடரின் ஆர்வம் அதிகரிக்க, அதிகரிக்க அவன் ஒரு துளி விடாமல் அப்படியே தான் எண்ணியவற்றை நுவன்றான்.

 

ஜோதிடருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அப்பனே, உனது ஜாதகப்படி நேற்றே நீ இறந்திருக்க வேண்டும். அதனால்தான் “முடிந்தால்” நாளைக்கு வா என்றேன். நீ வந்தது பெரிய அதிசயம்தான். உன்னைப் போலவே பூசலார் நாயனார் என்பவர் மனதிலேயே கோவில் கட்டி இறைவனைக் கண்டார். நீயும் மனம், மொழி, மெய் (மனோ, வாக், காயம்) என்று த்ரிகரண சுத்தியுடன் எண்ணியதால் இறைவன் உன்னையும் மார்க்கண்டேயன் போல என்றும் 16 வயது என்று சொல்லிவிட்டார். இனிமேல் உனக்கு நல்ல காலம்தான் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்.

அவனும் சுக போக வாழ்வு அடைந்தான்

எண்ணத்துக்கே இவ்வளவு நல்ல பலன் என்றால் நல்ல செயலுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும்!!

 

சுபம்–

 

ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – (கடைசிப் பகுதி) POST.4789

Date: 27 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-42 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4789

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (கடைசிப் பகுதி)

 

ச.நாகராஜன்

 

 

கவர்னர் அறையில் உள்ளே நுழைந்த உயர் அதிகாரி பதறிப் போய் ஹூ ஆர் யூ என்றார் என்னப் பார்த்து.

அறிமுகம் செய்து கொண்டேன். அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை வந்து விட்டேன். ஒரு சின்ன சப்மிஷன் தான். இரண்டு நிமிட வேலை தான்.

அந்த நேரம் கவர்னர் உள்ளே வந்தார்.

 

யார் – மெல்லிய குரலில் கேட்டார்.

சொன்னேன்.

என்ன விஷயம்?

மிகச் சுருக்கமாக விளக்கினேன்.

 

ஆர்டர் வந்தது.எக்ஸ்கியூட் செய்தோம். இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தவர் முறையாக பாஸ் செய்தார். இதோ டாகுமென்ட்ஸ்.

அந்தமான் சென்றவுடன் அனைத்தையும் ரிஜக்ட் செய்தார்.

அங்கே எதையும் செய்ய வசதி இல்லை. பெருத்த பொருட்செலவில் மீண்டும் பேக்டரி கொண்டு வந்தோம். இந்த முறை அனைத்து ரா மெடீரியல் கம்பெனிகளின் உயர் அதிகாரிகளின் முன் அதிகாரி சொன்னவற்றைச் செய்தோம். இதோ இன்ஸ்பெக்‌ஷன் ரிபோர்ட். கண்டெய்னர்கள் மீண்டும் அனுப்பப்பட்டன. இப்போது மீண்டும் பல டெஸ்டுகள் என்கிறார்கள். நீங்கள் தான் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.

அனைத்து ஆவணங்களும் அழகுற தரப்பட்டன.

கூர்ந்து கேட்ட கவர்னர் மார்பின் மீது கை வைத்தார். நான் பார்த்துக் கொள்கிறேன். அவரது கனிவான செய்கைக்கு நன்றி கூறி கவர்னர் மாளிகை சீலை டாகுமெண்டில் வாங்கிக் கொண்டு திரும்பினேன்.

 

பத்து நிமிடத்தில் வேலை – மகத்தான வேலை – முடிந்தது.

பின்னர் மாலை அரவிந்த ஆசிரம தரிசனம்

மறுநாள் ஊர்.

 

நிர்வாகத்திடம் விளக்கினேன்.

எல்லோருக்கும் புரிந்தது – செய்யக்கூடியது அனைத்தையும் நான் செய்து விட்டேன் என்று.

அடுத்து என்ன?

டைரக்டருக்கு போன் செய்தேன். வரலாமா?

வாருங்கள்.

மறுநாள் அந்தமானில் ஆஜர்.

கவர்னரைப் பார்த்தாயிற்று போலும்!

 

ஆம், சார் இவ்வளவு பெரிய் பதவியில் துடிப்பாக இருக்கும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாதா? ஆச்சரியமாக இருக்கிறது.

வாருங்கள், சாப்பிடப் போகலாம். என் காரிலேயே வாருங்கள். உங்களை லாட்ஜில் டிராப் செய்கிறேன்.

 

போகும் வழியில் இந்தத் தீவில் மாட்டிக் கொண்ட துயரத்தை ஒரு பாட்டம் அழுதார். அவர் நட்சத்திரம், ராசி, லக்னம், இப்போது நடக்கும் தசை, புக்தி அது முடியும் தேதி என்று விலாவாரியாகச் சொல்லிப் புலம்பினார்.

 

லாட்ஜ் வந்தது. நாளை பார்க்கிறேன். தேங்க்ஸ்!

மறுநாள் காலை பத்தரை மணி.

அவர் ரூமில் நுழைந்தேன்.

சார்! உங்களுக்கு ஒரு நற்செய்தி!

எனக்கா? குட் நியூஸா?

ஆமாம் சார், உங்களுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அநேகமாக சென்னை தான்!

அவர் துள்ளிக் குதித்தார்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

ஒரு பேப்பரை அவர் முன்னால் போட்டேன்.

 

அதில் அவரது ஜாதகக் குறிப்பும், கோசார ரீதியாகவும், தசா புக்தி ரீதியாகவும் நடப்பதைச் சுட்டிக் காட்டினேன். அன்றிலிருந்து 45 நாட்களில் எல்லாம் முடிந்து விடும். டிரான்ஸ்பர் உறுதி.

 

அவர் உடனடியாக போனில் மனைவியை அழைத்தார். சார் சாப்பிட வருகிறார். உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல வருகிறார். அவரே சொல்வார்.

 

வீட்டில் அவரது மனைவி காத்துக் கொண்டிருந்தார்.

அறிமுகத்திற்குப் பின்னர் அவரிடம் சொன்னேன்.

சாருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அநேகமாகச் சென்னை தான். வீட்டில் இருக்கும் குப்பை கூளத்தை எல்லாம் டிஸ்போஸ் செய்யுங்கள். குப்பை போகப் போக இன்கிரிமெண்ட் நிச்சயம். உடனே ஆரம்பியுங்கள். பாதியை கிஃப்டாகத் தந்து விடுங்கள். கிளம்புகிற வழியைப் பாருங்கள்.அவரால் நம்ப முடியவில்லை. பல வருடமாக டிரை செய்கிறார்.

 

சார், நீங்கள் கிளம்பும் முன் எனக்கு ஒரு வழியைச் செய்யுங்கள். இன்னொருவர் உங்கள் இடத்தில் வந்தால் அடியைப் பிடிடா என்று அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குள் என்னை ஒரேயடியாக வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

 

சாப்பிட்டு விடை பெற்றுக் கொண்டேன்.

அலுவலகம் வந்தவுடன் நீங்கள் கிளம்புங்கள் என்றார்.

நாளை உங்கள் ஃபிரண்ட் பத்தரைக்கு என் ரூமுக்கு வருவார். அவர் வந்த மூன்று நிமிடத்திற்குப் பின் உள்ளே வாருங்கள். ஒரு எச்சரிக்கை. உங்களைத் திட்டுவேன். உங்கள் நிறுவனத்தைத் திட்டுவேன். கோபப் படாதீர்கள்!

இப்படி க்ளூ கொடுத்து விட்டீர்களே. நன்றாகத் திட்டிக் கொள்ளுங்கள்.

 

ஏதோ ஒரு பெரிய டிராமா அரங்கேறப்போகிறது.

நான் தயார் தான்!

 

மறுநாள் பத்து மணிக்கு ஒரு மரத்தின் பின்னால் நின்றிருந்தேன்.பங்காளி நண்பர் உள்ளே சென்றார். சரியாக மூன்று நிமிடம் கழித்து உள்ளே நுழைந்தேன்.

கொதித்தெழுந்தார் டைரக்டர்.

 

மேஜையை ஒரு குத்து குத்த பேப்பர் வெயிட்டுகள் உயரப் பறந்தன.

 

வந்துட்டான்யா மூஞ்சியைக் காண்பிச்சுகிட்டு. தினமும் இதே எழவாப் போச்சு. பேரு பெத்த பேரு.ஆனா ஃபிராடு நிறுவனம்

இந்த கவர்ன்மெண்டை ஏமாத்த விட மாட்டேன். என்ன ஆனாலும் சரி. மீண்டும் மேஜையில் ஒரு குத்து. பேப்பர்கள் பறக்க பேப்பர் வெயிட்டுகள் அறையின் நாலா புறமும் சிதறின.

பியூன் உள்ளே வர நடுங்கினார்.

 

அனைவரும் ஜன்னல் வழியே, கதவு வழியே எட்டிப் பார்த்தனர்.இப்படி ஒரு கோர தாண்டவத்தை அவர்கள் இது வரை பார்த்ததில்லை.

 

அரை மணி நேரம் எனக்கும் நிறுவனத்திற்கும் திட்டு. பின்னர் காட்சி மாறியது.

நீங்கள் என்ன செய்தீர்கள்? மதுரை சென்றீர்கள். அரசாங்கப் பணத்தில். அனைத்தையும் அப்ரூவ் பண்ணினீர்கள். இங்கு வந்த பிறகு ஒரே பல்டி. வெட்கமாயில்லை. உங்கள் கையெழுத்தை நீங்களே மதிக்கவில்லை. சரி, இவர் என்ன செய்தார்? பணம் போனாலும் பரவாயில்லை என்று அனைத்து கண்டெய்னர்களையும் திரும்ப எடுத்துச் சென்றார். திரும்ப அங்கு சென்றீர்கள். மைண்ட் இட். அரசாங்கப் பணத்தில்! உயர் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நீங்கள் சொன்னதை எல்லாம் செய்தார். பக்கம் பக்கமாகக் கையெழுத்துப் போட்டீர்கள். அவமானமாயில்லை. உங்கள் கையெழுத்துத் தானே! இங்கு வந்தவுடன் புதிய டெஸ்ட் தேவை என்கிறீர்கள். இந்த ப்ராஜெக்டுக்கு அரசு ஒதுக்கிய கால அவகாசம் முடியப் போகிறது. ஒன்று இதை முடியுங்கள் அல்லது டிபார்ட்மெண்டையே முடித்து விடுவேன்.

மேஜையில் மீண்டும் ஒரு குத்து. இன்னும் பத்து நிமிடம் டைம் தருகிறேன். பத்தே நிமிடங்கள். அனைத்து பேப்பர்களும் கையெழுத்திட்டு என மேஜைக்கு வர வேண்டும். இந்த கண்டெய்னர்கள் சரி இல்லை என்றால் அதற்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதே. உங்களிடம் இத்தனை லட்சத்தையும் ரிகவர் செய்வேன். கவர்னர் ஆர்டர் வேறு வந்து விட்டது.

 

ஒரு வழியாக ஓய்ந்தார்.

பலர் அங்கும் இங்கும் ஓடினர்.

 

அடேயப்பா! இன்னும் இவ்வளவு பேப்பர்களில் கையெழுத்து தேவையா. அதிசயித்தேன்.

 

பத்தாம் நிமிடம் பல கத்தை பேப்பர்கள்.  கிரீன் இங்கில் மளமளவென்று கையெழுத்தை விளாசித்

தள்ளினார்.நடுநடுங்கிய பங்காளி பாபு ஓரம் கட்டப்பட்டார்.

அடுத்து அக்கவுண்ட்ஸ் மேனேஜரை சம்மன் செய்தார்.

“இதோ, எல்லாம் ரெடி. இவரது பேமெண்ட் செக் எங்கே?

“பதினைந்து நாளில் அனுப்பிடலாம் சார்!

மீண்டும் மேஜையில் ஒரு குத்து!

 

என்ன விளையாடுகிறீர்களா? இந்த ப்ராஜெக்டின் பணத்தின்  மீது கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. அது வந்து பல மாதமாக ஆகிறது. எங்கே அது? பத்து நிமிடத்தில் செக் வேண்டும். கையெழுத்துப் போட நான் ரெடி. எவ்ரிதிங் இஸ் இன் ஆர்டர் நௌ!

 

அவர் ஆடிப் போனார். சார், நாளை மத்தியானம் தருகிறேன் சார்.

 

நோ, நோ! காலை பத்து மணிக்கு என் டேபிளில் இருக்க வேண்டும். அவ்வளவு தான், எல்லாரும் போகலாம்!

என்னைப் புன்முறுவலுடன் பார்த்தார்.

திருப்தி தானே – கண்ணால் கேட்டார். கோடி தேங்க்ஸ் – கண்களினால் பதில்!

 

எப்போது கிளம்ப வேண்டும்?

ஒப்பன் டிக்கட் தான் சார்!

 

நாளை மறுநாள் எர்லி மார்னிங் கிளம்புங்கள்.

மறுநாள் காலை பத்து மணி. கத்தை கத்தையான பேப்பர்களில் அப்ரூவல்கள். ஒரு செக்!

 

அடேயப்பா! பிரம்மாண்ட தொகை!

 

கோடி நன்றி சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன். மறக்க முடியாத மாபெரும் தமிழர்!

 

ஊர் வந்து சேர்ந்தவுடனேயே தாக்கீது.

உடனடியாக ஹெட் ஆபீஸில் போர்டு மீட்டிங் அறைக்கு வர வேண்டும்.

 

அலறி அடித்துக் கொண்டு வண்டியில் விரைந்தேன்.

அங்கு சார், உங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்ற அலுவலர் என்னை இழுத்துக் கொண்டு போர்டு மீட்டிங் நடக்கும் பிரம்மாண்ட அறைக்குச் சென்றார்.

அங்கு யாரும் போகக் கூடாதே!

 

கதவைத் திறந்து இதோ வந்து விட்டார் என்றார்.

மெதுவாக உள்ளே நுழைந்தேன். பேசவே இல்லை. செக்கை எடுத்து மேடத்திடம் நீட்டினேன்.

 

அதை வாங்கிப் பார்த்தார். திகைப்பு. பிறகு மலர்ச்சி. அடுத்தவரிடம் செக்கை நீட்டினார். அவர் வாங்கிப் பார்த்தார். அடுத்தவர், அடுத்தவர்.

 

ஹௌ இட் ஹாப்பண்ட்?

 

நிறுவனத்தின் கமிட்மெண்ட் .. பள பளா. அரை நிமிடத்தில் நிறுத்திக் கொண்டேன். செக்கை கேட்டேன். ஆபீஸில் தர வேண்டுமே!

 

இல்லை, என்னிடமே இருக்கட்டும். தன் ஹாண்ட் பாக்கில் வைத்துக் கொண்டார்.

 

மெதுவாகப் படி இறங்கினேன். உயர் அதிகாரிகள் வந்து என்னஎன்ன என்றனர். நடந்ததைச் சொன்னேன். ஒரே பாராட்டு.

 

ஆபீஸுக்கு செல்வதற்குள் விஷயம் பரவ அனைவருக்கும் ஆனந்தம்.

அந்த போர்டு மீட்டிங் முக்கிய டெஸிஷன்களை எடுக்கும் க்ரூசியல் மீட்டிங்காம். கட் கட் கட். ஒரே வதந்தியில் மூழ்கி இருந்தது ஆபீஸ்.

ஆனால் அது ஐந்து நிமிடத்தில் முடிந்து விட்டதாம். காபி மீட்டிங்காக.

 

ஒரே நிம்மதிப் பெருமுச்சு – எங்கும்!

பின்னர் அருமை நிறுவனத்தை விட்டு விருப்பத்துடன் விலகினேன்.

 

சென்னை வந்து இன்னொரு கம்பெனியில் மானேஜர் ஆனேன்.

ஒரு நாள் கீழ்க்கட்டளை தாண்டி கார் சென்று கொண்டிருந்தது.

 

அட, என்ன அழகாக இருக்கிறது,பாருங்கள், ஃபிஷரி டிபார்ட்மெண்ட் – டிரைவரிடம் சொன்னேன்.

ஆமாம் சார், நல்ல ஒரு டைரக்டர் வி.கி…. பெயரைச் சொன்ன அவர் சிரத்தையுடன் எல்லாம் செய்கிறார் சார்.

என்ன என்று ஒரு உற்சாக அலறல் அலறினேன்.

என்ன சார், டைரக்டரை உங்களுக்குத் தெரியுமா?

புன்முறுவல் பூத்தேன்.

 

கார் சர் என்று தார் சாலையில் வழுக்கி ஓடியது!

 

சொந்த சர்வைவலுக்காக, பெரும் பணத்தொகையைப் பெறுவதற்காக ஜோதிடத்தைத் தவறாக மூன்றாம் முறையாக என் கேரியரில் கையாண்டிருக்கிறேன்.

தப்பு தப்பு தான்!

 

 

இறைவனின் வழிகள் விசித்திரமானவை. அவன் வழிமுறைகள் என்னவென்று எனக்கே தெரியாது என்று வேத வியாஸரே சொல்லி விட்ட பின்னர் அற்பன் நான் சொல்ல என்ன இருக்கிறது?

 

ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான்!

மஹாகணபதியே துணை!

 

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

****

ஜோதிட கட்டுரைகள் மூன்றும் (3+1) முடிந்தன.

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (Post No.4786)

Venganur Temple Paintings; from Ponnambalam Chidambaram post

Date: 26 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-48 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4786

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

ச.நாகராஜன்

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (Post No.4786)

 

 

சுமார் 28 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம்.

அலுவலக மேலிட நிர்வாகத்திடமிருந்து மிக சீரியஸான தாக்கீது வந்து விட்டது.

 

அவரவர் தங்கள் worth  prove பண்ணுங்கள்! சுருக்கமான மெஸேஜ் தான். லவுட் அண்ட் க்ளியர்!

அந்தமானிலிருந்து டெண்டர் வந்தது.ரெஃப்ரிஜரேடட் கண்டெய்னர் கட்ட.

கோட் quote அனுப்பினோம்.

ஆர்டர் வந்து விட்டது. அதிசயம். மளமளவென்று வேலைகளை ஆரம்பித்தேன். சகாக்கள் அதிர்ஷ்டக்காரர் என்று  சொன்னார்கள்.

 

வேலை முடிந்தது. அந்தமானிலிருந்து உயரிய ஆபீஸரை அனுப்புமாறு ஃபேக்ஸ் கொடுத்தேன்.உடனடியாக வந்து விட்டார். எந்த வித சான்ஸும் எடுத்துக்  கொள்ள விருப்பமில்லை. ஆகவே ரா மெடீரியல் பர்சேஸ், அதன் தர் நிர்ணய சான்றிதழ், வேலை நேர்த்தி என ஒவ்வொரு பார்ட்டையும் வந்தவருக்கு விளக்கினேன். அவர் ஒரு பங்காளி பாபு.

 

 

ஒவ்வொன்றையும் செக் செய்தார். நுணுக்கமாக ஆராய்ந்தார். பின்னர் கையெழுத்திட்டார் – பேப்பர் பேப்பராக.

அனைத்தையும் கவனித்த நிர்வாகத்திற்கு சந்தோஷம்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

இவற்றை நல்லபடியாக அந்தமானில் இறக்கி ஒப்படைக்க வேண்டுமே!

ஏற்பாடுகள் மளமளவென்று நிறைவேறின. எனது அஸிஸ்டண்ட்  ஒருவர் அங்கு சென்று மேற்பார்வை பார்த்து கப்பலிலிருந்து கிரேன் தூக்குவது வரை பத்திரமாகப் பார்த்து அனைத்து கண்டெய்னர்களையும் உரிய முறையில் ஒப்படைத்து நல்ல முறையில் பெற்றுக் கொண்டோம் என்ற ரசீதையும் வாங்கி வந்தார்.

 

 

அனைவருக்கும் ஒரே சந்தோஷம்.

பத்து நாட்கள் கழித்து ஒரு பேக்ஸ் அனுப்பினோம் – பேமெண்ட் வாங்க வரலாமா என்று.

வந்தது பதில் அல்ல – இடி!

 

 

பேமெண்டா எதற்கு? எதுவுமே சரியாகக் கட்டப்படவில்லை. உடனடியாக ஒரு பெரிய டீமை அனுப்பி இங்கேயே சரி செய்யுங்கள். மற்றதைப் பற்றிப் பின்னர் யோசிக்கலாம்!

அனைவருக்கும் பகீர் என்றது.

 

மேலிடம் அவசர சம்மனை அனுப்ப அனைத்து பேப்பர்களையும் காண்பித்து ரப்பர் ஸ்டாம்புடன் உரிய கையெழுத்தை அனைத்து ஆவணங்களிலும் வாங்கியதைக் காண்பித்தேன்.

என்ன செய்யப் போகிறீர்கள்?

நேரில் போய்ப் பார்க்கிறேன்.

 

அடுத்த நாள் அந்தமானில் ஆஜர்.

 

காலை 10 மணி. டைரக்டரைப் பார்த்தேன். ஒரு தமிழர். இளைஞர். சிரித்த முகம். பண்பாட்டின் உரு. லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி. சென்ட்ரல் கவர்ன்மெண்டின் உயர்தர அதிகாரி.

அவருடன் அழாக் குறையாக அவரது ஆள் தந்த சர்டிபிகேட்டுகள், அப்ரூவல் ஆகியவற்றைக் காண்பித்து, வந்த ஃபேக்ஸையும் காண்பித்து, “இது நியாயமா ஸார்! என்று குமுறினேன்.

 

 

அவர், யார்டுக்குப் போய் அவரைப் பாருங்கள் என்றார்.

சென்றேன். மதுரை அப்ரூவல் ஒரு பேஸிக் அப்ரூவல் தான். இங்கு டெஸ்டுகள் உண்டு. அதில் பாஸாக வேண்டும். ஆனால் இவை pass ஆகாது. ஆகவே ஒரு பெரிய டீமை அனுப்புங்கள். பார்க்கலாம்.

 

ஆர்க்யுமெண்ட் எதுவும் செல்லுபடியாகவில்லை.

ஐந்து நாட்கள் ஓடின. நிர்வாகத்திடம் தெரிவித்தேன். என்ன செய்யலாம்?

 

இங்கு ஒன்றும் செய்ய முடியாது. கடற்கரை பரந்த வெளி. கண்டெய்னர்களை மதுரை கொண்டு வர வேண்டியது தான்.

ஓகே. கொண்டு வாருங்கள்.

 

டைரக்டரிடம் சென்று சொன்னேன். “ ஆனால் இது அநியாயம் சார்

“இவன் இப்படித்தான். இரண்டு கம்பெனிகளைத் தவிர தீவுக்குள் வேறு யாரையும் வர விட மாட்டேன் என்கிறான். ஆல் தி பெஸ்ட்

 

பெருத்த செலவில் கண்டெய்னர்கள் திருப்பிக் கொண்டுவரப்பட்டன.

 

அனைவரும் என்னைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள். ஆனால் தீவிர ஒத்துழைப்பை நல்க ஆரம்பித்தனர். இது அசாதாரணமான ஒன்று தான்.

மீண்டும் அந்தமான் அதிகாரியை வரவழைத்தோம்.

அந்தந்த ரா மெடிரியலின் கம்பெனியின் உயர்தர அதிகாரி வந்து முகாமிட்டார். பிரஸ்டிஸ் இஷ்யூ ஆகி விட்டது.

சீலண்ட் கம்பெனியோ ஒரு கை பார்த்து விடுவது என்று தீர்மானித்து தனது ஆட்களை அனுப்பியது.பெரிய டீம்.

வந்தவரிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டோம்.

என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதன்படி செய்கிறோம். எதானாலும் இங்கேயே ஃபைனல்.

 

 

சுமார் 30 அடிக்கு 60 அடி குடோனை வைத்து ஆட்டம் போடும் அவர் நூற்றுக்கணக்கான பிரமாண்டமான மெஷினரிகள், பல நூறு தொழில்நுட்ப தொழிலாளிகள், ஏழே கால் ஏக்கர் (பல்லாயிரம் சதுர அடி) பரப்பிலான ஃபேக்டரி ஆகியவற்றை பார்க்கத் தான் செய்தார்.

 

 

என் விதி, விடவில்லை – அவ்வளவு தான்!

எல்லாம் முடிந்தன. ஒவ்வொரு பேப்பராக கையெழுத்து வாங்கப்பட்டது. அவர் வந்தால் தான் வேலை துவங்கும். 10 மணி நேரம் பார்க்கச் சொன்னாலும் அனைத்துத் தொழிலாளர்களும் அபாரமான ஒத்துழைப்பை நல்கினர்.

எல்லாம் pass!

 

 

கண்டெய்னர்களை அந்தமான் அனுப்பலாம் என எழுத்துபூர்வமாக வாங்கிக் கொண்டோம்.

அவர் கிளம்பினார். அடுத்த நாள் கண்டெய்னர்களும் கிளம்பின.

 

ஃபேக்டரியில் பிரம்மாண்டமான இடம் காலி. அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு.

கண்டெய்னர்கள் சேர்ந்தவுன் ஃபேக்ஸ் அனுப்பினோம். பேமெண்டி ரெடியா, வரலாமா?

வாருங்கள் பார்க்கலாம்.

 

அடுத்த நாள் அந்தமானில் ஆஜர்.

ஆனால் இளங்கோ அடிகள் சொன்னார் இல்லையா – “ஊழ்வினை உருத்து வந்தூட்டும்” –என்று!

வினை வந்தது.

 

இன்னும் அது சரியில்லை, இது சரியில்லை. எங்கள் டெஸ்ட் முடிய பல வாரங்கள் ஆகும். டெஸ்டில் பாஸ் ஆனால் பேமெண்ட் பற்றி யோசிக்கலாம்.

டைரக்டரிடம் குமுறினேன். சார், இது பழி வாங்கும் நடவடிக்கை போல இருக்கிறது. நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா? இல்லையேல் நான் அந்தமான் கவர்னரைப் பார்க்க நேரிடும்.

 

பாருங்கள்.

 

கவர்னர் ஆபீஸ் அருகில் தான் இருந்தது. அங்கு ஒரே கும்பல். உடனடியாக ஒரு பெடிஷனை ரெடி செய்தேன்.

 

நடந்ததை நிர்வாகத்திடம் சொல்லி பெர்மிஷன் வாங்கினேன்.

கவர்னரைப் பார்ப்பது சாத்தியமா? பாருங்கள்.

 

மறுநாள் காலை கவர்னர் ஆபீஸில் ஆஜர். கூட்டத்தையே காணோம். வெறிச்சோடி இருந்தது. என்ன ஆயிற்று?

விசாரித்தேன். முதல்நாள் வரை கவர்னராக இருந்த புருஷோத்தமதாஸ் தாண்டன் ராஜிநாமா செய்து விட்டாராம். கேரளத்தில் சொந்த ஊரில் எலெக் ஷனில் நின்று தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறாராம்.

 

அப்போது அந்தமான் நிர்வாகம்?

 

புதுவை கவர்னராக இருக்கும் ராஜேந்திரகுமாரி பாஜ்பாயி அடுத்த ஆள் நியமிக்கும் வரை அந்தமானின் கூடுதல் பொறுப்பை நிர்வகிப்பாராம்.

 

நிர்வாகத்திடன் சொன்னேன். என்ன செய்யப் போகிறீர்கள்.கிளம்பி வருகிறேன். அங்கு புதுச்சேரி கிட்ட இருக்கிறது. அங்கு அவரைப் பார்க்கிறேன்.

 

மறுநாள் மதுரை. உடனே அடுத்த நாள் புதுவை. கவர்னரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன்.

அங்கு அலுவலகம் சென்ற போது அவர் அலுவலகம் வரவில்லை.

 

கீழே அவர் இருப்பிடம். மேலே ஆபீஸ்.

அவர் வயது 87. உடல்நிலை சரியில்லை என்றால் வரமாட்டார்.

 

Picture from Lalgudi Veda’s post

ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

சரி அரவிந்த ஆசிரமம் கர்மயோகியையாவது பார்க்கலாம்.

அவர் இல்லம் சென்றேன். அவர் தனிப்பட்ட யோக சித்தியை மேற்கொண்டிருப்பதால் யாரையும் பார்க்க மாட்டாராம்.

வந்ததைச் சொல்லி அனுப்பினேன்.

 

சில புஷ்பங்களை ஆசீர்வதித்து அனுப்பினார். ஏமாற்றம் தான். புஷ்பங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

 

ஒரு நப்பாசை. எம்.பி.பண்டிட் பார்க்க அனுமதிப்பாரா என்று.

புன்முறுவலுடன் வரவேற்றார். வங்கத்தினரே அணியும் முறையில் வேஷ்டியை யோக வேஷ்டியாக்ப் போட்டிருந்த அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன். ஆசீர்வதித்தார்.

நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலம் கேட்டு மகிழ்ந்தார்.

 

நிறுவனமே அரவிந்த பக்த குடும்பம்.

ஆசிரமத்தில் சமாதி அருகே தியானம்!

பின்னர் ஊர் வந்து சேர்ந்தேன்.

என்ன செய்யப் போகிறீர்கள்?

நாளையே புதுவை மீண்டும் செல்லப் போகிறேன்.

போய் வாருங்கள்.

மறுநாள் புதுவையில் ஆஜர்.

 

காலை 10 மணிக்கு செக்யூரிட்டியின் அனுமது பெற்று முதல் ஆளாக கவர்னர் அலுவலகத்தில் ஆஜர்.

 

 

நான் கவர்னர் அறையில். விளக்கு கூடப் போடவில்லை. நான் அங்கு ரெடி!

****    

அடுத்த பகுதியுடன் முடியும்

 

 

ஜோதிடர் மோசடியும் 114 மோசடி முறைகளும் (Post No.4784)

Date: 25 FEBRUARY 2018

Time uploaded in London- 8-16 am

Written by London swaminathan

Post No. 4784

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

பிரிட்டிஷ் லைப்ரரி (இலண்டன்) யில் ஒரு பழைய நூலைக் கண்டேன். 1907-ஆம் ஆண்டில் தூசி. இராஜகோபால பூபதி என்பவர், 115 விதமான மோசடிகளைப் பற்றி எழுதியுள்ளார். எல்லாமே சுவையான விஷயங்களே. இது சென்னையிலிருந்து வெளியான நூல். இதில் முதல் மோசடி ஜோதிட மோசடி ஆகும்; ஜோதிடர்கள் எப்படி, வாடிக்கையாளரிடம் இருந்தே விஷயத்தைக் கறந்து ஏமாற்றுகிறார்கள் என்பதை இதில் காணலாம்.

 

புஸ்தகத்தின் பெயர் மதிமோச விளக்கம்

இந்த நூல் தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவும்;  ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒவ்வொரு தொழில் செய்வோரும் பயன்படுத்திய சொற்களும், அவர்கள் பேசும் முறையும் அப்படியே உள்ளது. இப்பொழுது தமிழ் கற்போருக்கு அது எவ்வளவு புரியும் என்பது கேள்விக்குறியே. இதோ ஜோதிடர்கள் ஏமாற்றும் முறை:

 

 

 

 

 

 

 

 

 

 

–SUBHAM–

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 2 (Post No.4766)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-16 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4766

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 2 (Post No.4766)

ச.நாகராஜன்

 

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும்.

அலுவலகத்தில் எல்லோருக்கும் சிக்கல். எனக்குக் கூடுதல் சிக்கல். ஒரு தனிப் பிரிவின் அனைத்தும் நானே!

எல்லோரும் உடனடியாகக் கிளம்புங்கள். ஆர்டர், அட்வான்ஸுடன் வாருங்கள்.

 

ஓவர்ஹெட், வேஜஸ்  இவற்றுக்குப் பணம் தேவை. இல்லையேல் பின்னால் வருத்தப்படுவீ ர்கள்!

மற்றவர்களுக்கு சேல்ஸ், புரடக் ஷன்,சப்ளை எனப் பெரிய படை உண்டு.

 

நான் தனி மரம்.

 

அன்று மாலையே கொல்லம் பஸ்ஸில் ஏறினேன்.

காலையில் குளித்து விட்டு ஒரு சின்னப் பாக்கெட் முந்திரிப்பருப்பு வாங்கினேன். விலை குறைவு. சுவையாக் இருக்கும்.

 

பஸ் ஒரு பெரிய பாலத்தின் அருகே வந்த போது நிறுத்தச் சொன்னேன்,

 

“சார், நீங்க போக வேண்டிய கம்பெனிக்கு எதிரிலேயே வண்டி நிற்கும்” என்றார் கண்டக்டர்.

 

‘பரவாயில்லை” என்றேன்,

 

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவர் வண்டியை நிறுத்தினார்.

ஆஹா! என்ன அருமையான காட்சி.

 

பெரிய பாலம்.அகலமானது. நடைபாதைகள் வேறு. லஞ்சம் வாங்காமல் கட்டப்பட்டது.

 

கீழே பளிங்கு போன்ற நீர். துள்ளிக் குதிக்கும் மீன்கள். அலையுடன் ஆட்டம் போட்டு ஓடும் மீன் குட்டிகள்.

இது போலொரு காட்சி கிடைக்குமா?

வானத்தைப் பார்த்தேன், பிரமித்தேன்.

என்ன அதிசயம்.

 

கருட பட்சிகள்.

அலை அலையாக.

 

சிறகை விரித்து அவை பறந்த அழகு!

ஓம் கருடாய நமஹ.

கும்பிட்டேன்.

பல மாதமாகப் படை எடுத்தாயிற்று. ஒரு நிமிடத்தில் அந்த செக்ரட்டரி பெண்மணி என்னை பைசல் பண்ணப் போகிறாள், கருடனையாவது நின்று நிதானித்துத் தரிசிப்போம்.

கம்பெனி வந்தது.

 

உள்ளே சென்றேன். அதே மலையாளப் பெண்மணி. இப்போது நான் ‘பழக்கமாகி விட்ட ஆள்’.

நான் எதுவும் பேசுவதற்கும் முன்னர் அவரே, “சார். எம்.டி. பிஸி.பார்க்க முடியாது” என்றார்.

நான், “உங்களிடம் எதையாவது கேட்டேனா?” அவர் சற்றுத் திகைத்தார்.

 

உள்ளே போய் கார்டைக் கொடுத்து நான் வந்ததையாவது சொல்லுங்கள். அவர் சொல்லட்டும்.

என்ன, இங்கே, இவர் யார்? பின்னால் நின்று கொண்டிருந்த எம்.டி. முதல் முதலாக என்னைப் பார்த்தார்.

சார், ஜஸ்ட் ஒன் மினிட். அவ்வளவு தான்.

சரி, வாருங்கள்

 

அவர் காபின் பிரம்மாண்டமானது. இரு புறமும் செல்லும் படி கதவுகள். ஒரு புறம் நீரோடையை நோக்கி. இன்னொரு புறம் அலுவலகம் நோக்கி.உள்ளே நுழைந்தவர் மேஜையைப் பிடித்துக் கொண்டார். எனக்கு நிற்கக் கூட இடம் இல்லை.

என்ன?

 

உங்களுக்கு ஒரு குட் நியூஸ் என்னால் சொல்ல முடியும்?

எனக்கு! குட் நியூஸ்! என்ன?

 

“உங்களது பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு வெளிவரப் போகிறீர்கள்.  நல்ல செய்திகள் வர ஆரம்பிக்கின்றன.

கடுமையா இருந்த அவர் இப்போது மலர்ந்து போனார், பிரமித்தார், அதிசயித்தார்,

 

முதலில் உட்காருங்கள். தானும் உட்கார்ந்தார்.

செக்ரட்டரியை அழைத்தார். சாருக்கு சாய், ஸ்நாக்ஸ் கொண்டு வா, இரண்டு பக்க டோர் வழியாகவும் யாரையும் விடாதே. போனை உள்ளே கொடுக்காதே.

 

அந்தப் பெண் ஒன் மினட் ஆசாமி எப்படி இப்படி ஒரு வி ஐ பி ஆனார் என்று வியந்து போனார்.

 

எனக்கு ஜோஸியத்தில் நம்பிக்கை கொஞ்சம் உண்டு. ஆனால் என்னைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் எப்படி இதைச் சொல்கிறீர்கள்.

 

விவரித்தேன்.

சார், நீங்கள் இருக்கும் இடம் அற்புதமான கருடபட்சிகள் வாழும் ஸ்தலம்.அவைகள் உங்களை வளமாக வாழ வைக்கின்றன. இந்த இடத்தில் உங்கள் அலுவலகம் செட் அப் ஆனதிலிருந்து க்ரோத் தான்.

உண்மை தான் என்று தலையை ஆட்டினார்,

ஆனால் எக்ஸ்பான்ஷனுக்கான பெரிய லோன் சாங்க்‌ஷன் ஆகவில்லை. பல மாத ப்ரிபேரஷன் ஓவர். ஸ்டார்ட் தான் ஆகணும்.

 

சார், இன்றிலிருந்தே நல்ல காலம் ஆரம்பம். இன்னும் மாக்ஸிமம் ஒரு வாரம் தான். 48 ஹவர்ஸ், மே பி 24 ஹவர்ஸ்.

யூ கெட் மோர் தேன் யூ எக்ஸ்பெக்ட்.

 

“சரி இதெல்லாம் எப்படி சொல்கிறீர்கள்?”

 

“இந்தக் கருடப் பட்சிகள் உங்களுடன் பேசுகின்றன. அலை அலையாய் வட்டமடிக்கும் அவை உங்களுக்குச் செய்திகள் சொல்கின்றன.

 

கருட பட்சிகள் பேசுகின்றனவா, அவர் பால்கனி கதவைத் திறந்து பார்த்தார். ஏராளமான பட்சிகள். ஆரவாரம். கும்பிட்டார்.

இவைகளுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?

 

ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு நல்ல அருமையான உணவு வகைகளைத் தாருங்கள்.

செக்ரட்டரி உள்ளே வந்து பேங்கிலிருந்து போன் என்றார்.

 

போன் பேச ஆரம்பித்தார். ஓ என்றார். தேங்க்ஸ் என்றார்.

பத்து நிமிட போன்.

அவர் முகம் பிரகாசம்.

அலுவலகம் பிரசாகம்.

ஒரே ஆனந்தம்.

 

மறுநாள் பேங்க் ஆபீஸர்கள் டாகுமெண்ட் வெரிஃபை செய்து லோன் ஆர்டர் இஷ்யூ செய்யப் போகிறார்கள்.

ஒரே கோலாகலம், அவர்களுக்கு ஏகப்பட்ட வேலை.

மெல்ல தேங்க்ஸ் சொல்லி விட்டு நகர்ந்தேன்.

ஒரு நிமிடம். உட்காருங்கள்.

 

உட்கார்ந்தேன்.

அக்கவுண்ட்ஸ் மானேஜரை வரச் சொன்னார்.

இவரது பைலைக் கொண்டு வாருங்கள்.

பைல் வந்தது.

 

இவருக்கு ஆர்டரை டைப் அடித்துத் தாருங்கள். அட்வான்ஸ் எவ்வளவு?

50%

 

அதையும் ஒரு செக்காகப் போடுங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்.

 

ஆர்டர் அமவுண்ட்

 

அவர் கொடேஷனில் கொடுத்தது தான்.

நம்பமுடியாமல் தலையை ஆட்டி விட்டுப் போன அவர் அரை மணி நேரத்தில் வந்தார்.

 

ஆர்டர், செக் – எம் டி கையெழுத்திட்டார்.

என் கையில் தர தேங்க்ஸ் சொல்லி வாங்கிக் கொண்டேன்.

இந்த சேஸிஸ் ஆறும் பல மாதமாக இங்கே தான் இருக்கின்றன.

நாளை அதை மதுரைக்கு அனுப்பி விடுகிறேன்.

 

ஆல் தி பெஸ்ட்!

கிளம்பினேன், கருடனுக்கு நமஸ்காரம்!

காலையில் வீ டு வந்து குளித்து விட்டு ஆபீஸுக்கு வந்து சேர்ந்த என்னை பரிதாபமாக ஒரு கூட்டம் பார்த்தது.

பெரிய சேல்ஸ் ஃபோர்ஸே ஒண்ணும் செய்ய முடியலை.

இவர் பாவம் என்ன செய்வாரு?

 

 

நிர்வாகத்திற்குச் செய்தி போனது.

 

பதினெட்டு லட்சம் சிங்கிள் ஆர்டர், ஒன்பது லட்சம் செக் அட்வான்ஸ்.

 

என்ன பரபரப்பு என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை,

 

சொந்த சர்வைவலுக்காக அலுவலக ஆர்டரை ஜோதிடத்தை வைத்துப் “பிடித்தது” தவறு.

 

தப்பு தப்பு தான்!

***

 

 

ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு (Post No.4754)

Date: 17 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-23 am

 

WRITTEN by S NAGARAJAN

 

Post No. 4754

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஸ்ரீ ஜோஸியம் பிப்ரவரி 2018 இதழில்  வெளியாகியுள்ள கட்டுரை

 

 ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு

 

.நாகராஜன்

 

 

ஹிந்து வாழ்க்கை முறையில் ஜோதிடம் எவ்வளவு பழமையானது என்பதைச் சுட்டிக் காட்ட வால்மீகி ராமாயணம் ஒரு சரியான சான்று. ஆதி காவியம் என்று அறிஞர்களால் புகழப்படும்  உலகின் முதல் காவியமும் பெரும் காவியமுமான ராமாயணத்தில் வால்மீகி முனிவர் ஜோதிடக் குறிப்புகளைத் தவறாமல் முக்கியமான இடங்களில் சொல்லிக் கொண்டே போகிறார்.

சில முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

ராமரின் ஜோதிட, ஹோரா அறிவு

முதலில் ராமர் ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்னர் நல்ல நேரத்தைத் தானே பார்த்துத் தொடங்குபவர் என்பதற்கு அவர் சீதையை நோக்கி இலங்கை செல்லப் புறப்பட நிர்ணயித்த தினமே ஒரு சான்று.

ஹனுமார் இலங்கையை நோக்கிச் செல்ல ராமரே ஒரு நல்ல வேளையைக் குறிப்பிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ராமர் கூறுவது:

“இப்போதே நல்ல வேளையாக இருக்கிறது. சூரியன் வானத்தின் நடுவில் வந்து விட்டார். இந்த விஜய முகூர்த்தமே சிலாக்கியமானது. இன்று உத்தர பல்குனி (உத்தரம்) நட்சத்திரம். நாளை ஹஸ்தம். (அது எனது நட்சத்திரமான புனர்வசுவிற்கு ஏழாம் நட்சத்திரமாக ஆவதால் சுபமில்லை. அதாவது ஜன்ம நட்சத்திரத்திற்கு வத தாரை; உத்தர நட்சத்திரம் சாதக தாராபலம்) என்று இவ்வாறு ராமர் சுக்ரீவனிடம் கூறுகிறார்.

பகலில் உள்ள 30 நாழிகைகளில் 20 நாழிகைக்கு மேல் 22 நாழிகை முடிய உள்ள நேரம் விஜய முகூர்த்தம் எனப்படும். வெற்றி பெறுவதற்கான சரியான வேளை அது என்று ராமர் நிர்ணயிக்கிறார்.

 

ஆக இப்படி ஜோதிடத்தின் துணை கொண்டு நல்ல வேளை நிர்ணயித்த ராமர் வெற்றி பெற்றதில் வியப்பேதும் இல்லை.

ராமரின் ஜாதகம்

அடுத்து ராமரின் ஜனனம் முதல் பட்டாபிஷேகம் வரை வால்மீகி முனிவர் தரும் ஜோதிடத் தகவல்கள் பிரமிக்க வைப்பவை.

ராமர் சித்திரை மாதம் நவமி திதி, புனர்வசு நட்சத்திரத்தில் அவதரிக்கிறார். சந்திரன், சூரியன்,குரு, சுக்ரன்,செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருக்க சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் போது கடக லக்னத்தில்  அவர் அவதரிப்பைதை பால காண்டம் சித்தரிக்கிறது.

 

பட்டாபிஷேக நாள்

ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய ராமர் சுக்ல ஸப்தமி, புஷ்ய (பூசம்) நட்சத்திரத்தில் வசிஷ்டரால் சீதையுடன் ரத்ன சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டு பட்டாபிஷேகம் நடக்கிறது.

ராமர் காட்டிற்கு கிளம்பியது புஷ்ய  நட்சத்திரத்திலேயே. ஆக பதினான்கு வருடங்கள் முடிந்து அவர் மீண்டும் அயோத்திக்கு வருகிறார். அவர் சைத்ர (சித்திரை மாதம்) சுக்ல பக்ஷத்தில் கிளம்பியவர். பால்குன (பங்குனி மாதம்) கிருஷ்ண பட்சம் முடிந்த போதே வருடக் கணக்கில் 14 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.

ஆகவே புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றவர் பாரத்வாஜ ரிஷியின் உத்தரவின் பேரில் அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு கழிக்கிறார்.,முன்னதாக ஹனுமாரை அனுப்பித் தான் வரும் செய்தியை பரதனுக்குத் தெரிவிக்க உத்தரவிடுகிறார்.

பிறகென்ன! அயோத்தி மாநகரமே குதூகலத்துடன் தயாராகிறது.

 

சகுன சாஸ்திரம்

இங்கு நாம் பார்த்தவை ஒரு சில குறிப்புகளை மட்டும் தான்!

ராமாயணத்தை முழுவதுமாக ஜோதிட ரீதியில் படிக்க ஆரம்பித்தால் ஜோதிட சாஸ்திரம், சகுன சாஸ்திரம், ஹோரா சாஸ்திரம் ஆகியவை பற்றிய பல முக்கிய குறிப்புகளைப் பெறலாம். (சீதை பெற்ற சுப சகுனங்களை வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் 29ஆம் அத்தியாயம் விவரிக்கிறது.)

வேதாங்கங்களின், ஆறு அங்கங்களில் ஒன்றான ஜோதிடத்தின் பெருமை ஆதி காலத்திலிருந்தே ஹிந்துத்வ வாழ்க்கை முறையில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிந்து மகிழலாம்!

***

 

குறிப்பு: வால்மீகி ராமாயணத்தில் வரும் விரிவான ஜோதிடக் குறிப்புகள் பலவற்றை  ஸ்ரீ ஞானானந்த பாரதி ஸ்வாமிகள் எழுதிய 432 பக்கங்கள் உள்ள  ஸ்ரீ வால்மீகி ஹ்ருதயம் என்ற நூலில் காணலாம்.

–Subham–

ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய முறைகள்! – 1 (POST NO.4750)

Date: 16 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-09 am

 

WRITTEN by S NAGARAJAN

 

Post No. 4750

 

PICTURES ARE TAKEN from various sources.THEY MAY NOT BE DIRECTLY LINKED TO THE ARTICLE.THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 1

 

ச.நாகராஜன்

 

எனக்கு ஜோதிடம் தெரியாது. ஆனால் ஜோதிடக் குறிப்புகள், பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பது உண்டு. நண்பர்களுடான விவாதங்களும் உண்டு.

 

 

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் சென்னை செல்வதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸில் மனைவியுடன் ஏறினேன். வண்டி கிளம்பி விட்டது.எங்களுக்கு மிடில் பெர்த்தும் அப்பர் பெர்த்தும். மற்றவர்கள் ஒரே குடும்பம். சௌராஷ்டிரர்கள். கீழ் பெர்த், எதிர்ப் பக்கம் 3 பெர்த். ஆனால் வண்டி கிளம்பியவுடனேயே சாப்பாடு மூட்டையை விரித்து விட்டார்கள். எதிர்த்த பக்கம் கீழ் பெர்த்தில் அவர்களது சாமான்கள்.

 

என் மனைவிக்கு கீழே ஒண்டக் கூட இடமில்லை. இப்படியே திருச்சி வரை நிற்க முடியுமா?

மிகவும் இள வயதினரான அவரை ரிக்வெஸ்ட் செய்தேன். கொஞ்சம் இடம் கொடுத்து அட்ஜஸ்ட் செய்யுமாறு. ஹூம், முடியாது என்று கூறி விட்டார். எதிர்த்த பக்க இடம் – ஹீம், சாப்பிட்ட பின்னால் முடிந்த போது தான்! பிறகு ஒரு வழியாக நானே இறங்கி வந்தேன். நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டாம் சார்! நாங்கள் எங்கள் பெர்த்தில் ஏறிப் படுத்துக் கொள்கிறோம். கொஞ்சம் நகர்ந்தால் சங்கிலியை எடுத்து பெர்த்தை மாட்டிக் கொள்ளலாம்?

 

“ஹூம்,முடியாது. சாப்பிட்ட பின்னர் பார்க்கலாம்!”

நடந்ததைக் கவனித்த சக பயணிகள் இது அடாவடித்தனம் என்றனர்.

 

ஆனால் நண்பர் கண்டு கொள்ளவே இல்லை.

திடீரென்று அவரை உற்றுப் பார்த்தேன்.

“என்ன முறைக்கறீஙக?

“முறைக்கல!உங்களுக்கு ஒரு நல்ல சேதி சொல்றேன்.”

“என்ன!!?”

 

கொஞ்ச நாளைக்கு முன்னால உங்க காதிலே ஆபரேஷன் செய்தீர்களா? அது சக்ஸஸ்.இனி மேல் காது பற்றிய பிரச்சினையே உங்களுக்கு ஆயுசுக்கும் கிடையாது.”

“சார்!” என்று அவர் அலறி விட்டார்.

 

தன் குடும்பத்தினரை எழுப்பி விட்டார். அவர்களும் எனது பேச்சைக் கேட்டு பிரமித்தனர்.

“யாருக்குமே இது தெரியாது. ரகசியமாக வைத்திருந்தோம் சார்” என்றனர் குடும்பத்தினர்.

என் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு அவரை சீட் முழுவதும் தந்து உட்காரச் சொன்னார் நண்பர் ஜேஎல்-! என்னை வலுக்கட்டாயமாக உட்கார்த்தி அவர் தரையில் உட்கார்ந்தார்.

எப்படி சார்? சொன்னீர்கள். என்னிடம் ஜாதகம் இருக்கிறது. ஆனால் நான் எதையுமே சொல்லவில்லையே!

இரவு 10 மணி வரை அரட்டை. அவரிடம் என் போன் நம்பர் முகவரியைத் தந்து “சென்னையிலிருந்து வந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்” என்றேன்.

 

படுக்கப் போகுமுன்னர்,”சார், என் மண்டை வெடித்து விடும் சார்! எப்படிச் சொன்னீர்கள் காதில் ஆபரேசன் என்று” என்று கேட்டார்.

“அவர் வலது கையில் இருந்த ஒரு மேட்டில் இருந்த ஒரு பழுப்பு மச்சத்தைக் காண்பித்தேன். இது முன்பு இல்லை. இப்போது வந்தது. இது காதில் ரண சிகிச்சையைக் குறிக்கும். அது பெரிதிலிருந்து சிறிதாகி வருகிறது. ஆபரேஷன் சக்ஸஸ். இது மறையும் போது  முற்றிலும் குணமாகி விடுவீர்கள்.கையைக் கையை ஆட்டிப் பேசினீர்கள் இல்லையா, அப்போது கவனித்தேன், ஆபரேஷன் விஷயத்தை!” என்றேன்.

 

அவரும் அவர் குடும்பத்தினரும் என்னை பிரமிப்புடன் பார்த்தனர.

ஒரு பிரபல ஆங்கில மருத்துவ – கைரேகை நிபுணர் ஒவ்வொரு வியாதிக்கும் கைரேகைக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதியுள்ள சுவாரசியமான புத்தகத்தைப் படித்ததன் விளைவு இது!

நண்பர் ஜேஎல்- நெடுங்கால நண்பராக இருந்தார்.

கால ஓட்டத்தில் அவர் பெரிய வியாபாரி. நான் வேறு தொழில்.

ஒரு சின்ன இடத்தை இரண்டு மணி நேரம் பிடிக்க ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய முதல் முறை இது!

தப்பு தப்பு தான்!    ( இன்னும் இரு பகுதிகள் வரும்)

***

 

காரிய வெற்றிக்கு சகுனங்கள்! (Post No.4611)

Date: 13 JANUARY 2018

 

Time uploaded in London- 5-51 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4611

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஜோதிட இதழான ஸ்ரீ  ஜோஸியம் பத்திரிகை ஜனவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

காரிய வெற்றிக்கு சகுனங்கள்!

 

ச.நாகராஜன்

 

நமது முன்னோர்கள் இயற்கைப் படைப்பைக் கூர்ந்து கவனித்து ஒரு காரியம் கை கூடுமா, தொடங்கும் பணியில் வெற்றி உண்டா இல்லையா என்பதை முன்கூட்டியே நிர்ணயிக்க சகுன பலனைச் சொல்லி உள்ளனர்.

 

இராமாயணத்தில் சீதைக்கு ஏற்படும் நல்ல சகுனங்கள், மஹா பாரதத்தில் துரியோதனனுக்கு ஏற்படும் தீய சகுனங்கள் ஆகியவற்றைப் படிக்கும் போது வியப்பு ஏற்படும்.

அப்படி சகுன பலன்களை விவரமாக விவரித்துள்ளனர் முன்னோர்.

 

 

கிராமங்களில் சர்வ சாதாரணமாகச் சொல்லி, கடைப்பிடிக்கப்படும் இந்த சகுனக் குறிகள் இன்றைய நகர வாழ்க்கையில் சில சமயம் பொருத்தமில்லாமல் போகிறது; அல்லது அதைத் தெரிந்து கொள்ளாமல் நகரங்களில் வாழ்வோர் காரியங்களைத் தொடங்குகின்றனர்.

 

 

சம்ஸ்கிருதத்தில் சகுனம் பற்றிப் பல நூல்கள் உண்டு. நூற்றுக்கணக்கான ஸ்லோகங்கள் உள்ளன.

தமிழிலும் பல நூல்கள் உண்டு. எடுத்துக் காட்டாக ஒரு நூலை மட்டும் இங்கு பார்க்கலாம்.

 

 

அம்பலவாணப் புலவர் எழுதிய அறப்பளீசுர சதகம் நூறு பாடல்களைக் கொண்ட அருமையான நூல்.

அதில் சகுனங்களைப் பற்றி மூன்று செய்யுள்கள் உள்ளன. (செய்யுள்கள் 62,63,64)

 

 

அவை வருமாறு:-

சொல்லரிய கருடன் வானரம் அரவம் மூஞ்சூறு குகரம் கீரி கலைமான்

துய்யபாரத்வாசம் அட்டை எலி புன் கூகை சொற்பெருக மருவும் ஆந்தை

வெல்லரிய கரடி காட்டான்பூனை புலி மேல் விளங்கும் இரு நா உடும்பு

 

மிகவுரை செய் இவையெலாம் வலம் இருந்திடமாகில் வெற்றியுண்டதிக நலம் ஆம்;

ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலை தாக்கல்

ஒருதுடையிருத்தல்,பற்றல்,

ஒரு தும்மல், ஆணையிடல், இருமல், போகேலென்ன

உபசுருதி சொல் இவையெலாம்

 

அல்லல் தரும் நல்ல அல என்பர்;முதியோர் பரவும்

அமலனே! அருமை  மதவேள்

அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரிவளர்

அறப்பளீசுரதேவனே!

பொருள்: பெரியோர்கள் வாழ்த்துகின்ற தூயவனே! மதவேள் தினமும் மனதில் வழிபடுகின்ற சதுரகிரியில் குடி கொண்டிருக்கும் அறப்பளீசுர தேவனே!

 

சொல்வதற்கு அரிய கருடனும், குரங்கும், பாம்பும், மூஞ்சூறும், பன்றியும், கீரியும், கலைமானும்,தூய கரிக்குருவியும், அட்டையும், எலியும், இழிந்த கோட்டானும், மிகுதியாகப் பேசப்படும் ஆந்தையும், வெல்ல முடியாத கரடியும், காட்டுப் பசுவும், பூனையும், புலியும், மேலாக விளங்கும் இரு நாக்குகளை உடைய உடும்பும் ஆகிய இவை எல்லாம் வலத்தில் இருந்து இடப்பக்கம் போனால் வெற்றி உண்டாகும். மிகுதியான நலமும் உண்டாகும்.

 

வழிப்பயணம் மேற்கொள்வோரின் தலையில் இடித்தல், ஒரு காலில் நிற்றல், வலது கையைப் பிடித்தல், ஒற்றைத் தும்மல், ஆணையிடுதல், இருமுதல், போக வேண்டாம் என்று காதில் விழும்படியாகக் கூறுதல் இவை யாவும் துன்பம் தரும். நல்லன அல்ல என்பர்.

 

நரிமயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை

நாவிசிச்சிலியோந்தி தான்

கரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி

நாடரிய சுரபி மறையோர்

 

வரியுழுவை முயலிவையனைத்தும் வலம் ஆயிடின்

வழிப்பயணம் ஆகை நன்றாம்;

மற்றும் இவை அன்றியே குதிரை அனுமானித்தல்

வாய்ச்சொல் வா வா வென்றிடல்,

தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசி

தப்பட்டை ஒலி வல்வேட்டு

 

தனி மணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி

தனக்கேக நன்மை என்பர்!

அருணகிரனோதயத் தருணபானுவையனைய

அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில் நினை தருசதுரகிரி வளர்

அறப்பளீசுரதேவனே!

 

பொருள் :  சிவந்த கதிர்களை உடைய ஞாயிறு போன்ற அண்ணலே! சதுரகிரியில் எழுந்தருளியுள்ள அறப்பளீசுர தேவனே!

நரியும், மயிலும், பச்சைக் கிளியும், கோழியும், கொக்கும், காக்கையும், கஸ்தூரி மிருகமும்., சிச்சிலிப் பறவையும், ஓணானும், வல்லூறும், விரைந்து கத்தும் செம்போத்தும், எருமையும் சிந்தித்தற்கு அரிதான பசுவும், அந்தணரும், வரிப்புலியும், முயலும் ஆகிய இவை யாவும் வலமாக வந்தால் வழிப் பயணம் நன்மை தரும். மேலும், குதிரை கனைத்தலும், வா வா என்று வாய்ச்சொல்லாக காதில் படும்படி கூறுதலும்,சங்கு ஒலித்தலும், கொம்பும்,கிடுமுடியும், முரசும், தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும், ஒப்பற்ற மங்கல வாத்தியம் முழங்குதலும் ஊரிலிருந்து பயணம் மேற்கொள்ள நல்லது என்று அறிஞர் கூறுவர்.

 

தலைவிரித்தெதிர் வருதல், ஒற்றைப் பிராமணன்,

தவசி, சந்நாசி, தட்டான்,

தன்மிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறகுதலை,

தட்டைமுடி, மொட்டைத்தலை,

கலன் கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,

கதித்த தைலம், இவைகள்

காணவெதிர் வரவொணா: நீர்க்குடம், எருக்கூடை,

கனி, புலால் உபய மறையோர்

நலம் மிகு சுமங்கலை, கிழங்கு, சூதக மங்கை

நாளும் வண்ணான் அழுக்கு

நசை பெருகு பாற்கலசம், மணி, வளையல், மலர் இவைகள்

நாடி யெதிர் வர நன்மையாம்;

அலை கொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்

அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர்

அறப்பளீசுர தேவனே!

 

 

பொருள்: அலை கொண்ட கங்கையை அணி ந்த சடையானே!

மழு ஏந்திய அண்ணலே! சதுரகிரியில் எழுந்தருளியிருக்கும் அறப்பளீசுர தேவனே!

 

தலைவிரி கோலமாக ஒருவர் எதிரில் வருதலும், ஒற்றைப் பிராமணனும், தவம் புரிவோனும், துறவியும், தட்டானும், தனம் இல்லாத மார்பினளும்,மூக்கில்லாதவனும், புல் தலையனும், விறகு தலையனும், சப்பைத் தலையும், மொட்டைத் தலையும், அணிகலன் இல்லாத பெண்களும்,குசவன் பாண்டமும், வாணியன் மிகுந்த எண்ணெயும் ஆகிய இவைகள் கண் காண எதிரில் வருதல் தகாது.

 

நீர்க்குடமும், எருக்கூடையும்,பழமும், மாமிசமும், இரட்டை பிராம்மணரும்,நலம் மிகு சுமங்கலி, கிழங்கு,  பூப்புப் பெண்ணும், நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும்,  விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும், மலரும், ஆகிய இவைகள் தேடி எதிரே வந்தால் நலம் ஆகும்.

மேற்கூறிய சகுன பலன்கள் சரியா, இல்லையா?

இதை எப்படி சரி பார்ப்பது. மிகவும் சுலபம். சகுனத்தை தினமும் கவனித்து குறிப்புகளை எடுத்துக் கொண்டால் போதும், ஒரு சில வாரங்களில் நாம் நிபுணராகி விடுவோம்.

 

சோதனை செய்து அறிவதே ஆனந்தம். இதையே இயற்கையை அனுசரித்த முன்னோர் செய்தனர். சகுனத் தடை என்றால் சற்று நேரம் கழித்துக் காரியத்தைத் தொடங்கலாம்,இல்லையா!

முயன்று பார்ப்பதில் நஷ்டம் ஒன்றுமில்லை; லாபம் தான்!

முயல்வோம்; சரி பார்ப்போம்; கடைப் பிடிப்போம்!

***

 

அன்றாட நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி! (Post No.4555)

Date: 28  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-04 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4555

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஸ்ரீ ஜோஸியம் (ஞான ஆலய குழுமத்திலிருந்து வெளியாகும் மாதப் பத்திரிகை) டிசம்பர் 2017இல் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி!

 

ச.நாகராஜன்

 

ஹிந்து வாழ்க்கை முறையில் ஜோதிடத்தின் இடம் தனி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று குழந்தை மனதில் பதியும் படி அவ்வை பிராட்டி அருளினார். அதே போல ஜோதிடர் இல்லாத ஊரில் ஒரு தினமும் கூட வாழாதே என்று முதுமொழி கூறுகிறது.

 

ருணதாதா ச தேவக்ஞ: ஸ்ரோத்ரிய: சுஜலா நதி

யத்ர ஹோதே ந வித்யந்தே ந தத்ர திவஸம் வஸேத்

 

பழைய காலம் தொட்டு வழங்கி வரும் இந்த சுபாஷித ஸ்லோகத்தின் பொருள்: கடன் தந்து ஆதரிக்காத ஒருவர், ஜோதிடர், வேதங்களை அறிந்த குருக்கள், நல்ல நீரைக் கொண்டு ஓடும் நதி – இவையெல்லாம் எங்கு இல்லையோ அங்கு ஒருவன் ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது.

அன்றாட வாழ்விற்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசிக்காமல் ஒரு நல்ல காரியத்தைக் கூடத் தொடங்காத பண்புடைய வாழ்வு ஹிந்துத்வ வாழ்வு.

 

புத்தாடைகளை எந்த நட்சத்திரத்தில் அணிய வேண்டும்?

அவிட்டம், புனர்பூசம்,ஹஸ்தம், சித்ரா, ஸ்வாதி, விசாகம், அனுராதா (அனுஷம்), பூசம், அஸ்வினி ஆகிய நட்சத்திர தினங்களில் புத்தாடைகளை அணிய வேண்டும் என்று முகூர்த்த மார்த்தாண்டம் என்ற நூல் விளக்குகிறது.

புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் புத்தாடை அணிய முகூர்த்த மார்த்தாண்டம் அறிவுறுத்துகிறது.

 

கடனை வாங்க வேண்டி இருந்தால் எந்த நாளில் வாங்க வேண்டும்?

 

வீட்டு லோன், படிப்பு லோன், கல்யாண லோன் என்று இன்று லோன் இல்லாத வாழ்க்கையே கிடையாது. வங்கிக் கடன் இன்று சர்வ சாதாரணமாக ஆகி விட்டது. கடனை வாங்குவதற்குக் கூட நமது நூல்களில் வழிகாட்டுதல்கள் உண்டு.

புதன்கிழமைகளில் ஒரு போதும் கடன் வாங்காதே என்று ராமாசார்ய டீகா அறிவுறுத்துகிறது.

வாங்கிய கடனைத் திருப்பித் தர உகந்த நாள் செவ்வாய்க்கிழமை.

ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஹஸ்த நட்சத்திரம் வரும் நாளில் கடனை ஒரு போதும் வாங்கக் கூடாது

.

திதிகளில் கொண்டாட்டமும், விலக்க வேண்டியவையும்

 

ஹிந்து வாழ்க்கையும் முறையில் திதிகளுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு.

அக்ஷய திருதியை – திருதியை

விநாயக சதுர்த்தி – சதுர்த்தி

வஸந்த பஞ்சமி – பஞ்சமி

ஸ்கந்த ஷஷ்டி – ஷஷ்டி

ரத சப்தமி – சப்தமி

கிருஷ்ண ஜயந்தி – ஜன்மாஷ்டமி – அஷ்டமி

ராம நவமி – நவமி

மஹா சிவராத்திரி – மஹா சதுர்த்தசி – சதுர்த்தசி

சித்ரா பௌர்ணமி – பௌர்ணமி

மஹாளய அமாவாசை – அமாவாசை

இப்படி திதிகளை வைத்தே பல முக்கிய தினங்களை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

எந்த திதியில் எதை விலக்க வேண்டும் என்பதற்கும் கூட நம் சாஸ்திரங்கள் தீர்க்கமான வழிகாட்டுதலைத் தருகின்றன.

ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய தினங்களில் எண்ணெய் மற்றும் மாமிசத்தை விலக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதியும் விஷ்ணு புராணமும் கூறுகின்றன

 

ஆக இப்படிப் பல்வேறு விதிகளை நமது நலன் கருதி இதனால் ஏற்படும் நன்மை தீமைகளைக் கால ஓட்டத்தில் பரீட்சித்ததாலும், உள்ளுணர்வாலும் கண்ட நம் முன்னோர்கள் அவற்றைப் பல்வேறு சாஸ்திர நூல்களில் கூறியுள்ளார்கள்.

இவை அனைத்தையும் படித்துத் தேர்ந்தவரே ஜோதிடர். ஆகவே தான் அவரிடம் ஒரு காரியத்தைத் தொடங்கு முன் அதை என்று செய்யலாம் என்பதைக் கேட்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்தது.

அவரும் நல்ல நாளைக் குறிப்பதோடு எதை எதைச் சேர்க்க வேண்டும், எதை எதை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் கூட விதிமுறைகளை வகுத்திருக்கும் மதம் ஹிந்து மதம் என்பது ஆச்சரியமான விஷயம்.

***