Post No. 15,083
Date uploaded in London – 13 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் (12 10 2025) உலக இந்து செய்திமடல்
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு
****
முதலில் சபரி மலை கோவில் செய்தி


சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில் வெளியான இ-மெயில் கடிதத்தால் புதிய திருப்பம்!; கோர்ட் அதிர்ச்சி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.
சபரிமலை தங்கம் கொள்ளை தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வு பிரிவு ஆறு வாரங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில், ‘தங்கக் கவசம் செப்பனிடும் பணிக்குப் பின், மிச்சமான தங்கத்தை உதவி தேவைப்படும் பெண்ணின் திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என, தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி தேவசம் போர்டுக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தொழிலதிபருக்கும், தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும் முறைகேட்டில் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019ல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
செப்பனிடும் பூசும் செலவை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தில் செப்பனிடும் பணி நடந்தது.
இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டப் பின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது.
அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது.
பக்தர்கள் மத்தியில் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையை கண்டறிய கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 2019, ஆக., 11ம் தேதி செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பின், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, ‘இ – மெயில்’ வாயிலாக கடிதம் ஒன்று தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டது. அது குறித்த ஆதாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், உன்னிகிருஷ்ணன் போத்தி கூறியிருப்பதாவது:
சபரிமலையின் கருவறை கதவு மற்றும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்த நிலையில், என்னிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது.
உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்த தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா? இது தொடர்பாக உங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்து கேரள உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
‘இந்த செயல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும், உன்னிகிருஷ்ணனுக்கும் இடையேயான கூட்டு எச்சரிக்கை மணி போல ஒலிக்கிறது.
‘கோவில் சொத்து மீதான புனிதத்தை கெடுத்து, பக்தர்களின் நம்பிக்கைகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது’ என, நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
காணாமல் போனதாக கூறப்பட்ட துவாரபாலகர்கள் தங்கபீடமும், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்கப்பட்டது.
துவாரபாலகர்கள் தங்கக் கவசம் குறித்த முறைகேடுகள் தொடர்பாக தேவசம் போர்டில் பணியாற்வந்த மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
****
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..
ஐகோர்ட் மதுரை கிளையில், ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், ‘பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,’ என பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 24 ல் நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவில் ‘ அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன்’ என்றார்.
இதிலிருந்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்டு சில மனுக்களை அனுமதித்தும், சில மனுக்களை தள்ளுபடி செய்தும் ஒரு மனுவை பைசல் செய்தும் உத்தரவிட்டார். இந்த சட்டப் பிரச்னையில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்த வழக்கு 3வதாக நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.
***********************
கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை

கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: கோவில்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன. கோவில் சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யும் வகையில், தமிழக வருவாய்த்துறை, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பதிவுத்துறையில் பூஜ்ஜியம் மதிப்பில் பதிவேற்றம் செய்ய, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க, அத்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
பட்டா நிலம், மானிய நிலம், ஊழியம் நிலம் என்ற வகைப்பாடுகளில் கோவில் நிலம் உள்ளது. புது அரசாணை மூலம் கோவில் சொத்துக்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தமிழக வருவாய்த்துறை, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
****
திருப்பதி போல தமிழக கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம் வசதி; அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக கோவில்களின் நிலத்தை மீட்க, கோவில் சொத்துக்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகள், அறிவு ஜீவிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
கோவில் நில வாடகை, குத்தகை, மக்கள் செலுத்தும் பூஜை கட்டணத்தை ஆன்லைனில் வசூலிக்க வேண்டும். கோவில் நிலம் மற்றும் சொத்துக்களை தனி நபர்களின் பெயருக்கு சாதகமாக மாற்றக்கூடாது.கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நெரிசல் ஏற்படுகிறது. சபரிமலை, திருப்பதி கோவில்களில் உள்ள தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முறை மூலம் எவ்வித தொந்தரவும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யலாம்.
ஊழியர்கள் பணம் வசூலித்து தரிசனம் செய்ய அனுமதிக்கும் முறைகேடுகளை தவிர்க்கலாம். தமிழகத்தின் முக்கிய கோவில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதிகள் தமிழக அறநிலையத்துறை செயலர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நவ., 12க்கு ஒத்திவைத்தனர்.
****
அடுத்ததாக ரஜினி காந்த் பயணச் செய்தி


ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!
நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த், தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
, ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். பாபா குகைக்குச் செல்லவுள்ள ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்குத் தங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ரஜினிகாந்த், பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.
****
சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்!
திருச்சி சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்காக 100 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், கோயில் பெண் ஊழியர் 400 ரூபாய் கொடுத்தால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்க முடியும் எனக் கூறி பக்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வெளியாகி உள்ளதாகத் தெரிவித்தார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இதுபோன்ற நிர்வாகச் சீர்கெடுகளும், பக்தர்களை மிரட்டும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பக்தியை பணமாக்குவது மட்டுமே அறநிலையத்துறையின் முழு நேர வேலையாக உள்ளது எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியன், மன நிம்மதிக்காகக் கோயிலுக்கு வரும் பக்தர்களை கோயில் ஊழியர்கள் அவமதிப்பது என்பது எந்த மாநிலத்திலும் நடக்காத செயல் எனக் கூறியுள்ளார்.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தக் கோயில்களிலும் இனி இது போன்ற ஊழல்களும் பக்தர்களின் அவமதிப்பு செயல்களும் நடைபெறக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்

இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதிகளா என்றும், இந்துக்கள் விழிப்புடன் செயல்பட்டு சதிகளை முறியடிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டடுள்ள அறிக்கையில், இனிப்பு மற்றும் பலகாரங்களுக்குக் கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்து உணவு கட்டுப்பாட்டுத்துறை மிரட்டுகிறது எனக் கூறியுள்ளார்
இந்துக்களின் பண்டிகையின்போது அரசு அதிகாரிகள் அறிவுரை, எச்சரிக்கை விடுக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசு பட்டாசு வெடிக்க அறிவித்திருக்கும் கட்டுப்பாடு, தமிழக பட்டாசு உற்பத்தி தொழிலை பாதிக்கும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடக்கும் திட்டமிட்ட சதிகளை முறியடிக்க மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும், தமிழக அரசும் மக்களின் உணர்வுகளை மதித்துச் செயல்பட வேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
****
அமெரிக்காவில் மேலும் ஒரு மாநிலம் தீபாவளியை விடுமுறை நாளாக அறிவித்தது
கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி விடுமுறை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண கவர்னர் கவின் நியூசம் அறிவித்துள்ளார்.
இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.
ஏற்கனவே பென்சில்வேனியா, கனெடிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருந்தன.
தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கும் ஏபி 268 என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குத் தீபாவளி பொது விடுமுறையாகியுள்ளது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு அக்டோபர் மாதம் 19 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 12-10-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi





















