WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 10,285
Date uploaded in London – – 1 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 31-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!
த்வாரகா!
அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றாக அமைவதும் 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுமான த்வாரகா திருத்தலம் ஆகும். “அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரித்வாரகாவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயிகா” என்பது அனைவரும் அறிந்த ஏழு மோக்ஷபுரிகளைப் பற்றிய ஸ்லோகமாகும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள இத்தலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்பு கொண்ட தலமாகும்.
மூலவர் திரு நாமம் : த்வாரகாதீசன், கல்யாண நாராயணன்.
கருப்பு நிறத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இவர் காட்சி அளிக்கிறார்.
தாயார் திரு நாமம் : கல்யாண நாச்சியார், ருக்மிணி தீர்த்தம் :கோமதி நதி அல்லது சமுத்ர சங்கமம் அல்லது பிரபாச தீர்த்தம் விமானம் : ஹேமகூட விமானம்
இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண மற்றும் இலக்கிய வரலாறுகள் உண்டு. ஒரு சமயம் ஜராசந்தன் மக்களைப் பெரிதளவும் கொடுமைப் படுத்த, உடனே ஸ்ரீ கிருஷ்ணர் சமுத்திர ராஜனிடம் இந்த இடத்தைக் கேட்டுப் பெற்றார்; விஸ்வகர்மாவை வைத்து இந்த நகரை நிர்மாணித்தார். உலகமே வியக்கும் வண்ணம் ஸ்வர்க்கத்திற்கு நிகராக அகன்ற சாலைகளுடனும் பல தீர்த்தங்களுடனும் இந்த நகர் நிர்மாணிக்கப்பட்டது. அவரது கொள்ளுப் பேரனான வஜ்ரநாபன் ஐந்து அடுக்கு நிலைகொண்ட த்வாரகாதீசர் ஆலயத்தை நிர்மாணித்தார்.
இப்போதுள்ள த்வாரகா பொதுவாக இரு பகுதிகளாக அழைக்கப்படுகிறது. த்வாரகா புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதி கோமுகி த்வாரகா ஆகும். இன்னொரு பகுதி பேட் த்வாரகா ஆகும்.
ஸ்வர்க்கத்திற்கு செல்லும் வாயிலாக இது அமைவதால் இது த்வாரகா என்ற பெயரைப் பெற்றது. இங்கிருந்து தான் யாதவர்கள் அனைவரும் மோக்ஷம் அடைந்தனர்.
இங்குள்ள கோவிலில் அனைத்து பக்தர்களும் ஸ்வர்க வாயிலின் வழியே உள்ளே சென்று மோக்ஷ வாயில் வழியே வெளியே வருவது வழக்கம்.
கோவிலிலிருந்து அருகே உள்ள கோமதி நதி கடலில் கலக்கும் சங்கமத்தை அடையலாம். இந்த சங்கமத்தில் நீராடி விட்டுப் பின்னர் கோவில் தரிசனத்தை மேற்கொள்வது ஐதீகம். கோவிலிலிருந்து படகு மூலம் சென்றால் பேட் துவாரகையை அடையலாம். இங்கு கிருஷ்ணரின் அஷ்ட பட்டமகிஷிகளுக்கான கோவில்கள் உள்ளன. பேட் த்வாரகா என்ற சிறு தீவில் தான் கிருஷ்ணர் வாழ்ந்து வந்தார். இங்கு தான் அவரது அரண்மனை, அந்தப்புரம் ஆகியவை அமைந்திருந்தன. பால்ய கால நண்பரான குசேலர் இங்கு தான் வாழ்ந்து வந்தார். இங்கு தான் கிருஷ்ணர் சங்காசுரனை வதம் செய்தார்.
த்வாரகா ஆலயத்தில் லக்ஷ்மிநாராயணர், ருக்மிணி, திரிவிக்ரமன், தேவகி, ஜாம்பவதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
இங்குள்ள சங்கமத்தில் ரங்கன் காட், நாராயண் காட், காவூகாட், வசுதேவ காட், பாண்டவன் காட், பிரம்ம காட், பார்வதி காட், கங்கா காட், சுரதன் காட், கர்க்காரி காட், அனுமன் காட், நாராயண பலி காட் என பன்னிரெண்டு துறைகள் உள்ளன. இங்குள்ள ரிஷபா குண்டத்திலும் பக்தர்கள் நீராடுவது மரபாகும். இத்தலம் பற்றி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இங்கு ஏராளமான மகான்களும் அருளாளர்களும் காலம் காலமாக வந்து கிருஷ்ணரை தரிசித்து பல பாடல்களைப் புனைந்துள்ளனர். ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர், ஞானேஸ்வரர், பக்த மீரா, கிருஷ்ண சைதன்யர், வல்லபாசாரியர் என்று இங்கு வந்த அருளாளர்களின் பட்டியல் மீக நீண்ட ஒன்றாகும். கிருஷ்ணரைப் பற்றிப் பாரத தேச மொழிகள் அனைத்திலும் அற்புதமான இலக்கியங்கள் ஆயிரக்கணக்கில் புனையப்பட்டுள்ளன. கிருஷ்ணரைப் பற்றிய பாடல்களோ பல்லாயிரம் ஆகும்.
பெரியாழ்வார் ஐந்து பாசுரங்கள், ஆண்டாள் நான்கு பாசுரங்கள், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரம், திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்கள், நம்மாழ்வார் ஒரு பாசுரம் ஆக மொத்தம் 13 பாசுரங்களை ஆழ்வார்கள் இத்தலம் பற்றி மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர்.
இங்கு 1963ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல வருடங்கள் நடந்துள்ள பல அகழ்வாராய்ச்சிகளில் இந்தத் தலம் பண்டைய காலத்தில் புகழோங்கி இருந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து உலகையே மகிழ வைத்துள்ளன. வசுதேவருக்கும் தேவகிக்கும் மதுராபுரியில் மகனாக அவதரித்த கிருஷ்ணர் ஆயர்பாடியில் யசோதா பாலனாக வளர்ந்தார். ஏராளமான அருள் லீலைகளைப் புரிந்தார். த்வாரகாவை நிர்மாணித்து, ஆண்டு, மறத்தை அழித்து அறத்தை நிலைநாட்டிய பின்னர் தனது அவதார காரியம் நிறைவேறியவுடன் அவர் இங்கிருந்து தான் தனது விஷ்ணு லோகத்திற்குச் சென்றார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
பெரியாழ்வாரின் அருள் வாக்கு இது:
தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் ஜோதி நம்பி!
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
நன்றி, வணக்கம்!
tags– துவாரகா , ஆலயம், அறிவோம்