இரண்டு பாடல்களில் மட்டுமே வரும் ஒரு அபூர்வ அணி – (Post No.7943)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7943

Date uploaded in London – – – 9 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வில்லிப்புத்தூரார், கண்ணதாசன்?!

இரண்டு பாடல்களில் மட்டுமே வரும் ஒரு அபூர்வ அணி – ஒற்றைமணி மாலை அணி!

ச.நாகராஜன்

வியாஸர் இயற்றிய மகாபாரதத்தைத் தமிழில் தந்தவர் வில்லிப்புத்தூரார்.

அழகிய நடையில் இனிய சந்தத்தில் ஏராளமான அணிகளுடன் உள்ள வில்லி பாரதம் படிப்போரைப் பரவசப்படுத்தும் அற்புத காவியம்.

சுமார் 4337 பாடல்கள் கொண்ட வில்லி பாரதத்தில் ஒற்றைமணி மாலை அணி என்ற அபூர்வ அணி, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அடுத்தடுத்து வரும் இரண்டு பாடல்களில் உள்ளன.

ஒற்றை மணி மாலை அணி என்றால் என்ன?

ஒரு செய்யுளில் முன்னிரண்டு அடிகள், மூன்றாம் அடி, நான்காம் அடி என்ற நான்கு அடிகளிலும் தனித் தனிப் பொருள்களுக்குத் தொடர்ச்சியைக் கூறுவது ஒற்றை மணி மாலை அணி எனப்படும்.

சூது போர்ச் சருக்கத்தில் 53 மற்றும் 54ஆம் பாடல்களில் வில்லிப்புத்தூரார் இந்த அணியைச் சிறப்புறக் கையாள்கிறார்.

பாடல்களைப் பார்ப்போம்.

இந்திரப்ரஸ்த நகரின் வளத்தைக் கூறும் செய்யுள்கள் இவை.

ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் பாடு எலாம் இளம் சோலை மென் பொங்கரின் பணை எலாம் குயில் ஓசை நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல்     

                                    (செய்யுள் 53 – சூது போர்ச் சருக்கம்)

அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை குருகு எலாம் வளர் பழனம் புள் எலாம் கூடல் இன்புற ஊடல் முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம்

(செய்யுள் 54 – சூது போர்ச் சருக்கம்)

பாடலின் பொருள் :

ஊடு எலாம் – இந்திரப்ரஸ்த நகரின் உள்ளே உள்ள இடங்களிலெல்லாம்

நறும் பொய்கை – நன்னீரை உடைய குளங்களும்

நீள் வாவியின் உடம்பு எலாம் – பெரிய அந்தக் குளங்களில் இடம் முழுவதிலும்

மலர் – தாமரை, அல்லி, ஆம்பல் ஆகிய மலர்களும்

பூவின் தோடு எலாம் – அந்தப் பூக்களின் இதழ்களிலெல்லாம்

எழு சுரும்பு இனம் – மேலெழுந்து மொய்க்கின்ற வண்டுகளின் கூட்டங்களும்

மதுகர சொல் எலாம் –  அந்த வண்டுகளின் வாயொலிகளில் எல்லாம்

செழும் கீதம் – சிறப்பான இசைப்பாட்டுக்களும் (எழுகின்றன)

பாடு எலாம் – அந்தக் குளங்களின் பக்கங்களில் எல்லாம்

இளம் சோலை – இளம் சோலைகளும்

மென் பொங்கரின் பணை எலாம் – மென்மையான அச்சோலைகளில் உள்ள மரக்கிளைகளில் எல்லாம்

குயில் ஓசை – குயிலினங்களில் குரல்களும்

நாடு எலாம் – அந்த இந்திரப்ரஸ்த நாடு முழுவதிலும்

நெடும் புனல் வயல் – மிகுதியான நீர் பாய்ந்த வயல்களும்

நீண்ட கழனியின் நடுவு எலாம் – அக்கழனிகளின் நடு இடங்களில் எல்லாம்

விளை செந்நெல்  – விளைகின்ற செந்நெல் பயிர்களும் உள்ளன.

குளம், குளங்களில் மலர்கள், மலர்களில் இதழ்கள், இதழ்களில் வண்டுக் கூட்டம், வண்டுக்களின் வாய் ஒலி, அதில் எழும் இசைப்பாட்டு, அருகில் சோலைகள், சோலைகளின் மரங்கள், அதன் கிளைகள், கிளைகளில் குயில்கள், குயில்களின் கீதம், என்றும், இப்படி நகர் முழுவதும் பரவியுள்ள வயல்கள், வயல்களின் நடுப்பகுதி, அங்கு விளைந்திருக்கும் செந்நெல் பயிர்கள் என அழகுற ஒரு மாலை போல தொடுத்திருக்கும் பான்மை தான் ஒற்றைமணி மாலை அணியாகும்.

அடுத்த பாடலின் பொருள் :-

அருகு எலாம் மணி மண்டபம் – அந்த நகரத்தின் ஒன்றுக்கு ஒன்று அருகில் உள்ள இடங்கள் தோறும் அணி மண்டம் அல்லது மணி மண்டபங்கள் உள்ளன.

அவிர் ஒளி அரங்கு எலாம் – விளங்குகின்ற ஒளி உடைய அரங்கம் முழுவதும் (Auditorium Lighting)

சிலம்பு ஓசை– நடனமணிகள் அழகுற ஆடுவதால் எழும் சிலம்பு ஓசையும்

வளர் பழனம் குருகு எலாம் – கழனிகளில் எல்லாம் செழுமையுற வாழ்கின்ற நீர் வாழ் பறவை இனங்களும்

புள் எலாம் – அந்தப் பறவை இன இடங்களில் எல்லாம்

கூடல் இன்புற ஊடல் – ஆண் பெண் பறவைகள் கூடிப் புணர்ச்சி கொள்ள அதற்கிடையில் சிறு சிறு ஊடல்களும் எழ,

முருகு எலாம் கமழ் துறை எலாம் – பலவகை நறு மணம் கமழும் நீர்த்துறைகளில் எல்லாம்

தரளம் – முத்துக்களும்

வெண் முத்து எலாம் – வெண்ணிறமான அந்த முத்துக்களில் எல்லாம்

நிலா வெள்ளம் – சந்திரகாந்தி போன்ற நிலா வெள்ளமும்

நதி எலாம் பருகல் ஆம் புனல் – அந்நகரத்தைச் சார்ந்து ஓடுகின்ற நதிகளில் எல்லாம் குடிக்கக் கூடிய தெள்ளிய நீரும்

நீர் எலாம் பங்கய பசும் கானம் – அந்த நீரிலெல்லாம் பசுமை நிறமான தாமரைக் கொடிகளின் தொகுதியும் நிரம்பி உள்ளன.

அடடா, என்ன அடுக்கு வர்ணனை!

மணி மண்டபங்கள், அதில் ஒளி வெள்ளம், அந்த ஆடரங்கில் ஆடும் நடனமணிகள், அவர்களின் நாட்டிய அசைவில் கால் சிலம்பிலிருந்து எழும் சிலம்போசை, அருகில் கழனிகள், அங்கு பறவையினங்கள், அவற்றிடையே கூடல், ஊடல், நீர்த்துறைகளில் முத்துக்கள், முத்துக்களின் ஒளி, அது சந்திரகாந்தக்கல் போல ஒளி வெள்ளமாகப் பொழிவது, அருகில் ஓடுகின்ற தெள்ளிய நீர், அதுவோ பருகக் கூடிய அளவு சுத்தமான நீர், அந்த நீரில் பசுமையான தாமரைக் கொடிகள்…

இப்படிப்பட்ட நகரில் விதுரன் புகுந்து சென்றான். அரச தெருக்களில் எல்லாம் துந்துபி வாத்தியங்கள் என்ன, வரவேற்பு என்ன … என்று இப்படி அடுக்கிக் கொண்டே செல்கிறார் வில்லிப் புத்தூரார்.

இது தான் கவி மழை.

பாரதக் கவி மழையில் நாம் அணியாய்க் காண்பது பல்வேறு அணிகளை!

அந்த அணிகளில் அபூர்வமான அணி ஒற்றைமணி மாலை அணி!

அதை இரண்டே இரண்டு பாடல்களில் ஒரே இடத்தில் மட்டும் கையாளுகிறார் வில்லிப்புத்தூரார் தக்க முறையில்,

வியக்கிறோம்! வில்லிப்புத்தூராரைப் போற்றுகிறோம்!!

வாழ்க தமிழ்! வெல்க பாரதம்!!

****

அது சரி, இது ஒரு புறம் இருக்கட்டும்,

1961ஆம் ஆண்டு வெளி வந்த படம் தாயில்லா பிள்ளை.

கே.வி.மஹாதேவன் இசை அமைத்த படம்.

கண்ணதாசன் எழுதியுள்ள பாடல் இதோ: (பாடல் நேரம் 3.25 நிமிடம்)

சின்ன சின்ன ஊரணியாம்

தேன் மணக்கும் சோலைகளாம்

ஊரணியின் கரையில் ஓங்கி நிற்கும் மாமரமாம்

ஊரணியின் கரையில் ஓங்கி நிற்கும் மாமரமாம் (சின்ன)

மாமரத்துக் கிளைதனிலே மாடப்புறா கூடுகளாம்

கூடுகளில் குடியிருக்கும் குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்

மாமரத்துக் கிளைதனிலே மாடப்புறா கூடுகளாம்

கூடுகளில் குடியிருக்கும் குஞ்சுகளாம் பிஞ்சுகளாம் (சின்ன)

சிறகு முளைக்குமுன்னே திசையறிந்து நடக்கு முன்னே

பறவையின் குஞ்சு ஒன்று பறந்ததையா கூடு விட்டு

கூடு விட்டு போன பிள்ளை குடி இருக்கும் இடம் தேடி

கூடு விட்டு போன பிள்ளை குடி இருக்கும் இடம் தேடி

ஓடி வந்த தாய்ப்பறவை ஊமையாகி நின்றதையா

தன் பிள்ளை என்று சொல்ல தாயாலும் முடியவில்லை

தாயென்று அறிந்து கொள்ள சேயாலும் கூடவில்லை

தன் பிள்ளை என்று சொல்ல தாயாலும் முடியவில்லை

தாயென்று அறிந்து கொள்ள சேயாலும் கூடவில்லை

உள்ளத்தில் இருக்குதையா உண்மை சொல்ல மயங்குதையா

பொல்லாத  தடையை எண்ணி புலம்புதையா கலங்குதையா

பொல்லாத  தடையை எண்ணி புலம்புதையா கலங்குதையா (சின்ன)

கவியரசு கண்ணதாசனின் இந்தப் பாடலில் வருகிறதே, அது என்ன அணி?!

***

இந்தப் பாடலைப் பற்றிய ஒரு சுவையான சம்பவமும் உண்டு. அதை எனது ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் நூலில் விரிவாக எழுதி இருக்கிறேன். சுருக்கம் இதோ:

ரசிகர் ஒருவர், “மாமரத்துக் கிளைதனில் மாடப்புறா எப்படிக் கூடு கட்டும்; மாடத்திலே கூடு கட்டுவதனால் தானே அதற்கு மாடப்புறா என்று பெயர் என்று ஒரு கேள்வியை எழுப்பி விட்டார்.

கவிஞர் திகைத்தார்.

ஆனால் இன்னொரு ரசிகர் இதற்கு அருமையான விளக்கத்தைத் தந்தார்.

“மாடத்திலே தான் மாடப்புறா கூடு கட்டும் என்பது உண்மை தான்; ஆனால் இந்தக் கதையில் பிள்ளை இருக்கும் கதையமைப்பைப் பாருங்கள்; அதற்காகத் தான், வேறு இடத்தில் இருக்கும் பிள்ளையை ‘ மாமரத்துக் கிளைதனில் மாடப்புறா கூடு என்று கவிஞர் பூடகமாகச் சொல்லி இருக்கிறார் என்றார் அவர்.

கவிஞர் ஒத்துக் கொண்டார். எல்லா ரசிகர்களும் மனம்  மகிழ்ந்தனர்!

tags – அபூர்வ அணி, ஒற்றைமணி,வில்லிப்புத்தூரார், கண்ணதாசன்

***

தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் கண்ணதாசன்! (Post No.6649)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com


Date: 19 JULY 2019


British Summer Time uploaded in London – 7-22 am

Post No. 6649


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழன்னையிடமிருந்து கண்ணதாசன் பெற்றது! (Post No.6591)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 24 June 2019


British Summer Time uploaded in London –  7-49 am

Post No. 6591


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

தொடர்பு மின்னஞ்சல் : snagarajans@gmail.com

***

கண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா’! (Post No.5273)

Written by S NAGARAJAN

Date: 31 JULY 2018

 

Time uploaded in London – 5-48 AM   (British Summer Time)

 

Post No. 5273

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கண்ணதாசனின்போனால் போகட்டும் போடா! (Post No.5273)

 

.நாகராஜன்

 

உலக வாழ்க்கை நிலையில்லை என்பதை வள்ளுவர் முதல் பட்டினத்தார் வரை பிரமாதமாகச் சொல்லி இருக்கிறார்கள்.   (12-9-2015இல் வெளியான எனது கட்டுரை எண்  2149 –‘டொண்டொண்டொடென்னும் பறை என்ற கட்டுரையில் இவர்கள் கூறியவை பற்றி நிறைய விவரங்கள் உள்ளன)

 

முக்கியமாக பட்டினத்தார், எவ்வளவு செல்வம் படைத்தவனாக இருந்தாலும் கூடகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சொல்லி இருக்கிறார்.

 

 

முழுப்பாடல் :

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்   தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?      காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

இத்தோடு நிற்கவில்லை அவர்.

 

செத்த பிணத்தைச் சுற்றி அழுது புலம்புபவர்கள் யார் தெரியுமா? இனி சாகப்போகும் பிணங்கள் என்கிறார்.

 

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி         முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு             செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள்     கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!

 

செத்தவரைச் சுற்றிச் சுற்றமும் நட்பும் அழுது புலம்புவது இயற்கை. ஆனால் அதை தத்துவ நோக்கில் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்பவர் எத்தனை பேர்?

*

 

 

இந்த வகையில் தான் கண்ணதாசனின் போனால் போகட்டும் போடா பாடல் மாறு படுகிறது.

இந்தப் பாடல் பிறந்த கதை பற்றி வேறுபட்ட கருத்துக்களைப் பார்க்க முடிகிறது.

*

 

மெல்லிசை மன்னர் விசுவநாதன் கண்ணதாசனின் அத்யந்த நண்பர். அவருடன் நெடுங்காலம் பழகியவர்.

அவர் கூறுவது இது:

 

ஒரு சமயம் ஒரு படத்திற்காகப் பாடல்ரிகார்டிங் செய்து கொண்டிருந்த போது, ஒரு துக்கமான செய்தி வந்தது. என் இசைக் குழுவிலிருந்த ஒருவரை நாய் கடித்திருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாய் விஷம் ஏறி  நாய் போலவே ஊளையிட்டு அன்றைய தினம் இறந்து விட்டார் என்பதே அந்த சோகச் செய்தி. அந்தப் பாடல் தான்பாலும் பழமும் படத்தில் வரும்போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!என்பது. அதிலிருந்து அடிக்கடி கவிஞரிடம் சொல்வது,அவச்சொல் வருகிற மாதிரிப் பாட்டே வேணாம்ணே! உங்க வாயிலிருந்து அந்த மாதிரி வார்த்தைகளே வரவேண்டாம்ணே!

*

 

 

கண்ணதாசனின் உடனிருந்த இராம.முத்தையா கூறும் செய்தியோ வேறு விதமானது. அவர் கூறுவது:-

ஒரு சமயம் கவிஞர்ஆஸ்டின்கார் ஒன்றை, 8000 ரூபாய்க்கு விலை பேசி, 1500 ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தார். அதை எடுத்து அன்றைய தினமே வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர்ப் பொதுக்கூட்டத்திற்குச் சென்றார். போகும் வழியில் டிரைவர் ஓட்டிய வழியில் கார் செல்லாமல், ஏதோ ஒரு பக்கம் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறது. உடனே கவிஞர் பயந்து போய், டிரைவரை நிறுத்தச் சொல்லி விட்டு, இறங்கி விபரம் கேட்டார்.சேஸிஸ் பெண்டாகி இருக்கிறது என்றார் டிரைவர்.

 

காரை லாரியில் கட்டி இழுத்துக் கொண்டு, சென்னைக்குப் போ என்று டிரைவரிடம் சொல்லி விட்டு, அங்கிருந்து ஒரு டாக்ஸியில் ஏறிக் கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வந்தார். மறுநாளே காரை வாங்கியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுஎன்றார் என்னிடம்.

 

நாம் கொடுத்த முன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்களே! என்றேன் நான்.

போனால் போகட்டும் போடா! நான் பிழைத்து வந்ததே பெரிய காரியம்! என்றார்.

 

அன்றைய தினம் எழுதிய பாடல் தான், பாலும் பழமும் என்ற படத்தில் வருகிற போனால் போகட்டும் போடா!

அன்று மாலை என்னிடம் காரில் போன பணத்தை (1500 ரூபாய்) பாட்டு எழுதிச் சம்பாதித்து விட்டேன் என்று சொன்னார்.

 

இப்படி ஏற்படுகிற ஒவ்வொரு நிகழ்ச்சியும், சூழ்நிலையும் கவிஞருக்குப் பாடலுக்குக் கருத்தாக வந்தமையும்.

 

*

இனி கவிஞரின் பாடலை முழுதுமாகப் பார்ப்போம்:

 

போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

ஓஹோஹோஓஹோஹோ


வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது; இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா!

ஓஹோஹோ ஓஹோஹோ

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்

இதற்கொரு மருத்துவம் கண்டேனா?

இருந்தால் அவளைத் தன்னந் தனியே

எரியும் நெருப்பில் விடுவேனா?

நமக்கும் மேலே ஒருவனடாஅவன்

நாலும் தெரிந்த தலைவனடா! –தினம்

நாடகமாடும் கலைஞனடா!

போனால் போகட்டும் போடா!

 

மிக அருமையான வரிகள்! பட்டினத்தார் இனி சாம் பிணங்கள் அழுவது போல என்று சொன்னாரே அது போல, கண்ணதாசன் அழவில்லை.

 

போனால் போகட்டும் போடா என்கிறார்இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா?கூக்குரலாலே கிடைக்காது; இது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்தகோட்டையில் நுழைந்தால் திரும்பாது!


போனால் போகட்டும் போடா! என்கிறார். ஜனன மரணக் கணக்கை ஒரே பாராவில் தந்து விடுகிறார். வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும் ஜனனம் என்பது வரவாகும்; அதில் மரணம் என்பது செலவாகும்அவ்வளவு தான்! போனால் போகட்டும் போடா!!

பாட்டில் வரும் தலைவன் டாக்டர். அவனால் உயிரை போகாமல் இருப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா, தினம் நாடகமாடும் கலைஞனடா என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறான். இறை தத்துவம் இப்படி விளக்கப்படுகிறது!

 

அருமையான வரிகளில் பெரும் தத்துவத்தை அனாயாசமாக அள்ளித் தந்து விட்டார் கவிஞர்.

 

அந்த வகையில்  இந்தப் பாடல் புகழ் பெற்றதோடு அடிக்கடி அனைவரும் உபயோகப்படுத்தும் போனால் போகட்டும் போடா சொற்றொடரையும் கொண்டிருக்கிறது.

 

டி.எம்.சௌந்தரராஜன் குரலில் சிவாஜிகணேசனின் நடிப்பில் விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பீம்சிங் இயக்கத்தில் 1961ஆம் ஆண்டு வெளி வந்த பாடல்!

 

கண்ணதாசனின் வைர வரிகளால் அழியாது நிற்கிறது.

***

 

க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (Post No.4813)

Date: MARCH 14,  2018

 

 

Time uploaded in London-4-41 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4813

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்; ராஜாஜியின் தூண்டுதலால் உதித்தது கடைசிப் பக்கம்! -1

 

ச.நாகராஜன்

 

அர்த்தமுள்ள இந்துமதம் உருவானது ஒரு க்ராஸ் டாக்கினால் என்றால் ஆச்சரியமாயில்லை.

ஒரு நாள் கண்ணதாசன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இடையில் க்ராஸ் டாக் ஒன்று வந்தது. நண்பர் அப்புறம் பேசுகிறேன் என்று போனை வைத்து விட்டார்.

 

கண்ணதாசன் தொடர்ந்தார்: “யாருங்க நீங்க?”

“நான் தான் தினமணி கதிர் ஆசிரியர் சாவி பேசுகிறேன். நீங்க யாரு?”

“நான் தான் கண்ணதாசன் பேசறேன்.”

“நீங்கள்ளாம் நம்ம பத்திரிகையிலே எழுதுவீங்களா?” சாவி ஆதங்கத்துடன் பேசினார்.

 

“ஏன் எழுத மாட்டேன். எழுதறேனே!”

சாவி உற்சாகக் குரலில் உடனே சொன்னார்: “தலைப்பை மட்டும் சொல்லுங்கள். இந்த வாரமே அட்வர்டைஸ் பண்ணிடறேன்.
சற்றும் தயங்காமல் பதில் சொன்னார் கண்ண்தாசன் : “அர்த்தமுள்ள இந்து மதம்!”

இப்படி  உருவானது தான் அர்த்தமுள்ள் இந்துமதம்!

ஏறத்தாழ ஒரு மஞ்சள் பத்திரிகை ஆகி விட்ட தினமணி கதிர் பிழைத்தது. மக்கள் கண்ணதாசனின் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டனர்; களி கொண்டனர்!

 

அருகிலிருந்த கண்ணதாசனின் உதவியாளர் இராம. கண்ணப்பன் வியந்து போனார். தன்னைக் கேட்காமல் எந்தத் தலைப்பையும் சொல்லாத கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் என்று தலைப்பைச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

இந்தத் தலைப்பு எப்படித் தோன்றியது?

 

 

“சென்ற வருஷம் கற்பகாம்பாள் கோவில்ல நடந்த கவியரங்கத்தில் பாடின கவிதையில் இருக்குதடா இந்தத் தலைப்பு.” என்று கண்ணப்பனிடம் கூறிய கவிஞர் அந்தக் கவிதையைப் பாடினார்.

 

 

“காடுபொடி யாகநட மாடுசிவன் தேவியர்கள்

காவல்கொள் வந்த நாடு

காசிமுதல் கன்னிவரை காணுமிடம் அத்தனையும்

கன்னிவிசா லாட்சி வீடு

ஆடவரில் தேவியர்கள் பாதியெனும் தத்துவமும்

ஆக்கியவ ரென்று பாடு

ஆதிமுதல் அந்தம்வரை அர்த்தமுள்ள இந்துமதம்

ஆசையுடன் தந்த ஏடு!”

 

மறுநாள் காலை அலுவலகத்தில் அர்த்தமுள்ள இந்துமதம் ஆரம்பமானது.

தன் அனுபவத்தைக் குழைத்துப் புதுவிதமாக இந்து மதத்தை அவர் அறிமுகப்படுத்திய விதம் அனைவரது பாராட்டையும் பெற்றது.

பல தொகுதிகளாக மலர்ந்தது அர்த்தமுள்ள இந்து மதம்!

அர்த்தமுள்ள இந்து மதத்தைப் படித்த ராஜாஜி மலர்ந்தார்.

ஆனால் அவருக்குக் கோபம் வந்தது. கல்கி ஆசிரியரிடம் இப்படிப்பட்ட் அருமையான கட்டுரைகள் நமது பத்திரிகையில் அல்லவா வரவேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்”

கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் சற்று திகைத்துப் போனார்.

ஏனெனில் கண்ணதாசன் ராஜாஜியைக் கடுமையாகத் தாக்கி வந்த காலம் அது!

ஆனால் ராஜாஜி பெருந்தனமையாக கவிஞரைக் கல்கியில் எழுத ஊக்குவிக்கிறார்.

(அடுத்த கட்டுரையில் முடியும்)

 

 

ஆதாரம் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள அநுபவங்கள்

இராம கண்ணப்பன் வெளியீடு: கங்கை புத்தக நிலையம் தி.நகர். சென்னை – 17

***

 

அபிராமி அந்தாதி- கண்ணதாசன் விளக்கவுரை! (Post No.4732)

Date:12 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-21 am

 

WRITTEN by S Nagarajan

 

Post No. 4732

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

அருமையான அந்தாதி

அபிராமி அந்தாதியும் கண்ணதாசனின் விளக்கவுரையும்!

 

ச.நாகராஜன்

1

அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியை பல்லாயிரக் கணக்கானோர் தினமும் சொல்லி வழிபடுவது கண்கூடு.

தேர்ந்தெடுத்த தெய்வீ கச் சொற்களால் அன்னையைப் போற்றும் இந்த அந்தாதி நூறு பாடல்களைக் கொண்டது.

அபிராமி பட்டரை அன்னை ஆட்கொண்ட திருவிளையாடல் அனைவரும் அறிந்ததே!

சோழ நாட்டில் புகழ்பெற்ற தலமான திருக்கடையூரில்  அபிராமி பட்டர் என்னும் ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார்.

திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் குடிகொண்டுள்ள அன்னை அபிராமவல்லியை அவர் வழிபட்டு வந்தார்.

பித்தன் போன்ற அவரது உயரிய நிலையை ஏனையோரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது பெருமையை உலகினர் அறியச் செய்ய அன்னை திருவுளங் கொண்டாள்.

அந்தக் காலத்தில் முதலாம் சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்டு வந்தார். (கி.பி.1675-1728).

ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராடி விட்டு திருக்கடையூர் வந்த மன்னர் அபிராமி பட்டரை பித்தன் என்ற நிலையில் கண்டு, ‘இவர் யார்’ எனக் கேட்டார்.

‘இவர் ஒரு தேவி பக்தர்.பித்தர்’ என பதில் கிடைக்க அவர் அபிராமி பட்டரின் நிலையை அறிய வேண்டி, அவரிடம், “இன்று என்ன திதி?” என்று கேட்க அவரோ, ‘இன்று பௌர்ணமி’ என்றார்.

அந்தப் பதிலைக் கேட்ட அரசர் அங்கிருந்து சென்றார்.

தன் நிலைக்கு வந்த பட்டர் அரசன் வந்ததையும் தான் கூறியதையும் அறிந்து மனம் மிக நொந்தார்.

அம்பிகை முன் ஒரு குழியை வெட்டி அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளால் ஆன உறியைக் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டு, “அம்பிகை எனக்கு நேர்ந்த இந்தப் பழியை நீக்கி அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு அபிராமி அந்தாதியைப் பாடலானார்.

ஒரு பாடலுக்கு ஒரு கயிறு வீதம் அறுத்துக் கொண்டே வந்த அவர் 79ஆம் பாடலைப் பாடத் தொடங்கினார்.

‘விழிக்கே அருளுண்டு’ என்ற பாடலைப் பாடத் தொடங்கியவுடன் மனமிரங்கிய அன்னை அபிராமி அவருக்குக் காட்சி அளித்து தன் தாடங்கத்தை வானில் காட்ட அது ஜொலித்து பௌர்ணமி நிலவெனக் காட்சி அளித்தது.

நடந்ததை அறிந்த மன்னர் பட்டரின் பெருமையை உணர்ந்து அவரைப் போற்றினார்.

‘உதிக்கின்ற’ என்று ஆரம்பித்த அந்தாதி அதே வார்த்தையான ‘உதிக்கின்ற’ என்ற வார்த்தையுடன் முடிவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

 

2

வழிவழியாக அன்பர்கள் இந்த அந்தாதியை ஓதி அன்னையின் அருளைப் பெற்று வருகின்றனர்.

இந்த அந்தாதிக்குக் கண்ணதாசன் ஒரு மிக எளிய உரையை இனிய தமிழில் வழங்கியுள்ளார்.

சில பாடல்களையும் அவரது உரையையும் கீழே பார்க்கலாம்:

பாடல் 1

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்

பாடல் 7

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.

தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!

பாடல்கள் 10,11,12,13

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். – எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்துநான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.

என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!

பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?

உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.

 

 

பாடல் 24

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.

பாடல் 28

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.

தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.

 

 

பாடல் 36

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.

குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.

பாடல் 37

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!

 

பாடல் 56

 ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.

 

பாடல் 61

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.–
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.

தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!

 

பாடல் 69

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,

ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.

பாடல் 79

விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?

அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).

 

பாடல் 86

மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டுகதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.

பாடல் 87

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,–விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.

, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)

பாடல் 94

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.

அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.

 

நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்

3

அமிர்தமாக வர்ஷிக்கும் அபிராமி அந்தாதியில் 18 பாடல்களைப் பார்த்தோம்.

அதற்கு அருமையான உரையை அன்னையின் அருளால் கண்ணதாசன் தந்த பாங்கினையும் மேலே பார்த்தோம்.

நூறு பாடல்களுக்குமான அவரது உரையைப் படிக்கும் போது சிந்தை தெளிவுடன் பக்தி மேலோங்கும் என்பதில் ஐயமில்லை.

 

முழு நூலையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள விரும்பும் அன்பர்கள் www.projectmadurai.org  என்ற இணையதளத்தை நாடலாம்.

இந்தத் தளம் தமிழுக்கும் தெய்வீகத்திற்கும் ஆற்றி வரும் தொண்டு மிகவும் போற்றற்குரியது.

நன்றி: www.projectmadurai.org   

***

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை (Post No.4643)

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London- 6–37 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4643

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை

.நாகராஜன்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

1

கவியரசு கண்ணதாசன் சம்ஸ்கிருதத்தில் கவிதை எழுதி இருக்கிறாரா? முதலில் அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?

கேள்விகள் நியாயமானவை தான்.

ஆரம்ப காலத்தில் சேரக் கூடாதாரோடு சேர்ந்திருந்த காலத்தில் அவர் எழுதிய் கவிதை இது:

 

“செத்த மொழி பெற்ற மகன், தமிழைப் பார்த்துத்

திணறுகிறான்! மயங்குகிறான்! வேற்று நாட்டுப்

பொத்தல்களைத் தமிழாக்கி விற்ப தற்குப்

புறப்பட்டோன், ஆதலினால் புலம்பு கின்றான்!

அத்தியிலே பூத்தம்லர் அனைய நாட்டில்

அழகுமொழி படைத்த மறைமலையைக் கண்டால்

சித்திரமும் தமிழ் பேசும்; திறமில் லாத

சிறுநரிதான் ஊளையிடும்; இட்டான் ஊளை!

வேரெடுத்த செம்மைமொழி தமிழல் லாமல்

வேறெது தான் தமிழாகும்! அத்திம் பேரும்

பூரிகளும் ஸ்வாமிகளும் ஆச்சார் யாளும்

பூரணமும் ஸ்வாகதமும் தமிழா?”

  • தமிழ் போலும் – மொழி இல்லை என்ற கவிதையில்

ஆனால் பக்குவப்பட்ட நிலையில், அவர் கூறியது:

“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வ்டமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழிபெயர்ப்பாளனாகலாம்.”

 

 

2

“தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது அரசியல்; தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா”

இதை விடச் சிறப்பாக இந்த இரு மொழிகளையும் பற்றி வேறு யார் தான் கூற முடியும்? என்னதான் கூற முடியும்!

இதைச் சொல்லி விட்டுச் சும்மா இருக்கவில்லை.

அவர் கூறுகிறார்:

“வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். இரண்டு ஆண்டுகளாக நான் வடமொழியில் பயிற்சி பெற்று வருகிறேன்.”

இந்தப் பயிற்சிக்கு அவரது உற்ற நண்பர் ஒருவர் – ஆல் இந்தியா ரேடியோ அதிகாரி ஒருவர் – துணை புரிந்தார்.

இந்த வட மொழிப் பயிற்சி தமிழுக்குப் பெரிய நலனை அளித்தது.

 

3

ஆம், என்ன நலன்? சில பல நல்ல நூல்கள் வடமொழியிலிருந்து அவர்  மூலமாக தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழுக்குக் கிடைத்தது.

அவரது வார்த்தைகளில் அதைப் பார்ப்போம்;

“வடமொழியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக இப்போது பகவத்கீதை விளக்கவுரையைக் கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளேன்.

 

 

பஜகோவிந்தத்தில் வரும் முப்பத்தோரு பாடல்களையும் விவேக சிந்தாமனியைப் போல சந்தக் கவிகளாக்கியுள்ளேன்.”

மிக அருமையான மொழி பெயர்ப்புக் கவிதைகளாக இவை அமைந்துள்ளதைப் படித்துப் பார்த்து உணரலாம்.

இது மட்டுமல்ல, கீத கோவிந்தத்தில் மனதைப் பறி கொடுத்த அவர் அதை, “கோபியர் கொஞ்சும் ரமணன்” என்று தமிழில் தந்தார்.

 

 

ஜெயதேவரின் அஷ்டபதி பற்றி அவர் தனது கவிதையில் கூறும் போது சொல்வது இது:

கண்ணனின் லீலையை அஷ்டபதி – என்னும்

காவிய மாக்கிய ஜெயதேவன்

எண்ணி உரைத்ததை நானுரைத்தேன் – அதில்

இன்னும் பலப்பல போதையுண்டு!

 

கோலமிகும் இந்தப் பாடலினை – கீத

கோவிந்தம் என்றும் உரைப்பார்கள்

ஞால மொழிகளில் வந்ததிது – கண்ணன்

ரஸ லீலாவினைச் சொல்வதிது!

 

மொத்தம் இருபத்துநான்கு வண்ணம் – அது

மோகச்சுவை ரஸம் ஊறும் கிண்ணம்

அத்தனையில் இங்கு ஒன்பதையே – நான்

அள்ளிக் கொடுத்தனன் என் மொழியில்

 

போஜன் மகன் ஜெய தேவனவன் – இங்கு

போதனை செய்தது ஞான ரஸம்!

ராஜன் பராசரர் வம்சமவன் – அந்த

ஞானியின் பாடலைப் பாடுகவே”

24 அஷ்டபதியில் ஒன்பதைத் தமிழாக்கினார் கவிஞர்.

 

 

4

வடமொழியின் சுவையையும் அருமையையும் உணர்ந்த கவிஞர் அதில் தோய்ந்தே போனார்.

அதன் விளைவு தான் அவர் எழுதிய சம்ஸ்கிருதக் கவிதை.

“இதோ எனக்குத் தெரிந்த வடமொழியில் நான் எழுதிய ஒரு பாடல்:” என்று கூறி விட்டு அவர் தரும் அற்புத சம்ஸ்கிருதக் கவிதை இது தான்:-

 

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்

முரளி மோகனம் சுவாமி அசுர மர்த்தனம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்

நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

ஸத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்

சர்வ ரக்ஷகம் சுவாமி தர்ம தத்துவம்

ராத பந்தனம் சுவாமி ராஸ லீலகம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

எப்படி இருக்கிறது சம்ஸ்கிருதக் கவிஞர் கண்ணதாசனின் சம்ஸ்கிருத கவிதை!

 

 

5

என்ன ஒரு வருத்தம் நமக்கெல்லாம்..? நமது கவியரசு இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளாவது கூட வாழ்ந்திருக்கலாம்.

“ஆண்டவன் எனக்கு இன்னும் பத்தாண்டுகள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பானேயானால், ஆங்கிலத்தில் ஒரு சிறு காவியமும், வடமொழியில் ஒரு சிறு காவியமும் எழுதுவேன்.” என்றார் அவர்.

ஆனால் கொடுத்து வைக்கவில்லை – தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும்.

என்றாலும் கூட இறைவன் அருளால் அவர் தமிழில் எழுதியுள்ள ஆன்மீக இந்துக் களஞ்சியம் நிச்சயம் ஒரு அற்புத ஞான  ஓவியமே.

அதைப் படித்து அவரது மேன்மையைத் தெரிந்து கொள்ளலாம்; அப்போது இந்து மதச் சிறப்பும் தானாகவே தெரிய வரும்.

 

 

 

ஆதாரம் :

  1. முதல் பக்கம் – கல்கியில் வந்த கட்டுரை – தலைப்பு “மொழி வெறுப்பு – விழி இழப்பு”

2.கோபியர் கொஞ்சும் ரமணன் – கண்ணதாசன் மாத இதழ் ஜனவரி 1978

3.கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

கண்ணதாசனின் நல்- எண்ணதாசன் நான்! (Post No.4622)

Date: 16 JANUARY 2018

 

Time uploaded in London- 5–59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4622

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

இணையிலா இந்து மதம்!

கண்ணதாசனின் நல்- எண்ணதாசன் நான்!

 

ச.நாகராஜன்

 

1

சென்ற நூற்றாண்டின் பெருமை தரும் கவிஞர்களுள் ஒருவர் கண்ணதாசன்.

 

அவருடைய நல்லெண்ணதாசன் நான்.

நல் – எண்ணதாசன் நான்!

 

அவர் வாழ்க்கையில் அனைத்தையும் கண்டவர்.

கடவுள் இல்லை என்ற கயவர் கழகத்திலும் இருந்தார்.

கடவுள் அனுபவத்தைத் தானே நேரிலும் உணர்ந்தார்.

இதை நான் சொல்லவில்லை.

 

அவரே சொல்கிறார் இப்படி ‘சுய சரிதம்’ என்னும் கவிதையில்!

இந்தக் குட்டிச் சுய சரிதம் ஏழு கண்ணிகள் கொண்டது.

கண்ணதாசனின் நல்லெண்ணதாசர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று:

 

இதோ கவிதை:

ஆசை வெட்கம் அச்சம் துன்பம்

பாசம் பற்று பதவி உதவிக்

காதல் கடமை கவனம் மறதி

ஈதல் பெறுதல் ஏற்றம் இறக்கம்

எத்தனை எத்தனை படிகளில் ஏறி

இத்தனை வயதை எய்தி விட்டேன் நான்.

 

இது முதல் கண்ணி. இதை அவர் 1978இல் கல்கியில் ‘கண்ணதாசன் பக்கத்’தில் ஒரு வாரம் எழுதினார். அப்போது அவருக்கு வயது 48 தான்!

 

 

மேலே பார்ப்போம்:

கடவுளை ஒருநால் கல்லென் றவனும்

கல்லை ஒரு நாள் கடவுளென் றவனும்

உண்டென் றதனை இல்லையென் றவனும்

இல்லையென் றதனை உண்டென் றவனும்

உயர்பெரும் தரணியில் ஒருவன் ஒருவனே

நானே என்பதை நன்றாய் அறிவேன்.

 

 

எப்படிப்பட்ட ஒரு சுய விமரிசனம் பாருங்கள்.

சத்திய விமரிசனம்! சத்திய சோதனையில் விளைந்ததோ!

 

அவர் பட்ட இன்ப துன்பங்களைப் பற்றிச் சொல்கிறார் மூன்றாவது கண்ணியில், இப்படி:

 

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்.

பார்த்தது கோடி பட்டது கோடி

சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்!

 

இந்த அனுபவம் உதிர்த்த மொழிகள் ஆயிரம். அவை நல்லெண்ணத்தில் தோன்றியவை.

அதனால் தான் அந்த நல்லெண்ணதாசன் ஆகி விட்டேன் நான்!

 

கடைசிக் கண்ணியில் அவர் கூறுகிறார்:

காலம் வருமுன் காலனும் வருமுன்

காணும் உறவினர் கதறியே அழுமுன்

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள்

எழுதி எழுதி என்னையான் ரசிப்பேன்

யானே யானாய் எனக்குள் அடங்கினேன்

வானும் மண்ணும்என் வாழ்வைஎன் செய்யும்?

 

 

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள் எழுதி எழுதிக் குவித்தார் இல்லையா! அவை அற்புதமானவை. அதனால் தான் அவரது நல்லெண்ணதாசன் நான்.

அவரது நல் எண்ணங்களைப் பரப்பும் தாசர்கள் கோடி கோடியாகப் பெருக வேண்டும்!]

2

அவரது அற்புதமான எழுத்துக்களில் அவர் ‘ நான் ஏன் ஒரு ஹிந்து’ என்பதை விளக்குகிறார்.

அது அனைத்து ஹிந்து மக்களும் படிக்க வேண்டிய ஒன்று.

அதை அப்படியே தருகிறேன்.

அதைப் படிக்கும் போது நீங்களும் கண்ணதாசனின் நல்லெண்ணதாசன் ஆகி விடுவீர்கள் – இதுவரை ஆகாமல் இருந்தால்.

கீழே இருப்பது அவரது சொற்கள்!

 

 

3

நான் ஒரு ஹிந்து

கவிஞர் கண்ணதாசன்

நான் ஒரு ஹிந்து.

 

ஹிந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

 

நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன். ஆனால் ஹிந்துவாகவே வாழ விரும்புகிறேன்.

 

 

நான் கடவுளை நம்புகிறேன். அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன். அந்தக் கடவுளைக் கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.

 

ஆன்மா இறைவனோடு ஒன்றி விடும் போது அமைதி ஹிருதயத்தை ஆட்சி செய்கிறது.

 

நாணயம் சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

 

நேரான வாழ்க்கையை ஹிருதயம் அவாவுகிறது.

 

பாவங்களைக் கண்டு அஞ்சுகிறது.

 

குறிப்பாக, ஒரு ஹிந்துவுக்குத் தன் அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.

 

கடைசி நாத்திகனையும் அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.

 

 

‘என்னைத் திட்டுகிறவன் தான் அடிக்கடி என்னை நினைத்துக் கொள்கிறான். எனவே அவன் தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.

 

ஹிந்து மதத்தைப் போல் சகிப்புத் தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எங்கும் இல்லை.

நீ பிள்ளையாரை உடைக்கலாம். பெருமாள் நாமத்தை அழிக்கலாம்.மதச் சின்னங்களைக் கேலி செய்யலாம். எதை செய்தாலும் ஹிந்து சகித்துக் கொள்ளுகிறான்.

 

 

ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறப்பது போல் எண்ணி கொண்டு பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாத்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்தவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்?

 

கடந்த நாற்பது வருடங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லையே!

 

பாவப்பட்ட ஹிந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி அதை நம்புகிற அப்பாவிகளிடம் ரேட்டு வாங்கிச் சொத்து சேர்க்கும் ‘பெரிய’ மனிதர்களைத் தான் நான் பார்த்திருக்கிறேன்.

 

அவர்கள் பேசும் நாத்திக வாதம் அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல் வாழ்க்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.

 

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல, ஆரம்ப காலத்தில் இந்த நாத்திக வாதம் மிகவும் கவர்ச்சிகரமாகவே இருந்தது.

 

 

நடிகையின் ‘மேக்-அப்பை’க் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப் போல், அன்று இந்த வார்த்தை கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

 

அந்தக் கவர்ச்சி எனக்குக் குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே.

 

என்னை அடிமை கொண்ட கண்ணனும் ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமை கொண்டு, ஆன்மீக வெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.

 

 

அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறி விட்டது!

 

வேண்டுமானால் ‘பணத்தறிவில்’ முன்னேறி விட்டது என்று சொல்லலாம்.

 

உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர வென்றதாக இல்லை.

 

இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டிருக்கிறான்.

 

இந்த நாலரைக் கோடி மக்களில் நீங்கள் சலித்து எடுத்தாலும் நாலாயிரம் நாத்திகர்களைக் கூடக் காண முடியாது.

 

 

பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும் திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சித்தம் பொய் சொன்னாலும் வேதம் பொய் சொல்வதில்லை. சித்தாந்தம் தவறக்கூடும்; வேதாந்தம் தவறாது.

 

வேதாந்தம் பரசுராமர் காலத்திலும் ஒன்று தான், ஆதி சங்கரர் காலத்திலும் ஒன்று தான், நமது காலத்திலும் ஒன்று தான்.

 

நமது மூதாதையர்கள் மாபெரும் மேதைகள். தெய்வ நம்பிக்கையின் மீதே சகல நியாயங்களையும் நிர்மாணம் செய்தார்கள்.

 

 

மனிதர்களின் எழுத்துக்களும் கருத்துக்களும் தோற்றுப் போன இடத்தில் தெய்வ நியாயமே தீபம் போல் எரிகிறது.

 

வெள்ளைக்காரனை நாம் விரட்டியது பாதி தூரம் தான். மீதி தூரம் அவனை விரட்டியது தெய்வமே.

 

அன்று பாரதப் போரை முன்னின்று நடத்திய கண்ணன், நமது பாரதப் போரையும் மறைந்து நின்று நடத்தினான்.

 

 

தேர்தல் வைப்பதும் வைக்காததும் ஒருவர் கையிலேயே இருந்த போது அவர் தேர்தலை நடத்துவானேன்? தோற்றும் போய் ஒதுங்குவானேன்?

 

மனிதன் வெளியில் நின்று விளையாடுகிறான். தெய்வம் மறைந்து நின்று விளையாடுகிறது! தெய்வத்தை நம்புகிறவன் தோற்றாலும் ஜெயிக்கிறான். நம்பாதவன் ஜெயித்தாலும் தோற்கிறான்.

 

 

இயக்கத்தின் கர்த்தா இறைவன். கருவி மனிதன்.

 

என் வீடு, என் வாசல், என் தோட்டம், எனக்கு வரும் கூட்டம், எனக்கு வரும் ஓட்டு, நான் அமரும் பதவி என்றெல்லாம் சிந்திப்பவனும் பேசுபவனும் மடையர்கள்!

 

நீ ஏறுகிறாய் என்றால் ‘இறைவன் ஏற்றி விட்டுப் பார்க்கிறான்’ என்று பொருள். இறங்குகிறாய் என்றால் ‘சிந்திக்க வைக்கிறான்’ என்று பொருள்.

 

உனது பெருமை கடவுளின் மகிமை. உனது சிறுமை கடவுள் உனக்குத் தரும் அடக்கம்.

 

 

நோக்கம் உன்னுடையது. ஆக்கம் அவனுடையது.

 

பகவான் சொன்னபடி, ‘மனிதன் மரத்திலிருந்து விழும் இலை. அது தண்ணீரில் விழுந்தால் கொஞ்ச நாட்கள் மிதக்கும். மாலையில் கட்டப்பட்டால் சாமியின் கழுத்துக்குப் போகும். அதிலும் சிக்காமல் இருந்தால் காற்றடிக்கும் திசையெல்லாம் அலையும். நெருப்பில் விழுந்தால் சாம்பலாகும்.’

 

‘எதிலே விழுவது’ என்பது இலையின் விருப்பத்தைப் பொறுத்ததல்ல.

 

 

ராதையின் கற்புக்குக் கண்ணனே சாட்சி. சீதையின் கற்புக்கு அக்கினியே சாட்சி. மானிட ஜாதி முழுமைக்கும் இறைவனே சாட்சி. சாட்சி இல்லாதவன் வழக்கு வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை

4

படித்து முடித்து விட்டீர்களா?

இந்த நல்- எண்ணங்களுக்கு கர்த்தா கண்ணதாசன். கண்ணதாசனின் நல்லெண்ண தாசன் நான்.

நீங்களும் தான் என்பது எனக்குப் புரிகிறது.

அடுத்த கட்டுரை: கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை!

விரைவில் மலரும்.

 

***

 

கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power)- Post No.4551

Date: 27  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-39 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4551

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவியல் ஆற்றல்!

ச.நாகராஜன்

 

1

கவியரசு கண்ணதாசனுக்கு ஈ.எஸ்.பி. பவரா? இது என்ன புது தகவல் என்று வியக்க வேண்டாம்.

அதீத உளவியல் ஆற்றல் என்பது சில மனங்களுக்குக் கை கூடும்.

அந்த ஆற்றல் இருப்பதும் கூட சிலருக்குத் தெரிய வரும்.

சரி, கண்ணதாசன் தன்னைப் பற்றி இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

2

 

ஞான ஸ்நானம் என்ற கட்டுரையில் ஒரு ப்குதி!

 

கண்ணதாசன் சொற்களை அப்படியே கீழே தருகிறோம்:

 

தோன்றாமல் தோன்றும் சுடரொளி ஒன்று அடிக்கடி என்னைக் காப்பாற்றுகிறது. அமைதியைத் தருகிறது.

 

என்ன நடக்கப் போகிறது என்பது கனவிலே வருகிறது.

 

பத்து நாட்களுக்கு முன்பு பெங்களூர் மண்டிப்பேட்டையில் ஒரு ஹோட்டலைத் திறந்து வைக்கச் சென்றேன்.

 

விமானம் போய் இறங்கியபோது மாலை மணி நான்கு. படுத்துத தூங்கிவிட்டேன்.

ஒரு கனவு. அற்புதமான கனவு.

கண்ணன் என் கனவிலே வந்தான். ஒரு சிறு குடிசையில் அவனுக்கு நான் அமுது படைத்தேன். அவன் என்னோடு பேசிக் கொண்டிருந்தான். என்னென்னவோ அவனிடம் பேசினேன். அவன் சொன்னது  மட்டும் நினைவிருக்கிறது. “எல்லாம் சரியாக நடக்கும், கவலைப்படாதே.”

 

மறுநாளைக்கு மறுநாள் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு.

ஒரு பெருமாள் கோயில். ஒரு பட்டாச்சாரியார் எனக்குக் குங்குமம் வழங்குகிறார்.

இவை என்ன கனவுகள்?

நல்லவர்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே வரும் கனவுகள். எனக்கும் அவை ஏன் வந்தன? பல்லாயிரம் ஆண்டுகளாக ஞானம் பிறந்த கதை இது தான்.

சிறைச்சாலை தீயவர்களுக்கு மட்டுமே.அறச்சாலை நல்லவர்களுக்கு மட்டுமே.

பரம்பொருளைப் பற்றிய சிந்தனை வளர வளர, கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடிகிறது..நல்லவனாக இருப்பது சுல்பமாகிறது.

 

இறைவன் கவனித்துக் கொண்டே இருக்கிறான். அளக்க வேண்டிய நேரத்தில் அளக்கிறான். இந்து தர்மம் பொய்த்ததே இல்லை.

அது சொல்லும் ஒவ்வொன்றும் நூற்றுக்கு நூறு உண்மை.

நான் ஓர் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

 

ஒரு நல்ல இந்து மற்றவர்களுக்குத் தீமை செய்ய மாட்டான்.

நான் யாருக்கும் தீங்கிழைத்ததில்லை.

ஒவ்வொரு நாளும் எனக்குத் தீங்கிழைத்த பாவிகளை என் கண்ணா, நீ மன்னித்து விடு.

*

 

1975ஆம் ஆண்டு கல்கி வார இதழில் கடைசிப் பக்கம் என்ற ஒரு தொடரை கண்ணதாசன் வழங்கி வந்தார்.

அருமையான தொடர் இது. இதில் தான் மேற்கண்டவாறு என்ன நடக்கப் போகிறது என்பது என் கனவிலே வருகிற்து என்று அவரே சொல்லியுள்ளார். (துரதிர்ஷ்டவசமாக் எந்த தேதியிட்ட இதழ் என்பதை நான் எனது தொகுப்பில் குறித்து வைக்க மறந்து விட்டேன்.)

 

விவரங்களை முழுதுமாக அவர் தரவில்லை. அது ஏன் என்பதும் புரிகிறது. பாவிகள் ஒவ்வொரு நாளும் இழைக்கும் தீங்குகளைப்  பட்டியல் இட முடியுமா? அதைச் சுட்டிக்காட்டும் இறைவனின் கருணையையும் தான் எழுதிக் கொண்டே இருக்க முடியுமா?

நமக்குப் புரிவது கண்ணதாசனுக்கு அபூர்வமான ஈ.எஸ்.பி. பவர் இருந்தது என்பதைத் தான்.

ஈ.எஸ்.பி பவர் என்றால் என்ன?

Extra Sensroy perception  என்பதன் சுருக்கமே  E.S.P. அதாவது புலன் கடந்த அறிவு. அதீத உளவியல் ஆற்றல் என்று இதைச் சொல்கிறோம்.

*

3

இனி இளையராஜா கூறும் ஒரு சம்பவத்தை அவர் சொற்களில் அப்படியே தருகிறேன்.

‘கவிஞர் என் கனவில் வந்தார்; பாடல் எழுதினார்’ என்ற கட்டுரையில் ஒரு பாரா இது:

கவிஞர் சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர். அவருடைய வாக்குப் பொய்த்ததே இல்லை. அதற்கு எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘பாட மாட்டேன்!’ என்ற அடிகளைப் பாடியதால் தான், கே.ஆர். ராமசாமி அந்த்ப் பாடலுக்கப்புறம் பாடவே முடியவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததே.

**

4

கவிஞருடன் கூடவே இருந்த இராம. முத்தையா ‘தெய்வத்தை ந்ம்பி ‘ என்ற கட்டுரையில் கூறும் ஒரு வரி இது”

அவர் அடிக்கடி சொல்லிக் கொள்வது- “எனக்குள் ஏதோ ஒரு சக்தி  இருக்கிறது. அந்த சக்தியால் தான் நான் எதையும் செய்ய முடிகிறது!” என்று.

**

5

மேலே கூறியவற்றால், கவிஞருக்கு நடக்கப் போகும் பல நிகழ்ச்சிகள் பூடகமாகத் தெரிந்தன் என்றும். ஒரு அளப்பரிய சக்தி உதவியுடன் அவர் இயங்கினார் என்றும், அவரது கவிதா வாக்கு பொய்க்காமல் இருந்தது என்றும் அறிய முடிகிறது.

இன்னும் சில நிகழ்ச்சிகள் உள்ளன. அவை கவிஞரின் கவிதா சக்தியின் மேன்மையையும், அவரது அதீத உளவிய்ல் ஆற்றலையும் விளக்குபவை.

அவற்றை இன்னொரு கட்டுரையில் காண்போம்.

****

 

 

மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்!

k quote3

Compiled by S NAGARAJAN

Article No.1909; Dated 4 June 2015.

Uploaded at London time: 6-22 am

By ச.நாகராஜன

 

மூன்று சொல் முத்துக்கள்

தமிழ் நூல்களில் மூன்று சொற்களில் அமைந்துள்ள சொல்லோவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு சொற்றொடரும் ஆழ்ந்த கருத்து. இலக்கிய அழகு, இன்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பல அம்சங்களை இனிதே தரும்.

கண்ணதாசனின் பாடல்களில் மூன்று சொல் முத்துக்களை எடுங்கள் என்றால் சுலபமாக அப்பாடல்களில் உளத்தைக் கொடுத்தோர் முன்னூறு பாடல்களை மூச்சு விடாமல் சொல்லி விடுவர்.

மொத்தப் பாடல்களையும் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் வியப்பு தான் மேலிடுகிறது. நாம் வியக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், கண்ணதாசனே கண்ணதாசனின் பாடல்களை கடும் விமரிசனத்திற்காகப் பார்த்தாலும் ஆச்சரியம் தான் படுகிறார். (கட்டுரையின் கடைசி பாராவைக் காண்க). அப்படி ஒரு பரந்த களத்தின் அடிப்படையில் அவரது பாடல்கள் எழுந்துள்ளன.

குறளில் மூன்று சொல் முத்துக்கள்

முதலில் குறளில் மூன்று சொல் முத்துக்களைப் பார்ப்போம்.(முழுவதையும் அல்ல, இடம் கருதி சிலவற்றைத் தான்!

செயற்கரிய செய்வார் பெரியர்     குறள்  26

அந்தணர் என்போர் அறவோர்      குறள்  30

அன்றறிவாம் என்னாது அறம்செய்க  குறள்  36

அறத்தான் வருவதே இன்பம்       குறள்  39

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை   குறள்  49

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?      குறள்  54

தம்பொருள் என்பதம் மக்கள்       குறள்  63

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்   குறள்  71

அன்பின் வழியது உயிர்நிலை    குறள்  80

மறவற்க மாசற்றார் கேண்மை    குறள்  106

நன்றி மறப்பது நன்றன்று     குறள்  108

அடக்கம் அமரருள் உய்க்கும்   குறள்  121

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்   குறள்  125

யாகாவார் ஆயினும் நாகாக்க   குறள்  127

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை   குறள்  439

அப்பப்பா, ஆழ்ந்த கருத்து மூன்றே சொற்களில்!

k quote1

மஹாகவி பாரதியாரின் மூன்று சொல் முத்துக்கள்

அடுத்து மகாகவி பாரதியாரின் கவிதைகளில் மிகச் சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

அன்பென்று கொட்டு முரசே!

பெரிதினும் பெரிது கேள்

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே

வீணையடி நீ எனக்கு

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!

ஆசை முகம் மறந்துபோச்சே!

மனதில் உறுதி வேண்டும்

பயமெனும் பேய்தனை அடித்தோம்

இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்

 

இந்த வகையில் கவியரசரின் கவிதைப் பூங்காவில் நுழைவோம்; கண்ணுக்கினிய சில நல்ல மலர்களைப் பார்ப்போம்.

செந்தமிழா எழுந்து வாராயோ – உன்

சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ

அன்பு நெறியிலே அரசாள – இந்த

அகிலமெல்லாம் தமிழர் உறவாட

துன்பங்கள் யாவும் பறந்தோட

தூய மனங்கொண்டு கவிபாட                 படம்: மதுரை வீரன்

தமிழனின் தாய்மொழியைப் பாராட்டி அகில உலக தமிழரை ஒன்று கூட்டி தூய மனம் கொண்டு கவி பாடி துன்பங்கள் யாவும் பறந்தோடச் செய்வோம் என்ற கற்பனையில் உயர்ந்த சிந்தனையைப் பார்க்கலாம்!

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

தொடர்ந்து பேசும் கிளியொன்று

பேச மறந்ததேன் இன்று                       படம்: காத்திருந்த கண்கள்

அல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே, துள்ளித் திரிந்த பெண்ணொன்று இன்று துயில் கொண்டதேன்? கவிஞர் கேட்கிறார். அவரே பதிலும் சொல்கிறார். அன்னை தந்த சீதனமோ, என்னை வெல்லும் நாடகமோ என்று!

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய்மொழி

கலக்கம் எனது காவியம்  –  நான்

கண்ணீர் வரைந்த ஓவியம்                      படம்: குங்குமம்

Kannadasanlyric2PoonaalPohatumPoda_000

சோகம் ஒலிக்கும் குரலில் கலக்கம் வந்த காரணத்தையும் கவிஞர் கூறி விடுகிறார். நானே எனக்குப் பகையானேன் –என் நாடகத்தில் நான் திரையானேன் என்று.

ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுஆத்மன: (உனக்கு நீயே நண்பன்; உனக்கு நீயே பகைவன் என்ற கீதையின் கருத்து சாதாரணமாக இங்கு வந்து விழுவதைப் பார்க்கலாம்)

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா – இந்த

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

போனால் போகட்டும் போடா         படம்: பாலும் பழமும்

வாழ்க்கை கணக்கை சில வரிகளில் போட்டு வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில், மரணம் என்பது செலவாகும் என்று வரவு செலவு கணக்கை இவ்வளவு கச்சிதமாக மூன்று மூன்று சொல் அடுக்குகளில் காண முடிகிறதே! நமக்கும் மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த தலைவன், அவன் தான் அனைத்தையும் இரவல் தந்தவன், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?

கவிஞரின் ஆணித்தரமான கேள்விகள் எவ்வளவு சிந்தனையைக் கிளப்பி விடுகிறது?

தொட்டால் சுடுவது நெருப்பாகும்

தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!

தெரிந்தே கெடுப்பது பகையாகும்

தெரியாமல் கெடுப்பது உறவாகும்

படம்: படித்தால் மட்டும் போதுமா – (அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில்)

எப்படி இருக்கிறது புது வியாக்கியானம்?

பிறக்கும் போதும் அழுகின்றான்

இறக்கும் போதும் அழுகின்றான்

ஒருநாளேனும் கவலை யில்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே                படம்: கவலை இல்லாத மனிதன்

kanna2

தத்துவப் பாடல்களின் மன்னன் என்பதை நிரூபிக்க எத்தனை பாடல்கள் வேண்டும்?

உள்ளம் என்பது ஆமை – அதில்

உண்மை என்பது ஊமை!

சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி!              படம்: படித்தால் மட்டும் போதுமா

எனக்கே வியப்பு ஏற்படும்!

தன் பாடல் தொகுதி இரண்டாவது பாகத்தின் முன்னுரையில்  3-9-1971 தேதியிட்டு கவியரசர் இப்படி எழுதுகிறார். அது ஒரு சுய விமரிசனம் தான்!

“”இந்தப் பாடல்களை எல்லாம் படித்துப் பார்க்கும் போது எனக்கே கூட வியப்பு ஏற்படும்…….

 

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் , உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும், அங்கே என் பாடலொன்று எதிரொலிக்கும்.”

உண்மை தானே! கண்ணதாசன் பாடல் இல்லாத வாழ்க்கை நிகழ்வுகளே இருக்காது தானே.

மூன்று சொற்களிலேயே முடிப்போம்!

கண்ணதாசன் பாடலின்றி இருக்காது!

                                     ***********