மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்!

k quote3

Compiled by S NAGARAJAN

Article No.1909; Dated 4 June 2015.

Uploaded at London time: 6-22 am

By ச.நாகராஜன

 

மூன்று சொல் முத்துக்கள்

தமிழ் நூல்களில் மூன்று சொற்களில் அமைந்துள்ள சொல்லோவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு சொற்றொடரும் ஆழ்ந்த கருத்து. இலக்கிய அழகு, இன்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பல அம்சங்களை இனிதே தரும்.

கண்ணதாசனின் பாடல்களில் மூன்று சொல் முத்துக்களை எடுங்கள் என்றால் சுலபமாக அப்பாடல்களில் உளத்தைக் கொடுத்தோர் முன்னூறு பாடல்களை மூச்சு விடாமல் சொல்லி விடுவர்.

மொத்தப் பாடல்களையும் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் வியப்பு தான் மேலிடுகிறது. நாம் வியக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், கண்ணதாசனே கண்ணதாசனின் பாடல்களை கடும் விமரிசனத்திற்காகப் பார்த்தாலும் ஆச்சரியம் தான் படுகிறார். (கட்டுரையின் கடைசி பாராவைக் காண்க). அப்படி ஒரு பரந்த களத்தின் அடிப்படையில் அவரது பாடல்கள் எழுந்துள்ளன.

குறளில் மூன்று சொல் முத்துக்கள்

முதலில் குறளில் மூன்று சொல் முத்துக்களைப் பார்ப்போம்.(முழுவதையும் அல்ல, இடம் கருதி சிலவற்றைத் தான்!

செயற்கரிய செய்வார் பெரியர்     குறள்  26

அந்தணர் என்போர் அறவோர்      குறள்  30

அன்றறிவாம் என்னாது அறம்செய்க  குறள்  36

அறத்தான் வருவதே இன்பம்       குறள்  39

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை   குறள்  49

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?      குறள்  54

தம்பொருள் என்பதம் மக்கள்       குறள்  63

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்   குறள்  71

அன்பின் வழியது உயிர்நிலை    குறள்  80

மறவற்க மாசற்றார் கேண்மை    குறள்  106

நன்றி மறப்பது நன்றன்று     குறள்  108

அடக்கம் அமரருள் உய்க்கும்   குறள்  121

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்   குறள்  125

யாகாவார் ஆயினும் நாகாக்க   குறள்  127

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை   குறள்  439

அப்பப்பா, ஆழ்ந்த கருத்து மூன்றே சொற்களில்!

k quote1

மஹாகவி பாரதியாரின் மூன்று சொல் முத்துக்கள்

அடுத்து மகாகவி பாரதியாரின் கவிதைகளில் மிகச் சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

அன்பென்று கொட்டு முரசே!

பெரிதினும் பெரிது கேள்

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே

வீணையடி நீ எனக்கு

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!

ஆசை முகம் மறந்துபோச்சே!

மனதில் உறுதி வேண்டும்

பயமெனும் பேய்தனை அடித்தோம்

இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்

 

இந்த வகையில் கவியரசரின் கவிதைப் பூங்காவில் நுழைவோம்; கண்ணுக்கினிய சில நல்ல மலர்களைப் பார்ப்போம்.

செந்தமிழா எழுந்து வாராயோ – உன்

சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ

அன்பு நெறியிலே அரசாள – இந்த

அகிலமெல்லாம் தமிழர் உறவாட

துன்பங்கள் யாவும் பறந்தோட

தூய மனங்கொண்டு கவிபாட                 படம்: மதுரை வீரன்

தமிழனின் தாய்மொழியைப் பாராட்டி அகில உலக தமிழரை ஒன்று கூட்டி தூய மனம் கொண்டு கவி பாடி துன்பங்கள் யாவும் பறந்தோடச் செய்வோம் என்ற கற்பனையில் உயர்ந்த சிந்தனையைப் பார்க்கலாம்!

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

தொடர்ந்து பேசும் கிளியொன்று

பேச மறந்ததேன் இன்று                       படம்: காத்திருந்த கண்கள்

அல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே, துள்ளித் திரிந்த பெண்ணொன்று இன்று துயில் கொண்டதேன்? கவிஞர் கேட்கிறார். அவரே பதிலும் சொல்கிறார். அன்னை தந்த சீதனமோ, என்னை வெல்லும் நாடகமோ என்று!

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய்மொழி

கலக்கம் எனது காவியம்  –  நான்

கண்ணீர் வரைந்த ஓவியம்                      படம்: குங்குமம்

Kannadasanlyric2PoonaalPohatumPoda_000

சோகம் ஒலிக்கும் குரலில் கலக்கம் வந்த காரணத்தையும் கவிஞர் கூறி விடுகிறார். நானே எனக்குப் பகையானேன் –என் நாடகத்தில் நான் திரையானேன் என்று.

ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுஆத்மன: (உனக்கு நீயே நண்பன்; உனக்கு நீயே பகைவன் என்ற கீதையின் கருத்து சாதாரணமாக இங்கு வந்து விழுவதைப் பார்க்கலாம்)

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா – இந்த

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

போனால் போகட்டும் போடா         படம்: பாலும் பழமும்

வாழ்க்கை கணக்கை சில வரிகளில் போட்டு வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில், மரணம் என்பது செலவாகும் என்று வரவு செலவு கணக்கை இவ்வளவு கச்சிதமாக மூன்று மூன்று சொல் அடுக்குகளில் காண முடிகிறதே! நமக்கும் மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த தலைவன், அவன் தான் அனைத்தையும் இரவல் தந்தவன், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?

கவிஞரின் ஆணித்தரமான கேள்விகள் எவ்வளவு சிந்தனையைக் கிளப்பி விடுகிறது?

தொட்டால் சுடுவது நெருப்பாகும்

தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!

தெரிந்தே கெடுப்பது பகையாகும்

தெரியாமல் கெடுப்பது உறவாகும்

படம்: படித்தால் மட்டும் போதுமா – (அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில்)

எப்படி இருக்கிறது புது வியாக்கியானம்?

பிறக்கும் போதும் அழுகின்றான்

இறக்கும் போதும் அழுகின்றான்

ஒருநாளேனும் கவலை யில்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே                படம்: கவலை இல்லாத மனிதன்

kanna2

தத்துவப் பாடல்களின் மன்னன் என்பதை நிரூபிக்க எத்தனை பாடல்கள் வேண்டும்?

உள்ளம் என்பது ஆமை – அதில்

உண்மை என்பது ஊமை!

சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி!              படம்: படித்தால் மட்டும் போதுமா

எனக்கே வியப்பு ஏற்படும்!

தன் பாடல் தொகுதி இரண்டாவது பாகத்தின் முன்னுரையில்  3-9-1971 தேதியிட்டு கவியரசர் இப்படி எழுதுகிறார். அது ஒரு சுய விமரிசனம் தான்!

“”இந்தப் பாடல்களை எல்லாம் படித்துப் பார்க்கும் போது எனக்கே கூட வியப்பு ஏற்படும்…….

 

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் , உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும், அங்கே என் பாடலொன்று எதிரொலிக்கும்.”

உண்மை தானே! கண்ணதாசன் பாடல் இல்லாத வாழ்க்கை நிகழ்வுகளே இருக்காது தானே.

மூன்று சொற்களிலேயே முடிப்போம்!

கண்ணதாசன் பாடலின்றி இருக்காது!

                                     ***********