
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 18 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London –14-44
Post No. 6981
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
மாலைமலர் 7-9-19 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
அனைத்து தெய்வங்களும் ஐக்கியம் : கேட்பதைக் கொடுக்கும் காமதேனு!
ச.நாகராஜன்
மனித வாழ்வில், மனிதர்கள், யாரானாலும் சரி, தமக்கு வேண்டிய பலவற்றை அடைய விரும்புகின்றனர்.
செல்வம் சேர வேண்டும், நல்ல உத்யோகம் வேண்டும், பதவி உயர்வு வேண்டும், புத்திர பாக்கியம் வேண்டும், சொந்த வீடு ஒன்று வேண்டும், நல்லறிவு மேலோங்க வேண்டும், நல்லோர் இணக்கம் வேண்டும், சுற்றம் சூழ சிறப்பாக இருக்க வேண்டும், என்று இப்படிப் பல விதமான மானுடத் தேவைகள் உண்டு.
அதை அடைய உள்ள பல வழிகளில் ஈடுபாட்டுடனும் சிரத்தையுடனும் செய்யும் காமதேனு வழிபாடு சிறந்த ஒன்று. எளிதில் செய்யக் கூடியதும் கூட!
காமதேனு தெய்வீகப் பசு. வேண்டியதைத் தரும் அற்புதமான தேவதை!
அதைப் பற்றிய ஏராளமான வரலாறுகளை வேதங்கள், ராமாயண மஹாபாரத இதிஹாசங்கள், புராணங்கள், பல மொழிகளில் உள்ள இலக்கியங்கள் ஆகியவற்றின் வாயிலாகக் காண்கிறோம்.
காமதேனுவில் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டிருப்பதால் காமதேனுவை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வணங்கிய பெரும் பேறை அடைகிறோம்.
காமதேனுவிற்கு சுரபி என்றும் நந்தினி என்றும் வேறு இரு பெயர்களும் உண்டு.
முன்னொரு காலத்தில் கைலாஸத்திற்குச் சென்ற சுரபி, நெடுங்காலம் பிரம்மாவை நோக்கித் தவம் புரிய, மனம் மகிழ்ந்த பிரம்மா சுரபிக்கு வேண்டுவதைக் கொடுத்தருளும் சக்தியைக் கொடுத்து மூவுலகுக்கும் மேலான கோலோகத்தில் தேவதையாக இருப்பாய் என்று கூறி அருளினார்.
பல காமதேனுக்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் புராண இலக்கியத்தில் இருப்பதால் காமதேனு மூலம் உருவாகிய இன்னும் பல காமதேனுக்கள் இருப்பதை அறிய முடிகிறது.
சுரபி கிழக்கு திசையிலும் ஹம்ஸிகா தெற்கு திசையிலும் சுபத்ரா மேற்கு திசையிலும் தேனு வட திசையிலும் இருந்து அருள் பாலித்து வருகின்றன.
வசிஷ்டர் ஆசிரமத்திற்கு ஒரு முறை தன் பெரும்படையுடன் வந்த விசுவாமித்திர மஹராஜா அங்கிருந்த காமதேனு எது கேட்டாலும் அனைவரும் திருப்தியுறும் வகையில் தருவதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அதை வசிஷ்டரிடம் கேட்ட போது அவர் தர மறுத்தார்.

உடனே விசுவாமித்திரர் அதைக் கவர்ந்து செல்ல முயன்று தன் படையை ஏவினார். பிரம்மாண்டமான சேனையை எதிர் கொண்ட வசிஷ்டர் காமதேனுவைக் குறிப்பால் நோக்க, அதுவே ஒரு பெரும்படையை உருவாக்கி விசுவாமித்திரரையும் அவர் சேனையையும் துரத்தி அடித்தது. அரும் தவசக்தியின் பலனை உணர்ந்து அதைப் பெற விரும்பிய விசுவாமித்திரர் தன் ராஜ்யத்தைத் துறந்து தவம் மேற் கொண்டு ரிஷியானார்.
அப்படிக் காமதேனுவை கவர முயல்கையில் அவருக்கு உதவி செய்தவரே மறு ஜன்மத்தில் தேவ விரதனாகப் பிறந்து தன் அரிய சபதத்தால் பீஷ்மர் என்ற பெயரைப் பெற்றார். தன் சாபத்தை நிவர்த்தி செய்தார்.
காமதேனுவின் அம்சமாகவே பசுக்கள் விளங்குவதால் அவற்றிற்கும் இயல்பான தெய்வீகத் தன்மை அமைந்து விடுவதால் அவற்றை பிரத்யட்சமாக நேரில் கண்டு வணங்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.
பசுவைப் பற்றி வாயு புராணம் இப்படி விவரிக்கிறது :
பசுவின் பற்களில் (புயல், மின்னல் ஆகியவற்றிற்கான தேவதையான) மருத்தும், நாக்கில் சரஸ்வதியும்,குளம்பில் கந்தர்வர்களும், குல சர்ப்பங்கள் குளம்பின் முன்புறமும், சத்வ ரிஷிகள் மூட்டுகளிலும், சூரிய சந்திரர் இரு கண்களிலும் உள்ளனர்.
நட்சத்திரங்கள் திமிலிலும், யமன் வாலிலும், தீர்த்தங்கள் அது நடக்கும் போது உராய்ந்து செல்லும் காற்றிலும், கங்கையும் சப்த தீவுகளுடன் கூடிய நான்கு சமுத்திரங்களும் அதன் கோமியத்திலும், ரிஷிகள் அதன் உடல் முழுவதுமும், லட்சுமி அதன் சாணத்திலும் உள்ளனர்.
எல்லா வித்தைகளும் அதன் மயிர்க்கால்களிலும், உத்தராயணமும் தட்சிணாயனமும் அதன் உடலின் தோல் மற்றும் மயிர்க்கால்களிலும் உள்ளன.
அது நடக்கும் போது அதைச் சூழ்ந்து தைரியம், பொறுமை, மன்னித்தல், புஷ்டி,புத்தி, நினைவாற்றல், மேதை, பரம சந்ததி ஆகியவற்றிற்கு உரிய தேவதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டே இருக்கின்றனர். அது மாங்கல்ய தேவதை.”
பசுவின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள் எனக் கூறப்படுகிறது.
பசுவைத் துன்புறுத்தவே கூடாது என்று வேதங்கள் சுமார் நூறு இடங்களில் கட்டளை இடுகின்றன.
குமரேச சதகம் “காலியின் கூட்டத்திலும்” (பசு மந்தை) என்றும், அறப்பளீசுர சதகம், “பால் குடத்திடையிலே” என்றும் கூறி, லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் ஒன்றாக பசுவைச் சுட்டிக்காட்டிச் சிறப்பித்துக் கூறுகின்றன.

காமதேனுவின் ஆலயங்கள் பல.
நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் ஆலயம் பற்றிய சுவையான வரலாறை லிங்க புராணம் கூறுகிறது.
ஒரு முறை இமயமலையில் மான் போல வலம் வந்து கொண்டிருந்த சிவபிரான் தன் இயல்பான உருவத்தைக் கொள்ள, ஒரு ஒளிப்பிழம்பு பிரபஞ்சத்தை மேலும் கீழுமாக ஊடுருவிப் பரந்தது.
பிரம்மா அதன் உச்சியைப் பார்க்க மேலே சென்றார். அதன் அடியைப் பார்க்க விஷ்ணு கீழே சென்றார். மேலே சென்ற பிரம்மா தான் ஒளியின் உச்சியை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சென்று விட்டதாகக் கூறினார்.
இதைக் கேட்ட விஷ்ணு தெய்வீகப் பசுவான காமதேனுவிடம் இது உண்மை தானா என்று கேட்டார்.
காமதேனுவோ அது உண்மை இல்லை என்பதை தன் வாலை மறுக்கும் விதமாக ஆட்டிக் கூறியது. ஆகவே காமதேனு புனிதமானதாகக் கருதப்படுவதோடு அனைத்துக் கோவில்களிலும் வழிப்பாட்டுக்குரிய இடத்தைப் பெறுகிறது.
அதன் வாலும் புனிதமானதே என்பதால் பசுவின் வாலைத் தொட்டுத் பக்தர்கள் தம் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.
பசுபதி தலங்கள் மொத்தம் ஐந்து. ஆவூர், நேபாளம், திருக்கொண்டீசுரம், பந்தணைநல்லூர் மற்றும் கருவூர் ஆகியவையே அந்தத் தலங்களாகும்.
கும்பகோணம் அருகில் உள்ள பட்டீச்சுரம் பராசக்தியினால் ஏற்படுத்தப்பட்ட சக்திவனத்தில் அமைந்துள்ள ஒரு தலமாகும்.. அம்பிகையின் பெருந்தவத்தின் போது அவருக்குப் பணிவிடை செய்ய காமதேனு தன் மூத்த பெண்ணான பட்டியை அங்கு அனுப்பியது.
பட்டி தானும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அங்கு ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி பூஜை செய்து வந்தாள். இதனால் அந்த இடத்திற்கு பட்டீச்சுரம் என்ற பெயரும் அந்த லிங்கத்திற்குப் பட்டி லிங்கம் என்ற பெயரும் ஏற்பட்டன.
எல்லையற்ற மகிமை கொண்ட இந்தத் தலத்தைப் பற்றி பட்டீச்சுர மகாத்மியம் விளக்குவதைப் படிப்போர் பிரமிப்பை அடைவர்.

விசுவாமித்திரர் இங்கு தான் பிரம்ம ரிஷியாகத் தவம் புரிந்தார்.
ராவணனைக் கொன்றதால் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் (பிராமணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம்) ராமேஸ்வரத்திலும்,வீரஹத்தி தோஷம் வேதாரண்யத்திலும் சாயாஹத்தி தோஷம் பட்டீச்சுரத்திலும் அவரது வழிபாட்டால் போயின.
கொங்கு நாட்டு சிவஸ்தலமான கருவூர் எனப்படும் கரூரில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் கோவில் பிரம்மாவும் காமதேனுவும் வழிபட்ட தலமாகும்.
இங்குள்ள சிவலிங்கத்தைக் காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில் காமதேனு வழிபட்ட தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது.
காமதேனு வழிபட்ட இன்னொரு தலம் தூங்கானை மாடம் என்று பழைய காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய பெண்ணாகடம் ஆகும். விருத்தாசலம் அருகே உள்ள இது தேவ கன்னியரும், காமதேனுவும் இந்திரனின் யானையான ஐராவதமும் (பெண்+ஆ+கடம்) வழிபட்ட தலமாகும்.
இப்படி காமதேனு வழிபட்ட தலங்கள் என திருவீழிமலை உள்ளிட்ட இன்னும் பல தலங்கள் உள்ளன.
இந்தத் திருத்தலங்களின் வரலாறுகள் மிக்க சுவையானவை. இவற்றை விரிப்பின் பெருகும்.
இந்தத் தலங்களில் சென்று வழிபடுவோர் அடையும் அற்புதமான ஆன்மீக சக்தி உள்ளிட்ட நலன்களை எளிதில் உணரலாம்.
வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திரங்களும் காமதேனுவை இல்லத்தில் வைப்பதே அனைத்து நலங்களையும் அருளும் என எடுத்துரைக்கின்றன.
அழகிய தெய்வீகப் பெண் முகத்துடனும் உடல் முழுவதும் தேவதைகள் இருக்கவும் உள்ள காமதேனுவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் அனைத்துத் தடைகளும் நீங்கும்; செல்வம் பெருகும்.
கன்றுடன் கூடிய காமதேனுவின் விக்ரஹம் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களிலும் கிடைக்கிறது. வசதிக்கும் இஷ்டத்திற்கும் தக அதையும் பூஜை அறையில் வைக்கலாம்.
அனைத்துப் பேறுகளையும் இவை அருள்கின்றன; ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களும் காமதேனுவின் அருளினால் நீங்கும்.
இந்திய இயலில் நிபுணரான மாடெலெய்ன் பயார்டெ (Madeleine Biardeau) காமதேனு என்பது புனிதப் பசுவின் அடையாளப் பெயராகும் என்று கூறுகிறார்.
காமதேனுவின் ஓவியத்தைப் பார்த்து வியந்த ஃப்ரெடெரிக் எம்.ஸ்மித் (Frederick M. Smith), காமதேனு, “பிரசித்தமான என்றுமுள்ள இந்தியக் கலையின் சித்திரம்” என்று புகழ்கிறார்.

இன்றைய அறிவியல் உலகில் பொருளாதாரம் செழிக்க பசுச் செல்வம் இன்றியமையாத ஒன்று என்பதை பொருளாதார நிபுணர்கள் விளக்குகின்றனர். நிலத்தின் இயற்கைத் தன்மையைக் காக்க வல்லது பசுவே.
பஞ்சகவ்வியம் எனப்படும் பசும்பால், கோமியம், சாணம். நெய், தயிர் ஆகியவை கலந்த கலவை கோவிலில் அபிஷேகப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சகவ்யத்தைப் பயிர்களுக்குச் சோதனையாகக் கொடுத்து பயன்பெறலாம் என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அதை இயற்கை விவசாயத்தில் ஒரு இடு பொருளாக ஆக்கியதையும் நாம் அறிவோம்.
பசுவின் சாணம் ரேடியேஷன் எனப்படும் கதிரியக்கத் தீமைகளைத் தடுக்கும் ஒன்று. அலஹாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் கே.என். உத்தம் பசுஞ்சாணமானது காமா, பீட்டா, ஆல்பா ஆகிய மூன்று கதிர் வீச்சையும் தடுக்க வல்லது என்று குறிப்பிடுகிறார். இவற்றில் காமா கதிர்கள் தாம் ரேடியேஷன் எனப்படும் தீங்கு பயக்கும் கதிரியக்கத்தை உண்டாக்குபவை.
ரஷியாவில் செர்னோபிலில் ஏற்பட்ட தீங்கு பயக்கும் கதிரியக்க விபத்தைப் பற்றி உலகினர் அனைவரும் நன்கு அறிவர்.
ஆக அறிவியல் ரீதியாகவும் பசு உலகினரைக் காக்கும் தெய்வ மாதாவாக இலங்குவதைப் புரிந்து கொள்ளலாம்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது (யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை – திருமூலர்) எல்லாவற்றிலும் சிறந்த புண்ணியம் என அறநூல்கள் கூறுகின்றன.
காமதேனுவை உளமார வழிபட்டால் செல்வம் செழிக்கும், தடைகள் நீங்கும், வளம் ஓங்கும், புது வீடு அமையும், திருமணம் வெற்றி பெறும், புத்திரப் பேறு உண்டாகும், எல்லா நலன்களும் அமையும் என்று உணர்ந்து அதை வழிபடுவோமாக!
***








You must be logged in to post a comment.