கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 3 (POST No.4302)

Written by S.NAGARAJAN

 

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 5–51 am

 

 

Post No. 4302

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாக்யா 13-10-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 34வது) கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 3

 ச.நாகராஜன்

 

“மூன்று விஷயங்கள் மிக மிக கடினமானவை 1) எஃகு 2) வைரம் 3) தன்னைத் தானே அறிவது – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

 

 

பஞ்சாபின் தலை நகரான லாகூர் நகரமே சோகக் கடலில் மூழ்கியது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போக, கூட்டத்தில் இருந்தோரெல்லாம் ‘வேண்டாம், வேண்டாம் என்று கண்ணீரும் கம்பலையுமாக அழுதவாறே அரற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு வந்த செய்தி சரியானது தான்.

தங்களுக்குப் பிரியமான மஹாராஜா ரஞ்சித் சிங் எரிக்கப்படும் போது அவரது ராணிகள் உடன்கட்டை ஏறப்போவதாக செய்தி நகரெங்கும் பரவி இருந்தது.

காவல் வீரர்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தி ஒழுங்கை நிலை நாட்ட முயன்று கொண்டிருந்தனர்.

ரஞ்சித் சிங்கின் உடல் அலங்கரிக்கப்பட்டு தங்க ரதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ரதத்திற்குப் பின்னால் அவருக்கு மிகவும் பிரியமான் நான்கு ராணிகள் – இளம் விதவைகள் -தங்க நாற்காலிகளில் அமர்ந்து வர ஐந்து அடிமைப் பெண்கள் கூடவே நடந்து வந்தனர்.

உடல் மயானத்தை அடைந்தது.

நல்ல பட்டுப் போர்வையால் தன் உடலைப் போர்த்திக் கொண்டு ரஞ்சித் சிங்கின் பிரியமான மஹாராணி அவர் சிதைக்குத் தன் கையாலேயே தீ மூட்டினார்.

சந்தனக் கட்டைகளின் மேல் நெய் பொழிய தீ ஜுவாலைகள் வானளவு உயர்ந்தன. கூடவே கொஞ்சமும் கந்தகமும் அதில் சேர்க்கப்பட்டிருந்ததால் தீப்பந்து சுழன்று எழுந்தது. ராணிகள் நால்வரும் அடிமைப் பெண்கள் ஐவருடன் சிதையில் பாய்ந்தனர்.

அவ்வளவு தான்!

ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து போனது.

அனைவரும் கருகிச் சாம்பலாயினர்.

மஹாராஜா இறந்த மறு நாள் அவரது மகன் முடி சூட்டப்பட்டார். அவரோ போதை மருந்துக்கு அடிமையானவர்.

ஆறு வருடங்கள் சரியான தலைமை இல்லாமல் பஞ்சாப் அல்லோல கல்லோலப் பட்டது.

இதை விட ஒரு இனிய சந்தர்ப்பம் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு அமைய முடியுமா என்ன?

வெள்ளைக்காரன் பஞ்சாபின் மீது கண்ணை நன்கு பதித்தான்.நடப்பதை தனக்குச் சாதகமாக எப்படி ஆக்குவது என்பதே ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஒரே நோக்கமாக ஆனது.

      சரியாக பதினைந்தே மாதங்களில் மூடி சூட்டப்பட்ட மன்னனை அவரது மனைவியும் மகனுமே விஷத்தைக் கொடுத்துக் கொன்றனர். மகன் தானே முடி சூடிக் கொண்டான்.

ஆனால் அரசனாக அவன் ஒரே ஒரு நாள் மட்டும் தான் இருந்தான்.

உப்பரிகை இடிந்து விழ அவன் கொல்லப்பட்டான்.

ரஞ்சித்சிங்கின் இரண்டாவது மகன் ஷெர்சிங் 1841ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரியணை ஏறினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1843இல் அவர் மல்யுத்த மைதானம் ஒன்றில் மல்யுத்த நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த போது கொலையாளி ஒருவரால் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை நடந்து  முடிந்த சில நிமிடங்களிலேயே அவரது 12 வயது மகனும் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டான்.

அவர் மந்திரியும் இரண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

 

   ரத்தக் களரி தொடர்ந்தது.இந்த நிலையில் தான் இதுவரை பொறுத்திருந்த மஹா ராணி ஜிந்த் கௌர் (பிறப்பு 1817; மறைவு 1-8-1863) களத்தில் குதித்தார். இவரை மக்கள் ஜிண்டான் என்ற செல்லப் பெயரால் அழைத்தனர். ரஞ்சித் சிங்கின் மிக இளவயது மனைவியான இவர் பேரழகி. பெரிய புத்திசாலி. செயலூக்கம் மிகுந்த சுறுசுறுப்பான மஹாராணி ஜிண்டான் 1843 முதல்  மூன்று வருடம் அரசாண்டார்.

   இவரை புரட்சி ராணி என்றே சொல்லலாம். (இவரைப் பற்றிய தி ரெபல் க்வீன் என்ற படம் நியூயார்க் நகரில் பன்னாட்டு சீக்கிய திரைப்பட விழாவில் 2010ஆம் வருடம் திரையிடப்பட்டது)  பிரிட்டிஷ் அரசு இவரை அப்படித்தான் பார்த்தது.

   ரஞ்சித் சிங்கை அடுத்து அரியணை ஏறிய மூவரும் கொல்லப்பட்ட சூழ்நிலையில் ஜிண்டானின் குமாரரான துலிப் சிங் பட்டம் சூடினார். அப்போது அவருக்கு வயது 5 தான். ஜிண்டான் அரசாட்சிப் பொறுப்பாளர் (regent) ஆனார்.

 உள்ளூரில் சதி வேலை ஆரம்பித்தது. மஹாராணியை எதிர்க்க ராணுவம் துணிவு கொண்டது. கால்ஸா – அதாவது சீக்கிய ராணுவம் தக்க தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தது.

    அப்போது பிரபலமான ஒரு தளகர்த்தன் இறந்து விடவே இந்தக் கொலையில் மந்திரியை சம்பந்தப்படுத்தி அவரைத் தங்கள் முன்னே ஆஜராக உத்தரவிட்டது ராணுவம்.

    யானை மீது அம்பாரி ஏறி பாதுகாப்பிற்காக இளம் மஹாராஜாவைத் தன் மடியின் மீது அமர்த்தி பவனியாக வந்தார் மந்திரி. மஹாராஜாவை பத்திரமாக இறக்கி விட்ட ராணுவம் மந்ரியைக் குத்திக் கொலை செயதது.

ராணுவத்தை பயப்பட வைக்க வழி என்ன? அரண்மனையில் ஆலோசனை நடந்தது.

   எல்லையில் பலம் மிக்க எதிரி வந்தால் ராணுவம் அங்கே போய்த்தானே ஆக வேண்டும். பிரிட்டிஷாரை விட சிறந்த பலம் பொருந்திய எதிரி வேறு யார்?

ஒரு பிரிட்டிஷ் தளகர்த்தன் எல்லையில் போர் தொடுக்குமாறு செய்யப்பட்டான்.

கால்ஸா ராணுவம் எல்லைக்குச் சென்று போரிட ஆரம்பிக்கவே பெரும் போர் எழுந்தது. சீக்கிய ராணுவம் பெருமளவு அழிந்தது.

     தொடர்ந்து ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையை அடுத்து பிரிட்டிஷ் பிரதிநிதி அரசுப் பொறுப்பை ஏற்க மகாராஜா துலிப் சிங் அரசாட்சி செய்தார்.

மஹாராணி ஜிண்டான் பிரிட்டிஷார் தன்னைக் கைவிட்டுவிட்டதை எண்ணி மனம் நொந்தார். என்றாலும் அவரது வசீகரமும் அரசியல் சாதுரியமும் அவரை பலம் பொருந்திய ஒரு சக்தியாக ஆக்கவே, அதைப் பொறுக்க முடியாத பிரிட்டிஷார் அவரை கண்காணாத ஒரு கோட்டையில் சிறை வைத்தனர். பதிமூன்று ஆண்டுகள் கழித்தே அவர் தன் மகனைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

     1848ஆம் ஆண்டு நடந்த இன்னொரு போரில் கவர்னர் ஜெனரலான லார்ட் டல்ஹௌஸி,  மகாராஜாவின் பெரும் பகுதிச் சொத்தை விற்று விட்டார்.

 தனது பட்டங்கள், உரிமைகள், அதிகாரம் அனைத்தையும் படிப்படியாகத் துறக்குமாறு செய்யப்பட்டார் துலிப் சிங். சொத்தெல்லாம் பிரிட்டிஷார் வசம் போகவைக்கப்பட்டது.

அந்த சொத்தில் ஒன்று தான் கோஹினூர் வைரம்!

   கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கு பதிலாக வருடாந்திர பென்ஷனாக சுமார் 50000 பவுன் தர பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. அதன் இன்றைய மதிப்பு 20 லட்சம் பவுன்)

  வஞ்சக சூழ்ச்சிக்கு இரையான துலிப் சிங் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினொன்று.

   புதிய இடம் துலிப் சிங்கை ஈர்த்தது.புதிய நண்பர்கள், தோழியர் கிடைத்தனர். கிறிஸ்தவ மதத்தில் சேர முடிவு செய்தார் துலிப்.

  ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூர் வைரத்தை மஹாராணி விக்டோரியாவுக்கு அளிக்க முடிவு செய்தது.

       (வைரத்தின் சரிதம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

எட்வின் ஜி. க்ரெப்ஸ் (Edwin Gerhard Krebs — பிறப்பு :6-6-1918 மறைவு: 21-12-2009) அமெரிக்காவைச் சேர்ந்த உயிர் வேதியியல் விஞ்ஞானி (Bio chemist).

அவருக்குக் காது கேட்காது. இருந்தாலும் கூடத் தனது ஆராய்ச்சியில் முனைப்பாக இருந்து அபூர்வமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தார்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் மனித உடலில் உள்ள உயிரணுக்களின் இயக்கம் பற்றிப் பல புதிய கண்டுபிடிப்புகளைத் தெரிவித்தார். இதனால் ஹார்மோன்களைப் பற்றிப் பின்னால் நன்கு அறிய முடிந்தது.

தனக்கு இயல்பாக இருந்த காது கேளாமையை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். உலகின் பெரும் விஞ்ஞானி ஆனார்.

அவரது அரிய சேவையைக் கருதி 1992ஆம் ஆண்டு அவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி ஒரு சில நொடிகளில் உலகமெங்கும் டெலிபோன் மூலம் பரவியது.

ஆனால் அதைக் கடைசியாகத் தெரிந்து கொண்டவர் க்ரெப்ஸ் தான்.

ஏனெனில் அவர் டெலிபோன் மணி இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த போதும் அவரால் எடுக்க முடியவில்லை – அவருக்குத் தான் காது கேட்காதே!

சாதனை புரிய உடல் குறை ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த விஞ்ஞானிகளில் ஒருவர் க்ரெப்ஸ்.

****

 

 

 

கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 2 (Post No.4275)

Written by S.NAGARAJAN

 

 

Date: 6 October 2017

 

Time uploaded in London- 7–25 am

 

 

Post No. 4275

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 2

 ச.நாகராஜன்

 

“அழுத்தம் இல்லையேல் வைரம் இல்லை – தாமஸ் கார்லைல் (No Pressure, No Diamond   – Thomas Carlyle)

 

 

கோஹினூர் வைரம் பற்றி அஹ்மத் ஷா எழுதி வைத்த குறிப்பு தான் முதன் முதலாக ஆதார பூர்வமாக எழுதப்பட்ட குறிப்பாகும்.

அதில் அவர் கூறியிருப்பது :- சிம்மாசனத்தின் வெளிப்புற குடை எனாமல் பூச்சில் ரத்தினங்கள் பதிப்பிக்கப்பட்டதாகவும் உட்புறத்தில் மாணிக்கக் கற்கள் மற்றும் செம்மணிக்கல் (கார்னெட்) மற்றும் இதர ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டதாகவும் . இதை மரகதத் தூண்கள் தாங்கி இருந்தன. ஒவ்வொஇருந்ததுரு தூணின் மேலும் நெருக்கமாக இழைக்கப்பட்ட ரத்தினக் கற்களால் ஆன இரண்டு மயில்கள் இருந்தன. இப்படி அமைக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டு மயில்களுக்கு இடையிலும் மாணிக்கம், வைரம், மரகதம். முத்துக்கள் ஆகியவற்றினால் ஆன மரம் ஒன்று இருந்தது.

இந்த அழகிய மயிலாசனத்தில் இரண்டு அபார மதிப்புடைய இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தன. ஒன்று,தைமூர் மாணிக்கக் கல் – முகலாயர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று, ஏனெனில் அவர்கள் வண்ணம் சார்ந்த கற்களைப் பெரிதும் விரும்பினர் – இன்னொன்று கோஹினூர் வைரம்.

இந்த கோஹினூர் வைரம் சிம்மாசனத்தில் உச்சியில் ரத்தினக்கற்களால் ஆன மயிலின் தலையில்  பதிக்கப்பட்டிருந்தது.

 

 

  இப்படி ஒய்யாரமாக கம்பீரமாகப் பதிக்கப்பட்டிருந்த கோஹினூர் வைரம் உலகளாவிய அளவில் அனைவரது வியப்பையும் (இதர மன்னர்களின் பொறாமையையும்) சம்பாதித்தது.

இந்த மயில் சிம்மாசனம் செய்யப்பட்டு ஒரு நூற்றாண்டுக் காலம் வரை முகலாய வமிசத்தின் தலைமையை அது இந்தியாவிலும் அதற்கப்பால் உலகெங்கிலும் பறை சாற்றிக் கொண்டிருந்தது.

‘ஆசியாவே செல்வக் களஞ்சியம்; அதன் தலைமையகம் டில்லி’ என்று அனைவரும் மனமார ஒப்புக்கொண்டு புகழ்ந்தனர். இருபது லட்சம் பேர் அப்போது டில்லியில் வசித்தனர். இது லண்டன், பாரிஸ் ஆகிய இரு நகரங்களையும் சேர்த்துப் பார்த்தால் ஜனத்தொகையில் அதை விட அதிகம்!

ஆனால் அபரிமிதமான இந்தச் செல்வமே அனைவரின் கண்ணையும் உறுத்தியது. பார்த்தான், பெர்சியாவைச் சேர்ந்த நாதிர் ஷா.

1739ஆம் ஆண்டு டில்லியின் மீது நாதிர் ஷா படையெடுத்தான். பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ரத்த ஆறு ஓடியது. கஜானா காலியானது. டில்லி அழுதது.

நாதிர் ஷா கொள்ளையடித்த செல்வம் எவ்வளவு? கணக்கிலடங்காதது. அதைச் சுமந்து செல்ல மட்டும் 700 யானைகள். 4000 ஒட்டகங்கள், 12000 குதிரைகள் தேவையாய் இருந்தன. அதாவது இந்த மிருகங்கள் இழுப்பதற்குத் தேவைப்பட்டது; சுமப்பதற்கு அல்ல! அப்படியானல் இழுத்துச் செல்லப்பட்ட வண்டிகளுக்குள் இந்தியச் செல்வம் எவ்வளவு இருந்திருக்கும்!

இன்றைய நவீன யுக கம்ப்யூட்டர்கள் காட்டும் படங்களில் வரும் செல்வத்தை விட இது அதிகம்.

இப்படிப்பட்ட கொள்ளையில் நடுநாயகமாக அமைந்தது ஷாஜஹானின் மயிலாசனம். அதில் ஒய்யாரமாக இருந்தது கோஹினூர் வைரம்.

நாதிர்ஷா தான் கொள்ளையடித்ததில் தைமூர் ரூபியையும் கோஹினூர் வைரத்தையும் மயிலாசனத்திலிருந்து எடுத்துக் கொண்டான் – அவற்றைத் தன் கை கங்கணத்தில் அணிவதற்க்லாக!

இந்தியாவை விட்டு இப்படியாகக் கொள்ளையடிக்கப்பட்ட்ட கோஹினூர் வைரம் சொந்த நாட்டை விட்டு ‘கொள்ளை யாத்திரை’ போக ஆரம்பித்தது.

இதை எப்படியாவது மீட்க வேண்டும் என்று இந்திய ராஜாக்கள் ஒரு புறம் சபதம் எடுத்தனர். நாதிர் ஷாவிடமிருந்து இதை அபகரிக்க வேண்டும் என்று அண்டை நாடுகளின் அரசர்கள் தங்கள் பங்கிற்குத் தங்கள் ஆசையை வளர்த்தனர்.

 

ஆப்கனிஸ்தான் என்று பின்னால் அழைக்கப்பட்ட நாட்டில் கோஹினூர் வைரம் சென்றவுடன் ஏராளமான ரத்த ஆறு ஓடியது பல போர்களின் வாயிலாக. ஒவ்வொரு ஆட்சியாளரின் கையிலிருந்தும் இன்னொருவருக்கு இது மாறியது.

இவர்கள் பற்றிய வரலாறு மிகவும் சுவையானது. ஒரு மன்னன் தன் சொந்த மகனின் கண்களையே குருடாக்கினான். இன்னொருவனோ பண ஆசைப் பைத்தியத்தால் தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு தங்கத்தை உருக்கித் தன் தலையில் தடவிக் கொண்டு ‘தஙக மொட்டையன்’ ஆனான்.

இந்த சண்டைகளுக்கு இடையில் அவுரங்கசீப் ஆட்சி கவிழவே, அதிகார மையம் இல்லாமல் போய் இந்தியாவில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்த பிரிட்டன் தன் காலனி ஆசையைத் தீர்த்துக் கொள்ள இதுவே சமயம் என்று எண்ணி யது

ஈஸ்ட் இந்தியா கம்பெனி வந்தது; இந்திய சுதந்திரம் பறி போனது; பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியது.

முகலாயர்களின் கொள்ளை ஒரு புறம், பெர்சியா, ஆப்கன் கொள்ளை மறு புறம் என்று தன் செல்வத்தை இழந்திருந்த இந்தியா மீதி இருந்த அரிய செல்வத்தை பிரிட்டிஷாரிடம் இழக்க ஆரம்பித்தது. கூடவே தன் திறமையையும் அன்னிய ஆட்சியால் பல்வேறு துறைகளில் இழந்தது.

பல போர்களைப் பார்த்த கோஹினூர் வைரம் கடைசியாக இந்தியாவில் ரஞ்சித் சிங் அரசாண்ட போது அவரால் மீட்கப்பட்டது. 1813இல் கோஹினூர் வைரத்தை மீட்ட ரஞ்சித் சிங் அதை மிகவும் நேசித்தார். ஒருவழியாக இந்தியாவின் கௌரவம் மீட்கப்பட்டதாக அவர் கருதியதை மக்களும் ஆமோதித்தனர்.

1761இல் டில்லி கொள்ளையடிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுத்த சம்பவமாக ரஞ்சித் சிங் கருதியதோடு ஆப்கனை ஆண்ட துரானி வமிசத்திடமிருந்து இந்தியாவிலிருந்து அவர்கள் அபகரித்த ஏராளமான விளைநிலங்களையும் மீட்டார்.

 

வைரம் வந்த போது நிலங்களும் மீண்டன; கௌரவமும் திரும்பியது. என்று அவர் எண்ணியதில் தவறே இல்லை

பஞ்சாபின் சிங்கம் என்று புகழப்பட்ட சீக்கிய மன்னரான ரஞ்சித் சிங்கின் வரலாறு சுவையான ஒன்று.

1801ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஆட்சிக்கு வந்த ரஞ்சித் சிங் 1780ஆம் ஆண்டு பிறந்தவர்.

அம்மையால் பாதிக்கப்பட்டு இடது கண் பார்வையை இழந்தார். அசகாய சூரரான ரஞ்சித் சிங் பத்தாம வயதிலேயே தன் தந்தையுடன் முதல் போர்க்களத்தைக் கண்டார்.

மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மாமன்னராக அவர் விளங்கினார்.

ஆனால் அவரது காலமும் ஒரு முடிவுக்கு வந்தது.பஞ்சாபின் துயரமான நாளாகக் கருதப்படும் 1839ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி வந்தது.

பஞ்சாபின் தலை நகரான லாகூரே அழுதது – தன் மன்னனை இழந்து. அன்று –

Mahatma Gandhi in London.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

அறிவியல் வளர்ச்சியால் எங்கு பார்த்தாலும் கிராமபோன் ரிகார்டுகள் பரவத் தொடங்கிய பழைய காலம்.

மஹாத்மா காந்திஜி வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்தார்.

கொலம்பியா கிராமபோன் கம்பெனிக்கு ஒரு ஆசை.எப்படியாவது காந்திஜியின் குரலை கிராமபோனில் பிடித்துவிட வேண்டும் என்று.

தனது தொழில்நுட்ப டெக்னீஷியனை அவர் பேச்சை ரிகார்ட் செய்ய அனுப்பி வைத்தது.

ஆனால் காந்திஜி அரசியல் பேச்சை ரிகார்ட் செய்வதைத் தான் விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறி விட்டா. ஆறுதலாக, ‘வேண்டுமானால் கடவுளைப் பற்றிப் பேசுகிறேன்’, என்றார்.

முன்னதாகவே தயார் செய்த தனது பேச்சை ஆறு நிமிடம் பேச அதை சந்தோஷத்துடன் பதிவு செய்தது கொலம்பியா கம்பெனி.

உலகெங்கும்  பரவலாக விரும்பிக் கேட்கப்படும் ரிகார்டாக அது ஆனது.

 

Gandhiji going to Round Table Conference in London.

 

விரும்புவோர் இன்றும் கூகிளில் அதைக் கேட்டு மகிழலாம்.

அறிவியல் செய்த பல நல்ல காரியங்களுள் ஒன்றாக மஹாத்மாவின் கடவுள் பற்றிய உரை நமக்கு நிரந்தரமாகக் கிடைத்துள்ளது!

***