
Post No. 9803
Date uploaded in London –2 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com


ஆங்கில நாவல் ஆசிரியை அகதா கிறிஸ்டி AGATHA CHRISTIE , மர்மக் கொலைகள் பற்றி புதினம் எழுதி கொள்ளை கொள்ளையாக சம்பாதித்தார் அவர் உருவாக்கிய கதா பாத்திரங்களான மிஸ் மாப்பிள் (MISS MARPLE) , ஹெர்குல் பாய்ரோ ( HERCULE POIROT) எப்போதும் டெலிவிஷன் காட்சிகளில் வலம் வந்து கொண்டு இருப்பர். அவரது மவுஸ் ட்ராப் THE MOUSETRAP கதையோ லண்டனில் தொடர்ந்து மேடையில் காட்சி தந்து வருகிறது.
மவுஸ் ட்ராப் என்பது கொலை, துப்பறியும் கதை அடிப்படையில் அமைந்த நாடகம். கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட நாடகம் மீண்டும் லண்டனில் மேடை ஏறிவிட்டது .
துப்பறியும் நாவல் எழுதியவர்களில் மிகவும் புகழ்பெற்றவர் இவர்தான். உலகிலுள்ள பல மொழிகளில் அவருடைய கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு லட்சக் கணக்கில் இன்றும் விற்றுக் கொண்டு இருக்கிறது .
இவர் துப்பறியும் புதினங்கள்/ நாவல் (NOVEL) களில் ஒரு புதிய உத்தியைக் கையாண்டார். ஒரு கொலை நடந்த பின்னர், அது தொடர்பான துப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிவிப்பார் . கதையைப் படிப்பவரோ, டெலிவிஷனில் பார்ப்பவரோ யார் குற்றவாளி என்ற புதிரை விடுவிக்க துடியாய்த் துடிப்பார்கள். ஒரு குடும்பத்தில் உள்ள பலரும் அந்த டெலிவிஷன் கதையைப் பார்த்தாரானால் இவர்தான் குற்றவாளி, இல்லை இல்லை அவன்தான் குற்றவாளி என்று வாதாடத் துவங்கி விடுவர் .
அதுமட்டுமல்ல, கதையில் திடீர் படீர் திருப்பங்களும் வரும். முட்டாள்தனமாக இல்லாமல் அறிவுக்கு விருந்து படைக்கும் திருப்பங்கள் அவை.
பிறந்த தேதி – செப்டம்பர் 15, 1890
இறந்த தேதி – ஜனவரி 12, 1976
வாழ்ந்த ஆண்டுகள் – 85
அகதா மில்லர் என்ற பெயரில் இங்கிலாந்தின் டெவன் பகுதியில் டார்க்கி (TORQUAY, DEVON, ENGLAND) என்னும் கடலோர நகரில் பிறந்தார். நல்ல நடுத்தர வசதியுடைய குடும்பத்தில் பிறந்ததால் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே பாடம் படித்தார். சங்கீதம் கற்பதற்காக பாரிஸ் சென்றார். முதல் உலக மஹா யுத்தம் வெடித்தவுடன் சொந்த ஊரில் செஞ்சிலுவைச் சங்க நர்ஸாகப் பணியாற்றினார். 1914-ம் ஆண்டில் கர்னல் ஆர்ச்சிபால்ட் கிறிஸ்டி என்ற ராணுவ அதிகாரியை மணந்தார் . இருவருக்கும் ஒரு மகள் பிறந்தாள் .1928-ம் ஆண்டில் மண முறிவு ஏற்பட்டவுடன், தொல் பொருட் துறை அறிஞர் மாக்ஸ் மல்லோவனை கல்யாணம் செய்துகொண்டார். அவருடன் சிரியா, இராக் முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். அந்த இடங்களை களங்களாகப் பயன்படுத்தி கதைகளைப் படைத்தார்.
முப்பது வயதில் முதல் கதையை அச்சிட்டார். ‘ஸ்டைல்ஸில் மர்மத் தொடர்பு’ என்ற அந்தக் கதையில்தான் ஹெர்குல் பாய்ரோ அறிமுகப்படுத்தப்பட்டார்.. அவர் பிரெஞ்சு மொழி பேசும் பெல்ஜியம் பகுதியில் பிறந்த கதாபாத்திரம் .அகதா பிறந்தது உயர்நிலை நடுத்தரக் குடும்பம் ஆதலால் அதுவே கதைகளுக்கு அடித்தளமாக , களமாக அமைந்தது; எளிய நடை; நல்ல சம்பாஷணை/உரையாடல் மிகுந்த கதைகள் அவை. கொலைகளும் கூட சாதாரண மனிதர்களிடையே நடப்பனவே; பாய்ரோ அல்லது மாபிள் அந்தப் புதிரை விடுவித்து கொலைகாரனை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைப்பர்.
ஹெர்குல் பைரோ , ஒரு பெல்ஜிய துப்பறியும் நிபுணர். டேவிட் சுசே DAVID SUCHET என்பவர் இந்த பிரெஞ்சு மொழி பேசும் கதாபாத்திரத்தை கன கச்சிதமாக நடித்துப் புகழ் பெற்றார்.
மிஸ் மாபிள் என்னும் கதா பாத்திரத்தை ஜோன் ஹிக்ஸன் JOAN HICKSON என்ற பெண்மணி தத்ரூபமாக நடித்தார் .
அகதா கிறிஸ்டி பிறந்த ஊரான டார்கியில் TORQUAY டெலிவிஷனில் வந்த காட்சிகளை உருவாக்கி வைத்துள்ளனர்.
அகதா, நாடகங்களையும் எழுதினார். அவற்றில் ஒன்றுதான் 1952ல் வெளியான தி மவுஸ் டிராப் . பல விருதுகளைப் பெற்றார். இவரை பிரிட்டிஷ் அரசு சீமாட்டியாக (DAME) அறிவித்தது.


முக்கியக் கதைகளும் நாடகங்களும்
1920 – THE MYSTERIOUS AFFAIR AT STYLES
1926 – THE MURDER OF ROGER ACKROYD
1930 – MURDER AT THE VICARAGE
1934 – THE MUDER ON THE ORIENT EXPRESS
1937- DEATH ON THE NILE
1938 – APPOINTMENT WITH DEATH
1952 – THEY DO IT WITH MIRRORS
1952 – THE MOUSETRAP
1964 – THE CARIBBEAN MYSTERY
1975 – CURTAIN
அவர் மேரி வெஸ்டமக்காட் Mary Westmacott என்னும் புனைப் பெயரில் ஆறு காதல் கதைகளையும் எழுதினார். மொத்தத்தில் 66 துப்பறியும் கதைகளையும் 14 சிறுகதைத் தொகுப்புகளையும் அவர் வெளியிட்டார்.
–SUBHAM–



tags – நாவல் ஆசிரியை,அகதா கிறிஸ்டி,Agatha Christie,





