
Written by London Swaminathan
Date: 9 September 2016
Time uploaded in London: 9-04 AM
Post No.3137
Pictures are taken from various sources; thanks.
உலகம் முழுதும் அகதிகள் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. ஆயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்று அடைக்கலம் கோருகின்றனர். அவர்களுக்குப் பல நாடுகள் அடைக்கலம் தருகின்றன. இவையெல்லாம் சரணாகதி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கோட்பாடு. யாராவது ஒருவர் உன்னைச் சரண் அடைகிறேன் என்று மற்றவர் காலில் விழுந்துவிட்டால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்து தர்மக் கோட்பாடு. ராமாயணத்தில் மிகப் பெரிய அளவுக்குப் பேசப்படுவது சரணாகதி தத்துவம் ஆகும். இது ராமாயணத்தின் பிற்பகுதியில் விபிஷணன் சரண் அடையும்போது பெருமளவில் விவாதிக்கப்படுகிறது; விவரிக்கப் படுகிறது. அதற்கெல்லாம் பீடிகை போடும்படியாக கிஷ்கிந்தா காண்டத்திலேயே கம்பன் சில பொன்மொழிகளை உதிர்க்கிறான். இதோ இரண்டு பொன் மொழிகள்:–
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி
தொடங்கின மற்றும் முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே
கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ
பொருள்:-
பரந்த இந்த உலகத்தில் உயிர்கள் எல்லாம் விரும்பியவற்றை உதவி, வேள்வி, தவம் முதலியவற்றை நிறைவேற்றும்படி மேலோர் செய்வர் அல்லவா? அததகைய அறங்களுள், எமன் போன்ற எதிரிக்குப் பயந்து நம்மிடம் சரண் அடைந்தவர்க்கு அஞ்சாதே என்று அருள் காட்டுவதை விடப் பெரிய அறம்/தர்மம் வேறு ஏதாவது உளதோ?
இது யார் சொன்னது? எங்கே சொன்னது?
ராம லெட்சுமணர்களைச் சந்தித்த அனுமன் சுக்ரீவனுக்கு, வாலியினால் ஏற்பட்ட துனபங்களை விவரித்துவிட்டு சரண் அடைந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது (இந்து) தர்மம் அல்லவா? என்கிறான்.

சுக்ரீவன் இதைத் தன் வாயாலேயே சொல்லி காலில் விழும் ஒரு பாடலும் வருகிறது:–
முரணுடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின் காறும் உலகு எங்கும் தொடர இக்குன்று
அரண் அடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன்
சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்
பொருள்:-
என் அண்ணனான வாலி, தம்பியாகிய என்னை அடிப்பதற்காக ஓங்கிய கைகளுடன் இவ்வுலகத்துக்கு அப்பாலும் எல்லா உலகங்களிலும் என்னைத் துரத்தி வந்தான். இம்மலையே பாதுகாப்பான இடம் என்பதால் இங்கே வந்தேன்; உயிரை விடவும் மனம் இல்லை; உன்னை அடைக்கலம் அடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குக் கடமையாகும் – என்று சொன்னான் சுக்ரீவன்
“என்னைத் தாங்குதல் தருமம்” என்றான் என்ற வாக்கியத்தில்தான் இந்து தர்மக் கோட்பாடு பளிச்சிடுகிறது.
இன்று உலகம் முழுதும் அகதிகள் வாழ வழிவகுத்தது இந்து மதம். சுக்ரீவன், வாலி என்பவர்கள் ஓரிரு தனி நபர்கள். ஆயினும் போரில் சரண் அடைந்தவர்களையும் காப்பாற்றுவது நமது இதிஹாச புராணங்களில் உள்ளது. சரியான ஆயுதம் இல்லாதவர்ளையும், ஆயுதமே வைத்திராதவர்களையும் தாக்கக்கூடாது என்பதும் தெளிவாககக் கூறப்பட்டுள்ளது.
புருஷோத்தமன் (போரஸ்) என்ற மன்னனை அலெக்ஸாண்டர் வென்று விட்டான். உனக்கு என்ன வேண்டும்? உயிர்ப்பிச்சை வேண்டுமா? இவ்வளவு சிறிய மன்னனாலும் என்னையே திணறடித்துவீடாய்! — என்றான். அவனோ சிறிதும் அஞ்சாமல் என்னை மன்னன் போலவே நடத்த வேண்டும் என்றான். அதன்படியே செய்தான் அலெக்ஸாண்டர். இது தர்மம் என்பதால் அப்படிக்கேட்டான் புருஷோத்தமன (போரஸ்). இந்துமதத்தின் பெருமையையும் பாரதத்தின் பெருமையையும் அறிந்து யோகிகளைச் சந்திக்கவே இந்தியாவுக்கு வந்தவன் அலெக்ஸாண்டர் என்பதால் உடனே அவனை மன்னன் போலக் கருதி அவன் ராஜ்யத்தை அவனிடமே ஒப்படைத்தான் என்பதை நாம் அறிவோம்.
வாழ்க சரணாகதி தத்துவம்!! வாழ்க அகதிகள்!!
You must be logged in to post a comment.