அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 1 (Post No.8545)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8545

Date uploaded in London – – –21 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

திருநெல்வேலியிலிருந்து திரு R.C.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர். 

இது ஜூலை 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 1

ச.நாகராஜன்

தொன்று தொட்டு இருந்து வரும் வர்ம வைத்தியம்!

இன்றைய நாட்களில் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் அல்லோபதி மருத்துவமே அடிப்படை மருத்துவமாக உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. இது அல்லாத மற்ற மருத்துவ முறைகள் மாற்று மருத்துவம் என்ற பெயரைப் பெற்று விட்டன.

அல்லோபதி வைத்தியம் தோன்றிய காலம் சமீப காலமே. ஆனால் தொன்று தொட்டு இருந்து வந்த மருத்துவ முறைகள் மாற்று மருத்துவமானது காலக் கொடுமையே!

என்றபோதிலும் உடலில் அறுவைச் சிகிச்சை போன்றவை வியத்தகு முறையில் முன்னேறி இருப்பது அறிவியல் வளர்ச்சியினாலேயே என்பதை எவரும் மறுக்க முடியாது.

பழைய மருத்துவ முறைகளையும் அல்லோபதி மருத்துவத்தையும் நன்கு அறிந்த ஒரு டாக்டர் அபாரமான அபூர்வமான குணப்படுத்தும் சக்தியைக் கொண்டிருப்பார்.

அவருக்கு சித்த மருத்துவம், மூலிகைகளின் ஆற்றல், வர்ம வைத்தியம் அல்லது அகு பிரஷர், அகு பங்சர், ஹொமியோபதி, யோக சிகிச்சை, மந்திர ஆற்றல் சிகிச்சை, மலர் மருத்துவம், முத்ரா விஞ்ஞானம் போன்றவை தெரிந்திருந்தால் அவர் டாக்டர் என்ற நிலையிலிருந்து மாறி வியக்கத் தகும் மகான் நிலைக்கு உயர்கிறார்.

அகு பிரஷர் என்ற மாற்று மருத்துவம் பழைய காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த ஒரு மருத்துவ முறையே.

உடலில் இருக்கும் வர்மப் புள்ளிகளையும் சக்தி நாளங்களையும் அறிந்து அதன் மூலம் உடல் நோய்களை அறிபவர் வர்ம வைத்தியம் தெரிந்தவர்.

கரத்தாண்டகக் கலை!

இதில் எனது ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பது ஒரு சுவையான தகவல்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இருந்த போது, கராத்தே பற்றியும் யோகா பற்றியும் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அந்த நண்பர் கரத்தாண்டகம் என்பதைப் பற்றிக் கூறி இது கராத்தேயை விட சக்தி வாய்ந்தது, எதிராளியின் வர்மப்புள்ளியைத் தாக்கும் கலை என்றார்.

இந்தக் காலத்தில் இதை யார் தெரிந்து வைத்திருக்கப் போகிறார் என்று நான் கூறிய போது அவர் கரத்தாண்டகம் கணபதியை உங்களுக்குத் தெரியுமா என்றார்.

தெரியாது என்ற பதிலைக் கேட்டவுடன் அவர் கரத்தாண்டகம் கணபதி அவர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன் என்றார்.

அவரைச் சந்தித்தேன்.

வர்மப் புள்ளிகள் என்றால் என்ன, அவற்றை அறிவதால் என்ன பயன்கள் என்று கேட்ட போது பதில் சொல்லாமல் அவர் என் வலது கையை ஒரு இடத்தில் அமுக்கினார்.

அவ்வளவு தான், எனது நடு விரல் சடக்கென நிமிர்ந்து கொண்டது. என்ன செய்தாலும் அது இயல்பான நிலைக்கு வரவே இல்லை.

ஆச்சரியத்துடன் இது என்ன, எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டேன்.

உடனடியாக் கையில் ஒரு இடத்தை அமுக்கினார். இயல்பு நிலைக்கு விரல் வந்து தனது வழக்கமான இயக்கத்தை மேற்கொண்டது.

அவர் வர்மப் புள்ளிகளையும் அதன் ஆற்றல்களையும் உடலில் நோய் ஏற்பட்டால் அவற்றைக் கண்காணித்துச் சீர் படுத்துவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம் என்றும் கூறினார்.

அத்தோடு தற்காப்புக் கலையில் எதிராளி எந்த ஆயுதம் வைத்திருந்தாலும் வர்மப் புள்ளிகளைத் தாக்குவதன் மூலம் அவரைச் செயலிழக்க வைக்க முடியும் என்று கூறி விட்டு சில பயிற்சிகளைச் செய்து காண்பித்தார்.

வியந்தேன்.

அவரைப் பற்றி உடனடியாகக் கட்டுரை எழுதினேன். அது வெளியான இதழையும் அவருக்குக் கொடுத்தேன். மகிழ்ந்தார்.

அதிலிருந்து வர்மக் கலை பற்றிய ஆர்வம் அதிகரித்தது.

இப்போது அகு பிரஷர், அக்கு பங்சர் உலகெங்கும் பரவிய ஒரு மாற்று மருத்துவ முறையாகி விட்டது.

இதை அல்லோபதி சிகிச்சையுடன் இணைந்து செய்கின்ற போது அபார பலனைக் காண்பதாக நோயாளியும் அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டரும் இணைந்து கூறுகின்றனர்.

அகுபிரஷர் பற்றிய சில அடிப்படை விவரங்கள்!

முதலில் அகுபிரஷரைப் பற்றி அடிப்படை கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.அகுபிரஷர் வந்த நோய்களைப் போக்க வல்லது. வரும் நோயை அது தீவிரமாகுமுன் தடுக்க வல்லது.

2. உலகில் ஏராளமானோர் இப்போது அகு பிரஷர் சிகிச்சை முறையை மேற்கொண்டு அற்புதமான முறையில் குணமடைந்து விட்டதாகக் கூறுகின்றனர்.

3. உடலின் மேற்பகுதியில் உள்ள சில சக்திப் புள்ளிகளை அழுத்தி, தூண்டி விட்டு, செயல்பட வைப்பதே அகு பிரஷர் முறை. இது தொன்றுதொட்டு பழைய காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு முறை.

இந்தியா, சீனா, இன்னும் உலகின் பல பகுதிகளில் உள்ள பழங்குடியினர் கடைப் பிடித்து பயனடைந்த முறையும் கூட!

4. இதில் அற்புதமான ஒரு உண்மை – இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்பது தான்.

5. 1972இல் சீனாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் இந்த முறை மீது அலாதி ஆவலை வெளியிட்டார். அவருடன் அவர் மனைவி ‘பேட்’ இதனால் கவரப்பட்டார். நாடு திரும்பியவுடன் நிக்ஸன் இதை அமெரிக்கர்களின் கவனத்திற்குக் கொண்டு வரவே இந்த சிகிச்சை முறை அங்கும் பரவலானது. இப்போது சீனா, இந்தியா, ஜப்பான், இலங்கை, கொரியா, இந்தோனேஷியா, மலாசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த சிகிச்சை முறை கையாளப்பட்டு வருகிறது.

6. அமெரிக்க டாக்டரான டாக்டர் வில்லியம் ஹெச். பிட்ஜெரால்டு DR William H. Fitzgerald – 1872-1942) இதை அறிவியல் முறையில் ஆராய்ந்தார். இது Zone therapy, Reflexology, Acu Pressure  ஆகிய பெயர்களால் அறிமுகமாகியது. டாக்டர் வில்லியம் கனெக்டிகட்டில் உள்ள செயிண்ட் ஃபிரான்ஸிஸ் மருத்துவ மனையில் தொண்டை,மூக்கு பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் தான் நவீன ‘ஜோன் தெராபி’யை அறிமுகப்படுத்தினார்.

7. டாக்டர்  ஜோ ஷெல்பியும் அவரது மனைவியான டாக்டர்  எலிஸபத் ஆன் ஷெல்பியும் இதில் ஆர்வம் காட்டினர். டாக்டர் ஜோ 12 அரிய புத்தகங்களை ஜோன் தெராபி பற்றி எழுதியுள்ளார். முதல் புத்தகம் 1917லும் கடைசி புத்தகம் 1942லும் வெளியானது.

8. அகு பிரஷர் சிகிச்சை உடலில் பாய்ந்தோடும் பிராண சக்தியை சமச்சீர் நிலையில் வைக்க வல்லது. இந்த பிராண சக்தியைத் தான் சீன மொழியில் சீ ஆற்றல் (Chi Energy)  என்கின்றனர். உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் அதை உடல் சக்தியே தீர்க்க வல்லது.  இந்த இயற்கை சக்தியின் பாயும் ஆற்றலைப் புரிந்து கொண்டு தக்க முறையில் அதைப் பயன்படுத்தினால் தீர்க்க முடியாத வியாதியே இல்லை. இதை உரிய முறையில் செய்பவரே மிக அரிதாக இருக்கிறார்.

9. 5000 ஆண்டுகளுக்கு முன்பேயே கண்டு பிடிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்தக் கலை பற்றி முதலில் தீர்க்கமாக அறிந்து கொள்ள வேண்டும்; பின்னர் தகுந்த மருத்துவரை நாட வேண்டும்.

10. இந்தியாவில் இது எந்தக் காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தைக் கூறலாம்.

தொன்று தொட்டு பழைய காலத்திலிருந்தே அனைத்து இந்தியக் குடும்பங்களிலும் பெண்கள் காது குத்திக் கொள்வதையும் மூக்கு குத்திக் கொள்வதையும் அறிவோம். அங்கு துளைகள் மூடப்படாமல் இருக்க காதணிகளையும் மூக்குத்தியையும் அணிவதும் வழக்கமானது. அவர்களின் அழகும் பல்வேறு காதணிகளாலும் ஜொலிக்கு வைர மூக்குத்தியாலும் கூடியது! இந்த ரெப்ளக்ஸ் புள்ளிகள் இருக்கும் இடங்களையும் அவற்றை சமச்சீர் படுத்த வேண்டிய அவசியத்தையும் அறிந்த பழைய காலப் பெரியோர் கையில் வளைகள், விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்க நகை, காலில் மெட்டி, இடுப்பில் ஒட்டியாணம் போன்றவற்றை அணிய அறிவுறுத்தினர். இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை அகுபிரஷர் மீதான நவீன அறிவியல் ஆராய்ச்சி மூலம் அறிய முடிகிறது.

இன்னும் சில அபூர்வமான அரிய தகவல்களை அடுத்துக் காண்போம்!

tags- அகு பிரஷர்! – 1

***