Hanuman in Indonesian Ramayana Ballet
Written by ச.நாகராஜன்
Article no. 1718; dated 15 March 2015
Up loaded at 9-57 London time
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 12
ச.நாகராஜன்
ஶ்ரீராமனின் ஶ்ரீதேவியே அனுமான் உன்னைக் காக்க..!
அஞ்சிலே ஒன்று பெற்றான்
ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
இதன் பொருள்:-
அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்
மஹாத்மா அனுமான்
இப்படிப்பட்ட மாபெரும் வீரனை மஹாத்மன: என ராமரே போற்றிப் புகழ்கிறார். அவதார புருஷன் வாயிலாகவே மஹாத்மா பட்டத்தைப் பெற்றவர் அனுமன்! ராமரின் அணுக்கத் தொண்டனான இந்த அனுமனின் செயலைக் குறிப்பிடாமல் தமிழ் திரையுலகம் இருக்க முடியுமா, என்ன?
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் பிரபல கதாநாயகி ஶ்ரீதேவி நடித்த வெற்றிப் படமான ப்ரியா படம் 1978ஆம் ஆண்டில் வெளியான படம்.
இது நாவலாசிரியர் சுஜாதாவின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவரது கணேஷ் லண்டனில் சென்று ஆற்றும் சாகஸங்களைக் கதை சித்தரிக்கும். ஆனால் திரைப்படத்திற்காக நிகழ்வுகளின் களம் சிங்கப்பூராக மாற்றப்பட்டது.
நடிகை ஶ்ரீதேவி ஒரு சேரில் கைகால்கள் கட்டப்பட வாயில் பிளாஸ்திரி போட்டு பேச முடியாமல் தவிக்க எதிரிகளால் அடைக்கப்படுகிறார். படத்திலும் அவர் ஒரு நடிகை தான். காப்பாற்றும் கதாநாயகன் சூப்பர் ஸ்டார் தான் என்பது சொல்லித் தெரியவேண்டாம்.
அவர் ஶ்ரீதேவி இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லுகையில் ஒரு பாடல். வழக்கமாக காலம் காலமாக திரைப்பட ஃபார்முலா படி எதிரிகளின் கோட்டையில் உள்ளே மாறுவேடத்தில் நுழையும் ஒரு கதாநாயகன் ஒரு ஆடல் பாடலைச் செய்வது போலத் தான் இதுவும்!
ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே
இளையராஜா இசை அமைக்க, பாடலைப் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளார். கே.ஜே. ஜேசுதாஸ் பாடிய பாடல் இது.
ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே
ஹனுமான் உன்னைக் காக்க
சிறையில் உன்னை மீட்க
கடல் தாண்டி வந்தானம்மா
எதிர்ப்போரை வெல்வானம்மா
ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா
பாடி பாடி அழைக்கின்றேன்
ஜாடையாக சேதி சொல்வாய்
பாதை ஒன்று கண்டுகொள்ள நீயும் பாடுவாய்
தயக்கம் என்ன, கலக்கம் என்ன
தேவி நீ குரல் கொடு
ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா
நேரம் பார்த்து நெருங்குவேன்
காவல் தாண்டி காக்க வந்தேன்
போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன்
கவலை இல்லை மயக்கம் இல்லை
தேவி நீ குரல் கொடு
ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே
ஹனுமான் உன்னைக் காக்க
சிறையில் உன்னை மீட்க
கடல் தாண்டி வந்தானம்மா
எதிர்ப்போரை வெல்வானம்மா
ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா
பாகப்பிரிவினை சிவாஜி ஸ்டைலில் கையை மடித்துக் கொண்டு இன்னொரு கையில் ஒரு தடியுடன் நடந்து செல்லும் ரஜினி பாடுவதாக காட்சி அமைப்பு உள்ளது. வில்லனின் ஆட்கள் அவரை நெருங்கிக் கண்ணாடியை அகற்றி செக் செய்வதும் பாடலில் அனுமானைப் போல வருவேன் என்று அட்டகாசமாக அவர் தடியுடன் நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவதும் ரஜினி ரசிகர்களை நிச்சயம் குளிர்விக்கும். நவீன கடத்தல் கதையில் கூட ஶ்ரீராமனின் கதை ஞாபகப் படுத்தப்படுகிறது. ராமாயணத்தின் மொத்த வலுவும் இந்தப் பாட்டில் ஏற்றப்பட அதன் மூலம் கதை அமைப்பு சுட்டிக் காட்டப் படுகிறது.
Ramayana Sculptures
பஞ்சு அருணாசலம்
கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்து பின்னர் திரைத்துறையின் பல்வேறு அம்சங்களிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் பஞ்சு அருணாசலம். தயாரிப்பாளராக இருந்து அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவை அறிமுகப்படுத்திய பெரிய பெருமை இவருக்கு நிரந்தரமாக உண்டு. ரஜினி, கமலஹாசன் ஆகியோரின் நடிப்பில் பெரும் ஹிட் படங்களை அளித்தவர் இவர். கதைக்கு ஏற்ப பாட்டு எழுதுவதில் வல்லவர் என்பதை இந்த ‘ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே ஹனுமான் உன்னைக் காக்க’ பாடல் ஒன்றே சிறந்த சான்றாகும்!
குறிப்பு :- (அனுமனைப் பற்றி ராமர் போற்றிய மஹாத்மா என்ற தலைப்பில் ‘ராமாயண வழிகாட்டி’ என்ற கட்டுரைத் தொடரில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஆறாம் கட்டுரையை மேலும் அதிக விவரங்களுக்காகப் படித்து மகிழலாம்)
*****************




You must be logged in to post a comment.