Picture of Sun God giving Akshaya Patra to Yudhistra.
மோசஸ், ஜீஸஸ், திரவுபதி, வசிஷ்டர்—தெய்வீக விருந்துகள்
By Santanam Swaminathan
Post Number 746 dated 15th December 2013
சாது சந்யாசிகளுக்கும் ,ஏழை எளியவர்களுக்கும் தெய்வீக சக்தியால் விருந்து கொடுத்த சம்பவங்கள் எல்லா மத நூல்களிலும் இருக்கின்றன. இதோ எட்டு சுவையான சம்பவங்கள்:
தெய்வீக விருந்து 1
பஞ்ச பாண்டவர்களும் திரவுபதியும் 12 ஆண்டுகளுக்கு காட்டில் வசிக்க நேரிட்டது. அப்போது பல முனிவர்கள், யாத்ரீகர்கள் முதலியோர் அவர்களைக் காண வந்தனர். வீட்டுக்கு வந்தோரை ‘சாப்பிட்டுவிட்டுப் போங்கள்’ என்று சொல்லுவது பாரதப் பண்பாடு அல்லவா? காட்டில் ஏது உணவு? யுதிஷ்டிரருக்கு தர்ம சங்கடமாகப் போனது. தௌம்யர் என்பவர் சூரிய பகவானைப் பிரார்த்திக்கும்படி சொன்னார். அவ்வாறே தர்மரும் (யுதிஷ்டிரர்) செய்தார். சூரிய பகவான் வந்து அக்ஷய பாத்திரத்தை அளித்தார். திரவுபதி அதைக் கொண்டு குறைவில்லாத விருந்து படைத்தார். அக்ஷய என்றால் ‘அழிவில்லாத’, குறைவில்லாத’ என்று பொருள்.(ஆதாரம்: மஹாபாரதம்)
தெய்வீக விருந்து 2
ஏசு பிரான் கலீலி கடலைத் தாண்டி வறண்ட பகுதிக்குச் சென்றார். அவர் செய்த அற்புதச் செயல்களால் ஈர்க்கப்பட்ட 5000 மக்கள் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அவர் சென்ற இடமோ வறண்ட பிரதேசம். அவருக்கு நெருக்கமான சீடர்கள் அவரிடம் வந்து 5000 பேரையும் அவரவர் ஊருக்குப் போகும்படி சொல்லுங்கள், நம்மிடம் உணவு இல்லை என்றனர். ஏசுவோ, எவ்வளவு உணவு இருக்கிறது ? என்று கேட்டார். இரண்டு மீன்களும் ஐந்து ரொட்டிகளும் தான் உள்ளன என்றனர். அதைக் கொண்டுவர கட்டளையிட்ட ஏசு, எல்லோருக்கும் உணவு பரிமாறத் தொடங்கினார். எல்லோருக்கும் வயிறு நிறைந்தது. சீடர்கள் அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்தபோது 12 கூடை மீன்களும் ரொட்டியும் மீதம் இருந்தன!!(ஆதாரம்: பைபிள் புதிய ஏற்பாடு)

Jesus feeding 5000.
தெய்வீக விருந்து 3
மகரிஷி வசிஷ்டருக்கும், மாமன்னன் விஸ்வாமித்ரருக்கும் எப்போதும் மோதல்தான். ஒருமுறை காட்டில் இருந்த வசிட்டரைக் காண விஸ்வாமித்ரர் வந்தார். மாமன்னன் வந்தால் உபசரிக்க வேண்டுவது கடமை அல்லவா? வசிட்டரும் அன்போடு உபசரித்து, மன்னனின் படை முழுதுக்கும் அறுசுவை உணவு படைத்தார். விசுவாமித்திரருக்கு வியப்பு தாங்கவில்லை. நினைத்ததை எல்லாம் வழங்கும் காமதேனு என்ற தெய்வீகப் பசுதான் வசிட்டருக்கு உதவியது என்பதைக் கேட்டு, அதைத் தனக்குக் கொடுக்குமாறு கேட்டார்.
வசிட்டர் அதற்கு மறுக்கவே, பலவந்தமாக காமதேனுவைக் கைப்பற்றினார். வசிட்டர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. காமதேனுவின் உடலில் இருந்து நூற்றுக கணக்கான வீரர்கள் வெளியே வந்து விசுவாமித்திரரின் படைகளைத் துவம்சம் செய்துவிட்டனர்(ஆதாரம்: ராமாயணம்)
தெய்வீக விருந்து 4
இஸ்ரேலியர்களை மோசஸ் அழைத்துச் சென்ற பாலைவனப் பகுதியில், ‘மன்னா’ என்ற உணவு வானத்தில் இருந்து கிடைத்ததாக பைபிளின் பழைய ஏற்பாடு கூறுகிறது. நாற்பது ஆண்டுக் காலத்துக்கு இந்த உணவின் மூலம் அவர்கள் உயிர் வாழ்ந்தனர். ‘மன்னா’ என்பது எகிப்திய ‘மென்னு’ ( உணவு) என்ற சொல்லுடன் தொடர்புடையதாக ஆராய்ச்சியாளர் கூறுவர். ஆனால் ‘அன்னம்; என்பதே ‘மன்ன’ என்று திரிபடைந்ததாக நான் ஏற்கனவே “பைபிளில் சம்ஸ்கிருதம்” என்ற எனது ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன். !!(ஆதாரம்: பைபிள் பழைய ஏற்பாடு)
தெய்வீக விருந்து 5
ராமனைக் காண காட்டிற்கு வந்த பரதன், பரத்வாஜர் என்னும் முனிவரைத் தரிசிக்க அவரது ஆஸ்ரமத்துக்கு வந்தான். எல்லோரும் எங்கே? என்று முனிவர் கேட்டார். நான் பெரும் படையுடன் வந்து இருக்கிறேன். படைகளை அழைத்துவந்தால் செடி, கொடிகளூக்குச் சேதம் வருமே என்று கருதி தொலைவில் நிறுத்தினேன் என்றார். அவருக்கு முனிவர் அறுசுவை விருந்து படடைத்தார். புறச்சசூழல் பாதுகாப்பின் முன்னோடி பரதன்! ராமன் இலங்கையில் இருந்து திரும்பிப் போகையில், பரத்வாஜ முனிவரை சந்தித்தான். அவர் தனது மந்திர சக்தியால் அங்கிந்திருந்த அனைவருக்கும் உணவு கொடுத்தார்.!(ஆதாரம் வால்மீகி ராமாயணம்)
தெய்வீக விருந்து 6
மணிமேகலை என்பவர் மாதவியின் மகள். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அந்தப் பெண்ணிடம் அமுத சுரபி என்னும் மந்திரக் கலயம் கிடைத்தது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பதை அறிந்த மணிமேகலை, அமுத சுரபி மூலம் சிறைச் சாலை கைதிகளுக்கு உணவு படைத்தார். (ஆதாரம்:மணிமேகலை)
தெய்வீக விருந்து 7
திருவிளையாடல் புராணத்தில் வரும் நிகழ்ச்சி இது. வேளாளக் குடியில் பிறந்த தரும சீலை என்பவர் மதுரையில் இருந்து எல்லோருக்கும் உணவு வழங்கி வந்தார். அவருடைய பெருமையை பாண்டிய நாடு முழுதும் அறியவேண்டி சிவபெருமான் ஒரு லீலை செய்தார். அவர்கள் நிலத்தில் விளைச்சலைக் குறைத்தார். அப்படியும் அந்த தம்பதிகள், கடன் வாங்கி தருமச் சாப்பாடு போட்டனர். கடன்காரர்கள் வந்து மொய்க்கவே சிவன் கோவிலுக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அங்கே அவர் முன் தோன்றிய ஆலவாய் அண்ணல் சிவபெருமான், ‘வீட்டுக்குப் போய் பரண் முழுதும் இருக்கும் நெல்லை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்யுங்கள்’ என்றார். அது எடுக்க எடுக்க வளரும் ‘உலவாக் கோட்டை’ என்றும் சிவன் அருளினார்.( ஆதாரம்: திருவிளையாடல் புராணம்)
Picture of Divine Cow Kamadhenu
தெய்வீக விருந்து 8
மதுரையின் மஹாராணி மீனாட்சிக்கும் சிவனின் அவதாரமான சுந்தரபாண்டியனுக்கும் திருமணம் தடபுடலாக நடந்தது. எல்லோரும் சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டனர். ஆனால் இன்னும் ஆயிரக கணக்கான மக்களுக்கான உணவு அப்படியே மிஞ்சி இருந்தது. சமையல்காரகளுக்கு மனக் கஷ்டம். அன்னை மீனாட்சியிடம் முறை இட்டனர். அவளோ அன்புக் கணவர் சுந்தரேஸ்வரிடம் முறையிட்டாள். ஒரு புன்சிரிப்பு முகத்தில் தவழ்ந்தது. பக்கத்தில் இருக்கும் குண்டோதரனை அழைத்து ‘போய், சாப்பீட்டு வா’ என்றார். அவன் சமையல் அறையில் நுழைந்த அடுத்த நிமிடம் அறையே காலி!!
‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்’ என்று பாடிய வண்ணம், அவன் மேலும் உணவு கேட்டான்! மலைத்துப் போய்விட்டனர் அரண்மனை சமையல்காரர்கள். மீண்டும் மீனாட்சியிடம் உதவியை நாடி ஓட, அவர் மீண்டும் சிவனிடம் ஓடினார். அவர் அன்னபூரணியை மனதில் நினைத்த அடுத்த நிமிடம் பூமியில் இருந்து சாப்பாடு வந்தது. இப்போது அவனுக்கு தாகம் வரட்டியது. ‘தண்ணீர் தண்ணீர்’ என்று அலறவே அங்கிருந்த நீர் எல்லாம் போதவில்லை. குண்டோதரனை அழைத்த சிவ பெருமான், ‘வை’ ‘கை’ என்று சொல்லி அவன் கைகளைக் கீழே வைக்கச் சொன்னார். அதில் இருந்து ‘வைகை’ நதி பீறிட்டெழுந்தது. அவனும் தாக சாந்தி செய்துகொண்டான். அவன் சாப்பிட்ட அன்னக் குழி மண்டபம் இன்றுவரை மதுரை கோவில் அருகே உள்ளது.(ஆதாரம்: திருவிளையாடல் புராணம்)
Contact swami_48@yahoo.com




You must be logged in to post a comment.