
Written by London swaminathan
Date: 23 September 2016
Time uploaded in London: 8-43 AM
Post No.3180
Pictures are taken from various sources; thanks.
நல்ல மன்னர்கள் ஆட்சி செய்தால் அங்கு இயற்கையாகவே பகைமை கொண்ட கீரியும் பாம்பும், பூனையும் எலியும், புலியும் மானும் கூடப் பகைமையை விட்டு நட்பு பராட்டுமாம்.
கம்பனும் காளிதாசனும் தரும் தகவல் இது:-
இதோ கம்பன் பாடல்:
கருங்கடல் தொட்டனர் கங்கை தந்தனர்
பெரும்புலி மானொடு புனலும் ஊட்டினர்
பெருந்தகை என் குலத்து அரசர் பின் ஒரு
திருந்திழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்
–கலன் காண் படலம், கிஷ்ககிந்தா காண்டம்
பொருள்:-
பெருமையுடைய எனது முன்னோர்கள் கடலைத் தோண்டினர் (சகரர் கதை); மேலுலகதில் இருந்த கங்கையை பூவுலகுக்கு கொண்டு வந்தனர் (Civil Engineer பொறியியல் வல்லுனன் பகீரதன் கங்கையைத் திருப்பிவிட்ட புராணக் கதை); போர் செய்யும் இயல்புடைய புலியையும் யானையையும் ஒரே துறையில் நீர் அருந்துமாறு செய்தனர் (தர்ம ஆட்சி). அவர்கள் குலத்தில் உதித்த நானோ மனைவியின் துயரைத் தீர்க்கும் தவத்தைச் செய்யாதவனாக உள்ளேன் (சீதை பற்றி ராமன் புலம்பல்)
–கிட்கிந்தா காண்டம்

வேறொரு இடத்தில்
புலிப்போத்தும் புல் வாயும் ஒரு துறையில் நீருண்ண
உலகாண்டோன் ஒருவன் — என்று பாடியுள்ளான்
வள்ளுவனோ இதற்கும் ஒரு படி மேல் சென்று
தர்ம ஆட்சி நடத்தும் மன்னன் நாட்டில் பருவமழை கொட்டும்; விளைச்சல் பெருகும் என்பான் (குறள் 545); கொடுங்கோலன் நாட்டில் மழையும் பெய்யாது; பசு மாடும் பால் தராது; பார்ப்பனர்களுக்கு வேதங்கள் மறந்து போகும் என்பான் (குறள் 559, 560)
காளிதாசனும் இதே கருத்தை முன்வைக்கிறான், ரகு வம்சத்தின் ஆறாவது சர்கத்தில் 46 ஆம் பாடலில் ஒரு உவமை வருகிறது.முனிவர்களின் ஆஸ்ரமத்தில் இயற்கையிலேயே பகைமை உடைய மிருகங்களும் எப்படி பகைமை பாராட்டாது நட்புறவு கொள்ளுமோ அதுபோல……………………………..
முனிவரின் ஆஸ்ரமத்தில் புலியும் மானும் யானையும் சிங்கமும் போன்றை ஒன்று தாக்காமல் அமைதியாக வரும் என்பது இதன் பொருள். அது போல நீப மன்னனின் ஆட்சியும் குண நலன்களும் இருந்தன என்பான் காளிதாசன்.
மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் சிவபெருமானின் கருணை பற்றிப் பேசுகையில் “புலி முலை புல்வாய்க்கு அருளினை போற்றி” என்று விதந்தோதுவார்.

இளங்கோ தரும் அதிசயத் தகவல்
நெஞ்சையள்ளும் சிலப்பதிகார காவியத்தில் பாண்டிய நாட்டில் நீதியும் அமைதியும் நிலவுவதால் இடி, மின்னல் கூட மக்கள் மீது விழாது; புலியும் மானும் சண்டை போடாது; முதலைகள் தாக்காது; துர் தேவதைகள் ம னிதனைப் பிடிக்காது; பாம்பும் கடிக்காது; கரடி கூட புற்றுமண்ணைத் தோண்டி கறையான் எறும்புகளைச் சாப்பிடா து. ஏனெனில் அங்கே தர்ம ஆட்சி நடக்கிறது. பகல் நேரத்திலு ம் பெண்ணும் ஆணும் போவது போல இரவில் பவுர்ணமி வெளிச்சத்திலும் போகலாம்; ஒரு பயமும் இல்லை– என்று இளங்கோ அடிகள் இயம்புவார்.
கோள்வல் உளிஒயமும் கொடும்புற்று அகழா;
வாள்வரி வேங்கையும் மன் கணம் மறலா;
அரவும், சூரும், இரைதேர் முதலையும்,
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா —
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு
—புறஞ்சேரி இறுத்த காதை, சிலப்பதிகாரம்
புறநானூற்றில் புலியும் மானும்
புறநானூற்றில் ஒரு அரிய செய்தி வருகிறது. ஒரு பெண் மானை ஒரு புலி கொன்றுவிட்டது. அதனுடன் ஒரு குட்டியும் இருந்தது. அந்தக் குட்டியை கொன்று சாப்பிடவில்லை. அதற்குக் காட்டிலுள்ள ஒரு முதிய காட்டுப்பசு பால் கொடுத்ததாம். தாயன்பு என்பது இந்த மிருகம், அந்த மிருகம் என்ற வரையரைக்கு எல்லாம் அப்பாற்பட்டது:-
புலிப்பாற்பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
—புறநானூறு 323
–subham–
You must be logged in to post a comment.