பிராணன், மனம், புத்தி, சித் ரூபம், ஆனந்த ரூபம் விளக்கம்! (Post No.4574)

 

Date: 2 JANUARY 2018

 

Time uploaded in London- 5-23 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4574

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 7

 

பிராணன், மனம், புத்தி, சித் ரூபம், ஆனந்த  ரூபம்  விளக்கம்!

.நாகராஜன்

 

 

இனி பிராணன், மனம், புத்தி பற்றித் தெரிந்து கொள்வோம்

*

 

ஐயா, பல விஷயங்கள் பற்றிய விளக்கங்களை நன்கு சொல்லி விட்டீர்கள். நன்றி,

பிராணன் என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்?

நல்ல கேள்வி!

உச் ச்வாஸம் நிச் ச்வாஸம் முதலியவற்றின் வியாபாரங்களினால் சரீரத்தைத் தரிக்கின்ற சக்தியைக் கொடுப்பதுவே பிராணன் எனப்படும்.

அது, பிராணன், அபானன், விதானன், உதானன், சமானன் என இப்படி ஐந்து வகைப்படும்.

 

மனம் என்றால் எது?

விசாரணை ஸ்வரூபமான அந்தக்கரண விருத்தி தான் மனம்.

 

புத்தி என்றால் எது?

நிச்சய ஸ்வரூபமான அந்தக்கரண விருத்தி தான் புத்தி.

 

ஆத்மா சச்சிதானந்த ஸ்வரூபன் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன் பொருள் என்ன?

சத் என்றால் பாதிக்கப்படாதது.

 

சித் என்றால் சுயம் பிரகாசமானது (அதாவது தானே பிரகாசிப்பது)

ஆனந்தம் என்றால் சுவானுபவமே.

 

அப்படியா, நன்றி, ஐயா. சித்திற்கும் ஜடத்திற்கும் விலக்ஷணம் எவை?

சித் என்பது சூரியன் போன்ற அன்னிய பிரகாசத்தை வேண்டாமல் தன் இயற்கை பிரகாசத்தினாலேயே தானே பிரகாசிப்பது.

அப்படி பிரகாசித்துக் கொண்டும்,தன்னிடத்தில் ஆரோபிக்கப்பட்ட ஜடத்தையும்  பிரகாசிப்பதாயும் இருப்பது எதுவோ அது தான் சித்.

ஜட லக்ஷணமாவது,  இயற்கையாக பிரகாசம் அற்றதாகவும், இதர வஸ்துக்களை பிரகாசிக்க வைக்கும் சக்தி அற்றதாகவும் இருப்பது எதுவோ அது தான் ஜடம்.

 

ஆனந்தத்திற்கும் துக்கத்திற்கும் விலக்ஷணம் என்ன?

ஆனந்தம் எது என்றால், உபாதி அற்றதாகவும், நிரதிசயமாயும், நித்தியமாகவும் இருக்கின்ற அமிர்தம் போன்ற சுகமே ஆகும்.

இதற்கு எதிர்மறையாக எது இருக்கிறதோ அதுவே துக்கம்.

ஆத்மாவுக்கு அவஸ்தா த்ரயம் லக்ஷணம் எப்படி?

ஜாக்ரதம்,

ஸ்வப்னம்,

சுஷூப்தி என இப்படி மூன்று அவஸ்தைகள் ஆத்மாவுக்கு உண்டு.

 

இந்த மூன்று அவஸ்தைகளும் ஆத்மாவிற்கு எப்படி வந்தது?

ஆத்மாவிடம் சாக்ஷி லக்ஷணம் இருப்பதால் வந்தது.

 

சாக்ஷி லக்ஷணம் என்றால் என்ன?

ஒருவன் இன்னொருவனையும், அந்த இன்னொருவனின் அவஸ்தையின் வியாபாரங்களையும்  தான் விகாரம் அடையாமல் – வேறுபாடு அடையாமல் –  நோக்கபட்டது போலாம்.

ஜீவாத்மாவும் ஸ்தூல சரீரத்தின் அபிமானியாகி,  ஜாக்ரதா அவஸ்தையில் மூன்று வித கரணங்களின் வியாபாரத்துடன் கூடி, விசுவன் என்ற பெயரையும்,

சூஷ்ம சரீரத்தின் அபிமானியாகி,  ஸ்வப்னா அவஸ்தையில் மனோமயமான மூன்று வித கரணங்களுடைய வியாபாரத்தினால் தைஜஸன் என்ற பெயரையும்,

பிறகு காரண சரீரத்தின் அபிமானியாகி, சுஷூப்தி அவஸ்தையில்  மூன்று கரணங்களை அடக்கிக் கொண்டு பிராக்ஞன் என்ற பெயரையும் பெறுகிறான்.

இப்படி ஆத்மாவானவன், கூடஸ்தனாகவும், ஆகாயம் போல ஒட்டாதவனாகவும், மூன்று அவஸ்தைகளின் பிரதியக்  சைதன்யமாக இருப்பதுவே சாக்ஷி லக்ஷணம் ஆகும்.

 

அவஸ்தையை அனுபவிப்பனிடம் தான் சாக்ஷித்துவம் காணப்படுகிறது. அப்படி இருக்கும் போது, அவஸ்தா சாக்ஷித்துவம் அந்நியனிடம் இருப்பது போல அல்லவா காணப்படுகிறது! இது எப்படி?

இந்த அவஸ்தையை உடையவன், அந்தக் கரணத்தில் பிரதிபிம்பித்த சைதன்யபாசனே!

அவன் பொய்யானவன்.

அவன் ஜீவன் என்று சொல்லப்படுகிறான்.

ஜீவனோ விகாரி. ஆத்மாவோ நிர்விகாரி.

ஆகவே ஆத்மாவுக்கே சாக்ஷித்துவம் பொருந்தும். விளங்குகிறதா?

 

ஆத்மா நிர்விகாரி என்பது எப்படித் தெரியும்?

அந்தக்கரண பிரதிபிம்பத்தினால் அறியக்கூடும்.

 

இந்த அந்தக்கரணமும் இதன் பிரதிபிம்பமான ஜீவனும் ஆத்மாவை அறியாதோ?

அறியாது. ஏனெனில் அறியப்படுவதாகவும், த்ருஷ்யம் எனப்படுவதாகவும் அதாவது பார்க்கப்படுவதாகவும் உள்ள ஆத்மா த்ருக்ரூபன். அதாவது பார்க்கின்ற சுபாவமுடையவன்.

அது எப்படி ஐயா?

சொல்கிறேன், கவனமாகக் கேளுங்கள்.

காணப்படுகின்ற கடம் காண்பவனை அறியாது.

ஆனால் காண்பவனோ ஸ்வயம்பிரகாசமுடையவன் ஆதலால் தன்னைத் தான் அறிகிறான்.

ஆகவே காணப்படுகின்ற அகங்காரமும், அதன் அவஸ்தை, மற்றும் வியாபாரங்கள் ஆத்மாவைத் தொடமாட்டா.

இப்படி ஆத்மாவை எவன் ஒருவன் அவஸ்தா த்ரய சாக்ஷியாகக் காண்கிறானோ அவனே ஜீவன் முக்தன்!

 

ஐயா,நன்றி. கோசம், ஆத்மா சித் ரூபன் என்பதற்கு பிரமாணம் என்ன என்பன போன்ற கேள்விகள் மனதிலே தோன்றுகிறது. கேட்கலாமா?

 

நன்றாகக் கேளுங்கள், பதில் சொல்கிறேன்!

xxxx

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 –வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017

 

 

****