
Written by London swaminathan
Date: 2 December 2016
Time uploaded in London: 10-39 am
Post No.3409
Pictures are taken from various sources; thanks. They are representational.
contact; swami_48@yahoo.com
தமிழில் ஒரு பாடல் உண்டு; பசி வந்திடப் பத்தும் பறந்து போம். அதாவது
மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்— எல்லாம் பசி வந்தவனிடத்தில் இருக்காது.
இதையே மாற்றிப் போட்டால், பசி இல்லாவிடில் இந்த பத்து குணங்களும் இருக்கும். அதனால்தான் இந்துக்கள் அன்னதானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
லட்சம் பேர் சாப்பிட்டால், அதில் ஒருவர் நல்லவர் இருந்தாலும், அதன் காரணமாக நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் நன்மை விளையும் என்று காஞ்சி பரமாசார்யார் சொற்பொழிவில் கூறியுள்ளார். ஆனால் அன்னதானத்தின் மூலம் சிறைக் கைதியும் மனம்மாறிய செய்தி நேற்று பிரிட்டிஷ் (1-12-2016) பத்திரிக்கைகளில் வெளியாகியது.
கற்பழிப்புக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்– அத்மி ஹெட்லி (வயது 34). அவர் சிறையிலிருந்து தப்பித்து ஓடினார்…. ஓடினார்…. மூன்று நாள் ஓடினார். பசி வயிற்றை வாட்டியது. மயக்கம் வந்து ‘தொப்’ என்று கீழே விழுந்தார்.
எங்கே தெரியுமா?
டாம் பிலிப்ஸ் (வயது 22), ஐடன் பைர்ன் (வயது 21) ஆகிய இருவர் வசித்த வீட்டின் வாசலில் விழுந்தார். அவர்கள் கதவைத் திறந்தவுடன் மயக்கம் தெளிந்து கொஞ்சம் தண்ணீர் கேட்டார் ஹெட்லி .

தண்ணீர் குடித்தவுடன் ஒரு வெடிகுண்டுச் செய்தியைப் போட்டார். பிள்ளைகளே , நீங்கள் என்னிடம் அன்பு காட்டினீர்கள். நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் லேஹில் சிறையிலிருந்து ஓடி வந்த கைதி. என் பெயர் அத்மி ஹெட்லி. சிறைவாசத்தின்போது நான் முஸ்லீமாக மதம் மாறிவிட்டேன். நீங்கள் போலீஸைக் கூப்பிட்டு என்னை ஒப்படைக்கலாம்.
ஆனால் மணவர்களோ உடனே அப்படி போலிஸைக் கூப்பிடவில்லை. “கொஞ்சம் பொறுங்கள்– சாப்பிட்டுவிட்டுப் போக லாம்” என்று சொல்லி, சுவையான, சூடான் உணவைச் சமைத்தனர். கோழிக்கறி, சூப், பாஸ்தா எல்லாம் சூடாகப் பறிமறினர் அன்புள்ளம் படைத்த மாணவர்கள்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் (ப்பாள்)?
கைதியின் கண்களில் இருந்து கண்ணீர் குபுகுபுவெனப் பாய்ந்தது.
மேலும் தனது சொந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டார்:
“எனக்கு 12 வயது மகன் உண்டு. அவனை 9 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை”.
உடனே இரண்டு மாணவர்களில் ஒருவரான பிலிப்ஸ் (பிரிஸ்டல் பல்கலைக் கழக தத்துவ இயல் மாணவர்), “அதனால் என்ன? கவலைப் படாதீர்கள். இதோ என் மொபைல் போன். உங்கள் மகனைக் கூபீட்டுப் பேசுங்கள்” என்று போனைக் கையில் கொடுத்தார்.
ஆனால் நாங்கள் ஏன் 9 ஆண்டுகளாக நீங்கள் பேசவில்லை? என்ன நேர்ந்தது என்று அந்தக் கைதியிடம் கேட்கவே இல்லை.- என்று மாணவர்கள் சொன்னார்கள் பத்திரிக்கை நிருபர்களிடம்!
கற்பழிப்புக் குற்றம் என்பது பயங்கரமான குற்றம்தான். ஆயினும் எங்கள் கண் முன் உணவும், தண்ணீரும் வேண்டும் என்று ஏங்கும் ஒரு மனிதனைத்தான் காண முடிந்தது; குற்றவாளியைக் காணவில்லை. என்றும் மாணவர்கள் சொன்னார்கள்.
சாப்பிட்டு முடிந்த பின்னர் அந்தக் கைதி மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்: “நான் போலீஸில் போய்ச் சரணடைய வேண்டுமா? அல்லது ஓடிவிடட்டுமா?”
மாணவர்கள் சொன்னார்கள்: “எவ்வளவு சீக்கிரம் நீங்கள் சரண் அடைகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நீங்கள் விடுதலையாகி வெளியே வந்து விடுவீர்கள்”.
கைதியும் இதற்குச் சம்மதித்தவுடன் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வரை, கைதியுடன் நடந்து சென்று அவரை ஒப்படைத்தனர். அவர் இரண்டு மாணவர்கலையும் அன்புடன் கட்டித் தழுவி விட்டு போலீஸிடம் சரண் அடைந்தார்.
தத்துவ இயல் மாணவர் பிலிப்ஸ் சொன்னார்: நாங்களும் அந்தக் கைதிக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். ஒரு கற்பழிப்புக் காரனின் உண்மைக் கதையைக் கேட்க முடிந்தது. முன்னததாக ஏவன் –சாமர்செட் நகர் போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், “கைதி ஹெட்லி பயங்கரமானவன் – யாரும் அருகில் நெருங்க வேண்டாம்; எங்களுக்குத் தகவல் மட்டும் தாருங்கள்” என்று ஹெட்லியின் படத்துடன் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
அன்பிற்கும் அன்ன தானத்துக்கும் சக்தி உண்டு!
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71)
பொருள்:-
அன்பை, பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் கதவோ தாழ்ப்பாளோ உண்டா? கண்களிலிருந்து பெருகும் கண்ணீரே அந்த அன்பினைப் பலரும் அறியும்படி பறை சாற்றிவிடும்.
–சுபம்–