
Date: 14 JANUARY 2018
Time uploaded in London- 6-46 am
Written by S NAGARAJAN
Post No. 4614
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாக்யா 12-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 47வது) கட்டுரை
கபுகதிகர் கசெகய்கதிகககளை கவிகடுகவிகத்கத கபெகண்கமகணிகககள்!
ச.நாகராஜன்
“இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்க பழங்குடியினரின் மொழி சங்கேத வார்த்தைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதை அறிந்த ஜெர்மனியும் ஜப்பானும் தங்கள் மாணவர்களை அமெரிக்க பழங்குடியினரின் மொழிகளான செரூகி, சாக்டா, கொமென்சே போன்ற மொழிகளைக் கற்குமாறு செய்தனர்” – உலக மகா யுத்த வரலாற்றுத் தகவல்.
தலைப்பைப் பார்த்து மலைக்க வேண்டாம். தவறாக கம்போஸ் செய்து விட்டார்களோ என்று குழம்பவும் வேண்டாம். எல்லா ‘க’வையும் நீக்கி விடுங்கள். புதிர் விடுபட்டு விடும்.
புதிர் செய்திகளை விடுவித்த பெண்மணிகள் – இது தான் தலைப்பு.
யார் அவர்கள் என்று பார்ப்போம்.
இரண்டாவது உலக மகா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்பதை முதலில் தெரிந்து கொண்டவர் ஒரு பெண்மணி! அவர் பெயர் வர்ஜினியா டி. அடர்ஹால்ட் (Virginia D.Aderholt).
இரகசியமாக ஜெர்மனியிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் அனுப்பப்படும் குறியீட்டு, சங்கேத செய்திகளை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.
நாஜி ஜெர்மனி நேச நாடுகளிடம் சரணடைந்து விட்டது. ஜப்பானும் சரணடையப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஜப்பான் ஸ்விட்ஸர்லாந்துக்கு அனுப்பும் செய்திகளைக் கேட்கப் பணிக்கப்பட்டவர் அடர்ஹோல்ட். அவரே ரகசிய செய்திகளின் “கோடை (Code) உடைத்து” உண்மைச் செய்தியைத் தர வேண்டும்.
ஜப்பானிலிருந்து நிபந்தனையற்ற சரணாகதி என்ற செய்தி ஸ்விட்சர்லாந்தில் பெறப்பட்டது. இதை இடைமறித்துக் கேட்ட அடர்ஹோல்ட் ஓடோடிச் சென்று அனைவருக்கும் செய்தியைச் சொன்னார்.

உடனடியாக செய்தி அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹாரி எஸ். ட்ரூமனுக்குப் பறந்தது. 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி. கோடைக்காலத்தின் அழகிய மாலை நேரம்.
ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களுக்கு இந்தச் செய்தியைச் சொன்னார் :” இரண்டாவது உலக மகா யுத்தம் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.”
இதைக் கேட்ட அமெரிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் வந்து குதித்தனர்; ஆனந்த நடனமாடினர்; கூவினர்; ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
ஆனால் உலக மகா யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரச் செய்ய அரும் பணி ஆற்றிய ஒரு பிரிவே மறக்கப்பட்டு விட்டது.
அந்தப் பிரிவு தான் கோட் ப்ரேகிங் பிரிவு. அதாவது கோட் எனப்படும் சங்கேதச் செய்திகளை உடைத்து உண்மைச் செய்தியை அறியும் பிரிவு.
இதில் மட்டும் பத்தாயிரம் பெண்கள் வேலை பார்த்தனர். ஆரம்பத்தில் பெர்ல் ஹார்பரில் ஜப்பான் தாக்குதல் நடத்திய போது அமெரிக்கா இரண்டாம் உலக மகா யுத்தத்தில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது பிரிட்டனில் இந்த இரகசியச் செய்திகளை உடைக்கும் பிரிவில் பல்லாயிரக் கணக்கானோர் பணியாற்றினர். ஆனால் அமெரிக்காவிலோ வெறும் 200 பேர்கள் மட்டுமே இதில் பணியாற்றினர்.
ஆனால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்க ராணுவம் ஏராளமான பெண்களை இந்தப் பணியில் அமர்த்தியது.
ஒரு வித வசதியுமின்றி வெயிலில் சொட்டச் சொட்ட வியர்வை நனைய வேலை பார்த்த இவர்களுக்கு கெட்ட பெயரும் கூட! ராணுவ உடையில் வேலை பார்க்கும் வேசிகள் என்று இவர்களைப் பற்றிய வதந்தி பரவியது. ஆனால் இவர்களோ தேச நலனை மனதில் கொண்டு அமைதியாகப் பணியாற்றினர்.
இவர்கள் தந்த செய்திகளால் ஜெர்மனி மற்றும் ஜப்பானைச் சேர்ந்த கப்பல்கள் நேச நாட்டுப் படையினரால் மூழ்கடிக்கப்பட்டன.
பெர்ல் ஹார்பரைத் தாக்க திட்டமிட்ட இசோரோகு யமமோடோ என்ற ஜப்பானியரின் விமானத்தைச் சுட்டு வீழ்த்த உதவியதும் இந்த ‘கோட் கேர்ள்ஸ்” தான்!
எதிரியின் கப்பல்கள் எங்கு நிலை கொண்டுள்ளன, எதிரிகளின் விமானம் எந்தத் திசையில் எப்போது வரும், எதிரியின் ராணுவம் எந்தப் பகுதியில் எப்போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பன போன்ற தகவல்களை ஒரு உளவுப் படை போல இந்த ரகசிய செய்தி தரும் படை பணியாற்றியது.

ஆனால் இரகசியம் காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் இவர்களைப் பற்றி உலகம் இன்றளவும் அறிந்திருக்கவில்லை.
பிரபல எழுத்தாளரான லிஸா முண்டி (Liza Mundy) என்ற பெண்மணி இதை ஆராயக் களத்தில் இறங்கினார். அதன் விளைவாக அரிய பல செய்திகளையும், உண்மைச் சம்பங்களையும் அடக்கிய “கோட் கேர்ள்ஸ்” (Code Girls) என்ற புத்தகத்தை எழுதி இப்போது வெளியிட்டுள்ளார்.
20 கோட் ப்ரேக்கர்ஸ் எனப்படும் புதிர்களை அவிழ்த்த பெண்மணிகளை இவர் நேரில் சந்தித்து பல அரிய விஷயங்களைச் சேகரித்துத் தொகுத்தார்.
“Loose lips sink ships” (உளறும் வாய் கப்பல்களை மூழ்கடிக்கும்) என்பதை அந்தப் பெண்மணிகள் தினமும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்களாம். அவ்வளவு இரகசியமாக ஒரு அனாவசிய வார்த்தையையும் பேசாது, உளறாமல் பணியாற்றினார்களாம் அந்தப் பெண்மணிகள்!
இவர்கள் அனைவரும் மிக இள வயதில் இப்பணிக்கு வந்தவர்கள். கணிதம், புள்ளி விவரம், பல்வேறு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் நிபுணத்வம் பெற்றவர்களால் தான் சங்கேதச் செய்திகளை உன்னிப்பாகக் கவனித்து, அவற்றை ரேடியோவில் இடைமறித்துக் கேட்டு அதன் உண்மையை அறிந்து தக்கபடி இராணுவம், கடல் படை,விமானப் படை ஆகியவற்றிற்கு உதவ முடியும்!
“Climb Mount Nitaka” என்ற வார்த்தைகள் ஜப்பானிய போர் விமானங்களுக்குத் தரப்பட்டது. பேர்ல் ஹார்பரைத் தாக்கலாம் என்பதற்கான சங்கேத வார்த்தைகள் இவை. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பி.பி.சி பல தனிநபர்களுக்கான செய்திகளை ஒலிபரப்பியது. ஆனால் இவை உண்மையில் ராணுவத்தினருக்கான சங்கேத செய்திகள்.
The Princess wears red shoes என்றோ Mimi’s Cat is asleep under the table என்றோ ஒலிபரப்பப்பட்ட செய்திகள் உண்மையில் மிக ரகசியமாக ராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்ட கட்டளைகளாகும்.
இரகசியமாக இப்படிச் செய்திகளைப் பரிமாறிக் கொள்வது என்பது பண்டைய காலம் தொட்டே இருந்து வரும் ஒரு விஷயம்.
யுத்த காலத்தில் ஒற்றர்கள் செய்திகளை இப்படி சங்கேத மொழியில் தான் அனுப்புவார்கள்.

அதுமட்டுமல்ல, மற்றவர்கள் எதிரில் இருக்க காதலர்கள் எப்படி செய்திகளைப் பரிமாறிக் கொண்டார்கள்? சமிக்ஞைகள் மூலமாக! முன்னரே தீர்மானித்துக் கொண்டபடி கையைத் தலையில் தொட்டால் ஆற்றங்கரைக்கு வா, இரண்டு கைகளையும் கோர்த்தால் வராதே என்பன போன்ற சமிக்ஞைகள் பழங் காலத்திலேயே உண்டு.
என்றாலும் கோட் என்பது ஒரு பெரும் தொழில்நுட்பக் கலையாக மாறியது இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தான்!
நேச நாடுகளின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்த இந்தப் பெண்மணிகளை உலகம் ‘கோட் கேர்ள்ஸ்’ புத்தகம் மூலமாக ஒரு சிறிது அறிகிறது, இன்று!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கரோல் இசை 2017இல் ஒரு புது வடிவம் பெற்றது.
பிரபல கம்ப்யூட்டர் மேதையான ஆலன் டூரிங் (Allan Turing) தனது கம்ப்யூட்டரில் இசை அமைத்த இரண்டு பாடல்களை இப்போது (2017இல்) நியூஜிலாந்தில் உள்ள காண்டர்பெர்ரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மீண்டும் உருவாக்கி இருக்கிறார்கள்.

1951ஆம் ஆண்டு. டூரிங் கம்ப்யூட்டரில் இசை நோட்ஸ்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு கம்ப்யூட்டரில் இசையை உருவாக்க அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. முதல் இசை நோட்ஸ்களை உருவாக்கி விட்டதோடு சரி, பேசாமல் இருந்து விட்டார். ஆனால் பள்ளி ஆசிரியையான கிறிஸ்டோபர் ஸ்ட்ராச்சி (Christopher Strachey) என்பவரைத் தன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த அனுமதித்தார். ஒரு நாள் ஸ்ட்ராச்சி அமைத்த இசையைக் கேட்டு டூரிங் மகிழ்ந்து போனார். நல்ல ஷோ என்று பாராட்டினார். அந்தப் பாடல்கள் ஒலிபரப்பப்பட மக்கள் அதை வரவேற்றனர்.
ஆக 67 வருடங்களுக்கு முன்னதாகவே கம்ப்யூட்டர் இசை தொடங்கி விட்டது. பெருமையெல்லாம் டூரிங்கிற்கும் ஸ்ட்ராச்சிக்கும் உரியது!
காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி …
https://tamilandvedas.com/…/காதல்-கடிதம்-எழுத-ர…
19 Mar 2013 – காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழிபோர்க் காலங்களிலும், படை மற்றும் ராணுவ தளவாட நகர்த்தல் பற்றித் தளபதிகளுக்கு தகவல் அனுப்பும் போதும் படைத் தலைவர்கள் ரகசிய சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவர். இது எகிப்தில் துவங்கியதாகக் கலைக்களஞ்சியங்கள் …
காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி …
swamiindology.blogspot.com/2013/03/blog-post_8896.html
19 Mar 2013 – போர்க் காலங்களிலும், படை மற்றும் ராணுவ தளவாட நகர்த்தல் பற்றித் தளபதிகளுக்கு தகவல் அனுப்பும் போதும் படைத் தலைவர்கள் ரகசிய சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவர். இது எகிப்தில் துவங்கியதாகக் கலைக்களஞ்சியங்கள் கூறியபோதும் இந்தியாவில் துவங்கியது …

Techniques of Secret Writing in India | Tamil and Vedas
19 Mar 2013 – Techniques of Secret Writing in India. During war times and military expeditions, army personnel use coded language so that the enemies wouldn’t understand the message. But in the ancient world thissecret language was used for different purposes. According to encyclopaedias it was used in Egypt 5000 …