Written by London swaminathan
Article no. 1719; dated 15 March 2015
Up loaded at 10-26 London time
சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா, மத்வர், ராமானுஜர் போன்ற பெரியோர்களைப் பற்றியும் இந்து தர்மத்தின் உயர் நோக்கங்கள் குறித்தும் அருமையான புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை அத்தனையும் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவருடைய மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்ற புத்தகத்தில் தானத்தின் சிறப்பை விளக்க ஐந்தாறு கதைகளை எளிய தமிழில் சொல்லுகிறார். சில கதைகளை கடந்த இரண்டு தினங்களில் கொடுத்தேன். இதோ இன்னும் ( படித்துவிட்டு என் சொற்களில் தருவதால் பிழைகள் இருந்தால் அவை என்னுடையன; மன்னிக்க) ஒரு கதை:
அர்ஜுனனும் கிருஷ்ணனும் நாட்டை வளப்படுத்த ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு செம்படவன் அங்கே வந்தான். அர்ஜுனன் காலடியில் தங்கக் கட்டிகளைச் சமர்ப்பித்தான். அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. வழக்கம் போலக் கள்ளக் கிருஷ்ணன் திருவிளையாடல் போலும் என்று எண்ணி கண்ணனைப் பார்த்தான். கிருஷ்ணனோ வெனில் அட நமது பால்ய நண்பன் நமக்குத் தெரியாமல் வேறு ஒரு ‘பிஸினஸ்’ செய்கிறான் போலும் என்று சந்தேகக் கண்ணோடு அர்ஜுனனைப் பார்த்தார்.
ஒரு நொடியில் இருவர் மவுனமும் கலைந்தது. என்னப்பா, இதெல்லாம்? என்று இருவரும் செம்படவனைக் கேட்டார்கள்.
அர்ஜுனன் ஐயா! என்னை மறந்து விட்டீர்களா? ஒரு நாள் பண உதவி கேட்டு உங்களிடம் வந்தேன். நீங்கள் ஒரு பைசா கொடுத்தீர்கள். அதை வைத்து மீன் வலை வாங்கி மீன் பிடித்தேன். ஐயா கை, ரொம்ப ராஸியான கை. நிறைய மீன் கிடைத்தது. மேலும் மேலும் வலைகள் வாங்கி மீன் பிடித்து இப்பொழுது ‘மில்லியனர்’ (கோடீஸ்வரன்) ஆகிவிட்டேன்.
‘என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; செய் நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை’ என்பதை நீங்கள் அறிவீர்களே. என் நன்றிக் காணிக்கை இது; கையூட்டு அல்ல! என்றான்.
இருவரும் ஒரு வழியாக அவனுக்கு ‘குட் பை’ சொல்லி வழி அனுப்பிவைத்தனர். கிருஷ்ணனுக்கு கோபம் பொங்கி எழுந்தது. பெரிய தப்புச் செய்துவிட்டாயே, அர்ஜுனா! இப்பொழுது இவன் கொன்ற பல்லாயிரக் கணக்கான மீன்களால் அவனுக்கு பாபம் சேர்ந்திரு க்கிறது. அதில் ஒரு பகுதி உன்னைச் சாரும் என்றார் கிருஷ்ணன்.
இந்தக் கதையைச் சொன்ன சிவா, தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லிவிட்டுக் கீழ்கண்ட காரணங்களைக் கொடுக்கிறார்:
1.அன்னதானத்தில் மேற்சொன்ன கதை போல உயிர்க் கொலைகள் நடக்க வாய்ப்பில்லை (அன்ன தானத்தில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும். சீக்கிய குருத்வாராக்களில் கூட சைவ உணவு மட்டுமே தரப்படுகிறது)
2.அன்னதானம் ஒன்றில் மட்டுமே ‘போதும்’ என்ற எண்ணம் மனதில் வரும். மண், பெண், பொன் ஆகியன எவ்வளவு கிடைத்தாலும் ஆசை அடங்காது. இலையில் அமிர்தமே பரிமாறினாலும் வயிறு நிரம்பிவிட்டால் போதும் போதும் என்று சொல்லி பரிமறுவதைத் தடுப்பார்கள். “வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும்” — என்பது பழமொழி.
3.அன்னதானம் போட்டால் ஊரில் தண்டச் சோறும், வேலையசெய்யாத சோம்பேறிகளும் பெருகுவர் என்று பலர் நினைப்பர். ஆயிரம் உதாவக்கரைகள் சாப்பிட் டாலும் அதிலொரு நல்லவர் இருந்து வாழ்த்தினால் அன்னதானம் செய்த குடும்பம் மட்டுமின்றி ஊரே வாழும். “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” — என்பது தமிழர் கண்ட உண்மை.
- இதனால்தான் அக்காலத்தில் சாலை வழித் தடங்களில் அன்னதான சத்திரங்களைக் கட்டிவைத்தனர்.
“இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தார்” — என்று பாடியும் வைத்தனர்.
வாழ்க அன்னதானம்! வளர்க கொடையாளிகள்!!




You must be logged in to post a comment.