
Compiled by London swaminathan
Date: 19 December 2015
Post No. 2405
Time uploaded in London: காலை 10-40
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
தமிழில் ஒரு பழமொழி உண்டு. சாதுக்கள் கோபிக்கமாட்டர்கள். ஆனால் அவர்களுக்குக் கோபம் வந்தாலோ அரசாட்சியே கவிழ்ந்துபோகும்.
வித்யாரண்யர் அருளால், விஜயநகரப் பேரரசு தோன்றி தென்னாட்டில் முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடித்தது. மகாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாஸ் அருளால் வீர சிவாஜி உருவாகி மொகலாய சாம்ரஜ்யத்துக்கு சாவு மணி அடித்தார். இதற்கு முன் சாணக்கியனின் கோபம் நந்த வம்சத்தை வேரறுத்து மௌரியப்பேரசை நிறுவியது.
பழங்காலத்தில் அகஸ்தியரைப் பகைத்த நகுஷன் அழிந்தான்; வேனன், சுமுகன் முதலிய கொடுங்கோல் மன்னர்கள் அழிந்து போனதை மனு நீதி சாத்திரம் பட்டியல் போட்டுத் தரும். வள்ளுவனும் தன் குறளில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் “பெரியாரைப் பிழையாமை” அதிகாரத்தில் கூறுகிறார்:
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியோடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து (898)
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து
வேந்தனும் வேந்து கெடும் (899)
பொருள்: குணத்தினால் உயர்ந்த பெரியோர்கள், ஒருவனை அழிக்க நினைத்தால், அவன் குலமே அழிந்து போகும்.
உயர்ந்த கொள்கையுடைய சான்றோர் வெகுண்டெழுந்தால், நாடாளும் அரசன் முறிந்து வீழ்வான்.
இதை விளக்கும் ஒரு சம்பவம் சீனாவில் நடந்தது:-
சின் வம்ச முதல் அரசன் (கி.மு.221-206), சீனாவின் ஒரு பெரிய நிலப்பரப்பை ஆண்டுவந்தான். அருகாமையிலிருந்த ஒரு சின்ன நாட்டின் பகுதியைத் தனக்குத் தரவேண்டுமென்று மிரட்டினான். அதை ஏற்க மறுத்த அந்த சிறிய நாட்டின் அரசன் ஒரு தூதரை சமாதானம் பேச அனுப்பினான். அந்தக் காலத்தில் தூது போவோர் பெரிய அறிஞர்களாக இருப்பர். இந்தியாவில் பிராமணர்கள் தூதர்களாகப் பணியாற்றியதை சங்க இலக்கியமும், தொல்காப்பியமும் கூறும்.
சீனாவில் சின் வம்ச அரசன், சின்ன நாட்டின் தூதரைப் பார்த்துச் சொன்னான்:

“ஓய் அறிஞரே! ஒரு மன்னனுக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது உமக்குத் தெரியுமா?
அறிஞர்: மன்னவா, எனக்குத் தெரியாது.
மன்னன்: ஒரு மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு லட்சக் கணக்கான சடலங்கள்தான் இருக்கும்.
அறிஞர்: ஒரு அறிஞருக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா?
மன்னர்: ஹூம்! தொப்பியையும், காலணிகளையும் கழற்றி எறிவார். மண்டையை நிலத்தில் மோதி உடைத்துக் கொள்வார். இது என்ன தெரியாதா?
அறிஞர்: ஓ, அது முட்டாள்கள் செய்யும் வேலை.
இப்படிச் சொல்லிவிட்டு அந்த அறிஞர் அந்த மன்னனுக்கு முன்னோர் காலத்தில் நடந்த மூன்று சம்பவங்களை அருமையான கவிதை நடையில் பொழிந்து தள்ளினார். கொடுங்கோல் மன்னர்களை அந்த அறிஞர்கள் தீர்த்துக் கட்டியது பற்றிய கவிதைகள் அவை.
மன்னவா! அந்த மூன்று பேர் பட்டியலில் இன்று என் பெயரும் சேரப்போகிறது. இதோ உமக்கும் எனக்கும் உள்ள ஐந்து அடி இடைவெளியில் இரண்டே சடலங்கள்தான் இன்று இருக்கும். இதோ பார்! என்று சொல்லியவாறே அறிஞர் தன் வாளை உருவினார்.
மன்னன் நடுநடுங்கிப் போனார்.
மன்னர்: அறிஞரே நிறுத்துங்கள்;அவசரம் வேண்டாம். தயவுசெய்து அமருங்கள். இப்பொழுது எனக்கு விளங்கிவிட்டது. மிகப்பெரிய சாம்ராஜ்யங்களான ஹான், வெய் போன்றவை அழிந்த போதிலும் உமது நாட்டைப் போன்ற சிறிய நாடுகள் உயிர்பிழைத்தது எப்படி என்பது விளங்கிவிட்டது. உங்களைப் போன்ற அறிஞர்கள் இருப்பதால்தான் நுமது நாடு இன்னும் வாழ்கிறது”.
மன்னனை அடக்கிய அறிஞனின் கதை இது!
–சுபம்–
You must be logged in to post a comment.