
பாக்யா 18-3-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?
ச.நாகராஜன்
WRITTEN BY S NAGARAJAN
Date: 18 March 2016
Post No. 2641
Time uploaded in London :– 5-44 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

“நாம் ஒருவரை ஒருவர் ஏன் நேசிக்கிறோம் என்றால் நமக்கு வரும் வியாதிகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.” – ஜோனாதன் ஸ்விப்ட்
புதிய புதிய வைரஸ்கள்! புதிய புதிய வியாதிகள்! ஜிகா வைரஸ் இப்போது பயமுறுத்துகிறது. அது எப்படி ஜிகா வைரஸ் என்று பெயர் வந்தது? உகாண்டாவில் உள்ள ஜிகா காடுகளில் முதன் முதலாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இதன் பெயர் ஜிகா வைரஸ்.
பார்கின்ஸன் நோய். அல்ஸைமர் நோய், இப்படி பல வியாதிகளுக்கும் ஏன் அப்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது?
பி.பி.சியின் மருத்துவ எழுத்தாளர் லிஸ்ஸி க்ரவுச் களத்தில் இறங்கினார். அதன் விளைவாக வியாதிகளின் பெயர் சூட்டல் பற்றி ஏராளமான தகவல்கள் வெளி வந்துள்ளன.
ஒரு புது வியாதி நோயாளிகளைப் பீடிக்கும் போது அதற்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வியாதிகளுக்கு பெயர் சூட்ட பேபிகளுக்குப் பெயர் சூட்டும் புத்தகம் போல எதுவுமே இல்லை! சரி, பின்னர் எப்படி பல விசித்திரப் பெயர்கள் சூட்டப்படுகின்றன?
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் டாக்டர் க்ரஹாம் ஹ்யூஸ் என்பவர் ரத்தக் கட்டிகளை ஏற்படுத்தும் ஒரு விதமான பிசுபிசுப்பான ரத்தத்தை சில நோயாளிகளிடம் கண்டார். அவரது சகாக்கள் அவரை கௌரவிக்கும் விதமாக அந்த நிலைக்கு ஹ்யூஸ் சிண்ட் ரோம் என்று அவரின் பெயரைச் சூட்டினர்.
பழைய காலத்தில் நோயையோ அல்லது அதற்கு காரணமான வைரஸையோ முதலில் கண்டுபிடித்தவரின் பெயரை அந்த நோய்க்குச் சூட்டுவது வழக்கம். இப்போது அப்படியில்லை. காலம் மாறி விட்டது!

டாக்டர் அலாய்ஸ் அல்ஸைமர் கண்டுபிடித்த நோய்க்கு பாராலிஸிஸ் அஜிடன்ஸ் என்று பெயர் வைக்கலாம் என்று அவர் சொன்னார். ஆனால் அனைவருமே அவர் சுட்டிக் காட்டிய வியாதிக்கு அல்ஸைமர் நோய் எனப் அவரின் பெயரையே இட்டனர். வயது மூப்பின் காரணமாக வரும் மறதி நோய் இன்று அல்ஸைமர் என்று அவரை கௌரவித்து அழைக்கப்படுகிறது.
டாக்டர் ஜேம்ஸ் பார்கின்ஸன் முதுமை காரணமாக வரும் நடுக்குவாத நோயைக் கண்டுபிடித்தார். அந்த நோய்க்கு அவர் பெயரைச் சூட்டினர். இன்று பார்கின்ஸன் நோய் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.
சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் லின்ஃபா வேங் தனது குழுவினருடன் இணைந்து ஒரு புதிய வைரஸைக் கண்டு பிடித்தனர். ஆஸ்திரேலியாவில் ஹெண்ட் ரா என்ற இடத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கு ஹெண்ட் ரா வைரஸ் என்ற பெயரைத் தந்தனர்.
வந்தது கோபம் ஹெண்ட் ரா நகர மக்களுக்கு! விஞ்ஞானிகள் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டாலும் அந்த நகரத்து மக்கள் தங்களை அந்தப் பெயர் அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு தொலைபேசி அழைப்புகளால் வேங்கை வறுத்து எடுத்து விட்டனர். பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூடத் தொலைபேசி அழைப்பு வந்த போதெல்லாம் அவர் நடுநடுங்கினார்!
அமெரிக்காவில் கனெக்டிகட் அருகில் உள்ள ஓல்ட் லைம் என்ற இடத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் குழந்தைகளுக்கு உண்ணியினால் வரும் நோய் ஒன்றைக் கண்டு பிடித்து அதறகு லைம் நோய் என்று பெயரிட்டனர்.
அந்த நகர மக்களுக்குக் கோபம் வந்ததா? இல்லை. அதை அவர்கள் பெருமையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்! அதை வணிகத்தை ஊக்குவிக்கும் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு அந்த உண்ணியை டி-ஷர்ட்டுகளில் போட்டு அமோக விற்பனையக் கண்டனர்.!
உலக சுகாதார நிறுவனமான WHO பொதுவான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. புதிதாகக் கிளம்பும் வைரஸுக்கோ அல்லது நோய்க்கோ இடத்தின் பெயரைச் சூட்டாதீர்கள் என்ற அதன் அறிவுரை வம்பை விலைக்கு வாங்காதீர்கள் என்பதற்கான நாகரீகமான அன்புரை!

ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும் ஒரு வகை வீக்கத்திற்கு (Granulomatasois) வெஜினர் (Frederich Wegener ) என்ற விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அவரது கடந்த காலத்தை ஆராய்ந்த போது அவர் நாஜிக் கட்சியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சித்திரவதை முகாம்களில் இருந்த போது அங்குள்ளவர்களை அவர் சோதனைக்குத் தவறாகப் பயன்படுத்தி இருக்கக் கூடும் என்ற எண்ணத்தினால் அந்த வியாதிக்கு அவர் பெயரைக் கூற தடை விதித்து விட்டனர்.
இதற்கிடையில் மே 2015இல் உலக சுகாதார நிறுவனம் அனைவரும் ஒப்புக் கொள்ளும் பெயரையே வியாதிகளுக்குச் சூட்ட வேண்டும் என்று வழிகாட்டுதலைத் தந்துள்ளது.
டாக்டர் ஹ்யூஸ், “ ஒரு வியாதிக்குப் பெயரிடுவது அவ்வளவு சுலபமில்லை. சில வியாதிகளை விவரிக்கவே பத்து சொற்கள் தேவையாக உள்ளன” என்கிறார். இந்த பத்து சொற்களும் மருத்துவ நிலையை விளக்கும் சொற்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம், அந்த வியாதியின் பெயரைச் சொன்னாலே வியாதியினால் வரும் சங்கடமே தேவலை என்று ஆகி விடும்!
ஆகவே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும், யாரையும் புண்படுத்தாத ஒரு பெயரைத் தேட வேண்டிய அவசியம் புதிய வியாதிக்குப் பெயர் சூட்டுவதில் வருகிறது.
சரி, டெங்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? யாருக்குமே இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஊகமாக ஒரு ஆய்வு செய்து சொல்ல முடியும். ஆப்பிரிக்காவில் வழங்கி வரும் ஸ்வாஹிலி மொழியில் “கா டிங்கா பெப்போ” என்ற வார்த்தைக்கும் கெட்ட ஆவியினால் ஏற்பட்ட நடுக்கத்துடன் கூடிய வலிப்பு என்று அர்த்தம். இதைச் சுருக்கமாக டிங்கா என்பார்கள். இந்த டிங்கா ஸ்பானிய மொழியில் டெங்கு என்று சொல்லப்பட்டு உலகின் எல்லா இடங்களுக்கும் பரவி விட்டது!
நல்ல வேளையாக ஜிகா காடுகளை வைத்து சூட்டப்பட்டுள்ள ஜிகா வைரஸுக்கு இதுவரை எந்த கண்டனமும் வரவில்லை; ஆர்ப்பாட்டக் கூட்டங்களும் இல்லை! உகாண்டா காடு தானே என்று விட்டு விட்டார்களோ!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரிட்டனின் போர்க்கால பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அணு ஆயுதம் என்றால் அடங்காத ஆசை. எப்படியாவது அணு ஆயுதத் தயாரிப்பில் பிரிட்டன் தலை தூக்கி நிற்க வேண்டும் என்று அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் அணு ஆயுதம் அபாயம் விளைவிக்கும் ஒன்று என்பது பிரபல விஞ்ஞானி நீல்ஸ் போரின் எண்ணம்.
இதன் அபாயத்தை நேரில் சென்று சர்ச்சிலிடம் விளக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவரை 1944ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியன்று சந்தித்தார். சர்ச்சிலின் மிக நெருங்கிய ஆலோசகரான லார்ட் செர்வெல்லும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் நீல்ஸ் போரின் அபாய அறிவிப்பை சர்ச்சில் ஏற்கவில்லை.
சந்திப்பு முடிந்தவுடன் வருத்தத்துட நீல்ஸ் போர் கூறினார்: “எங்கள் இருவரையும் இரண்டு பள்ளிச் சிறுவர்களைத் திட்டுவது போல அவர் திட்டினார்”
பின்னர் அமெரிக்கா சென்ற போரை ஜனாதிபதி ரூஸ்வெல்ட் சந்திக்க விரும்பினார். 1946, ஆகஸ்ட் 26ஆம் தேதி அவர் ரூஸ்வெல்ட்டைச் சந்தித்தார். ஆனால் சர்ச்சிலைப் போல ரூஸ்வெல்ட் திட்டவில்லை. அவரை ஆதரித்து நான் சர்ச்சிலிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சொன்னார்.ஆனால் வரலாறு வேறு விதமாக ஆனது!
அணுகுண்டு தயாரிக்கப்பட்டு ஹிரோஷிமா நாகசாகி மீது போடப்பட்ட போது தான் அது எவ்வளவு அபாயகரமான ஆயுதம் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.
இருந்தாலும் சர்ச்சிலின் அணு ஆயுத ஆர்வம் அவரை விடவே இல்லை. வயது முதிர்ந்த நிலையில் கூட பிரிட்டனின் அணு ஆயுத ஆய்வகம் ஒன்றிற்குச் சென்ற அவர் அங்கு நியூட் ரான்கள் சிதற அடிக்கப்படும் சோதனையைக் கண்டு மகிழ்ந்தார்.
விஞ்ஞானிக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள வேறுபாடு நமக்குப் புரிந்த ஒன்று தான்!
*******
You must be logged in to post a comment.