புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2 (Post No.5954)

Written by S Nagarajan


Date: 19 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-16 am


Post No. 5954

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பாக்யா வார இதழில் வெளியாகும் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள அத்தியாயம் 409       

(எட்டாம் ஆண்டு நாற்பத்தி ஐந்தாம் கட்டுரை)

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

ச.நாகராஜன்

 புனர் ஜென்மம் எடுத்த ஒருவர் தனது இப்போதைய பிறப்பில் தனக்குத் தெரியாத ஒரு மொழியில் பேசுவது புரியாத புதிராக அமைகிறது. இதற்கு முன்னர் அந்த மொழியைப் பற்றி அறியாமலும், அதைப் பேசும் பகுதியில் வாழாமலும் அந்த மொழியைச் சரளமாகப் பேசும் போது மற்றவர்களுக்குத் திகைப்பு தான் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட இந்த நிகழ்வு ஜெனோக்ளாஸி (Xenoglossy) என அழைக்கப்படுகிறது. அப்படி ஒரு அன்னிய மொழியை அவரால் எழுதவும் முடிகிறது என்றால் அது ஜெனோகிராபி (Xenography) என கூறப்படுகிறது.

அந்த அன்னிய மொழியை அவரால் பேச மட்டும் முடிகிறது என்றால் அது Recitative Xenoglossy எனப்படும். அந்த மொழியை அவரால் நன்கு அறிந்து கொள்ளவும் முடிகிறது என்றால் அது Responsive Xenoglossy எனப்படும்.

     1982இல் ஆய்வு நடத்திய விஞ்ஞானியான் கட்ஸ் (Kautz 1982) என்பவர் புழக்கத்தில் இல்லாமல் மறைந்து போன எகிப்திய மொழியை ஒருவர் பேசிய போது திகைத்து பிரமித்துப் போனார்.

     ஸ்டீவன்ஸன் (1976இல்) ஒரு அமெரிக்கப் பாதிரியாரைச் சந்தித்த போது அவர் கூறியது:” ஹிப்னாடிஸம் கற்றுக் கொண்ட போது எனது ஹிப்நாடிஸத்தால் என் மனைவியைப் பேச வைத்தேன். அவள் சரளமாக ஜெர்மன் மொழியில் பேசிய போது நான் திகைத்துப் போனேன்”!

        இதைக் கேட்ட ஸ்டீவன்ஸன் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். பாதிரியாரின் மனைவிக்கு ஜெர்மானிய மொழி பேசும் யாரையேனும் தெரியுமா, அந்த மொழி பேசும் பகுதிகளுக்கு அவர் எப்போதாவது சென்றிருக்கிறாரா உள்ளிட்ட ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். நிச்சயமாக இல்லை என்று தெரிந்த போது அவர் வியப்பின் எல்லைக்கே சென்றார்.

இது போன்ற 3000 கேஸ்களை ஆராய்ந்த பெருமைக்கு உரியவர் என்பதால் அவரது  முடிந்த முடிபாகச் சொன்ன ‘புனர் ஜென்மம் உண்டு’ என்பதை உலகம் ஒத்துக் கொள்கிறது. ஆனால் சந்தேகப்பேர்வழிகள் அவரது ஆய்வைக் குறைக் கூறிக் கொண்டே இருந்தனர் என்பதும் உண்மை தான்!

       ஸ்டீவன்ஸன் 2007 முடிய தனது வாழ்நாள் முழுவதும் இந்த ஆராய்ச்சியைச் செய்து வந்தார்; அவர் வழியில் இப்போது இதைத் தொடர்ந்து செய்து வருபவர் அமெரிக்க உளவியலாளரான ஜிம் பி. டக்கர் (Jim B.Tucker).இவர் இப்போது யுனிவர்ஸிடி ஆஃப் வர்ஜீனியா ஸ்கூல் ஆஃப் மெடிசினில் சைக்கியாட்ரி துறையில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவை மட்டுமே தன் ஆய்வுக் களமாகக் கொண்டுள்ள இவர் ‘லைஃப் பிஃபோர் லைஃப் : எ ஸயின்டிபிக் இன்வெஸ்டிகேஷன் ஆஃப் சில்டர்ன்ஸ் மெமரீஸ் ஆஃப் ப்ரீவியஸ் லைவ்ஸ்’ (Life Before Life : A Scientific Investigation of Children’s Memories of Previous Lives) என்ற நூலை எழுதியுள்ளார். ஊடகங்களில் தன் ஆய்வு பற்றி இவர் விரிவாக விளக்கியும் வருகிறார்.

     இவர் கூறும் சுவையான சம்பவம் ஒன்று 4 வயது சிறுவனைப் பற்றியது. ரையான் ஹாமன்ஸ் என்ற அந்தச் சிறுவன் அடிக்கடி சினிமா படங்களை எடுப்பது போல ‘ஆக்‌ஷன்’, ‘கட்’ என்று சொல்லி வந்தான். இது அவனது பெற்றோர்களுக்கு மிக்க கவலையைத் தந்தது. ஹாலிவுட்டில் இருந்த போது ஒரு நாள் நள்ளிரவில் அவன் தனது மார்பை பிடித்துக் கொண்டு அது வெடிக்கப் போவதாகக் கனவு கண்டு அலறினான். ஒரு நாள் தாயார் சிண்டியின் கையைப் பிடித்துக் கொண்டு, “அம்மா! நான் வேறொரு ஆளாக இருந்ததை உணர்கிறேன்” என்றான். பெரிய வெள்ளை வீட்டில் ஒரு நீச்சல் குளத்தில் தான் இருந்ததாகவும் தனக்கு மூன்று மகன்கள் உண்டு என்றும் அது ஹாலிவுட்டில் இருக்கிறது என்றும் அவன் கூறினான்.

சிண்டி ஒரு நாள் ஹாலிவுட் சம்பந்தமான ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கும் போது அதில் ‘நைட் ஆஃபர் நைட் ‘என்ற 1930ஆம் வருடத்திய திரைப்படத்தைப் பற்றிய விவரம் இருந்தது. அதில்  இருந்த ஒரு புகைப்படத்தில் இருவர் ஒருவரை ஒருவர் முறைக்க இன்னும் நான்கு பேர் அவர்களைச் சுற்றி இருந்தனர். அதில் ஒருவரைச் சுட்டிக் காட்டிய ஹாமன்ஸ், “அம்மா, அது ஜார்ஜ். நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் அந்தப் படத்தை எடுத்தோம்” என்றான். அருகில் இருந்த இன்னொருவரைக் காட்டிய ஹாமன்ஸ், “அம்மா! அது நான் தான்!!” என்றான்.

டக்கர் இதை ஆராய்ந்த போது வியந்து போனார். இப்படிப்பட்ட மறுக்க முடியாத புனர்ஜென்மம் பற்றிய ஆய்வு முடிவுகள் நாம் பிரக்ஞையைப் பற்றி இதுவரை அறியாத ஒரு உண்மையைக் காட்டுகின்றன. க்வாண்டம் பிஸிக்ஸ் கூறும் இன்னொரு பிரக்ஞை மட்டத்தை வைத்து இது உண்மை எனக் கூற முடியும் என்று அவர் கருத்துத் தெரிவிக்கிறார்.

அவர் கூறும் ஒரு எளிய உதாரணம் இது:

 எலக்ட்ரான்கள் மற்றும் ப்ரோடான்கள் போன்றவை அவற்றை உற்றுக் கவனிக்கும் போது தான் அவைகள் நிகழ்வுகளை நிகழ்த்துவதை அறிய முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் உணர்கின்றனர்.

ஒரு லைட்டை எடுத்துக் கொண்டு ஒரு திரையை இரண்டு இடங்களில் வெட்டி அதன் மீது ஒளி படும் படி பாய்ச்சுங்கள். திரைக்குப் பின்னால் ஒரு போட்டோகிராபிக் தகடை வையுங்கள். அது ஒளியைப் பதிவு செய்வதாக ஆக்குங்கள். ஒளியை உற்றுக் கவனிக்காமல் இருக்கும் போது அந்த ஒளியானது திரையில் உள்ள இரண்டு வெட்டுகளின் ஊடேயும் போவது போல இருக்கிறது. ஆனால் அந்த ஒளியை உற்றுக் கவனிக்கும் போது என்ன பார்க்கிறோம்? ஒளித் துகள்கள் ஒரு வெட்டின் வழியே மட்டும் செல்வதைப் பார்க்கிறோம்.

  ஒளியின் நடத்தை மாறுவது தெரிவது எப்போது? – அதை உற்றுக் கவனிக்கும் போது தான்! இந்த நிகழ்வு எப்படி நிகழ்கிறது என்று இன்று வரை விஞ்ஞானிகள் விவாதித்து விவாதித்துக் களைத்து விட்டனர். க்வாண்டம் பிஸிக்ஸின் தந்தையான மாக்ஸ் ப்ளாங்க், ‘நாம் வாழும் இந்த பௌதிக உலகானது, பிரக்ஞை சம்பந்தப்பட்ட இன்னொரு உலகுடன் தொடர்பு கொள்வதால் அதனால் பாதிக்கப்படுகிறது’என்கிறார்.

இந்த அறிவியல் பூர்வமான விளக்கத்தை புனர்ஜென்மத்துடன் பொருத்திப் பார்க்கையில் அனைத்து உண்மையும் விளங்கும்.  பிரக்ஞை என்பது 1200 முதல் 1400 கிராம் வரை எடை உள்ள மூளைக்குள் அடங்காத ஒன்று. அந்த மூளை செயலற்றுப் போனாலும் அதையும் தாண்டி பிரக்ஞை இருக்கும்’ என்று  அவர் கூறுகிறார்.

இது பொருள் பொதிந்த ஒரு உண்மை அல்லவா என்கிறார் டக்கர்!

15 வருடங்களாக புனர்ஜென்ம ஆய்வைத் தொடர்ந்து செய்து வரும் டக்கரின் அலுவலகத்தில் 2500 ஆய்வு கேஸ்கள் உள்ளன.

இந்த ஆய்வுகள் புனர் ஜென்மம் உண்மையே என்பதைச் சொல்லும் போது உலகம் வியக்கிறது!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிஸ்ஸா (Pizza) சாப்பிடப் பிடிக்காதவர் யார் தான் உலகில் உண்டு? இத்தாலிய விண்வெளி வீரரான பாலோ நெஸ்போலிக்கு (Paolo Nespoli) வயது 60. விண்வெளியில் சென்ற அவருக்கு பிஸ்ஸா ஆசை விடவில்லை. விண்வெளியில் தனக்கு பிஸ்ஸா கிடைக்கவில்லையே என்று அவர் வருத்தப்பட நாஸா அதை கனிவுடன் கூர்ந்து கவனித்து பரிசீலித்தது. பூமியிலிருந்து பிஸ்ஸா தயாரிப்பதற்கான சீஸ், சாஸ் உள்ளிட்ட அனைத்தையும் அங்கு அனுப்பியது. எக்ஸ்பெடிஷன் 53 என்ற குழுவில் இருந்த விண்வெளி வீரர்கள் ஆறு பேருக்கும் ஒரே உற்சாகம். அவர்கள் தாங்களே புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பிஸ்ஸா தயாரிக்க ஆரம்பித்தனர். பிஸ்ஸா பறக்க அதை அவர்கள் பிடிக்க ஒரே கும்மாளம் தான். பிஸ்ஸா துண்டு ஒன்று பறக்க அதற்கு எதிராகத் தன் திறந்த வாயைக் காண்பிக்க பிஸ்ஸா துண்டு தானாக வாய்க்குள் விழுந்த போது விண்வெளி வீரர் ஒருவருக்கு ஒரே ஆனந்தம்! ஒருவர் ஒரு பிஸ்ஸாவை இன்னொருவருக்குத் தூக்கி எறிய பிஸ்ஸாவின் மேல் தூவப்பட்டிருக்கும் எதையும் கீழே விழுந்து விடாமல் அதை கேட்ச் செய்து இன்னொரு வீரர் பிடித்துச் சாப்பிடுகிறார். காணொளியாக எடுக்கப்பட்ட இந்தக் காட்சி 2017இல் டிசம்பர் 4ஆம் தேதி பூமியில் காண்பிக்கப்பட உலகினர் அனைவரும் கண்டு களித்தனர். பறக்கும் பிஸ்ஸாவைப் பார்ப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. (இன்றும் இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்து மகிழலாம்)!

***