
Written by S Nagarajan (written for AIR)
Date: 6 March 2016
Post No. 2603
Time uploaded in London :– 6-52AM
( Thanks for the Pictures; pictures are taken from different sources. )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

- நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பயங்கர ஒலிகள்!
உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கானோர் இதய நோயால் இறப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒரு காரணம் அவர்கள் தொடர்ந்து அதீதமான ஓசையைக் கேட்க நேர்வதால் தான் என்று உலக சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANISATION) தனது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நியூ ஸயின்டிஸ்ட் என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளி வந்துள்ள ஆய்வறிக்கையின் படி ஒலி மாசு ஆயுளைக் குறைக்கிறது என்பது தெரிய வருகிறது.
2003ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் ஒலி மாசு பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியது. இதய நோய்க்கும் ஒலி மாசிற்கும் உள்ள தொடர்பை அந்த ஆய்வு உறுதிப்படுத்தியதோடு இரண்டு சதவிகித ஐரோப்பியர்கள் தூங்காமல் அவதிப்படுவதற்கும் அதுவே காரணம் என்று அது கண்டறிந்துள்ளது.
சமீபத்திய விஞ்ஞான சோதனைகள், அதிகமான ஒலியானது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் எனப்படும் கார்டிஸால் (COERTISOL), அட்ரினலின் (ADRENALINE), நொராட்ரெனாலின் (NORADRENALIN) ஆகியவற்றின் அளவுகளை உடலில் தூக்கத்தின் போது கூட அதிகமாக்குகிறது என்று நிரூபித்துள்ளன.

இந்த ஹார்மோன்கள் ரத்த ஓட்டத்தில் அதிகமாக இருக்க இருக்க, அவை உயிருக்கே தீங்கு பயக்கும் விளைவுகளை ஏற்படுத்த வல்லவையாக உள்ளன. அதிக ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாகும் போது மாரடைப்பு வருவதோடு, பக்கவாதம் உள்ளிட்ட பயங்கர விளைவுகளையும் ஏற்படுத்தும்.
தொடர்ந்து கேட்பது எங்கள் வழக்கம் என்று ஒன்றுமே நடக்காத து போலச் சொன்னாலும், இந்த ஒலி மாசு உளவியல் மற்றும் உடலியல் ரீதியாகத் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆகவே வீட்டில் தொலைக்காட்சி, வானொலி சாதனங்களில் ஆரம்பித்து அனைத்திலுமே ஒலிக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு, அமைதியான இல்லங்களை உருவாக்குவோம். சுற்றுப்புறத்தில் அதிகப்படியான ஒலியை ஏற்படுத்தும் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துவோரை அன்புரை கூறி அவர்களையும் மாற்றுவோமாக!
***********
Part 36 of S Nagarajan’s AIR Radio Talk written for Pothikai
- அதிக ஒலியைக் கட்டுப்படுத்துவோம்!

மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் இப்போது அதிகரித்து வரும் ஒரு தொல்லை ஒலி மாசு ஆகும்.
சாதாரணமாக, வீடுகள் உள்ள பகுதிகளில் ஒலியானது பகலில் 55 டெசிபல்களுக்கும் இரவில் 45 டெசிபல்களுக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். ஆனால் இப்போது 65 டெசிபல் என்ற அளவைச் சந்திக்க நேரும் பொது மக்கள் இதனால் தூக்கமிழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கான காரணங்கள் பல. அதிகமான போக்குவரத்து வாகனங்கள் எழுப்பும் சத்தம், பல்வேறு இடங்களில் அதிகமதிகம் கட்டிடங்கள் கட்டப்படுவதால் எழும் சத்தம், சாலைகளைப் பராமரிப்புப் பணிகளாலும், குடிநீர் மற்றும் கழிவு நீர் பராமரிப்பு பணிகளாலும் அதிக அளவு சத்தம் எழும்புகிறது. அத்தோடு வேகமாக வரும் லாரிகள் வேகத்தடையைக் கடக்க முற்படும்போது ப்ரேக் போடுவதாலும், அதிக வேகத்தோடு வரும் வாகனங்கள் எழுப்பும் இரைச்சலாலும் ஒலியானது இருக்க வேண்டிய அளவை விட அதிகமாகி மக்களைத் தொல்லைப் படுத்துகிறது.
வீட்டில் ஒலியைத் தடுக்கும் கண்ணாடிகளைப் பொருத்துவது, தரையில் கனமான தரை விரிப்பைப் பயன்படுத்துவது, சுவர்களிலும் ஜன்னல்களிலும் திரைச் சீலைகளைத் தொங்க விடுவது போன்ற வழிகளைக் கடைப்பிடித்தாலும் கூட ஒலியை ஒரு அளவிற்கே கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மையே.

ஆகவே சமூக ஆர்வலர்கள் இப்போது சவுண்ட் மேப்பிங் எனப்படும் ஒலி அளவு வரை படத்தை நகர் வாரியாகத் தயாரிக்க முன் வந்திருப்பது வரவேற்க வேண்டிய ஒரு செயலாகும். உரிய அதிகாரிகளிடம் இவற்றை முன் வைத்து ஒலியைக் குறைக்க அல்லது தடுக்க உள்ள வழிகளை மேற்கொள்ள இது உதவியாக இருக்கும்.
வாகன ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களைச் சரியாகப் பராமரிப்பதோடு உரிய வேகத்தில் மட்டுமே ஒட்ட முனைவது, வீடுகளில் தரை விரிப்புகள், திரைச் சீலைகளைப் பயன்படுத்துவதோடு மற்றவருக்குத் தொந்தரவு தராமல் தொலைக்காட்சிப் பெட்டி வானொலி ஆகியவற்றின் ஒலிகளைக் கட்டுப் படுத்துவது, இரவு நேரங்களில் வாஷிங் மெஷின் உள்ளிட்ட சாதனங்களை இயக்காமல் இருப்பது போன்ற சின்னச் சின்ன செயல்கள் கூட வரவேற்கப்படும் செயல்களாக அமையும். அதிக ஒலியைக் கட்டுப்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும் என்பது அரிச்சுவடிப் பாடம் எனக் கொள்வோம்; ஒலி மாசு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவோம்.

*************
You must be logged in to post a comment.