வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -4

jung1

கட்டுரை எண்:-1063; தேதி:- 25 மே 2014

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -4
ச.நாகராஜன்
(கார்ல் ஜங் என்று ஆங்கிலத்தில் எழுதினாலும் யுங் என்றே சொல்ல வேண்டும்)

யுங்கிற்கு ஏழு வயதிலிருந்தே பல்வேறு ஆவிகளின் காட்சிகள் தென்படலாயின.ஆகவே ஆவிகளுடன் பேசும் மீடியங்கள் பற்றிய ஆராய்ச்சியில் அவர் மனம் விழைந்தது அவரது நெருங்கிய உறவுக்காரப் பெண்மணி இப்படிப்பட்ட சிறந்த மீடியமாகத் திகழ்ந்தார்.

அப்போது ஆரம்பித்த அவரது ஆராய்ச்சி சுமார் 30 வருட காலம் தொடர்ந்தது. 1905ஆம் ஆண்டிலேயே அவர் எட்டு மீடியங்களைப் பற்றி நன்கு ஆராய்ந்து முடிந்து விட்டார்.

1907ஆம் ஆண்டு அவர் சிக்மண்ட் ப்ராய்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட போது ப்ராய்டுக்கு இந்த விதமான அதீத உளவியல் விவகாரம் ஒன்றும் பிடிபடவில்லை, பிடிக்கவும் இல்லை. ஆனால் ஒரு நாள் இந்த விவாகரம் விவாதம் என்ற அளவுக்கும் மீறி முற்றி விட்டது.அன்று மாலை தான் ப்ராய்ட் “உன்னை எனது சுவீகார புத்திரனாக மூத்த மகனாக ஏற்றுக் கொண்டேன்.நீயே எனது வாரிசு மற்றும் இளவரசன்” என்று யுங்கிற்கு எழுதிய கடித்த்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இரவு நெருங்கிய போது விவாதம் உச்சகட்டத்திற்குச் சென்று விட்டது! அப்போது திடீரென்று ப்ராய்ட் வைத்திருந்த புத்தக அலமாரியில் ஒரு பெரும் வெடிச் சத்தம் கேட்டது. ஜங் இதை அதி மானுஷ சம்பவங்களின் வரிசையில் சேர்த்து அதற்கான விளக்கத்தைத் தரமுற்பட்டார்.ஆனால் இது ப்ராய்டுக்குச் சற்றும் பிடிக்க வில்லை.ஆனால் யுங்கோ விடாப்பிடியாக ப்ராய்ட் இதை நம்ப மறுத்தாலும் கூட இதே போல இன்னொரு சம்பவம் நடக்கப் போகிறது என்று உரைத்தார். என்ன, ஆச்சரியம், அதே போல வெடிச்சத்தம் உடனே கேட்டது. ப்ராய்ட் பயந்தே போனார்! இதைத் தொடர்ந்து இருவரின் பாதைகளும் பிரிந்தன. ஆனால் ப்ராய்டின் தொடர்பு அறுந்த நேரத்தில் இரு பெரும் உளவியலாளர்களான தியோடர் ப்ளர்நாய் மற்றும் வில்லியம் ஜேம்ஸ் ஆகிய இருவர் யுங்கின் முயற்சிகளுக்கு பெரும் ஆதரவு தந்து அதீத உளவியல் ஆராய்ச்சிக்குக் கை கொடுத்தனர்.

யுங்கின் கனவில் ஒரு நாள் ஆழ் மன நிலையிலிருந்து ஒரு தோற்றம் உருவானது. அதை யுங், பிலமோன் என்று பெயரிட்டு அழைக்கலானார்.பிலமோன் யுங்குடன் அடிக்கடி பேச ஆரம்பித்தது. பிலமோன் ஒரு குரு ஸ்தானத்தில் இருந்து ஜங்கை வழிகாட்ட ஆரம்பிக்க அதை ஜங் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இப்படி ஒரு “கனவு குரு” இருப்பது சாத்தியம் தானா?

15 வருடங்களுக்குப் பின்னர் ஜங்கிற்கு இதற்கான விடை கிடைத்தது. மஹாத்மா காந்திஜியின் நண்பர் ஒருவர் யுங்கைக் காண வந்தார். மிக உயரிய பண்பு உடைய அவர் பாரதத்தின் கல்வி முறையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். பேச்சு குரு-சிஷ்ய உறவைப் பற்றித் திரும்பியது. சற்று தயக்கத்துடன் அவரிடம் ஜங்,” உங்கள் குருவைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? அவர் குணாதிசயங்கள் எப்படி?” என்று கேட்டார்.

“ஓ! சொல்கிறேனே. எனது குரு சங்கராசாரியர்” என்றார் அவர்.
“யார்? வேதங்களுக்கு பாஷ்யம் (உரை) எழுதியவரையா சொல்கிறீர்கள். அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே மறைந்து விட்டாரே!” என்றார் யுங்.

“ஆமாம்! அவரையே தான் சொல்கிறேன்!” என்றார் அவர். ஜங் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்று விட்டார்.
“அதாவது அவரது ஆவியைச் சொல்கிறீர்களா?” என்றார் ஜங்.
“ஆமாம்! அவரது ஆவியைத் தான் சொல்கிறேன்” என்றார் அவர்!
உடனே ஜங் பிலமோனை நினைத்துக் கொண்டார்.
“ஆவி ரூபத்தில் கூட குருமார்கள் வருவதுண்டு. சிலர் வாழ்ந்து கொண்டிருக்கும் குருமார்களைக் கொண்டிருப்பார்கள். சிலர் ஆவி ரூபத்தில் உள்ள குருமார்களைக் குருவாகக் கொள்வதும் உண்டு” என்றார் அவர்.

இந்த உரையாடல் யுங்கிற்குப் பெரும் ஆறுதலைத் தந்தது. தன்னைப் போலவே இன்னும் பலரும் ஆவிரூபத்தில் வழி காட்டுதலை அடைந்து வருகின்றனர் என்பதில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நாளடைவில் பிலமோனின் வலிமை அதிகரிக்கவே இன்னொரு தோற்றம் ஏற்பட்டது. அதை பழைய கால எகிப்திய மன்னர் பரம்பரையையொட்டி ஏற்பட்ட உயரிய ஆத்மாவான ‘கா’ என்று அழைக்கலானார் யுங்.

நாளடைவில் இரசவாத வித்தையில் யுங்கிற்கு நாட்டம் ஏற்பட உலகில் இருந்த பழம் பெரும் புத்தகங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் படித்தார். ரஸவாதத்தில் தேர்ந்த சித்தர்கள், ஞானிகள் ஆகியோரையும் அவர் சந்தித்தார்,இந்த இரசவாத அறிவின் மூலம் தனது கனவு குருக்களான பிலமோனையும் ‘கா’வையும் ஒன்றாக இணைத்து தனது வழிகாட்டுதலைத் தொடர்ந்து பெறலானார் யுங்.
Carl_Jung_by_wallflower_studios

ஜோதிடத்தின் மீது அளவிலாத ஆர்வத்தை இளமையிலிருந்தே யுங் கொண்டிருந்தார். ஜோதிடத்தில் அவருக்கு ஏற்பட்ட ஏராளமான அனுபவங்களை வைத்தே அவர் தனது சிங்க்ரானிசிடி கொள்கையை உருவாக்கினார். இதனால் விஞ்ஞானிகள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ‘இவர் விஞ்ஞானியே அல்ல; ஒரு ஜோதிடர்’ என்ற கடும் விமரிசனத்திற்கும் ஆளானார். வெகு சிலர் மட்டுமே அவரைப் புரிந்து கொண்டனர்.

அவர் பெங்களூரைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான பி,வி.ராமனுக்கு எழுதிய 6-9-1947 தேதியிட்ட கடிதம் ஒன்றில், “ஜோதிட உண்மைகளை விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பதற்கான புள்ளியியல் அடிப்படையிலான ஒரு வழிமுறை ஜோதிட இலக்கியங்களில் எனக்குக் கிடைக்கவில்லை” என்று எழுதினார். 480 ஜோடிகளின் திருமணப்பொருத்தத்தை ஆராய்ந்த அவர் சந்திரனுக்கும் திருமணத்திற்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்தார்.

கடைசியில் ஜோதிடம் பற்றிய தனது ஆராய்ச்சி முடிவை அறிவித்தார் இப்படி: “ முடிவுகள் தற்செயலாக இருப்பதற்கான புள்ளி விவர எல்லைக்குள் வருவதால் ஜோதிடம் முற்றிலும் சரியே என்று கூறுகின்ற கூற்றை நான் ஆதரிக்கவில்லை. தற்செயலாக அவை ஜோதிடம் எதிர்பார்க்கும் முடிவுகளைப் போலவே அமைந்துள்ளன. ஆனாலும் அவை அப்படிச் சரியாக அமைந்திருப்பது பொருள் படைத்த ஒன்றாக இருக்கிறது. இதையே தான் நான் சிங்க்ரானிசிடி என்கிறேன்” என்றார்.

யுங்கின் புகழ் உலகெங்கும் நாளடைவில் பரவ ஆரம்பிக்கவே அவரை அறிஞர்களின் கூட்டங்களிலும் விஞ்ஞானிகளின் மாநாடுகளிலும் பேச அழைத்தனர். அங்கெல்லாம் அவர் அதீத புலனாற்றல் பற்றியும் இதுவரை எதற்கெல்லாம் விஞ்ஞானிகள் முகம் சுளித்தார்களோ அந்தக் கொள்கைகளான கனவுகளின் விளக்கம், ஆவிகளின் உலகம், அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை, உலகெங்கும் இருக்கும் பிரபஞ்ச மனம் ஆகியவை பற்றி விளக்கி அனைவரையும் கவர்ந்தார்.

சின்ன உண்மை!
1938-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த யுங் பல ஆச்சரியமான அனுபவங்களை அடைந்தார். கோனார்க் கோவிலையும் அங்குள்ள பெரிய ரதத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். சாஞ்சியில் புத்தர் உபதேசம் செய்த இடத்தை நெருங்கியவுடன் அவருக்கு ஆச்சரியகரமான ஒரு உயரிய உணர்வு தோன்றியது. தனது இந்திய அனுபவங்களை அவர் சுயசரிதையில் இந்தியப் பயணம் என்ற பகுதியில் பதிவு செய்திருக்கிறார்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

கிரேக்க தத்துவ ஞானியும் விஞ்ஞானியுமான தாலஸ் (கி.மு.625-547) கி.மு. 584ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தை சரியாகக் கணித்து அனைவரும் வியக்கும் படி முன்னதாகவே சொன்னார். பிரமிடுகளின் நிழல்களின் நீளத்தை அளந்து அவற்றின் உயரத்தைச் சரியாகச் சொன்னார். அந்தக் காலத்திலேயே பல வடிவியல் (ஜாமெட்ரி) தேற்றங்களையும் நிரூபித்தார். இன்றும் ஒரு தேற்றத்தைத் தாலஸ் தியரம் என்று சொல்லி அவரை கௌரவிக்கின்றனர்.

ஒரு முறை எப்போதும் போல வானத்தை அண்ணாந்து பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தவர் ஒரு ஆழமான படுகுழியில் விழுந்து விட்டார். ‘உதவி, உதவி’ என்று பெருத்த குரலில் அவர் கூவியதைக் கேட்ட ஒரு கிழவி குழிக்கு அருகில் வந்து பார்த்தார். தாலஸின் நிலைமையைப் பார்த்த அவர்,” தரையிலேயே என்ன இருக்கிறது என்று பார்த்து சரியாக நடக்க உனக்குத் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் வானத்தில் என்ன நடக்கிறது என்று அறிய விரும்புகிறாயே” என்று கிண்டல் செய்தாள்.

தாலஸின் போதாத நேரம் கிழவியிடம் ‘வாங்கிக் கட்டிக்’ கொண்டு குழியிலிருந்து வெளியேறிப் பிழைத்தார்!

***********************
தொடரும்