
Written by S. NAGARAJAN
Date: 14 October 2016
Time uploaded in London: 6-16 AM
Post No.3249
Pictures are taken from various sources; thanks
Contact :– swami_48@yahoo.com
திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் அக்டோபர்,2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள்!
BY ச.நாகராஜன்

அமெரிக்காவில் மட்டுமல்ல, பொதுவாக உலகில் எல்லா நாடுகளிலுமே இப்போது நீடித்த ஆயுளைக் கொண்டு வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!
என்றாலும் கூட வயதான போது நீடித்த வியாதிகளினால் பலரும் அவஸ்தைப் படுகின்றனர்.
இதைப் போக்க முடியுமா? முடியும் என்கிறது அறிவியல்.
ஆரோக்கியமாக, நீடித்த நாட்கள் வாழ எட்டு எளிய வழிகள் உள்ளன.
அவையாவன:
- அறுபது வயது ஆயிற்றே, எழுபது வயது ஆயிற்றே என்று நினைக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்க இன்றைய நாளும் நல்ல நாள் தான் என்று நினைக்க வேண்டும். தாமதப்படுத்த வேண்டாம். உடனே ஆரம்பிக்கலாம் நல்ல வாழ்க்கை முறையை! வயதாகும் போது உடல் ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் அவை வியாதியைத் தருபவை என்று அர்த்தமுமில்லை, உடல் இயக்கத்தைத் தடுப்பவை என்றும் அர்த்தமில்லை. ஆக வாழ்க்கை முறை மாற்றத்தை இன்றிலிருந்தே தொடங்கலாம்.
- உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிக்க வேண்டுமெனில் உலகெங்குமுள்ள அனைத்து நிபுணர்களும் ஒரே குரலில் ஓங்கிச் சொல்வது உடற்பயிற்சி செய்யுங்கள் என்பதைத் தான்! ஹூஸ்டனில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழக மெடிகல் ஸ்கூலில் பணியாற்றும் கார்மல் பி.டையர்,” எனக்குத் தெரிந்து எழுபது வயதானவர்களில் ஏராளமானோர் உடற்பயிற்சியை மேற்கொண்டு அற்புதமான ஆரோக்கியத்தை அனுபவித்து வருகின்றனர்” என்கிறார். மஸில் மாஸ் (Muscle Mass ) கூடும் போது மருந்துகள் ஒரு இளவயதுக்காரரின் உடலில் என்ன வேலை செய்கிறதோ அதைச் செய்கிறது. அதாவது மருந்துகள் உரிய முறையில் உடலிலிருந்து எளிதாக அகற்றப்படுகின்றன. அத்துடன மட்டுமின்றி உடல் இயக்கம் மறதி நோயை வராமல் தடுக்கிறது. நடைப்பயிற்சி, தோட்ட வேலை செய்தல், அல்லது உடல் இயக்கத்தைத் தூண்டும் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துச் செய்யலாம்.
- .தினமும் ஸ்ட்ரெட்சிங் எனப்படும் நீட்சி (Stretching) தேவை என்கிறார் டையர். செயலற்ற நிலையில் உங்கள் தசைகள் சுருங்குவதோடு விரைத்தும் போகின்றன. யோகா போன்றவற்றை மேற்கொண்டால் அது நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றது.
“ஐந்து நிமிடம் தானே, என்ன செய்யப் போகிறது என்று நினைக்காமல் செய்தால், அது வயதான காலத்தில் நம்ப முடியாத அளவு நன்மையைத் தருகிறது” என்கிறார் டையர்.
மூட்டுவலி போன்ற எண்ணற்ற நோய்களுக்கு நிவாரணம் யோகா தான்! தியானம், சுவாச முறை, சமச்சீரையும் வலிமையையும் தரும் ஆசனங்கள் என யோகா தரும் அனைத்துமே உடலுக்கு ந்ன்மை பயப்பவையே

- உடலின் எடையைச் சீராகப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று.உடல் பயிற்சி, சரியான திட்டமிட்ட உணவு முறையை மேற்கொள்வது, ஆகியவை பல்வேறு நன்மைகளைத் தருவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
“உங்கள் எடையைக் குறைவாகவே வைத்துக் கொண்டால் டயாபடீஸ் வரும் அபாயம் தவிர்க்கப்படுகிறது. மூட்டுவலியும் வராது. ஒரு நாளைக்கு ஐந்து கோப்பை அளவு பழச்சாறு அல்லது கறிகாய்கள் சாப்பிடும் ஒருவருக்கு இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இதய நோய்கள் வருவதில்லை. கான்ஸர் அபாயம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. நோய் எதிர்க்கும் சக்தியை உடல் அதிகமாகக் கொள்கிறது” என்கிறார் வாஷிங்டனில் உள்ள உணவுத் திட்ட நிபுணரான டெய்ல்மெட்ஜ்
- நோய் வராமல் இருக்கச் செய்யும் தடுப்பு முறைகள் பல உண்டு. ஆண்டொன்றுக்கு ஒரு முறை மார்பகத்தை சோதனை செய்து கொள்வது பெண்களுக்கு நல்லது. ஃப்ளூ தடுப்ப்பூசி போன்றவற்றைப் போட்டுக் கொள்ளலாம். கான்ஸர், இதய நோய் வராமல் இருக்கிறதா என்பதற்கான டெஸ்டுகளையும் செய்து கொள்ளலாம். நோய்களின் அறிகுறிகளான அதிக இரத்த அழுத்தம், டயாபடீஸின் ஆரம்ப நிலைகள் ஆகியவற்றின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். உடல் இயக்கம் சீராக இருந்தால் மூட்டுவலி போன்றவை வராது என்பதை உணர்ந்து இயக்கங்கள் சரியாக உள்ளனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்
- மத உணர்வு நல்ல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஆலயத்திற்குச் செல்வது நிம்மதியையும் நீண்ட ஆயுளையும் தருவதை ஒரு ஆய்வு உறுதி செய்துள்ளது. மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது முக்கியம். மதச் சடங்குகள், விழாக்கள் வாழ்வை தைரியத்துடன் எதிர்நோக்க உதவி செய்கிறது.
2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரம் பேரை ஆராய்ந்தது. அதில் தைரியத்துடன் வாழ்வை எதிர்நோக்கியோர் 55 சதவிகிதம் இறப்பைத் தள்ளிப் போடுகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு 23 சதவிகிதம் இதய நோய்த் தாக்குதல் குறைவாக அவர்களுக்கு இருப்பதும் தெரிய வந்தது!

- மற்றவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மை பற்றி மிச்சிகன் பல்கலைக் கழகம் 10317 பேர்கள் கலந்து கொண்ட ஒரு ஆய்வை நடத்தியது.1957லிருந்து 2004ஆம் ஆண்டு முடிய தன்னார்வத் தொண்டு செய்து வருபவர்கள் இவர்கள்.
அவர்களில் பலர் சேவை செய்யும் போது சொந்தத் துன்பங்கள் மறைந்து போகின்றன என்பதைத் தெரிவித்தனர். பலனை எதிர்பார்க்காமல் உதவும் தன்னார்வத் தொண்டர்களின் வாழ்வு நீடிப்பதையும் ஆய்வு உறுதி செய்தது.
- நடுத்தர வயது உள்ள பெண்மணிகள் ஆல்கஹால் அருந்துவதைப் பற்றி ஆராய்ந்ததில் எப்போதேனும் ஒரு முறை ஆல்கஹாலை உட்கொள்பவர்கள் சீரான உடல்நிலை கொண்டிருப்பதை நர்ஸஸ் ஹெல்த் ஸ்டடி ஒன்று தெரிவிக்கிறது. தேவையற்ற தீய பழக்கங்களை மன உறுதியுடன் வெட்டி விடுங்கள்!
ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்வு என்பது தான் என்ன? நீடித்த வியாதிகள் எதுவும் இருக்கக் கூடாது. முக்கியமாக இதய நோய்கள், டயாபடீஸ், கான்ஸர் போன்றவை வரக் கூடாது. மனத்தளவில் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். இவையே வெற்றிகரமாக முதுமை அடைவதைக் குறிக்கிறது.

************ நன்றி: ஹெல்த் ஸயின்ஸ்
You must be logged in to post a comment.