உபநிஷத அற்புதங்கள் – 1 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்
எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—994; தேதி—22 ஏப்ரல் 2014.
12-3-1995- முதல் சுமார் ஓரிரு மாதங்களுக்கு உபநிஷத புத்தகங்களில் இருந்து சில நோட்ஸ்- Notes எடுத்து வைத்திருந்தேன். சில ஆராய்ச்சி யாளர்களுக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில் அவற்றை அப்படியே தருகிறேன். இது மதம் அல்லது தத்துவ விஷயங்களைப் பற்றியது அல்ல. பொதுவான, சுவையான விஷயங்கள்.
1.சாந்தோக்ய உபநிஷத்
வெளி நாடுகளில் முதல் பெயர்/ First name or fore name, குடும்பப் பெயர்/surname என்று இரண்டு பெயர்கள் இருக்கும். அமெரிக்கர்களுக்கு நடுப் பெயரும்(Middle name) உண்டு. இந்த வழக்கம் வேத காலம் முதல் நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. பின்னர் அது மாறி வெறும் ஜாதிப்பெயரை குடும்பப் பெயர் இடத்தில் எழுதும் வழக்கம் தோன்றிவிட்டது சாந்தோக்ய உபநிடதத்தில் உத்தாலக ஆருணன் என்ற பெயரைக் காண்கிறோம் உத்தாலகன் என்பது அவருடைய பெயர் (முதல் பெயர்). ஆருண என்பது குடும்பப்பெயர். அதாவது ஆருணன் மகன் உத்தாலகன்.
24 வயதுவரை படிப்பு!
2.சாந்தோக்ய உபநிடதத்தில் ஸ்வேதகேது என்பவரைப் பற்றி பேசப்படுகிறது. அவர் உத்தாலக ஆருணனின் மகன். 24 வயதில் வேதம் முழுதும் படித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். இதில் கவனிக்க வேண்டியது 24 வயது வரை கல்வி. அநேகமாக ஐந்து வயதில் அவருடைய அப்பா குருகுலத்தில் (ஸ்கூலில்) சேர்த்திருப்பார். ஆக 19 வருடம் குரு வீட்டில் தங்கிப் படித்திருக்கிறார். என்ன ஆசர்யம் பாருங்கள். ஒரே குருவிடம் 19 வருஷம் கல்வி!
அபூர்வ சக்தி
3.இவ்வளவு வருஷம் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் பிரம்மசர்யம் அனுஷ்டித்தால் அவர்களுக்கு மந்திர சக்தி, அபூர்வ சக்திகள் வந்துவிடும். 12 ஆண்டுகளே போதும், அபூர்வ சக்திகள் பெற என்பது சுவாமி விவேகாநந்தரின் அருள் வாக்கு.
4.இயற்கை உவமைகள்
சாந்தோக்ய உபநிஷத்தில் இயற்கை நடனமாடுவதையும் படித்து இன்பமுறலாம்.
தேனீ—தேன் உவமை
ஆறு – கடல் உவமை
மரம் — சத்து உவமை
ஆலமரம் – விதை உவமை
உப்பு – நீர் உவமை
குருடன் — குரு உவமை
எவ்வளவு இயற்கையோடு இயைந்த வாழ்வு!
இயற்கையுடன் இணைந்து விட்டால் புத்தகமே வேண்டாம். அதை விட நிறைய ஞானம் பெறலாம் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் (William Wordsworth):
One impulse from a vernal wood
May teach you more of man,
Of moral evil and of good,
Than all the sages can.
5.விஞ்ஞான சோதனைச் சாலை !
இந்த உபநிஷதத்தில் நாம் எல்லோரும் பள்ளிக்கூடத்தில் சோதனைச் சாலையில் Laboratory என்ன செய்கிறோமோ அதை குரு சொல்லித் தருகிறார்.
தம்பி, கொஞ்சம் உப்பைக் கொண்டு வா. அந்த கோப்பையில் உள்ள தண்ணீரில் போடு. உப்பு எங்கே போனது?
தம்பி, அந்த ஆலமர பழத்தைக் கொண்டுவா. அதைப் பிரி. சிறு விதைகளைப் பார்க்கிறாயா? இவ்வளவு பிரம்மாண்டமான மரத்தை அது எப்படி உண்டாக்கியது?
இப்படி கேள்விகளை எழுப்பி பிரம்ம ஞானத்தைப் போதிக்கின்றனர் ரிஷிகள்!
இதை ஆங்கிலத்தில் — Socratic Method — சோக்ராடிக் மெதட் என்று சொல்லுவார்கள். அதாவது சாக்ரடீஸ் என்ற அறிஞர் உருவாக்கியது என்று.
சாக்ரடீஸ், இதை நமிடம் கற்றுக் கொண்டார் என்பது மேல் நாட்டு மக்களுக்குத் தெரியாது! சாக்ரடீஸ், அலெக்சாண்டர் ஆகியோர் இந்து சந்யாசிகளிச் சந்தித்தது பற்றி சுவாமி விவேகாநந்தரும் பரமஹம்ச யோகாநந்தாவும் எழுதி இருப்பதை ஏற்கனவே கொடுத்து விட்டேன்.
6.கடோபநிஷத்
இதில் தான் நசிகேதன் என்ற சின்னப் பையன் கதை வருகிறது. உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு இந்தியாதான் என்பதற்கு இரண்டே உதாரணங்கள் போதும்!
ஒன்று நசிகேதன் என்ற சின்னப் பையன்
இரண்டு கார்க்கி என்ற பெண்மணி
இந்த இருவரும் உபநிடதத்தில் சக்கைப்போடு போடுகின்றனர். வாக்குவாதத்தில் மன்னர்கள்!!! 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் மேதா விலாசம் ஆயிரம் கோடி சூர்யப் ப்ரகாசத்தில் ஜொலித்தது.
அந்தக் காலத்தில் தமிழில் நூல் கிடையாது. கிரேக்கத்தில் நூல் கிடையாது. லத்தீன் மொழியில் நூல் கிடையாது. எபிரேய (ஹீப்ரு) மொழி, சீன மொழியில் கொஞ்சம் கொஞசம் துண்டு துண்டாக ஏதோ சில எழுத்துக்கள் உண்டு. (பைபிளின் பழைய ஏற்பாடு தோன்றியது கி. மு ஆயிரத்தை ஒட்டித்தான்.
புத்தரும், மஹாவீரரும், சொராஸ்தரும், ஏசுவும், கன்பூஷியஸும், லாவோட்சேயும் தோன்றுவதற்கு முன்னால் இந்துப் பெண்களும் சின்னப் பையன்களும் எமனுடன் வாதித்து வெற்றி கண்டிருக்கின்றனர்.
நசிகேதன் என்ற வாண்டு பயல் எமனை வாக்குவாதத்தில் வென்று — சாவித்திரி போல — மூன்று வரங்கள் வாங்கி வருகிறான்.
பகவத் கீதையிலும், பாரதி பாட்டிலும். திருமந்திரத்திலும், முதல் மூன்று ஆழ்வார்களின் பாடல்களிலும் வரும் ஞானச் சுடர், ஞானத் தீ, ஞான தீபம், ஞான வாள், ஞானப் படகு முதலிய எல்லாம் உபநிடதத்திலேயே வந்துவிட்டன.

7.உடல் தேர் உருவகம்
கடோபநிடதத்தில் உடல் – தேர் உருவகம், புலன்கள்= குதிரைகள் என்ற உவமை உருவகம் எல்லாம் எடுத்தாளப் படுகின்றன. பிற்காலத்தில் இதை புத்தரும் பயன் படுத்தினார் (காண்க—தம்மபதம்).
8.ஆங்கிலத்தில் கத்தி போல கூரானது என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவர். அது எல்லாம் கடோபநிடதத்தில் இருந்து வந்த மரபுத் தொடர்!
9.இந்த உபநிடதம் இருதயம்- மூளை தொடர்பு பற்றியும் இருதயத்தில் உள்ள 101 நாடிகள் குறித்தும் பேசுகிறது. இருதயத்துக்குள் ஒரு கட்டை விரல் அளவுக்கு ஒளிரும் பிரம்மன் குறித்தும் படிக்கலாம்.
10.கௌசீதகி உபநிஷத்
கௌசீதகி உபநிஷதத்தில் பிராணன் பற்றிப் படிக்கிறோம்
அறிஞர்கள் இதை மற்ற கலாசாரங்களுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்:
Taoists = Chi
Jews = Ruach
Greeks = Pneuma
11.பெயர்கள்: தேவ நாசன் மகன் பிரதர்தனன் (இதே பெயரில் ஒரு மன்னனை, சிரியா – துருக்கி எல்லைப் பகுதியில் ஆட்சி புரிந்த மன்னர்கள் பட்டியலிலும் காண்கிறோம். புராண மன்னர் பட்டியலிலும் பிரதர்தனன் உண்டு. ஆக மிட்டனி (கி.மு 1300) நாகரீகத்தில் காணப்படும் பிரதர்தனன் உண்மையான சம்ஸ்கிருதப் பெயரே.
த்வஷ்ட்ரியின் முன்று தலை உடைய விஸ்வரூபா, மற்றும் அருண்முகாஸ், பிரகலாதன், பௌலோமன், காலகஞ்சன் எனப் பல பெயர்கள் இயற்கைச் சக்திகளால் கொல்லப் பட்டதாகக் கூறுவது வேதப் பாடல்களை நினைவு படுத்துகிறது.
12.ஒரு மயிரிழை கூட எனக்குத் தீங்கு நேரிடாது என்ற வாசகம் இங்கே வருவது குறிப்பிடத்தக்கது.
To be continued——
contact swami_48@yahoo.com


You must be logged in to post a comment.