
WRITTEN BY V. DESIKAN
Post No. 8910
Date uploaded in London – – –10 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
9-11-2020 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் திரு V.தேசிகன் அவர்கள் ஆற்றிய உரை. Facebook.com/gnanamayam முகவரியில் இந்த ஒளிபரப்பைக் காணலாம்.
அஃறிணை பந்தங்கள்!
V. தேசிகன்

எல்லாருக்கும் வணக்கம். என்னைப்பற்றிய சிறிய அறிமுகம் – பெயர் தேசிகன். நான் பெங்களூரில் வசிக்கிறேன். 75 வயதாகிறது . இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் 30 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞானி.
மனித பந்தங்கள், உறவுகள், நேயங்கள் பற்றி உணர்ச்சிப்பூர்வமான பல வலை பதிவுகளை நாம் படித்திருக்கிறோம்.
நான் இன்று சற்றே வித்யாசமான அஃறிணை, ஜடப்பொருள் பந்தங்கள் , உறவுகளை பற்றி பேச விரும்புகிறேன்.
ஏனோ தெரியவில்லை , எனக்கு சிறு வயதிலிருந்து ஜடப்பொருள்களை உயிர் உள்ளதாக கருதும் ஒரு மனப்பான்மை. இது ஒரு மன வியாதி அல்ல, ஒரு மென்மையான உணர்வு என்றே கருதுகிறேன். உங்கள் கருத்துகளை கூறலாம்.
இன்று என் வாழ்க்கையில் என்னுடன் துணை வந்த மூன்று ஜடப்பொருள்களை பற்றி பேச விரும்புகிறேன்.
முதல் பந்தம்:
1969ல் வேலையில் சேர்வதற்காக பெங்களூரு வந்தேன். அக்கால கட்டத்தில் பேருந்துகள் குறைவு. அதனால் ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன். ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயமில்லை. இருந்தாலும் 60 ரூபாய் கொடுத்து ஒரு பச்சை நிற ஹெல்மட்டை வாங்கினேன். அணிந்து ஓட்டினேன். எல்லோரும் என்னை வினோதமாக பார்த்தார்கள் . கால ஓட்டத்தில், ஸ்கூட்டர்கள் மாறின, கார் வந்தது. பிறகு ஹெல்மெட்டுக்கு அவசியம் இல்லாமல் போனது. ஆனாலும் அதை தூக்கி ஏறிய மனமில்லை. 40 வருடங்கள் அதை பத்திரமாக பாதுகாத்தேன். கடைசியில் ஒரு நாள் வருத்தத்துடன் பிரியா விடை கொடுக்க நேர்ந்தது. என் உயிர் காத்த பச்சை ஹெல்மெட் இன்றும் என் மனதில் இருக்கிறது.
இரண்டாம் பந்தம் :
1969ல் ஒரு லாட்ஜ்ல் தங்கியிருந்தேன். காலையில் எழுந்ததும் காப்பி சாப்பிடும் பழக்கம் உண்டு. 7 மணிக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும். ஹோட்டலை தேடி செல்வதற்கு நேரம் இருக்காது. அதனால் அறையிலேயே காபி தயாரிக்க முடிவு செய்தேன். அதற்கு ஒரு சாஸ்ப்பான் தேவை பட்டது. 30 ரூபாய் கொடுத்து மஞ்சள் வண்ண பிடி கொண்ட சாஸ்ப்பானை வாங்கினேன். அது 50 வருடங்களுக்கு பிறகும் இன்றும் என்னுடன் இருக்கிறது. ஒரே வித்யாசம் என்னவென்றால், காபிக்கு பதில், நான் டீ தயாரிக்க அதை உபயோகம் செய்து கொண்டு இருக்கிறேன்.


மூன்றாவது பந்தம் :
என்னுடைய வேலை நாட்களில் பல திட்டப்பணி (projects) யில் ஈடுபட்டு பணியாற்றியிருக்கிறேன். கடைசி திட்டப்பணி ஒரு பெரிய சவாலாக இருந்தது. பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்று நிர்ணயிக்க ஒரு சரகம் (range) அமைக்க வேண்டி இருந்தது. அதற்கு பல ஏக்கர் நிலம் தேவை பட்டது. அது கிடைக்க தாமதமானதால், ஒரு நடமாடும் சரகத்தை உருவாக்க வேண்டும் என்ற வேலை எனக்கு அளிக்கப்பட்டது. இந்த திட்டப்பணியை வடிவமைத்து, உருவாக்கி செயல்பட வைக்க எனக்கு 6 பேரும், ஒரு வருட காலமும் கொடுக்கப்பட்டது. சரகத்தை ஆறு வண்டிகளாக பிரித்தோம் . ரேடார்கள், தொடர்பு உபகரணங்கள் , ஜெனெரேட்டர் , கம்ப்யூட்டர் சாதனங்கள் எல்லாம் அதற்குள் பொருத்தப்பட்டன. எல்லா மின் சமிக்கைகைகளும் ஒரு மய்ய வண்டிக்கு வந்து சேரும்படி நியமித்தோம் . அந்த 40 அடி நீள வண்டிக்கு சங்கம் என்று பெயர் சூட்டினோம். 40 கம்ப்யூட்டர் , காட்சி திரை, ஆண்டென்னாக்கள், மற்றும் பயோ டாய்லெட் உள்ள ஒரே வண்டி டிவிஎஸ் சுந்தரம் இண்டஸ்ட்ரீஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டது. இந்த வண்டியை பல இடங்களுக்கு எடுத்து சென்று இந்திய வாயு படை அதிகாரிகளுடன் வேலை செய்து சோதனை நடத்தினோம். சங்கம்(photo) எங்கள் எல்லாருக்கும் பெருமையும் புகழையும் தந்தது.
1997ல் நான் தன்னார்வ ஒய்வு பெற நிச்சயித்தேன். பிரியாவிடை நிகழ்ச்சியில் உடன் பணியாற்ற்றிய நண்பர்களிடம் விடை பெற்ற பின், சங்கம் வண்டி இருக்கும் விமான கொட்டகையை நோக்கி நடந்தேன். என் நண்பன் சங்கத்தை வலம் வந்து ஆசை தீர பார்த்தேன். Shakespeare வரிகள் நினைவுக்கு வந்தது – “என்றென்றும் என்றென்றும் விடை பெறுகிறேன் நண்பா; ஒரு வேளை மீண்டும் சந்தித்தால் , ஏன் சற்றே புன்னகை செய்வோம். இல்லையென்றால் இப்பிரிவு நன்றாகவே நடந்தது “. என்று கூறினேன்.
சில வருடங்களுக்கு பிறகு இருவரும் சந்திக்க நேர்ந்தது. புன்னகை சிந்தினோம்.
சங்கத்தை உருவாக்க எங்களுக்கு உறுதுணையாய் இருந்த திரு நாகராஜன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி. உங்கள் எல்லாருக்கும் பல நன்றிகள். வணக்கம்.


V.தேசிகன் – அறிமுகம்
இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான திரு வி.தேசிகன் மதுரையைச் சேர்ந்தவர்.
மின்னியல் துறையில் 1968இல் பட்டம் பெற்ற இவர் பெங்களூரில் உள்ள DRDO எனப்படும் டிஃபென்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷனில் பணியாற்றத் தொடங்கினார். பல அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக அமைந்தார்.
ASIEO – அஸியோ எனப்படும் Associated System Integration and Evaluation Organisation என்ற பாரதத்தின் உயர் நிலை ஆய்வு நிறுவனத்தில், இவர் ப்ராஜெக்ட் டைரக்டராக இருந்து ஆற்றிய பல சாதனைகளுள் குறிப்பிடத்தக்க ஒரு அரும் சாதனை, ‘சங்கம்’ என்ற பெயரில் நடமாடும் ‘ஆய்வு மற்றும் சாதன ஒருங்கிணைப்பு வாகனம்’ ஒன்றை உருவாக்கியது தான். எஞ்ஜினியரிங் மார்வல் என்று வெளிநாட்டுப் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்ட வாகனம் இது.
1983ஆம் ஆண்டிற்கான தலை சிறந்த விஞ்ஞானி – Scientist of the Year – என்ற உயரிய விருதை மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடமிருந்து இவர் பெற்றார்.
பங்களூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப்பின் தலைவராகச் சேவை புரிந்த இவருக்கு டென்னிஸ், கோல்ப், இசை, வலைதளத்தில் பல சுவையான பதிவுகளைச் செய்தல் ஆகியவற்றில் அளவற்ற ஆர்வம் உண்டு.
அவ்வப்பொழுது டெக்கான் ஹெரால்ட் உள்ளிட்ட பத்திரிகைகளில் சுவைபட கட்டுரைகளை வழங்கி வருபவர் இவர்.
எழுபதுக்கும் மேற்பட்ட சுவையான கட்டுரைகள் அடங்கிய இவரது ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ் (Brindavan Express) என்ற புத்தகம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற புத்தகம்.
பாரம்பரியப் பண்பாடும், இறைபக்தியும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரும் பெரிய விஞ்ஞானியுமா திரு வி.தேசிகனை இங்கு ஞானமயம் நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
tags — அஃறிணை, ஜடப்பொருள், பந்தங்கள் , உறவுகள்,V.தேசிகன்
***