
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9433
Date uploaded in London – –28 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று மார்ச் 28-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும் .
Xxxx
பங்குனி உத்திர திருநாள்; அமித்ஷா தமிழில் வாழ்த்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பங்குனி உத்திர திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் மாதமான பங்குனியில் உத்திர நட்சத்திரம் கூடிவரும் பவுர்ணமி நாள் பங்குனி உத்திரத் திருநாளாகும். தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் சிறப்புமிக்க பங்குனி உத்திரம் திருநாளிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்:
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்! இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான “பங்குனி உத்திரம்” திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல்! வீர வேல்!
XXXXX
வங்கதேசத்தில் பழமையான காளி கோயிலில் பிரதமர் வழிபாடு



வங்கதேசத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஜெஸ்சூரேஸ்வரி காளி கோயிலில் வழிபாடு நடத்தினார்.
வங்கதேசம் தனி நாடாக உருவாகி, 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு, சுதந்திர தின பொன் விழாவை சிறப்பாக கொண்டாட, அந்த நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.இதையொட்டி, தலைநகர் டாகாவில் நடக்கும் விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். இதை, ஏற்று பிரதமர் மோடி டாகா சென்றுள்ளார்.
இரண்டாவது நாளான இன்று வங்கதேசத்தின் சக்திஹிரா மாவட்டத்தில் உளள ஈஸ்வரிபூர் நகரில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜெஸ்சூ ரேஸ்வரி காளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
கோயிலுக்கு வந்த மோடிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தங்க மூலாம் பூசப்பட்ட வெள்ளியால் உருவாக்கப்பட்ட கிரீடத்தை காளி தேவிக்கு, மோடி சூட்டினார். பின்னர் வழிபாடு நடத்தினார். தியானமும் செய்தார். அப்போது, அர்ச்சகர் வேத மந்திரங்கள் ஓதினார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த மோடி கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை காக்க வேண்டும் என காளியிடம் பிரார்த்தனை செய்தேன். ஏராளமான பக்தர்கள், எல்லை தாண்டி வந்து வங்கதேசத்தில் உள்ள காளி கோயிலில் தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோயிலுக்கு வரும் அனைத்து சமூகத்தினரும் தங்கும் வகையில் சமுதாய கூடம் தேவை. அவ்வாறு இருந்தால், அது பயனுள்ளதாக இருக்கும்.
சமுதாய கூடத்தை இந்தியா கட்டமைத்து கொடுக்கும். மதரீதியான நிகழ்ச்சிகள், கல்வி, சமூக நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பயன்படும் வகையில் அந்தக்கூடம் இருக்கும். புயல், மழைகாலங்களில் மக்கள் தங்கி கொள்ளலாம். இதற்கான பணிகளை இந்தியா விரைவில் துவங்கும். இங்கு வழிபாடு நடத்த வாய்ப்பளித்த வங்கதேச அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
பின்னர் கஷியானி உபஜிலா பகுதியில் .ள்ள ஒரகண்டி கோயிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: இந்த கோயிலுக்கு வரவேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணி இருந்தேன். இந்த வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். கடந்த 2015ம் ஆண்டு வங்கதேசம் வந்த போது, ஓரகண்டி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்தேன். அது தற்போது தான் நிறைவேறி உள்ளது என தெரிவித்தார்
XXXX
திருவாரூர் ஆழித்தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து உற்சாகம்

“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் கோவில் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயில் சைவ சமயத்திற்கே பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பது ஆகும். பஞ்ச பூத தலங்களுல் பூமிக்குரிய தலமாக விளங்கும் இக்கோயில் சனீஸ்வரனும், நளனும் வணங்கி சாபம் போக்கியதன் மூலம் சர்வதோஷ பரிகாரதலமாகவும் விளங்குகிறது.
இக்கோயில் ஆழித்தேர் ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் மார்ச் 25ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. வேத ஆகமங்கள் ஒலிக்க தேரோட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கொடி அசைக்கப்பட்டவுடன் பக்தர்கள் ஆருரா! தியாகேசா!! என உற்சாக குரல் எழுப்பி வடம்பிடித்து தேரினை இழுத்தனர். 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டது.ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் 1 கி.மீ. தூரம் என்பது குறிப்பிதக்கது.
தேரோட்டத்தினை முன்னிட்டு கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில் இருந்து தியாகராஜர் அஜபா நடனத்துடன் நகர்வலமாக வந்து திருத்தேர் ஏறினார். அதுமுதல் தேரிலிருந்தே பக்தர்களுக்கு தியாகராஜர் காட்சி அளித்தார். முன்னதாக 5 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் பக்தர்களால் இழுத்து செல்லப்பட்டது. தியாகராஜர் ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேர்களும் இழுக்கப்பட்டது. 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்ற காட்சி பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக இருந்தது.
96 அடி உயரத்தில் கம்பீரமாய் அசைந்தாடி வந்த தேரினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தர்கள் தருமபுரம் ஆதீனம், திருப்புகழூர் வேளாக்குறிச்சி ஆதீனம், திருவாடுதுறை மற்றும் திருப்பனந்தாள் ஆதீனங்கள் பங்கேற்றனர். தேரானது பல்வேறு வீதிகளின் வழியாக சென்றது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வழக்கமாக 3 நாட்கள் நடைபெறும்.. இந்த ஆண்டு ஒரே நாளில் 5 தேரோட்டமும் நடைபெற்றது. கால விரயத்தினை தவிர்க்கும் வகையிலும் பொருளாதார சிக்கனத்தை முன்னிட்டும் ஒரே நாளில் 5 தேர்களும் இழுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீதிருநாவுக்கரசர் பெருமான் இத்திருவிழாவை,
ஊழித்தீயன்னானை ஓங்கொலி மாப்பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டதாரூரே
என்று குறிப்பிடுகிறார்.இப்படி 7ம் நூற்றாண்டிலிருந்தே இத்திருத்தேர் ஆவணப்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு தேரோட்டத்திற்கும் ஏராளான சிவனடியார்கள் வந்திருந்தனர். இவர்கள் தியாகராஜரை தரிசித்துவிட்டு தேருக்கு முன்பகுதியில் உடுக்கு மற்றும் மேளம் இசைத்து அஜபா நடனம் ஆடி சென்றனர்.
XXXX


மேல்கோட்டையில் புகழ்பெற்ற செலுவநாராயணசாமி கோவிலில் வைரமுடி உற்சவம்;
கர்நாடக மாநிலத்தில்
மேல்கோட்டையில் புகழ்பெற்ற செலுவநாராயணசாமி கோவிலில் வைரமுடி உற்சவம் கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்தது.
இந்த கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமான வைரமுடி திருவிழா. இந்த திருவிழாவையொட்டி பெருமாளுக்கு வைர கிரீடம் அணிவிக்கப்படும். பின்னர் அந்த வைர கிரீடம் அணிந்த செலுவநாராயணசாமி கோவில் வளாகத்தில் திருவீதி உலா வருவார். இதை பார்க்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வைர முடி உற்சவ விழா எளிமையாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை மாவட்ட கருவூலத்தில் இருந்து வைர கிரீடம் கலெக்டர் அஸ்வதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு பூஜை நடத்தி ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. வழியில் மண்டியா லட்சுமி ஜனார்த்தனா கோவிலில் வைர கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் அந்த வைர கிரீடத்தை தரிசனம் செய்தனர். பின்னர் வைர கிரீடம் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
அதைத்தொடர்ந்து வைர கிரீடத்துடன் செலுவநாராயணசாமி தேரில் எழுந்தருளி, கோவிலின் ராஜவீதிகளில் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
XXXXXXXXXXXX
கோவில்கள் பிரச்சனைகளில் அரசாங்கங்கள் தலையிடக்கூடாது

கேரள மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.. பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
சாத்தனூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, கோவில்கள் தொடர்பான பிரச்சனைகளில் அரசாங்கங்கள் தலையிடக்கூடாது என்று பாஜக நம்புகிறது என்றார். கோவில் பிரச்சனைகளை பக்தர்கள் வசம் விட்டுவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
‘போலீஸ் சீருடை அணிந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் சபரிமலை பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்டனர் என்றும் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
XXXXX
அழிந்துவரும் தமிழக கோவில்கள்! சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு பிரபலங்கள் ஆதரவு

தமிழகத்தில் சிதிலமடைந்த கோவில்களின் வீடியோக்களை, பகிர்ந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, பல நுாறு கோவில்கள் முறையாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தை துவக்கினார்.
இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட கோவில்களின் வீடியோ, போட்டோக்களை பக்தர்கள் டுவிட்டரில் பதிவிட்டனர். அவற்றை, சத்குரு பகிர்ந்துள்ளார். அதற்கு, பிரபலங்கள், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ‘ஹேஷ்டேக்’ பயன்படுத்தி ஆதரவு தெரிவித்தனர்.
கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ‘பையோகான்’ நிறுவனத் தலைவர் கிரண் மசூம்தார், முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் நாகேஸ்வர ராவ், நடிகைகள் கங்கனா ரணவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி, ரவினா டான்டன், மவுனி ராய் மற்றும் சினிமா இயக்குனர் மோகன், பா.ஜ., தமிழக பொறுப்பாளர் ரவி உள்ளிட்ட பலர், டுவிட்டரில் ஆதரவு அளித்துள்ளனர். தமிழக அளவில், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ‘ஹேஷ்டேக்’ டிரெண்டிங் ஆகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் சேவாக், “நம் கோவில்களின் நிலையை பார்க்கும்போது, வேதனை அளிக்கிறது. முறையான நிர்வாக அமைப்பை உருவாக்கி, பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த முன்னெடுப்பில் சத்குருவுடன் இருக்கிறேன்,” என, தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி தனது பதிவில், “நம் புனித ஸ்தலங்களில் நடக்கும் இதயமற்ற சுரண்டல்களை பார்த்து மனம் வலிக்கிறது. மற்ற வழிபாட்டு ஸ்தலங்களை போல், நம் கோவில்களும் விடுதலை பெற வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீதிவ்யா, “இது மதம் பற்றிய விஷயம் அல்ல. சமூகத்தில் ஒரு தரப்பினருக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி,” எனக் கூறியுள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத், “இது, இதயத்தை நொறுங்க செய்கிறது. நம் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்காக எழுந்து நிற்காமல் இருப்பது அவமானமாக இருக்கிறது,” என, பதிவிட்டுள்ளார்.
சத்குரு கூறியுள்ளதாவது: தமிழக கோவில்களின் அவலநிலையை பார்த்து, உருவான வலியால் ‘கோவில் அடிமை நிறுத்து’ இயக்கத்தை துவங்கினோம். ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்துள்ளன. அக்கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். அதற்காக, நான், 100 ‘டுவிட்’களை பதிவிட உள்ளேன். மதங்களை கடந்து அனைவரும் ஆதரவு கொடுங்கள். இது, ஹிந்துக்களை பற்றியது மட்டும் அல்ல. நம் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைக்கு இழைக்கப்பட்ட அநீதி. நாம் ஒன்றிணைந்து, தமிழக கோவில்களை அரசு பிடியில் இருந்து விடுவிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
XXX

திருமலை தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி., விலக்கு இல்லை
திருப்பதி:”திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க முடியாது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ”நாட்டில் முக்கிய கோவில்கள் ஏராளமாக உள்ளன. ”அவற்றிற்கெல்லாம் வழங்கப்படாத, ஜி.எஸ்.டி., விலக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மட்டும் வழங்க முடியாது,” என்றார்.
பக்தர்களின் உண்டியல் காணிக்கைகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், வங்கியில் முதலீடு செய்கிறது.
இதன் வாயிலாக கிடைக்கும் வட்டி வருவாய் உள்ளிட்டவற்றை கொண்டு, தேவஸ்தான பணிகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. உண்டியலில் பெறப்படும் தங்கம், நன்கொடையாக வழங்கப்படும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை நிரந்தர வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் வருவாயும், இதில் உள்ளடக்கியது.
இவற்றுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. மேலும், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு, தலா, ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை. என்றாலும், அந்த லட்டு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களுக்கும், அறைகளின் வாடகை கட்டணத்தின் மீதும், ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநில எம்.பி., விஜயசாரதி ரெட்டி, சமீபத்தில் பார்லிமென்டில் பேசுகையில், ‘நாட்டில் உள்ள கோவில்களில் மிக முக்கிய கோவிலாக ஏழுமலையான் கோவில் கருதப்படுகிறது. ‘எனவே, அதை நிர்வகிக்கும் தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்றார்.
அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ”நாட்டில் முக்கிய கோவில்கள் ஏராளமாக உள்ளன. ”அவற்றிற்கெல்லாம் வழங்கப்படாத, ஜி.எஸ்.டி., விலக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மட்டும் வழங்க முடியாது,” என்றார்.
XXXX
ஹரித்வாரில் ஒரு மாதமே ‘கும்பமேளா’ திருவிழா


உத்தரகண்டின் ஹரித்வாரில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முதல் முறையாக, கும்பமேளா திருவிழா, ஒரு மாதம் மட்டுமே நடக்கவுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹா கும்பமேளா திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த, 2010ம் ஆண்டு, கடைசியாக நடந்த விழாவில், ஜனவரி 14ம் தேதி துவங்கி, ஏப்ரல் 28ம் தேதி வரை நடந்தது. எனினும், இம்முறை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கும்பமேளா விழாவை, ஹரித்வாரில் ஒரு மாதம் மட்டுமே கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி துவங்கி, ஏப்ரல் 30ம் தேதி வரை, கும்பமேளா கொண்டாடப்படுகிறது. கும்பமேளா திருவிழா, ஒரு மாதம் மட்டுமே கொண்டாடப்படுவது, இதுவே முதன்முறை..
XXXXX
அனைவருக்கும் பங்குனி உத்திரத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்.

tags — உலக இந்து, செய்தி மடல், 28-3-2021 ,

