
Written by London Swaminathan
Date: 21 October 2016
Time uploaded in London: 5-50 AM
Post No.3273
Pictures are taken from Wikipedia and other sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)
Contact swami_48@yahoo.com
நான் தொல்காப்பிய அதிசயங்கள் என்று எழுதிய இரண்டு கட்டுரைகளில் 17 அதிசயங்களை விளக்கினேன். இப்பொழுது இன்னொரு அதிசயத்தை விரிவாகக் காண்போம். இது தவிர தொல்காப்பியம் பற்றி பத்துக்கும் மேலான கட்டுரைகள் எழுதினேன். அவைகளையும் காண்க.
38 உவம உருபுகள் பட்டியலைத் தொல்காப்பியர் தருகிறார். ஆனால் இவைகளில் 14 உவம உருபுகள் சங்க இலக்கியத்தில் கூடக் காணப்படவில்லை. இதனால் நாம் அறிவது யாது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் உவம உருபு என்றால் என்ன தெரியாதவர்களுக்கு அதை விளக்குகிறேன்:-
ராமனைப் போல பரதன் நல்லவன் (Rama is LIKE Bharata; Rama is as good as Bharata)
சீதையைப் போல (LIKE) சாவித்திரி ஒரு பத்தினிப் பெண்
என்பதில் போல (LIKE, As) என்பது உவம உருபாகும். உவம என்பது சம்ஸ்கிருதச் சொல். ஆனால் தொல்காப்பியர் இதை ஒரு இயலுக்குத் தலைப்பாகக் கொடுக்கவும் தயங்கவில்லை.

நமக்குத் தெரிந்தது “போல” “நிகர்த்த” என்ற சில சொற்கள்தான். ஆனால் அவரோ 38 உருபுகளைப் பட்டியலிடுகிறார். அதில் 14 உருபுகளை 400-க்கும் மேலான புலவர்கள் எழுதிய சுமார் 2500 பாடல்களில் காணக்கூட இயலவில்லை.
இதன் பொருள் என்ன?
நான் முன்பு எழுதிய பல கட்டுரைகளில் தொல் காப்பியம் என்பது தற்போதைய நிலையில் கிடைப்பது கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததுதான் என்றும் அவரே 250-க்கும் மேலான இடங்களில் மற்றவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் (என்ப, மொழிப) என்றெல்லாம் எழுதி இருக்கிறார் என்றும் எழுதினேன்.
ஆக தொல் காப்பியர் தனக்கு முன்னால் இருந்த இலக்கிய, இலக்கண நூல்களில் இருந்ததைத் தொகுத்துத் தந்திருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
இதில் அதிசயம் என்ன இருக்கிறது?
சங்க இலக்கியத்திலேயே 14 உவம உருப்புகள் மறைந்து, தொல்காப்பியர் சொல்லாத சில உவம உருபுகளும் வந்திருப்பதால் — பலர் கருதுவது போல தொல்காப்பியத்தை முதல் நூற்றாண்டை ஒட்டிய நூல் என்று கொண்டால் — அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னராவது தமிழ் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அதாவது கி.மு 500 வாக்கில் பல தமிழ் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அவை எல்லாம் காலப் போக்கில் மறைந்து விட்டதால் 14 உவம உருபுகள் பயனில்லாமற் போய்விட்டன அல்லது மறந்து போயினர்.
சிலர், இதைக் கொண்டு, அப்படியானால் தொல்காப்பியரும் காலத்தினால் முந்தையவராகத்தானே இருக்க வேண்டும் என்று வாதிடலாம். அப்படி வாதிட முடியாமைக்கான காரணங்களை தொல்காப்பியர் காலம் தவறு என்ற தலைப்பில் 3 கட்டுரைகளில் தந்து விட்டதால் அரைத்த மாவையே அரைக்கப் போவதில்லை.
தொல்காப்பியர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்லுகிறார். அதாவது 38 உவம உருபுகளை நான்கு குழுக்களாகப் பிரித்து அவை சிற்சில இடங்களில் மட்டுமே பயன்படுதப்படும் என்கிறார். சங்க காலத்தில் அப்படிக் குறிப்பிட்ட வரையறைக்குள் உவம உருபுகள் பயன்படுத்தப் படவில்லை. ஆக சங்க இலக்கியத்துக்கு முன்னர் ஒரு பெரிய தொகுதி தமிழ் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அதில் தொல்காப்பியர் சொல்லும் இலக்கண விதிகள் பின்பற்றப்படிருக்க வேண்டும். இவை எல்லாம் தமிழ் அன்பர்களுக்கு இனிப்பான செய்தி.
இன்னொரு சுவையான விஷயம் அவர் சொல்லும் பல உவமை உருபுகளை நாம் இன்று வேறு பொருளில் பயன்படுத்துகிறோம். “ஏய்க்கும்: என்றால் ஏமாற்றும் என்று நாம் அர்த்தம் செய்வோம். ஆனால் இதற்குப் “போல” (Like) என்று அர்த்தம்! இதே போல காய்ப்ப, கடுப்ப, கள்ள, ஒடுங்க, நாட, வியப்ப, வென்ற, வெல்ல முதலிய பல சொற்கள் “போல” (like) என்ற உவம உருபு போல பயன்படுத்தப் படுகின்றன.
இந்த உவம உருபுகள் பட்டியலை டாக்டர் ரா. சீனிவாசன் எழுதிய “சங்க இலக்கியத்தில் உவமைகள்” என்ற ஆராய்ச்சி நூலில் கொடுத்துள்ளார். இதோ அந்தப் பட்டியல்:-

“தொல்காப்பியர் உவம உருபுகளை வினை, பயன், மெய், உரு என நான்கு வகைகளாகப் பிரித்து 38 உவம உருபுகளும் எந்த வகை என்றும் கொடுத்துள்ளார். இந்த வரையறை சங்க காலத்தில் பின்பற்றப்படவில்லை.
சூத்திரம் 286-இல் 36 உவம உருபுகளையும், 287- இல் ஒன்றும் சூத்திரம் 291-இல் ஒன்றுமாக 38 உருபுகள் உள்ளன.
அகர வரிசையில் உவம உருபுகள்:
அன்ன, ஆங்க, இறப்ப, உறழ, என்ன, எள்ள, ஏய்ப்ப, ஒன்ற, ஒடுங்க, ஒப்ப, ஒட்ட, ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, நேர, நோக்க, புல்ல, புரைய, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள, மறுப்ப, மான, மாற்ற, வியப்ப, விளைய, வீழ, வெல்ல, வென்ற
இவைகலைள தனித் தனியே கொடுத்தால் நாம் இன்று வேறு அர்த்தம் சொல்லுவோம். அத்தனைக்கும் “போல” (LIKE) என்றே பொருள்!
இந்தப் பட்டியலில் சங்க இலக்கியத்தில் வழக்கொழிந்த 14 உவம உருபுகள்:–
இறப்ப, ஒன்ற, ஒடுங்க, ஓட, ஒட்ட, கள்ள, நடுங்க, நந்த, நாட புல்ல, மதிப்ப, மறுப்ப, வியப்ப
சங்க கலத்தில் தொல்காப்பியர் சொல்லாத 28 புதிய உவம உருபுகளும் வந்துவிட்டன! அவை:- அமர், அவிர், ஆக, இகலிய, இயல், ஈர், உரைக்கும், ஏக்குறும், ஏதம் ஏர், ஓடு, ஓங்கு, ஓர்க்கும், சால, சினை இய, சேர், செத்து, தேர், தோய், நவில, நான நாறு ,மலி, மயங்கு, மாய் முரணிய, வாய்ந்த வவ்வும்.
தமிழ் எவ்வளவு வளமான மொழி, எவ்வளவு பழமையான மொழி, என்பதற்கு இவை எல்லாம் சான்று பகரும். அதுமட்டுமல்ல. பழைய உவம உருபுகள் மறைந்து புதிய உருபுகள் தோன்ற எவ்வளவு கால இடைவெளி ஏற்பட்டிருக்கும் பாருங்கள்!
சில சுவையான எடுத்துக் காட்டுகள்
ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் – கலித்தொகை 20-11
வாயில் ஊறும் இதழ்நீர் அமிர்தம் போல இருக்கும்.
ஏய்க்கும்= போல
கார்மழை முழக்கிசை கடுக்கும் – அகம் 14
கார்காலத்து மழை, முழவு ஒலி எழுப்புவது போல ஒலிக்கும்
கடுக்கும் =போல
செத்த, இறப்ப என்றால் நாம் மரணம் என்று பொருள் கொள்ளுவோம். ஆனால் அந்தக் காலத்தில் இவை “போல” (LIKE) என்ற பொருளில் பயனடுத்தப்பட்டன!
வாழ்க தொல்காப்பியர்! வளர்க தமிழ்!!
–SUBHAM–
You must be logged in to post a comment.