‘எல்லாம் நன்மைக்கே’- சுவாமி ராமதாஸ் சொன்ன கதை (Post No. 2474)

ramdas

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 9 January 2016

 

Post No. 2474

 

Time uploaded in London :– 12-06

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஒரு நாட்டில் ஒரு மன்னனிடம் மந்திரி ஒருவர் வேலை பார்த்தார். அவர் இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். எது நடந்தாலும் எல்லாம் , ‘இறைவன் கொடுத்த வரம்” என்று நினைப்பார். யாராவது வந்து “எனக்கு அந்தக் கஷ்டம், இந்தக் கஷ்டம்” என்று முறையிட்டாலோ,முனகினாலோ, “கவலைப் படாதே, எல்லாம் நன்மைக்கே, கடவுள் எதையும் யாருக்கும் காரணமின்றி தரமாட்டார்” என்று ஆறுதல் சொல்லுவார். இவ்வாறு இந்த ‘எல்லாம் நன்மைக்கே’ மந்திரியின் புகழ் திக்கெட்டும் பரவியது.

ramdas book

ஒரு நாள் அரசனும் மந்திரியும் வேட்டையாட காட்டுக்குச் சென்றனர். இருள் சூழும் வேலையில், அவர்கள் கூட வந்த பரிவாரம், வேறுதிசையில் போய்விட்டது. மந்திரியும் மன்னனும் தனித்து இருந்தனர். அரசனுக்கு ஒரே பசி. அமைச்சரிடம் சொல்லவே அவரும் ஒரு மரத்தில் பழங்கள் இருப்பதைப் பார்த்து அதைப் பறித்து மன்னைடம் கொடுத்தார்.

மன்னனோ பசி, அவசரத்தில் பழங்களை வெட்டும்போது ஒரு விரலையும் வெட்டிக்கொண்டு விட்டார். ரத்தம் குபுகுபு என்று வழிந்தோடியது. வலியில் துடித்தார். மந்திரியிடம் பொறுக்கமுடியாத வலி பற்றிச் சொல்லி கதறினார். மந்திரியோ, “மன்னரே! கவலைப் படாதீர்கள்; எல்லாம் நன்மைக்கே” என்றார்.

 

அரசனுக்கு அதி பயங்கர கோபம் வந்தது. “நான் துடியாய்த் துடிக்கிறேன். ஆறுதல் சொல்வதற்குப் பதில் எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய்” என்று சொல்லி மந்திரியை ஓங்கி ஒரு உதை விட்டு, இனிமேல் என்முகத்தில் முழிக்காமல் ஓடிவிடு என்றார். மந்திரியோ, அதற்கும்’ எல்லாம் நன்மைக்கே’ என்று காரணம் கற்பித்துவிட்டு அவர்முகத்தை திருப்பிக்கொண்டு, வேறு ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தார். மன்னன் தனது மேலாடையில் ஒரு ஓரத்தைக் கிழித்து கையில் விரல் துண்டித்த இடத்தில் ஒரு கட்டுப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.

 

 

ramdas2

கொஞ்ச நேரத்தில் அந்த வழியே இரண்டு தடியர்கள் வந்தனர். மன்னர்கள் மீது பாய்ந்து அவரைக் கட்டி, அலாக்காகத் தூக்கினர். அவரோ குய்யோ முறையோ என்று கத்தினார். தான் இந்நாட்டு மன்னர் என்றும், யாது காரணத்தாலவர்கள் இப்படிச் செய்கின்றனர் என்று ம் வினவினார். அந்த தடியர்களுக்கு மேலும் சந்தோஷம் வந்தது. உடனே சிரித்துக் கொண்டே சொன்னார்கள்: “நாங்கள் ஆண்டுதோறும் ஒரு ஆடவனை காளிதேவிக்கு உயிர்பலி தருவோம். இந்த தடவை மன்னே உயிர்ப்பலிக்கு கொடுக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது. காளிதேவி எங்களுக்கு கூடுதல் அருள் பொழிவாள்”.

 

மன்னனுக்கு ஒரே துன்பம்! என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

 

காளிதேவியின் பீடத்தில் அவனைக் கிடத்தி பூசாரியை அருவாளுடன் வர அழைத்தனர். அவரும் வந்தார். ஆடைகளையெல்லாம் ஒன்றொன்றாக உருவிவிட்டு வெட்டச் செல்லும் போது அந்தப் பூசாரி, மன்னனின் கையில் ஒரு கட்டு போடப் பட்டிருப்பதைப் பார்த்தான். அது என்னவென்று வினவினான். உடனே விரல் துண்டுப்பட்ட இடத்தை மன்னன் காட்டினான்.

 

“அடக் கடவுளே! முழு உடலிருக்கும் மனிதனைத் தான் காளிக்குப் பலி தரவேண்டும். இவனுக்கோ ஒரு அங்கம் பழுது. இவனை உடனே எடுத்துச் செல்லுங்கள். காளிதேவி கோபித்துக்கொள்வாள்” என்றார் பூசாரி. உடனே இரண்டு தடியர்களும் மன்னரை அலாக்காகத் தூக்கி பழைய இடத்திலேயே போட்டுவிட்டு போய்விட்டனர்.

 

மன்னனுக்கு மந்திரி சொன்னது நினைவுக்கு வந்தது: எல்லாம் நன்மைக்கே – என்று அமைச்சர் சொன்னாரே. கை விரல் வெட்டுப்பட்டதற்கு கோபப்பட்டு அவரை எட்டி உதைந்தேனே. கைவிரல் வெட்டுப்பாடாமல் முழு அங்கத்துடனிருந்தால் இவ்வளவு நேரம் காளிக்குப் பலி கொடுத்திருப்பார்களே என்று எண்ணி வருத்தப்பட்டார். மந்திரியின் பெயரை உரத்த குரலில் சொல்லி அழைத்துக் கொண்டே போனார்.

 

தொலைவில் மரத்தடியில் அமர்ந்திருந்த மந்திரி ஓடோடி வந்து மன்னா! என்ன வேண்டும்? ஏன் அழைத்தீர்கள்? என்றார். மன்னன் முழுக் கதையையும் சொல்லி மந்திரி சொன்னது உண்மைதான். கடவுள் கஷ்டத்தைக் கொடுத்தால் அதுவும் நன்மைக்கே என்றார். மந்திரியிடம் மன்னிப்பும் கோரினார்.

 

மந்திரி சொன்னார்: மன்னரே, மன்னிப்பு கேட்க வேண்டாம். நீங்கள் என்னை எட்டி உதைந்தபோது நானும் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிவிட்டுப் போனேன். நீங்கள் என்னை விரட்டாமலிருந்தால், இவ்வளவு நேரம் அந்தத் தடியர்கள் நம்மிருவரையும் கொண்டுபோய் பூசாரியிடம் ஒப்படைத்திருப்பர். உமக்கு அங்கக் குறைவு இருந்ததால் என்னைத்தான் பலியாக்கி இருப்பர். நீங்கள் என்னை எட்டி உதைத்து விரட்டிவிட்டதும் இறைவன் செயலே. எல்லாம் நன்மைக்கே” என்று சொன்னார். பின்னர் இருவரும் காட்டிலிருந்து நாட்டுக்குப் புறப்பட்டனர்.

bhavan book

நீதி: ஏதேனும் துன்பம் நேரிட்டாலும், அது ஏதோ ஒரு நன்மைக்கே என்று ஆண்டவனை நம்பி வாழ வேண்டும்.

 

“நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு” (பாரதியார் பாடல் வரிகள்).

தமிழ் மொழி பெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்

–சுபம்–