ஏணியா, தோணியா? எது வேண்டும்?

ladderVocational-

thoni

கட்டுரையாளர்; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:928 தேதி 24 மார்ச் 2014.

சம்ஸ்கிருதத்தில் நியாயங்கள் என்று ஒரு பிரிவு உண்டு. தர்க்க சாஸ்திரத்தில் இடு பயன்படுத்தப்படும். அதாவது ஒன்றைக் கொண்டு ஒன்றை அனுமானிப்பது — இதற்குக் காரணம் இது என்று காட்டி புரிய வைப்பது. எடுத்துக் காட்டாக தமிழில் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்”– என்ற பழமொழி அல்லது முது மொழி இருக்கிறது. இதை ‘ஸ்தாலி புலாக நியாயம்’ என்று வடமொழியில் கூறுவர். இது போல மற்கட (குரங்கு) நியாயம், மார்ஜர (பூனை) நியாயம் என்று ஒரு நியாயம் இருக்கிறது. அது என்ன?

மற்கட நியாயம், மார்ஜர நியாயம்

இதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.

பக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.

குரங்குகள் என்ன செய்யும்? மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி? குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.
மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.

பூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.

சுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.

white cat kitten

A macaque monkey, with an offspring clut

இதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.

ஏணி என்ன செய்யும்? தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.

தோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.

இதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை
பித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,
இளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச்
சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய
அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)

பொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.

அப்பர், மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள் தங்களைப் பல முறை நாயேன் என்று கூறிக்கொள்ளுவர். அவர்கள் அவ்வளவு தாழ்ந்தவர்கள் அல்ல. நாயைப் போன்ற இழிகுணம் உள்ளவர்களும் கடைத்தேற முடியும் என்பதைக் காட்டவே – நம்பிக்கை ஊட்டவே — இப்படி அடிக்கடி பாடுகின்றனர். ஆக சிவன் என்னும் கடவுள் சாதாரண ஏணியோ, தோணியோ அல்ல. சம்சாகர சாகரத்தைக் கடக்க உதவும் ஏணி/தோணி!!

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என்.ராமசந்திரன் இதை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்:–

On His matted hair He fosters a goodly crescent
He is the ladder leading His devotees mad after Him
To moksha; unto me caught up in a male storm
Of the sea of misery. He is the ark that transports me
To the other shore; He, the wearer of swaying white kuzai
Is the pure lustre unto me. His serviteur; He is
The touchstone of the radiant golden coin; He is the Hara
That abides at cool Avaduthurai; I,the lowly cur,
Reached His feet and stand redeemed. (Thevaram 6-461)
Contact swami_48@yahoo.com