
Written by London swaminathan
Date: 4 FEBRUARY 2017
Time uploaded in London:- 15-41
Post No. 3605
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேச மஞ்சரியில் ஒரு அழகான பொன்மொழி உள்ளது.
“கங்கை நதி புனிதமானதே. ஆனால்க ங்கையில் நீந்தும் மீன்கள் எல்லாம் சுவர்க்கத்துக்குப் போவதில்லை”
ஏன்? என்று சிந்திப்போம்.
இறந்த சடலத்தை கங்கையில் வீசி எறிந்தாலும், காசியில் சடலத்தை எரித்தாலும் சுவர்கத்துக்குப் போய்விடலாம் என்று குறுக்கு வழியில் சிந்திப்போர் உண்டு. இது உண்மையானால் கங்கையில் வாழும் நண்டு, முதலை, தவளை, மீன்கள் எல்லாம் சுவர்கத்துப் போகவேண்டுமே! போகாது ஏனெனில் அவற்றின் மனதோ லட்சியமோ அதுவல்ல. இது போலவே எத்தனை புனித நீர்த்தலங்களுக்குச் சென்று நீராடினாலும் மனம், மொழி, மெய் மூன்றிலும் கடவுளை அடையும் நாட்டம் இருந்தால்தான் சுவர்கத்தின் கதவுகள் திறந்து இருக்கும்.
தமிழ் சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும், அதற்கெல்லாம் முந்தைய சம்ஸ்கிருத இலக்கியஙகளிலும் ராமாயண மஹாபாரத இதிஹாசங்களிலும் 18 புராணங்களிலும் தீர்த்த யாத்திரை பற்றிய குறிப்புகளும் மகிமையும் உள்ளது. உண்மைதான். ஆனால் அதன் உட்பொருளை உனர்ந்து செயல்படுவோருக்கே கை மேல் பலன்.
இதை யார் சொல்கிறாரர்கள்? ஏராளமான தலங்களுக்குச் சென்று தரிசித்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஏனைய அடியார்களும் சொல்கிறார்கள்.

புனித யாத்திரை செய்தவர்களே சொல்லும்போது அதை நம்பாமல் இருக்க முடியுமா?
இதோ அப்பர் வாக்கு:-
கங்கை யாடிலென் காவிடி யாடிலென்
கொங்கு தண்குமரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்
எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே
–ஐந்தாம் திருமுற
இதில் வேறு ஒரு விஷயத்தையும் அறிய முடிகிறது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கங்கை, காவிரி முதலிய நதிகளிலும் கடலிலும் நீராடியதும், கொங்கு, கன்யாகுமரி முதலிய இடங்களுக்குப் போனதும் தெரிகிறது. மாஹாபாரதப் போரில் ஈடுபடாத பலராமன் நாடு முழுதும் வலம் வந்ததையும் ஆதிசங்கர, மத்வர், ராமனுஜர், குரு நானக் முதலியோர் நாடு முழுதும் சுற்றி பல இடங்களைத் தரிசித்ததையும் நாம் அறிவோம். இந்துக்களில் புனித நீராடாத மஹான்கள் வெகு சிலரே! ஆயினும் அதன் உட்பொருளை அறியா,மல்– சுற்றுலா போவது போல –செல்பவருக்கு பலன் ஒன்றும் இல்லை.
இதைப் பட்டினத்தாரும் அழகாகச் சொல்லி, அப்பர் சொன்னது சரியே என்று முத்திரை குத்துகிறார்.
பட்டினத்தார் திருவாரூருக்குத் தரிசிக்கச் சென்றார். இவர் திருவாரூரை நோக்கி நடக்கையில் மக்கள் எல்லோரும் அரோஹரா அரோஹரா என்று கோஷமிட்டுக் கொண்டு எதிர் திசையில் சென்றனர். எதற்காக? வேறு ஊரில் உள்ள இறைவனுக்கு நடக்கும் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக!!
பட்டினத்தாருக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அடக் கடவுளே! திருவாரூரில் பெரிய இறைவன் குடி இருக்கையில் இவர்கள் வேறு ஊருக்கு செல்வது ஏனோ என்று வியக்கிறார். மக்களில் பெரும்பாலோர் யாத்திரை போவது, சுற்றுலா போவதாகும். தங்களிடம் உள்ள நகை நட்டு, புடவைகளை மற்றவர்களிடம் காட்டுவதற்காகவும் அல்லது புதிய இடங்களில் புதிய பொருட்களை விலைக்கு வாங்கி வீண் பெருமையும் பகட்டும் பாராட்டுவதற்காகவும் — என்பது பட்டினத்தாருக்குத் தெரியாமல் இல்லை. இதோ அவரது பாடல்:-

ஆரூரர் இங்கிருக்க
அவ்வூர்த் திருநாளென்
றூர்கள்தோறும்
உழலுவீர்; — நேரே
உளக்குறிப்பை நாடாத
ஊமர்காள்! நீவீர்
விளக்கிருக்கத் தீத்தேடுவீர்
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தானாம் என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. இதே போல விளக்கு எரிந்து கொண்டிருக்கையில் அடுத்த வீட்டுக்குச் சென்று நெருப்பு கேட்பவரும், தீப்பெட்டி கேட்போரும் உண்டு!
திருவாரூர் தியாகேசனை விட்டுவிட்டு வேறு இடத்திற்குச் செல்வோர் ஏன் செல்கிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. அவர்கள் அனைவரும் விளக்கிருக்கத் தீத்தேடுவோரே!
–Subham–