
Written by S Nagarajan
Date: 3 March 2016
Post No. 2592
Time uploaded in London :– 7-53 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

நையாண்டி மடல் எண் 3
முட்டாள்கள் முன்னேற்ற சங்கம்: எனக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை அம்மா! ஆங்கிலத்தில் பிடித்த ஒரே வார்த்தை CUTTING!!
ச.நாகராஜன்
என் இனிய முட்டாள்களே!
ஒரு அவசர விஷயமாக இந்த மடலை எழுத வேண்டியுள்ளது. அது அவசியமும் கூட என்பதை இந்த மடலைப் படித்து முடிக்கும் முன்னர் அறிந்து கொள்வீர்கள்!
நிதி! கழகத்திற்கு நிதி! எனக்கல்ல; நமக்கல்ல! கழகத்திற்கு!
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி ஆங்கு என்றான் ஐயன்! அதற்கு என்ன பொருள்? காசு வேண்டும் இங்கே பிழைப்பதற்கு என்று பொருள். அதற்கு முன்னர் ஐயன் கூறியது அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை!
இதற்கான உரையைக் குல்லுக பட்டர்களும் கோமாளி ஆசாரியர்களும் கொக்கரிக்கும் சாணக்கியர்களும் தவறாகச் சொல்லி இருப்பதை இங்கு நான் கண்டிக்கிறேன். இவ்வுலகம் தவிர இன்னும் ஒரு மறு உலகம் எப்படி இருக்க முடியும்? ஆக பொருள் பற்றிக் கூறும் ஐயன் கூற வந்தது தான் உண்மையில் என்ன? மாற்றிப் படியுங்கள்! பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அவ்வுலகம் அருள் இல்லார்க்கு இல்லை! பொருள் இல்லை என்றால் இவ்வுலகில் பிழைப்பு ஓடாது. அந்த உலகில் பொருள் இல்லாவிடில் பொருளின் அருளும் இல்லாமல் போய் விடும். அதாவது உங்களுக்கு அதன் விளைவாகக் கிடைக்க வேண்டிய ‘சம்திங்’ கிடைக்காது! (இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ஐயனுக்கு அரிய உரை ஒன்றை எழுதியுள்ளேன். விலை இருநூறு ரூபாய் மட்டுமே! கழக அலுவலகத்தில் பணமாகக் கொடுத்து நிறைய பிரதிகள் வாங்குங்கள்! நீங்கள் படித்தீர்களா என்று நான் கேட்கவே மாட்டேன், பணம் கொடுத்தீர்களா என்று மட்டுமே கேட்பேன், அது உங்களுக்கே தெரியும்!)

Word Cutting On Button With Hand Pushing
ஆக கழகத்திற்கு அந்தப் பொருள் – நிதி வேண்டும்! ஆரம்ப காலத்திலிருந்தே நான் செல்வத்தின் மீது கொண்டிருக்கும் பற்று உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும்!
என்னிடம் நிதி தாருங்கள்! ஆனால் கணக்கு மட்டும் கேட்காதீர்கள். மு.மு,க ஆரம்பிக்கும் முன்னர் பழைய நாட்களில் என்னிடம் கணக்குக் கேட்டவர் என்னைப் படுத்திய பாடும் நான் அவரைப் படுத்திய பாடும் நாடறியும்; ஏடறியும்; நல்லோர் அறிவர்.
ஆகவே இனி இன்னொருவர் இந்தத் தவறைச் செய்யாதீர்கள்; தறி கெட்டுப் போகாதீர்கள் என்று உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
கழகக் கூட்டங்களில் மாலை போடும் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது நான் தான்! ஆனால் இன்று என்ன நிலை! அந்தக் காலத்தில் ஐம்பது காசுகளுக்கு மாலைகள் கிடைக்கும்; இன்றோ அதன் விலை ஐநூறு ரூபாய்! அடேயப்பா. ஆகவே வேண்டாம் இந்த மாலைகள். காசுகளாகவே கொடுத்து விடுங்கள். யாரிடம் கொடுப்பது என்று மயங்காதீர்கள். மலைக்காதீர்கள். மேடையிலே என் கண் முன்னே இருக்கும் நிதிச் செல்வனிடம் மட்டுமே கொடுத்து விடுங்கள். கொடுத்த விவரத்தை ஒரு கார்டிலும் எழுதிப் போட்டு விடுங்கள். மொத்தக் கணக்கை நானே சரி பார்த்துக் கொள்வேன்.
துண்டுகள், பட்டுச் சால்வைகளா! பரவாயில்லை. அதை மறு சுழற்சி செய்யத் தனி பிரிவு ஒன்று அமைத்துள்ளேன். ஆகவே துண்டுகள் விற்கும் நமது பிரிவிலே மட்டுமே வாங்குங்கள்! விலையை மற்ற கடைகளோடு ஒப்பிடாதீர்கள்! என் செயல்களை மற்றவரோடு ஒப்பிடுவது என்றுமே எனக்குப் பிடிக்காது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
செல்வத்தில் சிக்கல் ஏறப்டக்கூடாது, நிதியில் நெருக்கடி ஏற்படக் கூடாது என்று என் அருகில் இருக்கும் பெயர்களில் எல்லாம் செல்வத்தைச் சேர்த்திருக்கிறேன். கலைச் செல்வம், கவிதைச் செல்வி என்றும் பல நிதிகளைப் பெயர்களிலும் நான் சேர்த்து வைத்திருப்பதை வீடறியும்; நாடறியும்; நீங்களும் அறிவீர்கள். நிதி நெருக்கடி வராத ஒரு அபார வழியை நான் இப்படிக் கண்டுபிடித்திருக்கும் அரிய செயலை, புதிய முறையைக் கண்டு அமெரிக்க நிதி ஆய்வாளர்களே வியக்கின்றனர்; வீறு கொண்டு இது போலச் செயலாற்ற விழைகின்றனர்.

இனி என் கதவைத் தட்டுங்கள் நிதியைக் கொட்டுங்கள்.
ஒன்றே ஒன்றைக் கூறி இந்த மடலை முடிக்கிறேன்.
தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை அம்மா! அட, அப்புறம் பெற்றவளை எப்படி அழைப்பது என மருகாதீர்; மயங்காதீர். தாய் என்று அழையுங்கள். தங்கம் நிகர் அன்னை என்று ஆர்ப்பரியுங்கள்!!
அம்மா உணவு போட்டாள்; அம்மா சைக்கிளில் ஏறச் சொன்னாள்; அம்மா லேப் டாப்பில் படிக்கச் சொன்னாள். அம்மா மருந்தை வாங்கச் சொன்னாள்; அம்மா பேனை போடச் சொன்னாள் என்று சொன்னால் என் ப்ளட் பிரஷர் எகிறுகிறது. ஆகவே தாய் என்று சொல்லி, தலைவன் இவனைக் காத்திடுங்கள்.
ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை கட்டிங்! இது இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா! இதை எப்படி நான் முறைப் படுத்தி, வகைப் படுத்தி உங்களையும் என்னையும் வாழ வைத்துள்ளேன் என்பதற்கு தனி ஒரு மடல் தேவை. அது வரை பொறுத்திருங்கள்!
மறந்து விடாதீர்கள்; நிதி அளிக்க; சாதியினால் இதைக் கேட்கவைல்லை; நீதியினால் கேட்கிறேன் என்பது உங்களுக்கே நன்கு தெரியும்.
என் இனிய முட்டாள்களே! தம்பிக் கரும்புகளே! இனிப்பான நிதியை இன்றே வழங்குங்கள் என்ற சுயநலமற்ற சின்ன ஆசையைச் சொல்லி நீங்கள் வேண்டி விரும்பி எழுதப் பணித்த இந்த மடலை முடிக்கிறேன்.
நீதி நிலைக்கட்டும்; நிரம்ப்பட்டும் எ கஜானா!
அன்பு
மு.க. த.
முட்டாள்கள் கழகத் தலைவர்
You must be logged in to post a comment.