‘கபிலர் கல்’ பற்றி டாக்டர் இரா. நாகசாமி

கட்டுரை எழுதியவர்:– டாக்டர் இரா நாகசாமி
கட்டுரை எண்:–1121; தேதி:– ஜூன் 21, 2014

சங்க காலத் தமிழகத்தில் தலை சிறந்த வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்தவன் பறம்பு நாட்டின் தலைவன் பாரி. பாரிக்கு அங்கவை, சங்கவை என்று இரண்டு பெண்கள் இருந்தனர்.சங்கப் புலவர்களில் தலையாய புலவர் கபிலர், பாரியின் நெருங்கிய நண்பர். போரில் பாரி இறந்து போனான். ஆதரவற்ற இரு பெண்களையும் கபிலர் திருக்கோயிலூர் மலையமானுக்கு மணம் செய்து கொடுக்கிறார். அத்துடன் தனது வாழ்நாளின் குறிக்கோள் முடிந்துவிட்டது என, பாரியைப் பிரிந்து வாழ விரும்பாமல், திருக்கோயிலூரில், பெண்ணை ஆற்றங்கரையில், ஒரு குன்றன்ன பாறையில் தீப்பாய்ந்து இறந்துவிடுகிறார் கபிலர். அவர் இறந்த பாறை இன்றும் திருக்கோயிலூரில் இருக்கிறது. அதை ‘கபிலக் கல்’ என்று அழைக்கிறார்கள்.

சங்கப் பாடல்களில் தன் நண்பனுக்காக செயற்கரிய செயல் செய்து உயிர்நீத்த கபிலரின் வரலாற்றை நெஞ்சு நெகிழும் வண்ணம் புறநானூற்றில் பல பாடல்கள் கூறுகின்றன. கபிலருக்குப் பின் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த இராஜராஜ சோழன், அக் கபிலக் கல்லை திருக்கோயிலூரில் வந்து காண்கிறான். அக்கல் பாரியையும், அவன் பெண்களையும், ஒப்பறிய புலவன் கபிலனையும் எடுத்துரைக்கிறது. வரலாற்றை எடுத்துரைக்கும் சின்னமாக அது தென்படுகிறது. அப்பெரும் புலவனின் புகழையும், பெயரையும் பாடலாகவே கல்வெட்டில் எழுதிவைத்திருக்கிறான் இராஜராஜ சோழன்.

சங்ககால வரலாற்றையே நம் கண்முன் நிறுத்தும் இராஜராஜனின் கல்வெட்டைப் பாருங்கள்,

‘முத்தமிழ் நான்மை
தெய்வக் கவிதை செஞ்சொல் கபிலன்
மூரிவன் தடக்கை பாரிதன் அடைக்கலப்
பெண்ணை மலையற்கு உதவி பெண்ணை
அலைபுனல் அழுவந்து அந்தரிக்ஷம் செல்ல
மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி
கனல் புகும் கபிலக் கல் அது’

என்கிறான் இராஜராஜன். இங்கு கல் என்ற சொல் வெறும் பாறை, கருங்கல் என்ற பொருளில் இல்லாமல், கபிலனின் புகழையும், பாரியின் புகழையும் எடுத்துரைக்கும் மாபெரும் நினைவுச் சின்னம் என்னும் பொருளில் இடம்பெறுகிறது. இறந்துபட்ட பெருமக்கள் என்றென்றும் புகழொடு நிலைத்து நிற்கும் சின்னம் என்ற பொருளில் ‘கல்’ என்ற சொல் வரும்.

‘கல்’ என்ற சொல் இறந்துபட்டோரின் நினைவாக எடுக்கப்பட்ட சின்னம் என்ற பொருளில் பல பாடல்களில் வருவதைக் காணலாம்.

(( இது டாக்டர் இரா. நாகசாமி எழுதிய “தமிழ் பாமாலை” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை. கல் என்ற சொல் பற்றி மேலும் சில கட்டுரைகள் உள்பட 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய அரிய புத்தகம். அனைவரும் வாங்கிப் படித்துப், பாதுகாக்கவேண்டிய நூல். வெளியிட்டவர்: தமிழ் ஆர்ட்ஸ் அகெடமி, சென்னை- 600 090, ஆண்டு 2004. தொல்பொருத் துறையின் முன்னாள் இயக்குநரும், காஞ்சி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் இரா.நாகசாமி இன்னும் தொடர்ந்து பல புதிய ஆய்வுக்கட்டுரைகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்து வருகிறார். தமிழ் ஆர்ட்ஸ் அகெடெமி http://tamilartsacademy.com என்ற இணையதளத்தில் அவைகளைப் படிக்கலாம்.))