அரசனின் குணநலன்கள்: கம்பனும் காளிதாசனும்

கம்பன்2

கட்டுரை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1185: தேதி:— 21 ஜூலை 2014.

நல்ல அரசர்கள் குணங்கள் என்ன என்று கம்பனும், காளிதாசனும் பட்டியல் இடுகின்றனர். கம்ப ராமாயணத்தையும், ரகு குல மன்னர் புகழ் பாடும் காளிதாசனின் ரகுவம்சத்தையும் நமது மந்திரிகளும், ஆட்சியாளர்களும் படிக்கவேண்டும்; பின்பற்றவும் வேண்டும்.

இதோ கம்பன் கூற்று:–
இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;
வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
நினையும் நீதி கடவான் எனின்,
அனைய மன்னர்க்கு அழிவும் உண்டாம் கொலோ?
(அயோத்யா காண்டம், மந்தரை சூழ்ச்சிப் படலம், பாடல் 111)

இவை அத்தனையும் ராமன், அவனது தந்தை தசரதன், அவனது முன்னோன் ஆன ரகு அத்தனை பேருக்கும் பொருந்தும்.

இனிய சொல்லினன்= இனிய சொற்களையே பேசுவான்
ஹிதபாசி என்று ராமனைப் புகஷ்வான் வால்மீகி;

ஈகையன் = வாரி வழங்கும் கொடையாளிகள்;

எண்ணினன் = எண்ணித் துணிக கருமம் என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க எந்தச் செயலையும் ஆராயாமல் துவங்கமடார்கள்;

வினையன் = தேனீக்கள், எறும்புகள் போல எப்போதும் சுறுசுறுப்பானவர்கள்; சோம்பேறித்தனம் என்பதே அவர்கள் அகராதியில் இல்லை;

தூயன் = கறைபடாத கரங்கள் உடையோர்; மனம், மொழி, மெய்—மனோ,வாக், காயம் என்னும் திரிகரண சுத்தி உடையோர்;

விழுமியன் = சிறப்புமிக்கவர்கள்; ஆயிரத்தோடு ஒன்று ஆயிரத்தொன்று என்று வாழாமல், ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான செயல் புரிந்து வரலாற்றில் அழியாத இடம் பெறும் “தோன்றின் புகழொடு தோன்றுக” வகையினர்;

வென்றியன் = தோல்வி என்பதே அவர்கள் அகராதியில் இல்லை; “எடுத்த காரியம் யாவினும் வெற்றி: என்ற பாரதி வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்பவர்கள்;

நினையும் நீதி கடவான் = எவரும் போற்றும் அரச நீதியில் இருந்து விலகாதவர்கள்.
இது கம்பன் தரும் சித்திரம்.

Ragu_big

ஆஜன்ம சுத்தானாம், ஆ பலோதய கர்மணாம், ஆசமுத்ர க்ஷிதீசானாம், ஆநாக ரத வர்த்மனாம்

ரகு குல மன்னர்கள் பற்றி நான்கு விஷயங்களை முதல் சர்க்கத்திலேயே காளிதாசன் (ஸ்லோகம் எண்:5) சொல்லி விடுகிறான்:

1.பிறவியிலேயே பரிசுத்தமானவர்கள் (( ஆஜன்ம சுத்தானாம்)).
2.பயன் கிடைக்கும் வரை முயற்சியை உடையவர்கள் (( ஆ பலோதய கர்மணாம்)) — (எடுத்த காரியம் யாவினும் வெற்றி)

3. இரு பக்கமும் சமுத்திரத்தின் கரைகள் வரை ஆட்சி புரிபவர்கள் (( ஆசமுத்ர க்ஷிதீசானாம்)). பரந்த சாம்ராஜ்யம்!

4.அவர்களுடைய தேர்கள் சுவர்க்கத்தின் வாசல் வரை செல்லத் தக்கன (( ஆநாக ரத வர்த்மனாம்)) !!

இனி காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் முதல் சர்க்கத்தில் என்ன சொல்கிறான் என்பதைப் பார்ப்போம்:–

தெய்வ நம்பிக்கை உடையோர்; தேவ பூஜை செய்தனர்
தானம் கேட்டு வந்தவரின் மனம் வருந்தாத அளவுக்கு தானம் கொடுத்தனர்.

குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்கினர்.

பிறருக்குக் கொடுப்பதற்காக பொருள் ஈட்டினர்.

காலத்திற்கு ஏற்ற அறிவு பெற்றனர்; அதாவது காலத்திற்கு ஏற்ப புதுப்புது விஷயங்களைக் கற்றனர்.

குறைவாகப் பேசினர்; எதற்காக? அதிகம் பேசினால் வாய் தவறி சத்தியம் பிறண்டு விடுமோ என்று பயந்து சத்தியத்தைக் காக்க மிதமாகப் பேசினர்.

புகழிற்காக மற்ற மன்னர்களை வென்றனர். நாடு பிடிக்க அல்ல; மக்களைக் கொன்று குவிக்க அல்ல.

இளமையில் கல்வி கற்றனர்; “இளமையில் கல்” என்ற ஆத்திச்சூடி வசனம் அவர்களுடைய குறிக்கோள்

யௌவனப் பருவத்தில் (வாலிப வயதில்) இன்பம் துய்த்தனர்.

திருமணம் செய்து கொண்டனர்; எதற்காக—வம்ச விருத்திக்காக!! (செக்ஸுக்காக அல்ல)

வயோதிகப் பருவத்தில் காட்டிற்குப் போய் தவம் செய்து யோகத்தினால் உயிரை விட்டனர்.

குசன் மகன் ஆட்சி எப்படி இருந்தது?

big-kalidasa

ரகு வம்ச 17–ஆவது சர்க்கத்தில் ராம பிரானுடைய பேரன் அதிதி — (குசனின் மகன்) — ஆட்சியில் அவன் எப்படி இருந்தான் என்பதைக் கூறும் ஸ்லோகங்கள் மேலும் சில சுவையான தகவல்களைத் தருகின்றன:

நியாய சபையில் தானே அமர்ந்து நீதி வழங்கினான்.

வேலைக்காரர்களுக்கு வேலை முடிந்தவுடன் ஊதியம் அளித்தான்.
மழைக்கால நதிகளில் வரும் வெள்ளம் போல மக்களுக்கு செல்வம் கிடைத்தது.

சொன்ன சொல் தவறவில்லை; கொடுத்ததை ( வரிகள் என்ற பெயரில்) திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை.

வாலிபப் பருவம், அழகு, செல்வம் இருந்தும், கர்வம் இல்லை.

ஒற்றர்களைக் கொண்டு தன் நாட்டிலும் பிற நாடுகளிலும் நடப்பதை அறிந்தான்.

அவன் நாட்டைச் சுற்றி அரண்கள் அமைத்தான்; எதற்காக? பயத்தினால் அல்ல; ராஜ நீதிப்படி ஒரு நாடு அரணோடு இருக்க வேண்டும் என்பதற்காக.

மக்களுக்கு வருத்தம் தரும் எதையும் செய்யவில்லை.

raguvamsam

2000 ஆண்டுகளுக்கு முன் காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தைப் சம்ஸ்கிருதத்தில் படிக்கையில் அக்காலத்தில் வாழ மாட்டோமா என்ற எண்ணம் மனதில் எழும். பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்கும்போது ராஜ ராஜ சோழன் காலத்தில் வாழ நாம் ஆசைப்படுவது போல!—
முற்கால பாரதத்தின் எழுச்சியை வருணிப்பதில் காளிதாசனுக்கு நிகர் காளிதாசனே!!
சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம் முதலான ஏழு நூல்களையும் மல்லிநாதர் முதலியோரின் விரிவுரைகளுடன் பயில வேண்டும். அவைகளை சங்க இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ வேண்டும்!

-சுபம்-