
Post No. 9703
Date uploaded in London – – –8 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கருகிய காலன் கரிகாலன் தான்; ஆனால் ஓடி உலக சாதனை படைத்தான் அவன்!
ச.நாகராஜன்
அமெரிக்காவில் கான்ஸாஸ், அட்லாண்டாவில் பிறந்தவன் அந்தச் சிறுவன். அவனுக்கு எட்டு வயது ஆகும் போது ஒரு கோரமான விபத்து அவனுக்கு ஏற்பட்டது. பள்ளிக்கு மற்ற எல்லோரும் வரும் முன்னர் சென்று, பழைய கால அடுப்பை மூட்டி அறையைச் சற்று கதகதப்பாக வைக்க வேண்டியது அவனது பொறுப்பாக இருந்தது. ஆனால் மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெட்ரோலை விட்டதால் பள்ளி தீப்பிடிக்க அதில் மாட்டிக் கொண்டான் அந்தச் சிறுவன். பற்றி எரியும் பள்ளியைப் பார்த்த அனைவரும் ஓடோடி வந்தனர். அவனைக் காப்பாற்றினர். டாக்டர் அவனது கருகிக் கிடந்த கால்களை வெட்டி எடுத்து விட வேண்டும் என்றார். ஆனால் அவன் அதற்குத் தயாராக இல்லை; ஆகவே அவனது பெற்றோர் அந்த அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளவில்லை. டாக்டர்களோ இனி அவனால் நடக்கவே முடியாது என்று கூறினர்.
மூட்டில் சதையே இல்லை. இடது காலில் பாதம் வரை ஒரே கருகல் தான்! இப்படி இருப்பதை விட அவன் சாவதே மேல் என்பது டாக்டர்களின் மேலான கருத்தாக இருந்தது. ஆனால் அவன் சாவதற்குத் தயாராக இல்லை. மன உறுதியுடன் தன் நிலையை எதிர்கொண்டான். ஒருவாறாக உயிர் பிழைத்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். வீட்டிற்கு வந்த அவனுக்கு அன்னை காலில் மசாஸ் செய்து வந்தாள். படுக்கையிலிருந்து வீல் சேருக்கு மாறினான் அவன்.
ஒரு நாள் அவனது தாயார் அவனை வீல் சேரில் வைத்து வீட்டிற்கு வெளியே முற்றத்திற்கு அழைத்து வந்தாள். அவன் தன்னை வீல்சேரிலிருந்து விடுவித்துக் கொண்டு கீழே விழுந்தான். மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து வீட்டைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த வேலியைப் போய்த் தொட்டான். மெதுவாக வேலியைப் பிடித்துக் கொண்டு எழுந்திருந்தான். இப்படி வேலியை பிடித்துக் கொண்டு நாள் தோறும் சற்று மெதுவாக நடந்து பார்த்தான். நாளடைவில் வேலியைப் பிடித்துக் கொண்டே வீடு முழுவதும் சுற்றி வந்தான்.
தினசரி மசாஜ், அவனது மன உறுதி, விடா முயற்சி ஆகியவற்றின் காரணமாக படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும் நடக்கவும் அவனால் முடிந்தது. பிறகு சற்று மெதுவாக ஓடிப் பார்த்தான். தன் பள்ளிக்குச் செல்ல ஆசை பிறக்கவே, பள்ளிக்கு ஓடிச் சென்றான். ஓடுவது அவனுக்கு இப்போது மிக மிகப் பிடித்திருந்தது. ஓடினாலேயே ஒரு ஆனந்தம்!
ஓடி ஓடி ஒரு நாள் அவன் மாடிஸன் ஸ்குயர் கார்டனில் (Madison Square Garden) உலகின் ஒரு மைல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றான்,
1933இல் ஜேம்ஸ் இ.சல்லிவன் அவார்டைப் பெற்றான். அமெரிக்காவின் தலைமை விளையாட்டு வீரனாக ஆனான்.

அந்தப் பையன் தான் உலகில் தலை சிறந்த ஓட்டப் பந்தய வீரனான டாக்டர் க்ளென் கன்னிங்ஹாம் (Dr Glenn Cunningham)
1500 மீட்டர் ஓட்டத்தில் 1932 ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட கன்னிங்ஹாம் நான்காவதாக வந்தார். 1936இல் ஒலிம்பிக்கில் அதே போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். நான்கு நிமிடத்தில் ஒரு மைலை ஓடிக் கடந்து ரிகார்டு சாதனை செய்ய வேண்டுமென்று அவருக்கு ஆசை. 1934இல் அவர் ஒரு மைலை 4.06.8 நிமிடத்தில் ஓடி முடித்தார்.
கன்னிங்ஹாம் ஐயோவா பல்கலைக் கழகத்தில் மாஸ்டர் டிகிரியைப் பெற்றார். பின்னர் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பிஹெச்.டியை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார். 1940இல் அவர் ஓய்வு பெற்றார். அவரும் அவரது மனைவியும் பத்தாயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவினர்.
டாக்டர் க்ளென் கன்னிங்ஹாமின் வாழ்வானது, முயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு எடுத்துக் காட்டு வாழ்வு. அவர் ஒரு மைல் ஓட்டத்தில் உலக சாதனையை முறியடித்தார் – அவரால் நடக்கவே முடியாது என்று அறுதியிட்டு உறுதி கூறிய டாக்டர்களின் சொற்களை முறியடித்து!
க்ளென் கன்னிங்ஹாம் பிறந்த தேதி 4-8- 909; அவர் மறைந்த நாள்: 10-3-1988.
முயற்சி திருவினை ஆக்கும் என்பது கன்னிங்ஹாம் உலகிற்குத் தரும் செய்தி!
***

tags- கருகிய காலன், க்ளென் கன்னிங்ஹாம்