
Written by london swaminathan
Date: 10 May 2016
Post No. 2798
Time uploaded in London :– 15-35
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஈரான் (பாரசீக) நாட்டில் ஒரு இடையன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. ஒரு குகையில் வசித்தான். வெறும் ஆட்டு ரோமத்தை ஆடையாக அணிவான். காலை முதல் மாலை வரை “செய்யும் தொழிலே தெய்வம்” என்று வாழ்க்கை நடத்தி வந்தான். ஆடு மேய்க்கும் இடையன் ஆனாலும் அறிவில் மஹா மேதை. விக்ரமாதித்தன் போல விவேகமும் ஞானமும் பெற்றிருந்தான். அவனைப் போலவே பறவைகளின் மொழியும், பிராணிகளின் குணநலன்களையும் அறிந்திருந்தான். ஆகையால் எந்த ஆலோசனைக்கும் மற்ற இடையர்கள் இவனையே அணுகினர். கொஞ்சம் கொஞ்சமாக அவன் புகழ் பரவியது.
ஆட்டிடையன் பெரிய அறிஞன் என்று அறிந்து அருகாமையிலுள்ள நகர மக்களும் அவனிடம் வந்து சண்டை சச்சரவுகளுக்குத் தீர்வு கண்டு திரும்பினர். சில ஆண்டுகளுக்குள் அவன் புகழ் பாரசீக மன்னனுக்கும் எட்டியது. அவனுக்கு ஒரே ஆச்சரியம். சிலருக்குக் காரணமில்லாமலேயே புகழ் சேரும். அது அவர்களுடைய ஜாதக விசேஷம். இவனும் அப்படிப்பட்ட ஒரு ஆளாகத்தான் இருக்கும். இருந்தபோதிலும் நாமே சென்று உண்மை அறிவாளியா? என்று பரீட்சித்து வருவோம் என்று எண்ணினான்.
ஒரு நாள் தனது அரச உடைகளைக் களைந்துவிட்டு, ஒரு ஏழை போலக் கந்தைகளை உடுத்திக்கொண்டு ஒரு கிழட்டு குதிரை மேல் ஏறிக்கொண்டு புறப்பட்டான். அவனது சில மந்திரிகளும் அரசனின் மாறு வேடத்திற்குத் தக மாற்று உடைகளை அணிந்து பின்பற்றி வந்தனர்.
குகை அருகே வந்தவுடன் அந்த ஆட்டிடையன் மன்னரின் பரிவாரத்தை அணுகி உபசார வார்த்தைகளைக்கூறி ஆட்டின் பால், பாலாடைக்கட்டி முதலியன கொடுத்து உபசரித்தான். பின்னர் இருவரும் சம்பாஷணையில் ஈடுபட்டனர். கொஞ்சம் நேரத்துக்குள் வந்திருப்பவன் பாரசீக மன்னன் என்பதைக் கண்டுபிடித்துவிட்டான். இடையன் அவ்வளவு பெரிய அறிவாளி. ஆளைப் பார்த்தமாத்திரத்திலேயே எடை போட்டு விடுவான்.
ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டும் நிலை வந்தது. நீங்கள் இவ்வளவு அறிவாளியாக இருக்கிறீர்களே. உங்களுக்குக் குரு யார் என்று மன்னன் கேட்டான். எனக்கு நானேதான் குரு, மன்னவா! என்று இடையன் பதிலளித்தான். கந்தை ஆடையில் வந்து, சாதாரண விஷயங்களைப் பேசியபோதே இவன் என்னை மன்னன் கண்டுபிடித்துவிட்டானே என்று வியந்து என்னை எப்படி மன்னன் என்று கண்டுபிடித்தாய்?என்று கேட்டான்.
உங்களுடைய நடை உடை பாவனை, குரல் வளம், கண் தீட்சண்யம் ஆகியன ஒரு மன்னருக்கே உரித்தானவை என்பதால் கண்டுபிடித்தேன் என்றான் ஆட்டு இடையன். மன்னன் உடனே, இவ்வளவு பெரிய அறிவாளி, இப்படி ஆடு மேய்த்து தன் அறிவை வீணடிக்கக்கூடாது. உன்னை இந்த மாகாண கவர்னராக நியமிக்கிறேன் என்று உடனடி உத்தரவு பிறப்பித்தான். இடையனுக்கும் பெரு மகிழ்ச்சி. கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுத்தது போல இருக்கிறது என்று எண்ணினான்.

காலம் உருண்டோடியது. ஆட்டிடையன் எங்கு போனாலும் ஒரு பூட்டிய பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டே செல்வதை அனைவரும் கவனித்தனர். அவனைப் பிடிக்காதவர், சில வதந்திகளை உலவ விட்டனர். இவன் பார், மன்னரின் சொத்துக்களைச் சுருட்டத் துவங்கிவிட்டான் என்றனர். இன்னும் சிலர் இவன் சம்பளம் போதாது என்று கிம்பளம் (லஞ்சம்) வாங்கத் துவங்கிவிட்டான் என்றனர். நாக்கில் நரம்பில்லாமல் பேச மக்களுக்குச் சொல்லித் தரவேண்டுமா? மன்னன் காதுக்கும் ஆட்டிடையனின் பூட்டிய ரஹசியப் பெட்டி பற்றிய செய்தி எட்டியது.
உடனே மன்னன் குதிரையில் பறந்தோடி வந்தான். மக்கள் சொன்னமாதிரியே ஆட்டிடையன், பூட்டிய பெட்டியோடு செல்வதைக் கண்டு படபடத்தான். கோபக் கனலைக் கொட்டினான். பெட்டியைத் திற, உடனே! என்று கூச்சலிட்டான்.
இடையனோ மஹா அமைதியோடு பெட்டியின் சாவியை எடுத்தான். எல்லோர் கண்களும் தாமரை மலர்வது போல மலர்ந்தன; அகல விரிந்தன. பெட்டிக்குள், அவன் கவர்னராவதற்கு முன் கட்டிய கந்தலான ஆட்டு ரோமம் இருந்தது. மன்னன் கேட்பதற்கு முன்னரே அவன் சொன்னான்:–
என் பதவியால் எனக்கு அதிகார ஆணவம் தலைக்கு மேல் ஏறிவிடக்கூடாது என்பதற்காக நான் எனது எளிமையான, தூய்மையான வாழ்வின் சின்னமான ஆட்டு ரோம ஆடையை இதில் பாதுகாத்து வைத்துள்ளேன்” என்றான்.
மன்னன் வெட்கித் தலை குனிந்தான். எவ்வளவு நல்லவனை மக்களின் சொல் கேட்டுத் தவறாக எண்ணினோம் என்று வருந்தி, கண்ணீர் சிந்தினான். உன்னுடைய எளிமையையும் நேர்மையையும் மெச்சினேன். இன்று முதல் உன்னை இன்னும் பல மாகாணங்களைக் கொண்ட பெரிய பிரதேசத்தின் கவர்னராக நியமிக்கிறேன் என்றான்.
மன்னவா, நன்றி; ஆனால் எனக்கு பதவியே வேண்டாம். என்னுடைய எளிமையான ஆடு மேய்க்கும் வேலையே பேரின்பம் தந்தது. கல்லடியை விட மக்களின் காரணமில்லாத சொல்லடி பொறுக்கமுடியாதது; நான் போய் வருகிறேன் என்று கவர்னரின் சீருடையை கழற்றிவிட்டு ஆட்டுரோமத்துடன் மீண்டும் ஆடுமேய்க்கப் புறப்பட்டான்.
“செய்யும் தொழிலே தெய்வம்; திறமைதான் நமது செல்வம்” – என்று பாடிக்கொண்டே போனான்.
(இந்தக் கதையின் இன்னொருவித முடிவு: அவன் மன்னன் சொன்னபடி பெரிய பகுதிக்கு அரசன் ஆனான் என்று முடியும். எப்படியாகிலும் கதையின் நீதி ஒன்றுதான்: கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு;
“அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” என்று பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் பாடியது (புறம்.183) பாரசீகத்திலும் செல்லுபடியாகும் என்பது தெளிவு.
–சுபம்–
You must be logged in to post a comment.