
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9965
Date uploaded in London – 12 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 3
ச.நாகராஜன்

சுந்தரர் ஒரு சிறந்த இயற்கைக் கவிஞர். உலகின் ஆகப் பெரிய சிறந்த இயற்கை வர்ணனைப் பாடலாக கருதப்படுவது வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் எழுதிய டாஃபோடில்ஸ் கவிதையாகும். இங்கிலாந்தில் 1805ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று அவர் தனது சகோதரி டோராதியுடன் லேக் டிஸ்ட்ரிக்ட் என்னுமிடத்தில் ஒரு ஏரிக்கரையோரம் நடந்து சென்றார். அங்கு கவிஞர் திடீரென ஒரு திருப்பத்தில் ஆயிரக்கணக்கான தங்க நிற டாஃபோடில்ஸ் மலர்களைப் பார்த்து வியந்து அதிசயித்து நின்றார். இந்தக் காட்சியை அப்படியே என்றும் நிலைத்து நிற்கும் வண்ணம் 1807இல் கவிதையாக்கினார். I wandered lonely as a Cloud
That floats on high o'er Vales and Hills,
When all at once I saw a crowd,
A host of golden Daffodils;
Beside the Lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze. ஏரிக்கரையோரம் தென்றல் காற்றில் நாட்டியம் ஆடின மலர்கள். இந்தக் காட்சியால் என்ன பயன் அவருக்கு? தனிமையிலே சூன்யமான ஒரு நிலையில் ஒரு ஈஸி சேரில் அவர் இருக்கும் போது - vacant or in pensive mood - அகக் கண்ணில் அந்த மலர்கள் தோன்றி ஆட இதயம் குளிர்ந்து இன்பம் மலர்ந்து அவரும் அவற்றுடன் ஆடுகிறார்.
For oft when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude,
And then my heart with pleasure fills,
And dances with the Daffodils.
சரி, இப்போது நமது சுந்தரருக்கு வருவோம்.
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை
அப்படி அழகாய அணி நடை மட அன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே என்கிறார். நீலம் ஒளியுடன் கூடி ஒளி நீலம் ஆகி ஓங்குகிறது. அந்த ஒளி எங்கும் பரவுகிறது. வானமெங்கும், மலர்ப் பொய்கை எங்கும். அப்படி அழகாய அணி நடை மட அன்னம் அங்கே மெய்ப்படுகிறது. நீல நிறக் கடல்! நீல நிற ஆகாயம் நமக்குத் தெரியும். ஆனால் ஒளி நீலம் ஓங்கிய காட்சி தங்க நிற டாஃபோடில்ஸை விட அழகிய காட்சியாக அமைகிறது அல்லவா! அங்கு வோர்ட்ஸ்வொர்த் போல இயற்கையை மட்டும் காண்பிக்காமல், இயற்கையுடன் ஆன்மீகத்தையும் கலந்து சிவனைக் காண்பிக்கிறார் சுந்தரர். ஆக, ஆகப் பெரும் இயற்கைக் கவிஞராக ஆகி விடுகிறார் இரு வரிகளில்! அடுத்து திருக்கலய நல்லூர் பதிகத்தில் முதல் பாட்டை மட்டும் இங்கு பார்ப்போம்:

குரும்பைமுலை மலர்க்குழவி கொண்ட தவம் கண்டு
குறிப்பிணெடும் சென்று அவள்தன் குணத்தினை நன்கறிந்து
விரும்பு வரம் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட
அணிமயில்கள் நடமாடும் அணி பொழில் சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்
கமலங்கள் முகம் மலரும் கலயநல்லூர் காணே
அடடா! என்ன அழகிய பாடல்! அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட
அணிமயில்கள் நடமாடும் அணி பொழில் சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்
கமலங்கள் முகம் மலரும் கலயநல்லூரைப் பாருங்கள்! இதற்கு இணையாக உலக மொழிகளிலே இன்னொரு இயற்கை வர்ணனைப் பாட்டு உண்டா என்ன? தேடிப் பார்த்தால் மிக அரிதாகவே இது போன்ற பாடல்கள் உலக மொழிகளில் நமக்கு கிடைக்கக் கூடும்! இப்படி அவரது இயற்கை வர்ணனைகளை நூற்றுக் கணக்கில் கூறிக் கொண்டே போகலாம்.
எமபயம் நீங்க பத்துப் பாடல்களை கோயில் திருத்தலத்தில் அருளியவர் சுந்தரரே. தருமனார் தம் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் என்று அவர் கூறும் போது பாடலில் சிவ மயம் கமழ எம பயம் தீருகிறதல்லவா!
சிவபக்தர் ஒருவர் பாடினார் இப்படி: கிரீடே நிஷேஷோ லலாடே ஹூதாஷோ புஜே போகிராஜோ கலே காலிமா ச| தனௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம் ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே
கிரீடே நிஷேஷோ - தலையிலே சந்திரன் லலாடே ஹூதாஷோ - நெற்றியில் தீ ; புஜே போகிராஜோ - புஜங்களைச் சுற்றி பாம்புகளின் ராஜா; கலே காலிமா - கழுத்தில் கறுப்பு வண்ணம்| தனௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம் -அவனுடைய மனைவி அவனுடைய உடலிலேயே! இப்படிப்பட்ட ஒரு தெய்வத்தை நான் அறிந்ததில்லை; அறிந்ததில்லை அறிந்ததில்லை என்கிறார்.
சிவபிரானையே தன் முழு முதல் தெய்வமாகக் கொண்ட சுந்தரரும் கூட இதே போல சிவனை பித்தா பிறைசூடி என்றும், வண்டார்குழலி உமைநங்கை பங்கா என்றும், பாதி ஓர் பெண்ணை வைத்தாய் என்றும், மாமணி நாகம் அரைக்கு அணிந்து என்றும், பொன்னார் மேனியன் என்றும் புலித்தோலை அரைக்கசைத்து சடைமேல் கொன்றை அணிந்தவன் என்றும் இப்படி எல்லாம் பாடல்கள் முழுவதும் சிவபிரானை வர்ணிக்கும் விதமே தனி! பொன்னே, நல்மணியே, வெண்முத்தே, செம்பவளக் குன்றமே ஈசன் என்று உன்னைப் புகழ்வேன் என்று இப்படிப் பலபடியாக அவர் போற்றுகிறார். பக்தி சூத்திரத்தை சுந்தரர் வாழ்ந்து காட்டும் பாங்கே தனி! நாரத பக்தி சூத்திரத்தில் நாரத மஹரிஷி 84 சூத்திரங்களை அருளியுள்ளார். அதில் 55வது சூத்திரம் ஒரு பெரும் ரகசியத்தைத் தருகிறது. அதன் திரண்ட சுருக்கம் இது தான்: - தத் சிந்தனம் தத் வாக்யம் தத் அவலோக்யம் தத் பரம் என்று இறைவனைச் சேரும் விதத்தை அவர் கூறி அருளியுள்ளார். தத் சிந்தனம் அவனைப் பற்றியே சிந்தனை செய்தல்.தத் வாக்யம் அவனைப் பற்றியே பேசுதல். தத் அவலோக்யம் அவனுடனேயே இணைந்திருத்தல் இப்படிச் செய்தால் இறுதி நிலை தத் பரம். அவ்னாகவே ஆதல்! சுந்தரர் அவனைப் பற்றியே - சிவனைப் பற்றியே - சிந்தித்திருந்தார். நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றார். அவனைப் பற்றியே பேசினார், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடினார் அவனுடனேயே தோழமை கொண்டார். வன்மையாகப் பேசி வன் தொண்டர் என்ற செல்லப் பெயரையும் பெற்றார். இறுதியில், ‘வேண்டேன் மனை வாழ்க்கை’ என்ற நிலையில் சிவபிரான் அவரைத் தன்னோடு சேர்த்துக் கொண்டருளினார் தத் பரமாக! வெள்ளை யானை மீதேறி கைலாயம் வருக என்று அவர் அருள் பாலிக்க கரி மீது ஏறிக் கைலாயம் பறந்தார் அவர். அவரது உற்ற தோழரான சேரமான் பெருமாள் நாயனார் உள்ளுணர்வினால் தன் நண்பர் கைலாயம் செல்வதை அறிந்து, “ நீர் கரி மீது சென்றால் நான் இதோ, பரி மீது வருகிறேன் என்று குதிரை மீது ஏறி அவருடன் கைலாயம் ஏகினார்.
ஆக சுந்தர மூர்த்தி நாயனாரின் சரித்திரம் ஒரு பன்முகப் பரிமாணத்தைக் காட்டுகிறதல்லவா! முதலில் அவர் ஒரு சிவனடியார். சிவனடியார்க்கு அடியார். தமிழ் வித்தகர். இசைக் கலைஞர். தலம் தோறும் சென்று தரிசித்த அருளாளர். இயற்கைக் கவிஞர். எளிதாக இறைவனை விளக்கியவர். சிவ ரகசியங்களை விண்டு கூறியவர். பக்தி சூத்திரத்தை வாழ்ந்து காட்டி விளக்கியவர். செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது, காவிரி ஆறு பிரிந்து வழி விடச் செய்தது, சங்கிலியாரை மணக்க சிவபிரானையே தூது செல்ல வைத்தது உள்ளிட்ட அற்புதங்களை நிகழ்த்திய அருளாளர். ‘பெரிய புராணக்’ காப்பியத்தின், பெரிய்ய்ய்ய புராணத்தின் தலைவர். நம் நெஞ்சம் நிறை மகான். அவர் அடி போற்றுவோம். வணங்குவோம். அவர் புகழ் பரப்புவோமாக!

இந்த நன்னாளில் அடியேனையும் ஒரு பொருட்டாக மதித்து சில வார்த்தைகளைப் பேசப் பணித்த அன்பர்களுக்கும் இவ்விழாவிற்கு மூல காரணமாய் இருந்து சிவப் பணியைச் செய்து வரும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும் இந்த உரையைச் செவி மடுத்த பெரியோர்களுக்கும் தாய்க்குலத்தோருக்கும் அன்பர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்! தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
***
முற்றும்
TAGS- காப்பியத் தலைவர், சுந்தரர்! –3,




