

Post No. 8470
Date uploaded in London – – –8 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மஹாபாரதம்
மஹா வீரனான கர்ணனின் மரணத்திற்கான காரணங்கள் என்னென்ன?
ச.நாகராஜன்
மஹாபாரதம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத அறநூல்! பேராசையும், அதிகார ஆணவமும், சூழ்ச்சியும் கொண்டோர் மிகுந்த உலகில் நல்லோர் படும் பாடு நாம் அறிந்ததே!
அப்படிப்பட்ட உலகில் மஹாபாரத காலத்தில் வியப்பூட்டும் ஒரு பாத்திரம் கர்ணன். அவனுக்கென்றே ஒரு பர்வத்தை வியாஸர் ஒதுக்குகிறார்.
கர்ணனைப் பற்றி யுதிஷ்டிரரின் புகழ் மொழிகள் இவை:
பதினாயிரம் யானை பலம் கொண்டவன்.
யுத்தம் செய்வதில் ஒப்பற்றவன்.
சிம்மம் போன்ற சௌரியமுள்ள நடை உள்ளவன்.
ஜயசீலன்.
மாறாத நியமம் உள்ளவன்.
திருதராஷ்டிரனுடைய மகன்களுக்கு ஆதாரமானவன்.
மானி.
கொடுமையான பராக்கிரமம் உடையவன்.
பகைவரைப் பொறுக்காதவன்.
எப்பொழுதும் சுறுசுறுப்புள்ளவன்.
ஒவ்வொரு யுத்தத்திலும் பாண்டவர்களை எறிந்தவன்.
அதிவேகமான அஸ்திரம் உள்ளவன்.
ஆச்சரியமான யுத்தம் செய்கிறவன்.
ஸமர்த்தன்.
ஆச்சரியமான பராக்ரமம் உள்ளவன்.
குந்திக்கு ரகசியத்தில் உண்டான புத்திரன்.
இப்படிப்பட்டவன் எனக்குத் தமையன் அல்லவா என்று கூறி வருந்துகிறார் தர்மர்.
யாரிடம் வருந்துகிறார்?

மஹாபாரதப் போர் முடிந்தவுடன் வியாஸர், நாரதர், தேவலர், தேவஸ்தானர், கண்வர் ஆகிய மஹரிஷிகளும், ரிஷிகளுடைய சிறந்த சீடர்களும் தர்மபுத்திரரிடம் வந்தனர்.அப்போது நாரதரிடம் கர்ணனைப் புகழ்ந்து தர்மபுத்திரர் கூறிய வார்த்தைகளே இவை.
கர்ணனின் வரலாறு முழுவதையும் தர்மபுத்திரருக்கு நாரதர் கூறி விளக்குகிறார். கர்ணனின் வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள் நமக்குத் தெரிய வருகிறது.
பிரம்மாஸ்திரத்தை எப்படியேனும் பெற வேண்டும் என்று நினைத்த கர்ணன் துரோணரிடம் சென்று அதைக் கேட்கிறான்.
ஆனால் அவர் மறுத்து விடுகிறார்.
அர்ஜுனனின் மீது கொண்ட பிரியத்தினாலும், கர்ணன் இதை எதற்காகக் கேட்கிறான் என்ற அவனது தீய எண்ணத்தை அறிந்ததாலும் துரோணர் அவனை நோக்கி, ”விதிப்படி விரதத்தை அனுஷ்டித்த பிராம்மணன் பிரம்மாஸ்திரத்தை அறிந்து கொள்ளத் தகுதியானவன். அல்லது மிகுந்த தவத்தை உடைய க்ஷத்திரியனும் தெரிந்து கொள்ளத் தக்கவன். வேறு எவனும் எவ்விதமும் இதைத் தெரிந்து கொள்ளத் தக்கவன் அல்லன்” என்று கூறுகிறார்.
ஏமாற்றம் அடைந்த கர்ணன் நேராகப் பரசுராமரிடம் சென்று தன்னை பிராம்மணன் என்று சொல்லி அஸ்திர வித்தைகளைக் கற்க ஆரம்பித்தான். பிரம்மாஸ்திரத்தையும் கற்றான்.
ஆனால் ஒரு நாள் அவன் தொடையில் தலை வைத்து பரசுராமர் உறங்கிய போது தொடையை ஒரு புழு வந்து துளைக்கத் தொடங்கியது.
தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பரசுராமர் எழுந்து விடக் கூடாதே என்று வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். ரத்தம் பொங்கியது. அந்த ரத்தம் பரசுராமரை நனைக்கவே அவர் எழுந்து கொண்டார். நடந்ததைப் பார்த்தார். இப்படி ஒரு வலியை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாதே, உண்மையைச் சொல் நீ யார் என்றார்.
கர்ணன் உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று. க்ஷத்திரியர்களுக்கு எதிரியான பரசுராமர் வெகுண்டு, “உனக்குச் சமமானவனுடன் யுத்தம் செய்யும் போது உனது வத (அழிவு) காலத்தில் மட்டுமே இந்த பிரம்மாஸ்திரம் உனக்குத் தோன்றக் கடவது” என்று சபித்து அவனை உடனே அங்கிருந்து போக உத்தரவிட்டார்.
இதே கால கட்டத்தில் ஒரு பிராம்மணனுடைய பசுவை அவன் தற்செயலாகக் கொன்று விடுகிறான். கோபம் கொண்ட பிராம்மணன் கர்ணனை நோக்கி, “ அட, பாவி! எப்பொழுதும் எவனுடன் நீ பகை கொண்டிருக்கிறாயோ, எவனை வெல்ல எப்போதும் நீ முயற்சிக்கிறாயோ அப்படிப்பட்டவனுடன் நீ யுத்தம் செய்யும் போது உன்னுடைய தேர் உருளையை பூமி விழுங்கப் போகிறது. சக்கரமானது பூமியால் விழுங்கப்பட்டவுடன் தடுமாறிக் கொண்டிருக்கும் உன் தலையை உன் எதிரியானவன் அறுத்துத் தள்ளப் போகிறான்” என்று சாபம் கொடுத்தார்.
ஆக இப்படிப்பட்ட பல சம்பவங்களை தர்மபுத்திரர் தெரிந்து கொள்கிறார்.

பின்னர் நாரதர் கர்ணனின் மரணத்திற்கான காரணங்களை வரிசையாக அடுக்குகிறார்.
தேவேந்திரனால் யாசிக்கப்பட்டவுடன் தேவர்களின் மாயையினால் குண்டலங்களையும் உடன் பிறந்த கவசத்தையும் கர்ணன் தானமாகக் கொடுத்து விட்டான்.
இப்படி கவசத்தையும் குண்டலங்களையும் இழந்த கர்ணன், பிராமணருடைய சாபத்தாலும், பரசுராமருடைய சாபத்தாலும், குந்திக்கு வரம் கொடுத்ததாலும், இந்திரனுடைய மாயையினாலும், ரதிகர்களைக் கணக்கிட்ட காலத்தில் அர்த்த ரதன் என்று அவனை பீஷ்மர் சொல்லி செய்த அவமானத்தாலும், சல்லியன் செய்த தேஜோபங்கத்தாலும், கிருஷ்ணரின் நீதியாலும் அந்த கிருஷ்ணர் பார்த்துக் கொண்டிருக்கையில் அர்ஜுனனால் யுத்தத்தில் கொல்லப்பட்டான்
இப்படிப் பல காரணங்களும் யுத்த களத்தில் ஒன்று சேர மாவீரனான மானி கர்ணன் கொல்லப்பட்டான்.
அவனை பீஷ்மர் ஒரு நாளும் அதிரதன் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தேராளியின் சக்தியில் பாதியைக் கொண்ட அர்த்த ரதன் என்றே அவன் பீஷ்மரால் கணிக்கப்பட்டான். துரியோதனனிடம் ரதாதிரதர்களின் கணக்கைச் சொல்கையில் அவர் கர்ணனை அர்த்த ரதன் என்றே மதிப்பிட்டுச் சொல்லி விட்டார். இந்த அவமானம் அவனைப் பெரிதும் வருத்தியது; மனதைப் பாதித்தது.
குந்தியிடம் அர்ஜுனனைத் தவிர இதர பாண்டவரைக் கொல்ல மாட்டேன் என அவன் வரமும் தந்தான்.
ஆக இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனை அழித்தது.
போரில் அஞ்சலிகம் என்னும் ஒரு சிறந்த பாணத்தை விடுத்து அவன் தலையை அறுத்தான் அர்ஜுனன்.
அது எப்படிப்பட்டது என்பதை வியாஸர் கூறுகிறார் இப்படி:
“அஞ்சலிகம் என்னும் பாணம் மகேந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கும் அக்னியுடைய தண்டத்துக்கும் ஒப்பானது. சூரியனுடைய உத்தமான கிரணத்துக்கு நிகரானது. மர்மங்களைப் பிளக்க வல்லது. ரத்தத்தினாலும் மாமிசத்தினாலும் பூசப்பட்டது. அக்னிக்கும் சூரியனுக்கும் ஒப்பானது. பூஜிக்கத் தக்கது. மனிதர்கள், குதிரைகள், யானைகளின் உயிரை வாங்க வல்லது. மூன்று அரத்னி அளவுள்ளது. ஆறு சிறகுகள் உள்ளது. வெகு விரைவாகச் செல்வது. உக்கிரமான வேகம் கொண்டது. இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்ற வீரியம் உள்ளது. அதி கோரமாகப் பரவுகின்ற காலாக்னி போன்றது. (சிவனுடைய) பிநாகத்துக்கும் (விஷ்ணுவினுடைய) சக்கரத்துக்கும் நிகரானது. பிராணிகளுக்கு பயத்தை உண்டு பண்ணி அழிப்பது.”
அடேயப்பா, இப்படி ஒரு வர்ணனையை வியாச பாரதத்தில் வியாஸர் நம் முன் வைக்கிறார். (கர்ண பர்வம் அத்தியாயம் 98வது அத்தியாயம்)
அந்த அஞ்சலிகம் பாய்ந்து சென்று கர்ணனுடைய தலையை அறுத்தது.
கீழே விழுந்தான் கர்ணன். அவனுடைய தேகத்தினின்று ஒரு தேஜஸானது ஆகாயத்தை வியாபித்துக் கொண்டு சூரியனைச் சென்று சேர்ந்தது.
உள்ளத்தில் நல்ல உள்ளம் கர்ணனின் உள்ளம் என்றாலும் சகவாச தோஷம் அவனை மரணத்திற்கு அழைத்துச் சென்றது!


tags – கர்ணன், மரணம் , காரணங்கள்
***




