காரிய வெற்றிக்கு சகுனங்கள்! (Post No.4611)

Date: 13 JANUARY 2018

 

Time uploaded in London- 5-51 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4611

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஜோதிட இதழான ஸ்ரீ  ஜோஸியம் பத்திரிகை ஜனவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

காரிய வெற்றிக்கு சகுனங்கள்!

 

ச.நாகராஜன்

 

நமது முன்னோர்கள் இயற்கைப் படைப்பைக் கூர்ந்து கவனித்து ஒரு காரியம் கை கூடுமா, தொடங்கும் பணியில் வெற்றி உண்டா இல்லையா என்பதை முன்கூட்டியே நிர்ணயிக்க சகுன பலனைச் சொல்லி உள்ளனர்.

 

இராமாயணத்தில் சீதைக்கு ஏற்படும் நல்ல சகுனங்கள், மஹா பாரதத்தில் துரியோதனனுக்கு ஏற்படும் தீய சகுனங்கள் ஆகியவற்றைப் படிக்கும் போது வியப்பு ஏற்படும்.

அப்படி சகுன பலன்களை விவரமாக விவரித்துள்ளனர் முன்னோர்.

 

 

கிராமங்களில் சர்வ சாதாரணமாகச் சொல்லி, கடைப்பிடிக்கப்படும் இந்த சகுனக் குறிகள் இன்றைய நகர வாழ்க்கையில் சில சமயம் பொருத்தமில்லாமல் போகிறது; அல்லது அதைத் தெரிந்து கொள்ளாமல் நகரங்களில் வாழ்வோர் காரியங்களைத் தொடங்குகின்றனர்.

 

 

சம்ஸ்கிருதத்தில் சகுனம் பற்றிப் பல நூல்கள் உண்டு. நூற்றுக்கணக்கான ஸ்லோகங்கள் உள்ளன.

தமிழிலும் பல நூல்கள் உண்டு. எடுத்துக் காட்டாக ஒரு நூலை மட்டும் இங்கு பார்க்கலாம்.

 

 

அம்பலவாணப் புலவர் எழுதிய அறப்பளீசுர சதகம் நூறு பாடல்களைக் கொண்ட அருமையான நூல்.

அதில் சகுனங்களைப் பற்றி மூன்று செய்யுள்கள் உள்ளன. (செய்யுள்கள் 62,63,64)

 

 

அவை வருமாறு:-

சொல்லரிய கருடன் வானரம் அரவம் மூஞ்சூறு குகரம் கீரி கலைமான்

துய்யபாரத்வாசம் அட்டை எலி புன் கூகை சொற்பெருக மருவும் ஆந்தை

வெல்லரிய கரடி காட்டான்பூனை புலி மேல் விளங்கும் இரு நா உடும்பு

 

மிகவுரை செய் இவையெலாம் வலம் இருந்திடமாகில் வெற்றியுண்டதிக நலம் ஆம்;

ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலை தாக்கல்

ஒருதுடையிருத்தல்,பற்றல்,

ஒரு தும்மல், ஆணையிடல், இருமல், போகேலென்ன

உபசுருதி சொல் இவையெலாம்

 

அல்லல் தரும் நல்ல அல என்பர்;முதியோர் பரவும்

அமலனே! அருமை  மதவேள்

அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரிவளர்

அறப்பளீசுரதேவனே!

பொருள்: பெரியோர்கள் வாழ்த்துகின்ற தூயவனே! மதவேள் தினமும் மனதில் வழிபடுகின்ற சதுரகிரியில் குடி கொண்டிருக்கும் அறப்பளீசுர தேவனே!

 

சொல்வதற்கு அரிய கருடனும், குரங்கும், பாம்பும், மூஞ்சூறும், பன்றியும், கீரியும், கலைமானும்,தூய கரிக்குருவியும், அட்டையும், எலியும், இழிந்த கோட்டானும், மிகுதியாகப் பேசப்படும் ஆந்தையும், வெல்ல முடியாத கரடியும், காட்டுப் பசுவும், பூனையும், புலியும், மேலாக விளங்கும் இரு நாக்குகளை உடைய உடும்பும் ஆகிய இவை எல்லாம் வலத்தில் இருந்து இடப்பக்கம் போனால் வெற்றி உண்டாகும். மிகுதியான நலமும் உண்டாகும்.

 

வழிப்பயணம் மேற்கொள்வோரின் தலையில் இடித்தல், ஒரு காலில் நிற்றல், வலது கையைப் பிடித்தல், ஒற்றைத் தும்மல், ஆணையிடுதல், இருமுதல், போக வேண்டாம் என்று காதில் விழும்படியாகக் கூறுதல் இவை யாவும் துன்பம் தரும். நல்லன அல்ல என்பர்.

 

நரிமயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை

நாவிசிச்சிலியோந்தி தான்

கரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி

நாடரிய சுரபி மறையோர்

 

வரியுழுவை முயலிவையனைத்தும் வலம் ஆயிடின்

வழிப்பயணம் ஆகை நன்றாம்;

மற்றும் இவை அன்றியே குதிரை அனுமானித்தல்

வாய்ச்சொல் வா வா வென்றிடல்,

தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசி

தப்பட்டை ஒலி வல்வேட்டு

 

தனி மணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி

தனக்கேக நன்மை என்பர்!

அருணகிரனோதயத் தருணபானுவையனைய

அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில் நினை தருசதுரகிரி வளர்

அறப்பளீசுரதேவனே!

 

பொருள் :  சிவந்த கதிர்களை உடைய ஞாயிறு போன்ற அண்ணலே! சதுரகிரியில் எழுந்தருளியுள்ள அறப்பளீசுர தேவனே!

நரியும், மயிலும், பச்சைக் கிளியும், கோழியும், கொக்கும், காக்கையும், கஸ்தூரி மிருகமும்., சிச்சிலிப் பறவையும், ஓணானும், வல்லூறும், விரைந்து கத்தும் செம்போத்தும், எருமையும் சிந்தித்தற்கு அரிதான பசுவும், அந்தணரும், வரிப்புலியும், முயலும் ஆகிய இவை யாவும் வலமாக வந்தால் வழிப் பயணம் நன்மை தரும். மேலும், குதிரை கனைத்தலும், வா வா என்று வாய்ச்சொல்லாக காதில் படும்படி கூறுதலும்,சங்கு ஒலித்தலும், கொம்பும்,கிடுமுடியும், முரசும், தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும், ஒப்பற்ற மங்கல வாத்தியம் முழங்குதலும் ஊரிலிருந்து பயணம் மேற்கொள்ள நல்லது என்று அறிஞர் கூறுவர்.

 

தலைவிரித்தெதிர் வருதல், ஒற்றைப் பிராமணன்,

தவசி, சந்நாசி, தட்டான்,

தன்மிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறகுதலை,

தட்டைமுடி, மொட்டைத்தலை,

கலன் கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,

கதித்த தைலம், இவைகள்

காணவெதிர் வரவொணா: நீர்க்குடம், எருக்கூடை,

கனி, புலால் உபய மறையோர்

நலம் மிகு சுமங்கலை, கிழங்கு, சூதக மங்கை

நாளும் வண்ணான் அழுக்கு

நசை பெருகு பாற்கலசம், மணி, வளையல், மலர் இவைகள்

நாடி யெதிர் வர நன்மையாம்;

அலை கொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்

அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர்

அறப்பளீசுர தேவனே!

 

 

பொருள்: அலை கொண்ட கங்கையை அணி ந்த சடையானே!

மழு ஏந்திய அண்ணலே! சதுரகிரியில் எழுந்தருளியிருக்கும் அறப்பளீசுர தேவனே!

 

தலைவிரி கோலமாக ஒருவர் எதிரில் வருதலும், ஒற்றைப் பிராமணனும், தவம் புரிவோனும், துறவியும், தட்டானும், தனம் இல்லாத மார்பினளும்,மூக்கில்லாதவனும், புல் தலையனும், விறகு தலையனும், சப்பைத் தலையும், மொட்டைத் தலையும், அணிகலன் இல்லாத பெண்களும்,குசவன் பாண்டமும், வாணியன் மிகுந்த எண்ணெயும் ஆகிய இவைகள் கண் காண எதிரில் வருதல் தகாது.

 

நீர்க்குடமும், எருக்கூடையும்,பழமும், மாமிசமும், இரட்டை பிராம்மணரும்,நலம் மிகு சுமங்கலி, கிழங்கு,  பூப்புப் பெண்ணும், நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும்,  விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும், மலரும், ஆகிய இவைகள் தேடி எதிரே வந்தால் நலம் ஆகும்.

மேற்கூறிய சகுன பலன்கள் சரியா, இல்லையா?

இதை எப்படி சரி பார்ப்பது. மிகவும் சுலபம். சகுனத்தை தினமும் கவனித்து குறிப்புகளை எடுத்துக் கொண்டால் போதும், ஒரு சில வாரங்களில் நாம் நிபுணராகி விடுவோம்.

 

சோதனை செய்து அறிவதே ஆனந்தம். இதையே இயற்கையை அனுசரித்த முன்னோர் செய்தனர். சகுனத் தடை என்றால் சற்று நேரம் கழித்துக் காரியத்தைத் தொடங்கலாம்,இல்லையா!

முயன்று பார்ப்பதில் நஷ்டம் ஒன்றுமில்லை; லாபம் தான்!

முயல்வோம்; சரி பார்ப்போம்; கடைப் பிடிப்போம்!

***

 

காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்? (Post No.4403)

Written by S.NAGARAJAN

 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-00 am

 

 

Post No. 4403

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஸ்ரீ  ஜோஸியம் பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்?

 

ச.நாகராஜன்

நமது முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்த்வர்கள். தேவதைகளின் அனுக்ரஹத்திற்கு உரிய வழிகளைக் கண்டவர்கள். மஹாசக்தியின் அருள் வேண்டி உள்ளுணர்வால் தாம் கண்டவற்றை மனித குலத்திற்கு சாஸ்திரமாகத் தந்தவர்கள்.

 

 

எடுத்த காரியம் வெற்றியைப் பெறவும் அநுகூலமாக முடியவும் அவர்கள் பல எளிய வழிகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த வகையில் வார நாட்கள் ஏழிலும் எதை எதை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருளுரை பகர்ந்திருக்கின்றனர். எந்த நாளில் எந்தத் திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அருளி இருக்கின்றனர்.

 

 

அதன் தொகுப்பு இதோ:-

 

எந்த திசையில் எந்த நாளில் செல்ல் வேண்டும் ?

 

அங்காரபூர்வே கமனே ச லாப:

    சோமே சனௌ தக்ஷிணம்ர்த்த லாபம் I

புதே குரௌ பச்சிமகார்யசித்தி

   ரவி ப்ருகௌ சோத்தரமர்த்த லாப: II

 

 

உபஜாதி என்ற சந்தத்தில் அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தின் பொருள் : :-

செவ்வாய்க்கிழமைகளில் கிழக்குத் திசையில் சென்றால் ஒருவன் லாபத்தை அடைவான்.

திங்கட்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் தெற்குத் திசையில் சென்றால் லாபம் உண்டாகும்.

புதன்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் மேற்குத் திசையில் சென்றால் எடுத்த காரியம் வெற்றியை அடையும்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வடக்குத் திசையில் சென்றால் செல்வம் பெருகும்.

 

அடுத்து எந்த நாளில் எதை எதைச் செய்யலாம் என்பதற்கான அறிவுரைகளைப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

ந்ருபாபிஷேக மாங்கல்ய யானாஸ்த்ர கர்ம ச I

ஔஷதா ஹவ தான்யாதி விதேயம் பானுவாஸரே II

 

1 மன்னர்களுக்கு மகுடாபிஷேகம் செய்தல் 2. மங்களகரமான காரியங்களைச் செய்தல் 3) உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளுதல் 4) பணிபுரியத் தொடங்குதல் 5) பிரபு தர்சனம் (உயர் அதிகாரிகள் சந்திப்பு) செய்தல் 6) மருந்து தயாரித்தல் (மூலிகை சேர்ப்பதிலிருந்து உட்கொள்ளுதல் முடிய) 7) வாகனம் செய்தல், வாகனத்தில் ஏறி அமர்தல் 8) போர் செய்யத் தொடங்குதல், அதற்கான் ஆயுதங்களைத் தயாரித்தல் 9) தான்யம் முதலியனவற்றைச் சேகரித்து அவற்றை பத்திரப்படுத்தி வைத்தல் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

திங்கட்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

சங்கமுக்த அம்பு ரஜத வ்ருக்ஷ இக்ஷு ஸ்தீரி விபூஷணம் I

புண்யகீத க்ரதுக்ஷீ ர க்ருஷிகர்ம இந்துவாஸரே II

 

  • சங்கு, முத்து சேகரிப்பு வேலைகள் 2) நீர் சம்பந்தமான பணிகள் 3) வெள்ளி சம்பந்தமான பணிகள் 4) மரவேலைகள், கரும்பு ஆலையாட்டல் 5) பெண்களின் நலத்திற்கான அனைத்துப் பணிகள் 6) ம்லர்த் தோட்டம் அமைத்தல் 7) நல்ல சங்கீதப் பயிற்சி 8) யாகம் செய்தல் 9) பால் சம்பந்தமான பணிகள் 10) விவசாயம் செய்தல் ஆகியவற்றை திங்கட்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

செவ்வாய்க்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

விஷாக்னிபந்தன்ஸ்தேய சந்திவிக்ரஹகர்ஷணம் I

தாத்வாகர ப்ரவுளாதி கர்மபூமிஜாவஸரே II

 

  • விஷப் பொருள்களைச் சுத்தம் செய்தல் 2) காளவாய் அடுப்புப் போடுதல் 3) அணை கட்டல் 4) திருட்டுக் காரியங்களைச் செய்தல் 5) கலகம் செய்தல் 6) பகைவரைச் சந்தித்தல் 7) போர் 8) சுரங்க வேலை 9) பவளம் எடுத்தல்; பவள நகை செய்தல் 10) அம்பு (போர்க்கருவி) தயாரித்தல் ஆகியவற்றைச் செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

புதன்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

ந்ருத்யஷில்பகலாகீதிலிபி பூரசஸங்க்ரஹம் I

விவாததாது சங்க்ராம கர்ம குர்யாதித்தோஹனி II

 

  • நடனம் பயிலுதல் 2) சிற்பக் கலை கற்றல் 3) பாட்டுப் பயில ஆரம்பித்தல் 4) எழுத்து வேலை 5) புஸ்தகம் எழுதல், அச்சிடல் 6) கலகம் புரிதல் 7) விவகாரம் – விவாதம் செய்தல் 8) தாதுப் பொருள் சேகரித்தல், விற்றல் 9) கலை பயிலல் ஆகியவற்றைப் புதன்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

வியாழக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

யக்ஞபௌஷ்டிக மாங்கல்ய ஸ்வர்ணவஸ்த்ராதி பூஷணம் I

வ்ருக்ஷ குல்மலதாயான் கர்மதேவேத்வாஸரே II

 

  • யாகம் செய்தல் 2) புஷ்டியளிப்பன 3) மங்களகரமானவை 4) பொன்வேலை 5) ஆடை முதலியன செய்தல்,வாங்குதல் 6) நகை செய்தல் 7) மரம், செடி, கொடி நடுதல் (படரவிடல்) 8) வாகனத்தில் ஏறுதல் 9) தெய்வீகமான செயல்களைச் செய்தல் ஆகியவற்றை வியாழக்கிழ,மைகளில் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

ந்ருத்யகீதாதி வாதித்ர ஸ்வர்ண்ஸ்த்ரீ ரத்னபூஷணம் I

பூபண்யோத்ஸவ கோதான்யவாஜிகர்ம ப்ருகோர்தினே II

 

  • பாட்டு, நடனம் கற்றல் 2) வாத்தியம் கற்க ஆரம்பித்தல் 3) தங்க வேலை தொடங்குதல் 4) புத்தாடையுடுத்தல் 5) ஆபரணம் அணிதல் 6) புண்ணிய காரியம் செய்தல் 7) உற்சவம் முதலியன இயற்றல் 8) பசு வளர்த்தல் 9) தானியங்களைச் சேகரித்தல் 10) குதிரை வாகனம் வாங்குதல் 11) திருவிழா நடத்தல் 12) பூமி சேகரித்தல், வியாபாரம் தொடங்குதல் ஆகியவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

சனிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

த்ரபு சீஸ ஆயஸ அஷ்மாதி விஷ பாப ஆஸவா ந்ருதம் I

ஸ்திரக்ர்மாகிலம் வாஸ்து சங்க்ரஹ: சௌரிவாஸரே II

 

  • துத்தநாகம், ஈயம் போன்ற தாது சம்பந்தமான வேலைகள் 2) விஷ சாயம் 3) அம்பு- யுத்த வேலை 4) கல் பணி 5) பாவ காரியங்கள் 6) கள் (ஆஸவம்) தயாரித்தல் 7) பொய் கூறுதல் 8) வீடு, மனை சேகரித்தல் ஆகியவற்றை சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

இப்படி அந்தந்தக் கிழமைகளில் பலிக்கக்கூடிய காரியங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உசிதமான நமது  பணிகளைத் தொடங்கிச் செய்தால் வாழ்வு சிறக்கும்; வெற்றி கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் அறிவுரை.

கடைப்பிடிப்போம்; வெற்றி பெறுவோம்

***