ஸ்ரீ குமரகுருபரர்! – 3 (Post No.10159)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,159

Date uploaded in London – 1 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ குமரகுருபரர்! – 3

ஒரு பாட்டில், “கால தத்துவத்தைக் கடந்து நின்றவன் நீ. உனக்குக் காலம் என்றால் என்ன என்று தெரியாததால் தானோ என்னவோ எனக்கு விரைவில் நீ அருள் பாலிக்க மாட்டேன் என்கிறாய் என்று இறைவனை நோக்கிக் கூறுகிறார். (செய்யுட்கோவை 64ஆம் பாடல்).

கந்தர் கலி வெண்பாவில்

“கருணை திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக்

குருபரன் என்றோர் திருப்பேர் கொண்டு – திருநோக்கால்

ஊழ்வினையைப் போக்கி உடல் அறுபத்தெட்டு நிலம்

எழுமத் துவாக்களிரு மூன்றும் பாழாக என்கிறார்.

அறுபத்தெட்டு உடல் என்பதற்கு கணக்கு என்ன? தாத்துவிகங்கள் அறுபதையும் புரியட்டகப் பகுதி எட்டினையும் சேர்த்து அறுபத்தெட்டாகக் கூறுகிறார் இங்கு.

நிலத்தத்துவத்தின் கூறு தோல், எலும்பு, நரம்பு, தசை, மயிர் ஆகிய 5

நீர்த் தத்துவத்தின் கூறு புனல், உதிரம், மஜ்ஜை, மூளை, சுக்கிலம் ஆகிய 5.

தீ தத்துவத்தின் கூறு உணவு செரித்தல், துயில், அச்சம், புணர்ச்சி, சோம்பல் ஆகிய 5

காற்று தத்துவத்தின் கூறு ஓடல், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் ஆகிய 5.

வானின் துணை கொண்டு நிகழ்வன: வெகுளி, இவறல், விழைவு, பிடிப்பு, பொறாமை ஆகிய 5. சொல்லுதல், செல்லுதல், இடுதல், கழித்தல்,, இன்புறல், கழித்தல், என்ற ஐந்தினுக்கு ஏதுவாக உள்ளன வினைப்பொறிகள்.

நாடிகள் பத்து. வாயுக்கள் பத்து. உடல் உள்ளுறுப்பாகி இருப்பன உணவுப்பை,செரிமானப் பை, நீர்ப் பை, மலப் பை, சுக்கிலப் பை ஆகிய 5.

நெற்றி, கண்டம், நெஞ்சு, உந்தி, மூலம் ஆகிய அவத்தைகள் 5. இவை மொத்தம் சேர்த்தால் வருவது 60. இவைகள் தத்துவங்கள் என்பதால் தாத்துவிகங்கள் எனப்படும். பூத நுட்பம் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் கூடிய நுண்ணுடம்பு புரியட்டகம் எனப்படும். இந்த எட்டையும் அறுபதுடன் கூட்டினால் வருவது 68.

இப்படிப்பட்ட ஏராளமான நுணுக்கங்களை ஆங்காங்கே குமரகுருபரர் சொல்லிக் கொண்டே போவதால் அவரது நூல்களை அனுதினமும் படித்து உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாக ஆகிறோம்.

எமனை நுளையனாக -மீன் பிடிப்பவனாக – அவர் உருவகப்படுத்துகிறார். எமன் என்ற நுளையன், உப்பு நீர்க் கேணியாகிய உடலின் கண் சிற்றுயிர்களாகிய மீனைப் பிடிக்க வருகிறான். எப்படி வருகிறான்? கபம், வாதம், பித்தம் என்னும் மூன்று தலை கொண்ட தூண்டிலைக் கொண்டு வந்து இடுகிறான். மீன் அந்தத் தூண்டிலில் அகப்பட்டு விடுகிறது. அதாவது உயிர் அவன் தூண்டிலில் அகப்பட்டு விடுகிறது. வாழ்நாள் முடிவின் எல்லையை குறி கொண்டு பார்க்க சடைக் கருவி வைத்திருக்கிறான் அவன். மீனை எடுத்துத் தின்பதற்கு பல்லினை அசைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே இறைவனைத் தொழுது அவனிடம் ‘ஐய நின் கடைக்கண் அருளுதி என்று கேட்க வேண்டும் என்கிறார்.

காசிக் கலம்பகத்தில் காசியில் இறப்பவர்களுக்கு ஓங்காரத்தை இறைவன் ஓதுகிறான் என்கிறார். கலி வெண்பாவில் முருகனைப் பற்றிய அனைத்து அபூர்வ விவரங்களையும் காணலாம்.

தமிழின் சிறப்பை குமரகுருபரர் விளக்குகின்ற விதமே அலாதியானது. ‘எழுத்து முதலா ஐந்திலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப் புலமையை அவர் இறைவனிடம் வேண்டுகிறார்.

‘உலகளித்தனை தமிழ் தெளித்தனை என்ற காசிக் கலம்பக அடியால் இறைவனிடம் சேரவும் உலகில் வாழவும் தமிழ் இன்றியமையாத ஒன்று என்பது பெறப்படுகிறது.

“நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமிழ் உண்டு நயந்த நில பா உண்டு என்று இப்படி மீனாட்சி அம்மை இரட்டை மணி மாலையில் அடுக்கிக் கொண்டே போகும அவர், பாமாலை தொடுக்க ஆசை தான்; ஆனால் நார் இல்லையே; அன்பு என்னும் நார் இருந்தால் அல்லவா இவற்றை எல்லாம் தொடுக்க முடியும் என்று கூறி உருகுகிறார்.

இன்னும் கற்பனை நயம், சிலேடை நயம் உள்ளிட்டவை அவர் பாடல்களில் ஏராளம் உள்ளன. ‘சொல்லாவது வேதமே என்கிறார், அதாவது சொல்லானது வேதமே என்று ஒரு அர்த்தம்; சொல்லாதது எதுவோ அந்த இரகசியமே – மறையே- வேதம் என்று இன்னொரு அர்த்தம். இறைவன் ஆணா, பெண்ணா அல்லது ஆண் பெண் இணைந்தவனா? எப்படி இருந்தால் என்ன? எனக்கு இருக்கிறது ஒரு தமிழ்ச் சொல் எல்லாவற்றையும் குறிக்க என்கிறார் அவர்! ஒரே சொல் எந்தாய் என்பது தான்! எம் தாய் என்றும் அதைப் பிரிக்கலாம், எந்தையே என்றும் அதைப் பொருள் கொள்ளலாம். ஆகவே உரிய சொல் எந்தாய் தான்! மொத்தத்தில் குமரகுருபரர் அகன்ற ஒரு பாற்கடல். அதில் மூழ்கி அமிர்தத்தைச் சுவைத்துக் கொண்டே இருக்கலாம்.

இறுதியாக அவர் அருளிய சகலகலாவல்லி மாலையிலிருந்து இரு பாடல்களைக் கூறி ஞானமயம் அன்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி அருள் பாலிப்பாளாக என்று பிரார்த்தித்து என் உரையை முடிக்கிறேன்.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய், எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் ! சகல கலா வல்லியே!!

மண் கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்

விண் கண்ட தெய்வ்ம் பல் கோடி உண்டேனும் விளம்பில் உன் போல்

கண் கண்ட தெய்வம் உளதோ? சகல கலாவல்லியே!

நன்றி வணக்கம்!

***

tags- குமரகுருபரர்! – 3