
350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! -1 (Post.9937)
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9937
Date uploaded in London – 5 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 2-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.
350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! -1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்!
குழந்தையானந்தரின் அவதார தோற்றம்
மதுரை மீனாட்சியின் அருள் விளையாடல்கள் அன்றும் நிகழ்ந்தன, இன்றும் நிகழ்கின்றன, என்றும் நிகழும்.
அவற்றை உணர்ந்து அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கும் பக்தர்கள் அம்பிகையின் செல்லக் குழந்தைகளே!
ஸ்ரீ குழந்தையானந்தர் என்ற பெயரில் மதுரையில் உலாவி வந்து ஏராளமானோருக்கு அருள் பாலித்த பெரும் மகானின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர். அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப் போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது. குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய அந்த தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி அம்பிகையை உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும் செய்து கொண்டனர்.
ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும் நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ராமஸ்வாமி ஐயர் உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப் பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம் இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து, “ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர். “கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.
“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர் நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அவரை அவர்கள் வாழ்த்தினர்.
நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது. நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம் செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை. கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.
அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி, “எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே நீ தான் அனுப்ப வேண்டும்” என்று மீனாட்சியம்மனை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி தவிக்க, கோபம் ஆறாத ஐயர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம், பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.
ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்” என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.
ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று மறைந்து விட்டான். எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை. ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி அது அம்பிகையின் திருவிளையாடலே என்று உறுதி படக் கூறினாள்.
சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது. இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.
இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்
இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது? தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம் சென்றனர்.
அங்கு பட்டருக்கு அருள் வந்து, எந்தக் குழந்தைக்கு காலில் சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம் இருக்கிறதோ அந்தக் குழந்தையை விடு என்று உத்தரவு பிறந்தது.
அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக் குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டன்ர்.
அங்கு குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே மீனாட்சியம்ம்னை நோக்கித் தவழ்ந்து சென்றது.
பிரிய மனமின்றி ராமனை கோவிலில் விட்டு விட்டு தம்பதியினர் வீடு திரும்பினர்.
இரவு வந்தது. குழந்தையை என்ன செய்வது என பட்டர் யோசித்தார். (அந்தக் காலத்தில் பட்டரின் கவனிப்பிலேயே கோவில்கள் இருந்தன) அப்போது அசரீரி ஒன்று குழந்தையை கோவிலிலேயே விடுமாறு உத்தரவைப் பிறப்பித்தது.
அது முதல் ராமன் கோவிலில் வளர ஆரம்பித்தான்.
திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலைத் தந்த அம்பிகை குழந்தையானந்தரையும் பால் கொடுத்து வளர்த்தாள்.
ஏழு வயதான போது ராமனுக்கு உபநயனம் செய்விக்க உத்தரவு ஆகவே உபநயனமும் கோவில் பட்டர்களால் செய்து வைக்கப்பட்டது.
பின்னர் 900 ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெரிய சித்தரான ஸ்ரீ கணபதி பாபாவைக் குருவாகக் கொள்ளுமாறு அருள் ஆணை பிறந்தது.
கணபதி பாபாவை கணபதி ப்ரம்மம் என்று கூறுவார்கள். அவரது சமாதி இன்றும் காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது. இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையை அங்கு பார்க்கலாம்.
முதல் சமாதி குருநாதரிடம் சகல சாஸ்திரங்களையும் பயின்ற ராமனுக்கு ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது. இமயமலை பகுதிகளில் சஞ்சாரம் செய்த அவரை ஏராளமானோர் தரிசித்து அருள் பெற்றனர்.
த்ரிலிங்க ஸ்வாமிகளின் முதல் ஜீவ சமாதி காசியில் ஏற்பட்டது. கணபதி பாபா சமாதிக்கு அருகிலேயே இது உள்ளது.
இரண்டாவது சமாதி
பின்னர் அவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே அவர் ஸ்வாமிகளிடம் சரணடைந்தார். அவருக்கு ஸ்வாமிகளின் அருளால் குஷ்டம் நீங்கிற்று. பல காலம் நேபாள அரசரின் அரண்மனையில் அவர் பூஜிக்கப்பட்டார்.
ஸ்வாமிகள் எப்போதும் அணிந்திருந்த மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தவையே. ஸ்வாமிகளின் இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.
ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர்.
மூன்றாவது சமாதி
நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் ஆந்திர பிரதேசம் வந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏராளமான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்தார்.
பின்னர் தென்காசியில் மூன்றாவது சமாதியை எய்தினார். இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது.தென்காசியில் சன்னதி மடம் தெருவில் சங்கரன் பிள்ளை என்ற பக்தர் வீட்டில் இந்த சமாதி உள்ளது.
நான்காவது சமாதி

மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரையம்பதிக்கு எழுந்தருளினார். அங்கு அவர் இருபது வருஷங்களுக்கும் மேலாக நடத்திய அருள் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தோர் சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்.
சதா யோகநித்திரையில் இருந்த அவரது திருவாக்கிலிருந்து எழும் அமுத மொழிகள் மூன்று ஆண்டுகளே நிரம்பப் பெற்ற குழந்தை பேசும் மழலை மொழி போல்வே இருந்தது. அத்துடன் மட்டுமன்றி அவர் வாயிலிருந்து அமுதூற்றை ஒத்த சாளவாய் வழிந்து கொண்டிருந்தது. இதனால் குழந்தையானந்தர் என்ற பெயரால் அவர் அழைக்கப்பட்டார்
பருத்த தொந்தி. அருள் பொங்கும் முகம். பத்ம பாதங்களோ மஹாவிஷ்ணுவின் அம்சத்தைக் குறிக்கும் சங்கு சக்ரங்களைக் கொண்டவை. நிகழ்த்திய திருவிளையாடல்களோ மெய்சிலிர்க்க வைத்தவை.
1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்வாமிகள் சுமார் 300 பவுன்களில் செய்து வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.
எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க மகாலிங்க பண்டாரம் என்பவர் நெய்யை ஸ்வாமிகளுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். ம்காலிங்க்ம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு அவர் அடங்கி விடப் போகிறாரா என்று ராமலிங்கய்யரிடம் கேட்க, குழந்தையானந்தர், “என்னடா சொல்கிறான் திருட்டுப் பயல்! அதெல்லாம் ஒண்ணுமில்லையடா! எல்லாம் நாளன்னிக்கி தான்!” என்று அருளினார்.
சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது மூன்றாம் முறை கண்ணை விழித்துப் பார்த்தார் அவர். ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.
அவர் அடங்கி விட்டாரா? யார் நிர்ணயிப்பது?
அனைவரும் பிரமித்து நின்றனர். பின்னர் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்வாமிகள் சமாதியடைந்ததை நிர்ணயித்து ஊர்ஜிதம் செய்தார்.
இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் அவர் நான்காவது சமாதியை அடைந்தார்.
- தொடரும்
***

tags- குழந்தையானந்த ஸ்வாமிகள்,