கட்டுரை எண்—984; தேதி 17th April 2014.
எழுதியவர் — ச.நாகராஜன்
ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 22
வனவாசம் செல்வது உறுதியாகி ராமர் அனைவரிடமும் விடை பெறும் தருணம். வால்மீகி இந்த உணர்ச்சி பூர்வமான கட்டத்தைப் பல்வேறு சித்திரங்களால் அமைத்து நம்மை உருக வைக்கிறார்.
அயோத்யா காண்டத்தில் இருபத்தைந்தாவது ஸர்க்கமாக அமையும் தாயின் அனுக்கிரஹம் பெறும் ஸர்க்கத்தில் கோசலை தன் மகனின் நலனுக்காக ஸ்வஸ்த்திய்யனம் செய்ய மனதைச் செலுத்தி சுபலக்ஷணம் உடைய தேவ ஸ்தோத்திரத்தைச் செய்தாள். பின்னர் மங்களாசாஸனமாக கோசலை கூறும் வாக்கியங்கள் ஒவ்வொருவரும் படித்து மனத்தில் இருத்த வேண்டியவை.
ராமருக்கு அவர் அளிப்பது இது தான்:
யம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா ச நியமேன ச I
ச வை ராகவாஷார்த்தூல தர்மஸ்த்வாமபிரக்ஷது II
(25 ஆவது ஸர்க்கம், 3 ஆவது ஸ்லோகம்)
ராகவாஷார்த்தூல – ரகு குல திலகமே யே – எந்த தர்மம் – ஒரு தர்மத்தை த்ருத்யா ச- மனோதைரியத்தோடும் நியமேன ச – நியமத்தோடும் த்வம் – நீ பாலயஸி – அனுஷ்டித்து வருகிறாயோ ச தர்ம வை – அந்த தர்மமே த்வாம் – உன்னை அபிரக்ஷது – பாதுகாக்கக்கடவது
யேப்ய: ப்ரணமஸே புத்ர சைத்யேஷ்வாயதனேஷு ச I
தே ச த்வாமபிரக்ஷந்து வனே சஹ மஹர்ஷிபி: II
(25 ஆவது ஸர்க்கம், 4ஆவது ஸ்லோகம்)
புத்ர – குழந்தாய் சைத்யேஷு – தேவாலயங்களிலும் ஆயதனேஷு ச – யாகசாலைகளிலும் யேப்ய: – எவர்களை உத்தேசித்து ப்ரணமஸே – நீ நமஸ்கரிக்கின்றாயோ தே ச – அவர்கள் எல்லோரும் வனே – வனத்தில் மஹர்ஷிபி: சஹ – மஹரிஷிகளோடு இருக்கும் த்வாம் – உன்னை அபிரக்ஷந்து – பாதுகாக்கக் கடவது
இதைத் தொடர்ந்து ஒரு நீண்ட ஆசீர்வாத வசனத்தை கோசலை அருள்கிறார். ருதுக்கள், பக்ஷங்கள், மாதங்கள், வருடங்கள், ஸப்த ரிஷிகள், நாரதர் திக் பாலர்கள் உள்ளிட்ட அனைவரையும் சொல்லி அனைத்து சூழ்நிலையிலும் நீ பாதுகாக்கப்படுவாயாக என்று மனமுவந்து ஆசீர்வதிக்கிறார்.
இந்த வசனம் ஒரு கவசமாகவே அமைகிறது.
காலம் காலமாக ப்ரவசனகர்த்தாக்கள் தாயார் வழிநடைப் பயணம் மேற்கொள்ளும் பிள்ளைகளுக்குக் கட்டித் தரும் மூட்டை போல கோசலை அவதார புருஷனுக்கு உகந்த விதத்தில் தர்மமே உன்னைப் பாது காக்கக் கடவது என்று ரக்ஷா மூட்டையைக் கட்டித் தருவதைப் புகழ்ந்து போற்றி விளக்கி வருகின்றனர்.
47 ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸர்க்க பாராயணம் அனைத்து மேன்மைகளையும் தரும் என்பதில் ஐயமில்லை!
contact swami_48@yahoo.com



You must be logged in to post a comment.