டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகள் (Post No.4052)

Written by S NAGARAJAN

 

Date: 5 July 2017

 

Time uploaded in London:-  4-37 am

 

 

Post No.4052

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

தெயவ தேசம்

 

க்ராண்ட் கான்யான் அனுபவமும் டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகளும்!

 

ச.நாகராஜன்

சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து குடும்பத்தினர் அனைவரும் விமானம், ரெயில், கார் ஆகியவற்றின் மூலம் நீண்ட ஒரு நெடும் பயணம் மேற்கொண்டோம்.

 

நியூயார்க், நியூஜெர்ஸி, அரிஜோனா, வாஷிங்டன் என்று கலக்கலான ஒரு பயணம்

 

அதில் க்ராண்ட் கான்யானும் ஒன்று. எது எப்படியோ போகட்டும், ஐஸ்வர்யா ராய் க்ராண்ட் கான்யான் பாறையில் ஆடியதை நினைவு கூர்ந்து அந்தப் பாறையைப் பார்த்து ஜென்ம சாபல்யம் பெற்றனர் குடும்பத்தினர்.

 

வியூ பாயிண்ட் என்று ஆங்காங்கே காட்சிகளைப் பார்ப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து போர்டு மாட்டி வைப்பது அமெரிக்காவில் ஒரு நல்ல பழக்கம்.

 

ஒரு வியூ பாயிண்டில் க்ராண்ட் கான்யான் தரிசனத்தை முடித்துக் கொண்டோம். ஏராளமான போட்டோக்கள் எடுக்கப்பட்டன. மகன், மருமகள், மனைவி என்று ஆளுக்கொரு கேமரா. ஒரு மொபைல் போன். அமெரிக்காவில் வாங்கிய விலை மதிப்புள்ள ஒரு அதி நவீன வீடியோ கேமரா.

இவை அனைத்திலும் போட்டோக்கள்- போட்டோக்கள்- போட்டோக்கள்.

 

வியூ பாயிண்டில் ஏராளமான கூட்டம். ஆளாளுக்கு போட்டோ எடுத்துக் கொண்டே இருந்ததால் சமயம் பார்த்துத் தான் போட்டோக்களை எடுக்க முடிந்தது. இங்கும் அங்குமாக ஓடி ஓடி ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்தது.

 

நேரத்தில் குறியாக இருந்த நான் போதும் போகலாம் என்ற எச்சரிக்கை குரலை Nth  டைமாகக் கொடுத்து அனைவரையும் நகர்த்தி காரில் அமர்த்தினேன்.

 

கார் புறப்பட்டது. ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும். எல்லோருடைய கேமராக்கள்,மொபைல் போன்கள், வீடியோ கேமரா எல்லாம் பத்திரமாக காருக்கு வந்ததா என்று கேட்டேன்.

ஷாக்!

 

வீடியோ கேமராவைத் தவிர அனைத்தும் வந்து இருந்தன.

வீடியோவைக் காணோம். காரை நிறுத்தினோம். சரி பார்த்தோம். ஹூம், வீடியோ கேமராவைக் காணோம்.

 

என் மருமகள் அனைவரது மொபைல் போன்கள், கேமராக்களை வாங்கி டிஜிடல் மயமாக இருந்த போட்டோக்களைப் பார்த்து திடீரென்று கூவினாள்.

 

“இதோ இருக்கிறது. இந்த பெஞ்சின் மீது வைத்து விட்டு வந்து விட்டோம்”

 

கேமரா ‘ஙே’ என்று அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்தது.

இப்போது என்ன செய்வது. இன்னும் அங்கு போக ஒரு அரை மணி நேரம் ஆகும்.

 

ஆக ஒன்றரை மணி நேரத்தில் அதை யார் எடுத்துக் கொண்டு போனார்களோ?

 

சரி, ஒரு முயற்சி தான்!

 

வண்டியைத் திருப்பினோம்.

 

வியூ பாயிண்ட் வந்தது.

 

மனம் பக் பக் என்று இருந்தது.அனைவரும் பெஞ்சை நோக்கி ஓடினோம்.

 

அங்கு அந்த கேமரா அப்படியே இருந்தது. ‘ஙே’ என்று அசையாமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.

முன்பை விட இப்போது இன்னும் அதிகக் கூட்டம்.

எங்கள் காமராவை சரி பார்த்து எடுத்துக் கொண்டோம்.

அனைவரும் சொன்ன வார்த்தை: அமெரிக்கா அமெரிக்கா தான்!

ஆம், யாரும் ஆசைப்பட்டு அதை எடுக்க முயலவில்லை.

அமெரிக்காவில் பெற்ற பல நல்ல அனுபவங்களில் இது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

அவரவர் தம் தம் வேலையைப் பார்ப்பது அமெரிக்கர்களின் பழக்கம்.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது அவர்களின் பரம்பரைக் குணம். வாழ்க அமெரிக்கா; வளர்க அமெரிக்கர்களின் நற்பண்பு.

 

சரி, தெய்வ தேசத்திற்கு வருவோம்.

 

இப்போது எங்கு பார்த்தாலும் சுரண்டல்.லஞ்சம். பேராசை. வேலை பார்க்காமல் அதிக சம்பளம் எதிர்பார்க்கும் குணம்.

போக வேண்டிய பாரதம் இது.

 

வருகின்ற பாரதம் பாரதி பாடியது போல அமைய வேண்டும்.

தெய்வ தேசத்தில் பழைய நாட்களில் இருந்த நற்பண்புகளைக் காணோம்.

அறவே காணோமா?

 

அப்படிச் சொல்ல முடியாது.

 

ஆங்காங்கே அற்புதமான நல்லவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

ஒரு சம்பவம்.

 

3-7-2014 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியானது இது.

 

59 வயதான காமேஷ்வர் கிரி ஒரு டாக்ஸி டிரைவர். கொல்கொத்தாவில் சுமார் 40 ஆண்டுகளாக டாக்ஸியை ஓட்டி வருபவர்.

 

ஒரு புதன் கிழமை அவரது வண்டியில் ஒரு குடும்பம் ஏறியது. அவர்களை வீட்டில் இறக்கி விட்ட காமேஷவர் கிரி திரும்பினார்.

சற்று நேரம் கழித்து டிக்கியைப் பார்க்கையில் அங்கு ஒரு பெரிய பெட்டி இருநதது.

 

அந்தக் குடும்பத்தினர் அதை மட்டும் விட்டு விட்டனர் – எடுக்க் மறந்து போய்!

 

பெட்டியை அவர் திறந்தார். உள்ளே ஜொலிக்கும் வைர நகைகள்.ஏராளம் இருந்தன. ஒரு கல்யாணத்திற்குத் தேவையான தங்க நகைகள்!

 

இங்கு நிமாய் சந்திர தாஸ்  நியூ அலிபூர் ரோடில் ராஜஸ்தான் பவனில் ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறியவர் தனது மகளின் திருமணத்திற்கு உரிய நகைகளை வாங்கிய சந்தோஷத்துடன் வீட்டில் குடும்பத்தினருடன் இறங்கினார். நடக்கவிருக்கும் விழாவைப் பற்றிய யோசனையில் இருந்தவர் டாக்ஸியை விட்டு அவசரம் அவசரமாக இறங்கி விட்டார்.

 

நகைப் பெட்டியை டிக்கியில் அப்படியே விட்டு விட்டார்.

வீட்டினுள் நுழைந்தவுடன் தான் தெரிந்தது – பெட்டி இல்லை என்பது!

 

உடனடியாக டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி ஓடினார். ராஜஸ்தான் ஸ்வீட் கடையின் அருகில் இருந்த டாக்ஸி டிரைவர்களிடம் தான் வந்த வண்டியைப் பற்றி விசாரித்தார்.

அங்குள்ள டிரைவர்கள் கிரி ஏற்கனவே அவர் வீட்டிற்குத் தான் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

உடனடியாக அவரை போனில் தொடர்பு கொண்டார். அவர் வீட்டில் வாசலில் தான் நின்று கொண்டிருப்பதாக கிரி கூறினார்.

 

வீட்டிற்குச் சென்ற நிமாய் தனது பெட்டியை கிரியிடம் பெற்றுக் கொண்ட போது அவர் கண்களில் நீர் துளிர்த்தது.

கிரிக்கு அவர் பரிசாக அளித்த தொகையை அவர் பெற மறுத்து விட்டார்.

 

ஏன்? அவர் தந்தை சொன்ன சொற்கள் அவர் நினைவுக்கு வந்ததாம்.

 

There is enough to meet a man’s needs, but never his greed.

 

இது தான் அவரது தந்தையின் மந்திர வாசகம்!

 

வற்புறுத்திய பின்னர் அவர் 44 ரூபாய்களைப் பெற்றுக் கொண்டார். நகைகளைத் திருப்பிக் கொண்டுவந்ததின் வண்டிச் சத்தம் அது.

 

அனைவரும் அவரைப் பாராட்டி வற்புறுத்திய பின்னர் நூறு ரூபாயை அவர் ஏற்றுக் கொண்டார்.

என் தந்தை கூறிய வாசகத்தை மறவேன்.

 

ஒவ்வொருவருக்கும் தேவையானது போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரது பேராசைக்கு ஈடுகட்ட தான் போதுமான அளவு இல்லை என்பது தந்தையின் வாக்கு!

 

அவருக்கு இரு ஆசைகள்.

இன்னும் ஐந்து வருடம் ஓட்டினால் அவரது டாக்ஸி கடனாக நிலுவையில் இருக்கும் எண்பதினாயிரம் ரூபாயை அடைத்து விடலாம்.

 

இன்னொன்று, இப்போது பி.காம் படிக்கும் தன் பையன் ஒரு சார்டர்ட் அக்கவுண்ட் ஆக விரும்புகிறான். அவன் அப்படி ஆகி விட வேண்டும்!

 

அவரை அனைவரும் வாழ்த்தினர். ஒரு நல்லவரின் ஆசைகள் நிறைவேறட்டும்.

தெய்வ தேசத்தின் பிரதிநிதி காமேஷ்வர் கிரி.

 

 

மாத்ருவத் பரதாரேஷு பரத்ரவ்யேஷு லோஷ்டத்ரவத்!

பர தாரம் – பர திரவியம் – அடுத்தவர் தாரம், அடுத்தவர் செல்வம் மீது கண் கூட வைக்காதே என்பது தெயவ தேச அறநூல்களின் அறிவுரை.

 

இதன்படி ஒரு காலத்தில் அனைவரும் பாரதத்தில் வாழ்ந்தனர்.

இன்று புரையோடிப் போன வாழ்க்கை முறையில் லஞ்ச லாவண்யத்தைத் தான் காண முடிகிறது.

 

ஆனால் சிலரேனும் தர்ம காவலர்களாக இருப்பது பெரிய ஆறுதலைத் தருகிறது.

 

காமேஷவர் கிரி போன்றவர்களின் எண்ணிக்கை பெருகும் போது நமது தேசம் மீண்டும் தெய்வ தேசப் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கும்!

***