
Written by London Swaminathan
Date:16 October 2017
Time uploaded in London- 11-10 am
Post No. 4306
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பூமியிலுள்ள மக்கள் ஒழுக்கம் குன்றி ‘எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கத் துவங்கியவுடன், தேவர்கள் பூமியை விட்டு நீங்கி விட்டதாக ஆதி சங்கரர் கூறுகிறார் (காண்க: பக்கம் 12, யஜூர் வேதக் கதைகள், எம்.ஆர். ஜம்புநாதன்). இதற்கான ஆதாரம் பிராமணங்களில் உள்ளது.
சதபத பிராமணம் என்னும் நூல் கூறுகிறது:
“மனிதர்களும் தேவர்களும் ஒரே இடத்தில் இருந்து உண்டு, அருந்தி வாழ்ந்தனர்; அவர்கள் எல்லோரும் இந்தப் புவியுலகின் குடிமக்களே; ஆனால் மனிதர்கள் என்னிடம் அது இல்லை, இது இல்லை என்று அவைகளைக்கேட்டு நச்சரிக்கத் துவங்கினர். உடனே தேவர்கள், மறைந்து விட்டனர்; நான் அவர்களை வெறுக்கவும் கூடாது; அவர்களுக்குத் தீங்கும் நினைக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டே தேவர்கள் மறைந்துவிட்டனர்.(சதபத–3-2-2-26)
“தேவர்கள் தவம் செய்து தெய்வீக நிலையை எய்தினர்” என்று தைத்ரீய பிராமணம் சொல்லும் (12-3-1)
“தேவர்களுக்கு மனிதனின் உள்ளக் கிடக்கை தெரியும். ஒருவன் யாக யக்ஞங்களைச் செய்யப்போகிறான் என்பதை அறிந்து அவன் வீட்டுக்கு வந்துவிடுவர்; அவர்களுகு மனிதனின் மன நிலை தெரியும்”.(சதபத—2-1-1-7)
‘ரிஷிகள் மறை மொழிகளை உதிர்ப்பார்கள்’; இதை அவர்களே பாடல்களில் சொல்லி இருக்கிறார்கள் கடவுளுக்குப் பிடித்தது மறை மொழி (ரஹசிய மொழி) என்று ரிக் வேதத்திலும், பிராமணங்களிலும், பல இடங்களில் திரும்பச் திரும்பச் சொல்கின்றனர்.

இது புரியாத காமாலைக் கண்ணர்களும், அரை வேக்காட்டு வெள்ளைத் தோல் அறிஞர்களும், அவர்களைப் பின்பற்றும் மார்கஸீய வாந்திகளும், வேதங்கள்- குறிப்பாக பிராமணங்கள் உளறல்கள் என்று எழுதிவைத்தனர். அதாவது அவர்களுடைய சிற்றறிவுக்கு எட்டாத விஷயங்களை சிறு பிள்ளைத்தன மான பேச்சு என்று எழுதிவைத்தனர்
ஒரு சிறிய எடுத்துக் காட்டு மட்டும் தருகிறேன்:
நெருப்பை, தீயை, அக்கினியை திருவள்ளுவர் திருக்குறளில் (306) “சேர்ந்தாரைக்கொல்லி” என்பார். அதாவது நெருப்பு யாரை நண்பராக்கிக் கொள்கிறதோ அந்த நண்பரையே கொன்று விடுவான்; இது சம்ஸ்கிருதச் சொல்லின் மொழி பெயர்ப்பு (வள்ளுவன் மாபெரும் சம்ஸ்கிருத அறிஞன் என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க)
வேதத்தில் இதையே அக்னி பகவான் ‘பெற்றோரைக் கொல்பவன்’ என்று
‘போற்றுகின்றனர்”. வெள்ளைக்காரர்களில் திருடர்களானவர்கள் ‘பாருங்கள் பெற்றோரைக் கொல்பவரை இந்துக்கள் வழிபடுகின்றனர்’ என்பர். அவர்களில் நல்லெண்ணம் படைத்த சிலர், ‘ஆஹா என்ன அற்புதமான கற்பனை; என்னே அருமையான உவமை’ என்றெல்லாம் புகழ்வர்.
அதாவது காடுகளில் இரண்டு மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தீ ஏற்பட்டால். அந்தத் தீ தோன்றிய இரண்டு மரங்களை (பெற்றோர்கள்) அது அழிப்பதுடன் அது காட்டையே அழித்துவிடும் இதைத்தான் கவிதை நயம்பட வேத கால ரிஷிகள் பாடினர். அரணிக் கட்டையை வைத்து தீ உண்டாக்கி யாக யக்ஞங்களைச் செய்வது அக்கால வழக்கம்; அதிலும் ஒரு கட்டையை ஆண் என்றும் மற்றொரு கட்டையை பெண் என்றும் சொல்லுவர். ஆக, ‘பெற்றோரைக் கொல்லி’ என்பதும் ‘’சேர்ந்தாரைக் கொல்லி’’ என்பதும் கவிதை நயம் சொட்டும் கற்பனை ஆகும். இது போல நிறைய விஷயங்கள் வேத கால இலக்கியங்களில் உள.

அது புரியாதோர் அல்லது வேண்டுமென்றே புரியாதமாதிரி நடித்தவர்கள் வேதங்களை சிறு பிள்ளைப் (Childish, Silly) பேச்சு என்று சொன்னார்கள்; முன்னரே “க” என்ற எழுத்து பற்றி வேத கால ரிஷிகள் பாடிய சிலேடைக் கவிதை புரியாமல் வெள்ளைக்காரர்கள் திரு திரு என்று திருட்டு முழி முழித்தது பற்றி எழுதினேன் ( சம்ஸ்கிருதத்தில் ‘க’ என்றால் பிரம்மா; ‘க’ என்றால் யார்?) இந்தச் சிலேடைப் பொருள் விளங்காதவர்கள், கடவுள் பெயரே தெரியாமல் யார் யார் என்று கேட்டு கவிதை பாடியுள்ளனர் என்று எழுதினர். எந்த ஒரு விஷயத்தையும் விரும்பாவிட்டால் திரித்துக் கூற முடியும் என்பதை திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நாம் கண்டு இருக்கிறோம். மேலும் இவர்களில் எவனும் யோக்கியன் இல்லை என்பது, அவர்கள் வேறு எந்த சமயப் புத்தகத்தையும் இப்படி ஆராயவுமில்லைக், குறை கூறவும் இல்லை என்பதில் இருந்தே தெரியும்.
-சுபம்–