பாரதியாருடன் ஒரு சந்திப்பு (Post No.8661)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8661

Date uploaded in London – – 11 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

செப்டம்பர் 11 – மஹாகவிக்கு அஞ்சலி!

மஹாகவி பாரதியாருடன் ஒரு சந்திப்பு:  வழிகாட்டும் பாடல்கள்!

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரை நினைவு தினமான இன்று (செப்டம்பர் 11), சந்திக்கிறோம். அவரது வழி காட்டும் பாடல்களைப் பெற ஆவலுடன் நிற்கிறோம். இதோ மஹாகவி வந்து விட்டார்.

வணக்கம் கூறுகிறோம். ‘பலே பாண்டியா’ வந்து விட்டாயா, கேள்’ என்கிறார்.

இதோ தொடர்கிறது நமது உரையாடல்!

கேள்வி : தேச பக்தி பெருக ஒரு வழி?

பாரதியார் பதில் : “வந்தே மாதரம் என்போம்

                எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்”

கேள்வி: நமது நாட்டின் பெருமை பற்றி..?

பதில்: ஞானத்திலே பர மோனத்திலே – உயர்

     மானத்திலே அன்ன தானத்திலே

   கானத்திலே அமுதாக நிறைந்த

     கவிதையிலே உயர் நாடு

கே: பிரிவினை சக்திகள் தேசத்தைத் துண்டாட நினைக்கின்றனவே..?

ப : நெஞ்சில் உரமுமின்றி   

       நேர்மைத் திறமுமின்றி

   வஞ்சனை செய்வாரடி

      வாய்ச்சொல்லில் வீரரடி

கே: இவர்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது..?

ப :  தீயோர்க்கு அஞ்சேல்

கே: பிரிவினைவாதிகளின் எதிர்காலம் என்ன”

     “பேயவள் காண் எங்கள் அன்னை

        பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை!”

     பூமியினும் பொறை மிக்குடையாள் உருப்

       புண்ணியமாம் எங்கள் தாய் – எனில்

     தோமிழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும்

        துர்க்கையுமாம் எங்கள் தாய்

     நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

          நலம் புரிவாள் எங்கள் தாய் – அவர்

     அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

         ஆனந்தக் கூத்திடுவாள்.

கே: அனைவரின் குணமும் உயர்ந்திட வழி?

ப: கணபதி ராயன் – அவன் இரு

      காலைப் பிடித்திடுவோம்

   குணம் உயர்ந்திடவே – விடுதலை

      கூடி மகிழ்ந்திடவே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கே: நாட்டு மக்களுக்கு உங்கள் செய்தி..?

ப :   விடுதலை நாடி

     எய்திடும் செல்வ எழுச்சியிற் களிப்போம்

     மெய்திகழ் ஒற்றுமை மேவுவோம்; உளத்தே

     கட்டின்றி வாழ்வோம்; புறத்தளைக் கட்டினை

     எட்டுணை மதியாதேறுவோம்; பழம்போர்க்

     கொலைத் தொழில் கருவிகள் கொள்ளாதென்றும்

     நிலைத்தன ஆகிய நீதிக் கருவியும்

     அறிவும் கொண்டே அரும் போர் புரிவோம்

கே: தமிழ் என்றும் வாழ வழி?

ப:    பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

       தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

    இறவாத புகழுடைய புது நூல்கள்

       தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்

     மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

       சொல்வதிலோர் மகிமை இல்லை

     திறமான புலமை எனில் வெளிநாட்டோர்

         அதை வணக்கம் செய்தல் வேண்டும்

கே: இதற்கு வழி என்ன?

ப: யவனர் போல் முயற்சி கொள்

கே: தலைமை இடத்தைப் பிடிக்க வழி?

ப: அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்

   அனலைப் பணிந்து மலர் தூவுவோம்

   தமிழில் பழமறையைப் பாடுவோம் – என்றும்

     தலைமை, பெருமை, புகழ் கூடுவோம்

கே: தலைமை, பெருமை, புகழ் பெற சூத்திரங்கள் வடிவில் மூன்றே மூன்று வரிகள்..?

ப:   நொந்தது சாகும்

     வீரியம் பெருக்கு

     தேசத்தைக் காத்தல் செய்!

கே: மேன்மை பெற வழி?

ப:  கூடித் தொழில் புரிதல் வேண்டும் – நெஞ்சக்

       குடைச்சல் எல்லாம் மெல்லச் சரிப்படுத்தி

    நீடித்த நன்மையினைக் கருதி – நல்ல

       நீதி தவறாதபடி பாகம் இயற்றிப்

    பேடிப் பதர்களைப் பின் விலக்கிப்- பொது

       பெரும்பயன் கருதித் தம் சிறு பயனை

    வேடிக்கை போல் உதறித் தள்ளிப் – பொது

       வெற்றியினை நாடுவர் மேன்மை பெறுவார்

கே: எங்களுக்கு என்ன செய்தி?

ப : நல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது!

    சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது!

    வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது!

    தர்மம் பெருகுது! தர்மம் பெருகுது!

நல்ல செய்தி பெற்ற மன மகிழ்ச்சியுடன் பாரதியாரை வணங்குகிறோம்.

புன்முறுவலுடன் ஆசி தருகிறார். விடை பெறுகிறோம். தேசமும் தெய்வமும் இரு கண்கள் எனப் புரிந்து கொண்டோம். முன்னேறவும் முதலிடத்தைப் பிடிக்கவும் முயற்சி தேவை என்பதையும் உணர்ந்து கொண்டோம்.

சேர்ந்து செயல்படுவோம்; பாரதம் உலகின் தலைமை பீடத்தை அடைய ஓயாது உழைப்போம்! வாழ்க பாரதி திருநாமம்.

tags– பாரதி, சந்திப்பு

***

டாக்டர் இரா.நாகசாமியுடன் சந்திப்பு (Post No. 4162)

S Nagarajan, Dr Nagaswamy and london swaminathan

 

Written by London Swaminathan

 

Date: 25 August 2017

 

Time uploaded in London- 20-27

 

Post No. 4162

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

நான் எம்.ஏ. வரலாற்று (M. A. History) மாணவன். மதுரை தினமணியில் உதவி ஆசிரியராக ( Senior Sub Editor, Dinamani, Madurai) வேலை பார்த்தபோது  — 1977 ஆம் ஆண்டு என்று ஞாபகம்– டாக்டர் இரா.நாகசாமி தொல்பொருட்  துறை இயக்குநராக (Director of Archaeology)  இருந்தார். அதற்கு முன்னர் அந்த இலாகாவை எல்லோரும் “புதை” பொருள் ஆராய்ச்சி இலாகா என்று எழுதி வந்தோம். என்ன நிதர்சனமான உண்மை!! அது அப்படித்தான் “புதை பொருள்” ஆராய்ச்சி இலாகாவாக இருந்தது! எவருக்கும் அப்படி ஒரு இலாகா இருப்பதே தெரியாது! டாக்டர் இரா. நாகசாமி பொறுப்பேற்றவுடன் அது தொல்பொருட் துறை என பெயர் பெற்றது. நாள் தோறும் நாங்கள் தினமணியில் ஏதாவது ஒரு கல்வெட்டு கண்டுபிடிப்புச் செய்தியைப் போடுவோம்.

 

டாக்டர் நாகசாமி சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆனால் சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றின் கரை கண்டவர். அது மட்டுமல்ல. அதை ஆங்கிலத்தில் அழகாக தொகுத்து வழங்க வல்லவர். தமிழனுக்கு ஒரு பெரிய வீக்னெஸ் (Weakenss) உண்டு. தமிழைத் தவிர வேறு மொழி இலக்கியம் தெரியாது. ஆகையால் கிணற்றுத் தவளையாக ஏதாவது உளறிக் கொண்டிருப்பான். அப்படி இல்லாமல் நாகசாமி அவர்கள் மும்மொழி பாண்டித்தியம் பெற்றதால் அவருக்கு உலகம் முழுதும் புகழ். இங்கு லண்டனுக்கு வரும்போதெல்லாம் வீட்டிற்கு அழைப்பேன்.

Dr Nagaswamy with his awards

1977ம் ஆண்டில் அவர் பேசிய ஒரு கூட்டத்தில் பத்திரிக்கை நிருபர் போல நானும் அமர்ந்தேன். அதில் 40+ தமிழ் ஆசிரியர்களுக்குக் கல்வெட்டுப் பயிற்சி தருவதாகவும் சிதம்பரம் முதல் திருவனந்தபுரம் வரை சுமார் 1000 மைல் இலவச தொல்பொருட் துறை சுற்றுப் பயணம் அதில் அடக்கம் என்றும் பத்திரிக்கை நிருபர் கூட்டத்தில் அறிவித்தார். உடனே அவரிடம் நான் சென்று ‘நானும் ஒரு ஆசிரியர்’ (பத்திரிக்கை உதவி ஆசிரியர்) என்றும் ‘இடமிருந்தால் நானும் வரலாமா?’ என்றும் கேட்டேன். ‘தாராளமாக வாருங்கள்’ என்றார். உடனே அலுவலகத்துக்குச் சென்று அவர் வழங்கிய பேட்டியின் சாராம்சத்தை எழுதிவிட்டு என் பாஸ் (boss)ஸிடம் லீவு கேட்டேன். லீவும் கிடைத்தது. எங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பரும் சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியருமான வி.ஜி. சீனிவாசனும் அந்தப் பயணத்தில் வந்ததால் ஆயிரம் மைல் பயணமும் இனிதே முடிந்தது.

 

அது பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.

 

இவ்வளவு காலம் — நீண்ட நெடுங்காலம்– தொடர்பு இருந்ததால் இந்தியாவுக்குச் செல்லும்போதெல்லாம அவரை சந்திப்பது வழக்கம். அவர் லண்டனுக்கு பல நாடகக் குழுக்களை  அழைத்து வந்த போதெல்லாம் அவருடனே சென்று கூட்டங்களில் பங்கு கொள்வேன். பி.பி.சி. BBC தமிழ்ழோசையில் வேலை பார்த்தபோது அவரைச் சில முறை பேட்டி கண்டு அதை பி.பி.ஸி.யில் ஒலிபரப்பினேன். நேயர்களின் பெருத்த ஆதரவு கிடைத்தது. அவர் வரும் போது அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிமேகலை, ராஜேந்திர சோழன் முதலிய நாடகங்களை லண்டனில் உள்ள கோவில்கள் சார்பாகவும், சவுத் இண்டியன் சொஸைட்டி South Indian Society சார்பாகவும், பிரிட்டிஷ் மியூசியம், விக்டோரியா ஆல்பெர்ட் மியூசியம் சார்பாகவும்  மேடை எற்றினோம். லண்டன் வாழ் தமிழர்களுக்கு அது பெரிய விருந்து. வெள்ளைக்கார இடங்களுக்குச் சென்றபோது ஆங்கில மொழி பெயர்ப்பும் உண்டு.

 

Dr Nagaswamy, Dr N Kala, S Swaminathan and S Nagarajan

சென்னையில் சந்திப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னைக்குப் புறப்பட இருந்த தருணத்தில் எல்லா விமானங்களும் ரத்தானதால் டாக்டர் நாகசாமி அவர்களைப் பார்க்காமலேயே லண்டனுக்குத் திரும்பினேன். இந்த முறை ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன் ஜெட் களைப்பு Jet lag பற்றிப் பாராமல் ஒரு ஆட்டோவில் நானும் என் அண்ணனும் அவரைப் பார்க்க பெஸண்ட் நகருக்கு விரைந்தோம்.

 

இன்முகத்துடன் வரவேற்றார்; இது மரியாதையின் (Courtesy Call) பொருட்டு நடைபெறும் சந்திப்புதான் என்றும் அதிகம் அவரைத் தொந்தரவு செய்யப் போவதில்லை என்றும் பீடிகை போட்டுப் பேச்சைத் தொடங்கினேன். அவரது மகள் டாக்டர் என். கலா எங்களுக்கு இனிப்பும் தேநீரும் வழங்க, டாக்டர் ரமாதேவி என்ற மாணவி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள உதவ, ஒரு மணி நேரம் ஓடிப் போயிற்று!

 

என்ன பேசினோம்?

 

நான் அவருடைய லேடஸ்ட் (Latest Research) ஆராய்ச்சி பற்றிக் கேட்டு பேச்சைத் துவக்கினேன். திருக்குறளின் அறத்துப் பாலும், பொருட்பாலும் அப்படியே சம்ஸ்கிருத நூல்களில் இருப்பதாகவும் அது பற்றி எழுதப் போவதாகவும் சொன்னார். ஜி.யூ. போப் எப்படி திருக்குறளை கிறிஸ்தவ நூல் போலத் திரிக்க முயன்றார் என்பதையும் எடுத்துரைத்தார்.

 

பின்னர் நான் அவரிடம் இரண்டு வேண்டு கோள்களை முன்வைத்தேன்:

  1. அவருக்கும் காஞ்சி பரமாசார்ய சுவாமிக ளுக்கும் நடந்த உரையாடல்களை எழுத வேண்டும்
  2. சத்திரங்கள் (Choultries) என்பது இந்தியாவின் ஒப்பற்ற பண்பாட்டின் தடயம்; வேறு உலகில் எங்கும் காணாத புதுமை; ஆகையால் இது பற்றி கிடைக்கும் தகவல்களை அவர் எழுத வேண்டும்–

என்று கேட்டுக் கொண்டேன்.

Dr R Nagaswamy and his student Dr Ramadevi

உடனே அவர் சத்திரம் பற்றியும், பிராமணர் குடியேற்றத்துக்கு சோழ மன்னர்கள் எடுத்த முயற்சிகளையும் புள்ளி விவரம் வாரியாகச் சொன்னார்.

இந்த வயதிலும் அவர் எல்லா எண்கள், புள்ளி விவரங்களைப் புத்தகத் துணை இல்லாமல் வாரி வழங்கியது எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

எனது அண்னன் நாகராஜன், உடனே அவர் யூ You Tube ட்யூபில் நாள் தோறும் இது போல ஏ தாவது சொன்னால் பலனுடையதாக இருக்கும் என்றான். அருகில் நின்ற டாக்டர் ரமாதேவியிடம், அவரைப் போன்ற இளம் வயதினர் உதவி செய்தால், டாக்டர் நாகசாமி எளிதில் செய்யலாம் என்றான் . அந்தப் பெண்மணியும் ஆவன செய்வதாகக் கூறினார்.

 

டாக்டர் நாகசாமி கடைசியாக வெளியிட்ட நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவருடைய மகள் டாக்டர் கலா சென்னைப் பல்கலைக்கழக சைபர் க்ரைம் இயல் (Department of Cyber Crime) தலைவி என்றும் அவரும் சிறுவர்களுக்காக ஒரு நூல் எழுதி இருப்பதாகவும் சொல்லி ஒரு நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

அடுத்த முறை அவருடைய லண்டன் பயணம் எப்போது? என்று ஆவலுடன் கேட்டேன். வயதாகிவிட்டதால் அவர் ‘பார்க்கலாம்’ என்று கமிட் commit செய்யாமல் பதில் கொடுத்தார். ஏனென்றால் அவரை பிரிட்டிஷ் மியூசியம் அழைத்தது. அதாவது லண்டனிலேயே தங்கி அவர்கள் கருவூலத்தில் உள்ள இந்திய சிலைகளை ( Bronzes and Statues) அடையாளம் காண உதவி கேட்டனர். அவர்களே, இரண்டு மாதம் தங்க வசதி செய்வதாகவும் சொன்னார்கள். ஆனால் அப்படிப்பட்ட கமிட்மெண்டை Commitment – பணியை— ஏற்க முடியாத சுறுசுறுப்பான வாழ்வை உடையவர் டாக்டர் நாகசாமி. அவரை விட்டால் தெளிவாக, கன கச்சிதமாக சிலைகளை, செப்புத் திருமேனிகளை அடையாளம் காணுமறிவுடையோர் இல்லை என்றே சொல்லலாம்.

கற்றோருக்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்பு என்பதற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் டாக்டர் நாகசாமி. அவர் பேசும் பேச்சில் (Waste) வீண் என்று எதுவும் இராது. ஒவ்வொரு சொல்லும் அக்ஷர லக்ஷம் பெறும்.

 

ஒரு அறிஞர் இருக்கும் போதே — உயிர் வாழும்போதே— அவரை மதித்துப் போற்றி வாழ்த்தி வணங்குவதே சாலச் சிறந்தது. அவரைச் சந்தித்ததில் நானும் என் கடமையில் ஏதோ ஒரு பகுதியை நிறைவு செய்தது போல ஒரு உணர்வு.

 

வாழ்க நாகசாமி அவர்கள்! வளர்க அவர்தம் புகழ்!

–Subham–