Post 757 dated 24th December 2013.
ஹித ஹாரி, மித ஹாரி, ருது ஹாரி, சதா நிரோகி!
ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – பகுதி 3
(Please read first two parts posted earlier)
By ச.நாகராஜன்
.
சின்ன உண்மை
வியாதி இல்லாமல் வாழ ஒரு ரகசிய சூத்திரத்தை சரகர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:- ஹிதஹாரி, மிதஹாரி, ருதுஹாரி சதா நிரோகி! அதாவது எவன் ஒருவன் ஊட்டச் சத்தான உணவை உண்கிறானோ, கொஞ்சமாகச் சாப்பிடுகிறானோ, பருவகாலங்களுக்கேற்ற உணவைச் சாப்பிடுகிறானோ அவன் எப்போதும் வியாதியற்றவனாக இருப்பான்!
அல்பெரூனியின் வியப்பு
இந்தியாவிற்கு வந்து அதிசயங்களின் நாடாக இதைக் கண்ட அல்பெரூனி,” அவர்கள் (ஹிந்துக்கள்) சரகர் என்பவர் எழுதிய நூலைக் கொண்டுள்ளனர். அதுவே அவர்களின் இலக்கியங்களில் வைத்தியத்தில் மிகச் சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. த்வாபர யுகத்தில் அக்னிவேசர் என்ற பெயருடன் வாழ்ந்த ரிஷியே அவர் என்று அவர்கள் நம்புகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சரக சம்ஹிதை கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அராபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.
சரக சம்ஹிதைக்கு விளக்கவுரைகள்
பின்னால் தோன்றிய பெரும் ஆயுர்வேத நிபுணர்கள் சரகருக்கு முதலில் தங்கள் வணக்கத்தைச் செலுத்துவது மரபானது. சஹாசங்கா என்ற மன்னனின் (கி.பி.375-413) அரண்மனை வைத்தியரான பட்டர ஹரிசந்திரா என்பவர் ‘சரக வ்யாக்யா’ என்ற தனது நூலையும், வாக்பட்டரின் மாணவரான ஜேஜிதா என்பவர் ‘சரக ந்யாஸா’ என்ற தனது நூலையும் சரகரைப் போற்றும் வகையில் சரகர் பெயரைத் தமது நூலுக்குச் சூட்டினர்.
ஜேஜிதா ‘நிரந்தர பாத வ்யாக்யா’ என்று சரகரின் நூலுக்கு ஒரு விளக்கவுரை நூலையும் எழுதினார். பட்டர ஹரிசந்திரா எழுதிய நூலின் ஒரு பகுதி மட்டும் இன்று கிடைத்துள்ளது.
ஸ்வாமி குமாரா என்பவர் பஞ்ஜிகா என்று ஒரு விளக்கவுரையை எழுதியுள்ளார். இதிலும் ஒரு பகுதியே இன்று நமக்க்குக் கிடைத்துள்ளது.
ஜயந்த பட்டர் என்பவர் தனது நியாய மஞ்சரியில் இதுவரை தோன்றியவர்களுள் எல்லாம் அறிந்த அறிவாளி சரகரே என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏனெனில் சரகர் தனது சம்ஹிதையில் புகழ்பெற்ற 60 பேரை சுட்டிக் காட்டி மேற்கோளாக அவர்கள் கூறியதை எடுத்தாள்கிறார். வசிஷ்டர், ஜமதக்னி,பிருகு,வாமதேவர், ஆங்கீரஸர் போன்ற பெரும் மஹரிஷிகள் இந்த அறுபது பேரில் அடங்குவர்.
341+177+64 = 582
தாவர வகையிலான 341 மருந்துகளையும், மிருக வகையிலான 177 மருந்துகளையும் உலோகம் மற்றும் கனிமங்களின் அடிப்படையிலான 64 மருந்துகளையும் அவர் குறிப்பிடுகிறார். பாதரஸத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டாலும் அதன் மருத்துவப் பயன்பாட்டினை அவர் குறிப்பிடவில்லை.
அமெரிக்காவின் புகழ் பெற்ற மருத்துவ நிபுணரான ஜார்ஜ் க்ளர்க் என்ற அறிஞர் சரகரின் நூலை வரி வரியாகப் படித்து இப்படிக் கூறுகிறார்: “அவரது நூலைப் படித்து விட்டு இதை மட்டுமே நான் கூற முடியும்.
இன்றைய நவீன மருத்துவர்கள் தங்களது பார்மஸியிலிருந்து அனைத்து மருந்துகளையும் எறிந்து விட்டு சரகர் கூறிய முறைப்படி தங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்குவார்களானால் கல்லறையில் சவப்பெட்டி தயாரிப்பவர்களுக்கு மிகக் குறைந்த வேலையே இருக்கும். அத்துடன் ஊனமுற்றவர்களாக உலகில் மிகச் சிலரே இருப்பர்”
(If the physician of the present day world drop from the pharma copoeia all the modern drugs and treat their patients according to the method of Charaka there would be the least work for the undertakers and fewer chronic invalid to the world – Ceorge Clark)
சூத்ர ஸ்தானத்தில் எட்டாவது அத்தியாயத்தில் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான விதி முறைகளை சரகர் மிக விளக்கமாக்க் குறிப்பிடுகிறார்.
மிக நீண்ட விளக்கமாக அமையும் இந்தப் பகுதியில் சில விதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம். முழுக் குறிப்புகளையும் மூல நூலில் படித்து அவற்றைப் பின்பற்றலாம்.
பின்பற்றினால் இக உலகில் நூறு ஆண்டுகள் வாழ்வதோடு மறு உலகில் மேலான நல்ல ஆத்மாக்களுக்கான உலகை அடைவதும் நிச்சயம் என்று உறுதி படக் கூறுகிறார் சரகர்:
நூறு ஆண்டு வாழ்வதற்கான வழிகளில் சில முக்கியமானவை மட்டும்:-
1) தெய்வங்கள், ;பசுக்கள், அந்தணர்கள்,குருமார்கள்,வயதிலே பெரியோர்,ஆன்ம ஞானம் அடைந்த ஞானிகள், பாடம் கற்பித்த உபாத்தியாயர் ஆகியோருக்கு மரியாதை தந்து வணங்க வேண்டும்.
2) அக்னிக்கு ஆகுதி தர வேண்டும்.
3) நல்ல மூலிகைகளை அணிய வேண்டும்.
4) கால்களையும், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களையும் அவ்வப்பொழுது சுத்தம் செய்தல் வேண்டும்.
5) உடலைச் சமச்சீரற்ற நிலையில் அங்கங்களை வளைத்து இருத்தல் கூடாது
6) ‘ஹம்’ என்ற ஒலியை எழுப்பக் கூடாது
7) தேவையற்ற சாகஸ செயல்களைச் செய்யக் கூடாது
இப்படி அறநெறிகளைக் கூறும் பட்டியல் போல நூற்றுக்கும் மேற்பட்ட நெறிகள் அடங்கிய பெரிய பட்டியலை சரகர் அளிக்கிறார்.
ஆயுள் என்பதன் விளக்கம்
ஆயுள் என்பதை விளக்கும் போது அவர் கூறுவது இது தான்:
சரீரேந்த்ரிய சத்வாத்ம சம்யோகம் தாரி ஜீவிதம் I
நித்யகச்சானுபந்தஸ்ச பர்யாயைராயுருச்யதே II
இந்த ஸ்லோகத்தின் பொருள் :- ஆயுள் என்பது உடல்,இந்திரியங்கள்,மனம், ஆத்மா ஆகிய அனைத்தின் சேர்க்கையைக் குறிப்பதாகும். அதை தாரி (உடலானது அழிவதைத் தடுப்பதாகும்) என்றும், ஜீவிதா (உயிருடன் இருக்கச் செய்வது) என்றும், நித்யக (உயிர் இருப்பதற்கான ஆதாரம்) என்றும், அனுபந்த (உயிர் உடலை விட்டு மறு உடலுக்கு அல்லது ஒரு பிறப்பு விட்டு மறு பிறப்புக்குச் செல்வது) என்றும் கூறலாம்.
மகிழ்ச்சியுடன் நீண்ட நாள் வாழ்வதே மனித வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பதே சரக சம்ஹிதையின் சாரமாகும்!
நீண்ட ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ சரகரை வணங்கி அவர் காட்டிய வழியில் நடக்க வேண்டியது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.
**************** முற்றும்
•
contact swami_48@yahoo.com
Pictures are used from different sites;thanks.




You must be logged in to post a comment.