எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1079; தேதி:- 2 June 2014.
This article was already posted in English.
வால்மீகி முனிவர் எழுதிய யோகவாசிஷ்டம் என்னும் வடமொழி நூல் ஒரு அற்புதமான நூல். இதில் 32,000 ஸ்லோகங்கள் உள்ளன. மஹாபாரதம், கதா சரித் சாகரம் (கதை கடல்) என்னும் இரண்டு நூல்களுக்கு அடுத்தபடியாக “நீண்ட நூல் வரிசை”யில் இடம் பிடிக்கிறது இந்த அரிய, பெரிய புத்தகம். இதில் வரும் கதைதான் சுடாலாவின் கதை.
மாளவ தேச இளவரசன் சிகித்வஜன், அதாவது மயில்கொடியோன். சௌராஷ்டிர தேச இளவரசி சுடாலா. பேரழகி. அழகிற்கு மேல் அறிவு. பழங்கால உலகின் ‘‘அறிஞி’’ கார்க்கிக்கு நிகர்.
சுடாலாவுக்கும், சித்வஜனுக்கும் கொட்டு மேளம்–கல்யாணம்! இளம் தம்பதி அரசாங்க தம்பதிகள் அல்லவா? போகாத இடமில்லை, சுற்றாத ஊர் இல்லை. வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துத் தீர்த்து விடுகின்றனர். வயதான மாளவ தேச மன்னன் முழு அதிகாரத்தையும் சிகித்வஜனிடம் ஒப்படைத்து விட்டு வனத்துக்குச் சென்று (வானப் ப்ரஸ்தம்) விடுகிறான்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இந்த தம்பதிகளுக்கும் வாழ்க்கை புளித்து விடுகிறது. புதுமைகளைச் சாதிக்க உள்ளம் துடிக்கிறது. அறிவாளி சுடலா ஆன்மீகக் கடலில் நீந்தத் துவங்குகிறாள். ஆனந்தம், பேரானந்தம்!! நாளடைவில் முகம் ஒளிவிடத் துவங்குகிறது. கணவனுக்கு ஒரே ஆச்சரியம். “அன்பே உன் முகத்தில் புத்தொளியைக் காண்கிறேன். என்ன காரணம்? ஏதேனும் புதிய பவுடர், வாசனைப் பொடி, வாசனைப் பூச்சு, வண்ணத் திரவம் பயன் படுத்துகிறாயா?” என்று கேட்கிறான். அவள் “நாதா! நான் கண்ணாடியில் பார்க்கையில் புதுமை எதையும் காணவில்லை. ஆனால் என் உள்ளத்தில் உண்மை ஓளி வீசுகிறது. புதிய ஆனந்தம் மலர்ந்துள்ளது” என்கிறாள். பின்னர் அதற்கான காரணங்களை ஆன்மீக பரிபாஷையில் விளக்குகிறாள். அவனுக்கு அது அதிகம் விளங்கவில்லை. அவளுக்கு மனதில் ஒருகுறை! புதிய ‘’மேக் அப் (வாசனைப் பொடி) போடுகிறாயா’’ என்று கணவர் கேட்டுவிட்டாரே! என்று.
கணவனும் ஆன்மீகப் பாதையில் செல்ல முயல்கிறான். நாட்டை நன்றாக ஆட்சி செய்யும் மன்னனுக்கு மனதை ஆளத் தெரியவில்லை. இகலோக வாசனைகள் அவனை இழுத்துப் புரட்டி அடிக்கின்றன. ஆன்மீகத்தில் வளர முடியவில்லை. ஒரு நாள் மனைவியிடம், “நான் காட்டுக்குப் போகிறேன் அங்குதான் நல்ல தவம் செய்ய முடியும்” என்கிறான். அவளோ “நாட்டில் அடைய முடியாததைக் காட்டில் அடைவது எப்படி?” என்கிறாள். மறு நாள் காலையில் பாதி படுக்கை காலியாக இருக்கிறது! கணவன் இரவோடிரவாக கானகம் ஏகிவிட்டான்.
நாடாளும் பொறுப்பு முழுதும் பெண்ணரசியின் தலையில் விழுகிறது. நாட்டை நன்றாக ஆளுகிறாள். ஒரு நாள் கானகம் சென்று “சுக்கான் ஒடிந்த கப்பலைப் போல” காட்டில் திரியும் கணவன் முன், ஒரு (ஆண்) துறவி போல மாற்றுருவில் காட்சி தருகிறாள். அவளுடைய யோக சக்தியால் அவள் நினத்த உரு எடுக்க முடியும்!
“என் பெயர் கும்பா (ஆணின் பெயர்). நான் ஒரு துறவி. உன் மனக் கஷ்டம் எனக்குத் தெரியும். நீ மன அமைதி பெற நான் வழி சொல்லித் தருகிறேன். வெளியில் காணப் படும் வசதிகளை மட்டும் துறப்பது மன அமைதி நல்காது. பற்றற்ற மன நிலை வேண்டும்”– என்றெல்லாம் உபதேசம் செய்தவுடன் சிகித்வஜன் ஆழ்ந்த தியானத்தில் இறங்கி விடுகிறான்.
கும்பன் (சுடாலா) ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி நாட்டின் தலை நகருக்குப் போய் அரசுப் பணிகளைக் கவனிக்கிறாள். சின்னாட்களுக்குப் பின் காட்டிற்கு வந்தபோது சிகித்வஜன் கற்பாறை போல் அமர்ந்து சமாதி நிலையில் இருக்கிறான். கும்பன் திரும்பிச் சென்று மீண்டும் வந்தபோதும் இதே நிலை! யோக சக்தியால் சிங்க நாதம் ( சிம்ம கர்ஜனை) செய்தும் பலனில்லை. பின்னர் தன் யோக சக்தியால் சிகித்வஜனுடைய மனதில் வேற்றுருவில் நுழைந்து சமாதியைக் கலைக்கிறாள்.
முதல் சோதனை
கணவனைச் சோதிக்க எண்ணி பல சோதனைகளை முன்வைக்கிறாள். ஒரு நாள் வெளியே போய்விட்டுக் கும்பன் (சுடாலா), முகத்தைச் சோகமயமாக வைத்துக் கொண்டு திரும்புகிறான். உடனே சிகித்வஜன், “துறவியாரே, உங்கள் முகம் வாட்டம் அடைந்திருக்கிறதே; காரணம் என்னவோ? என்று கேட்கிறான். கும்பனோ இந்திரலோகத்துக்குப் போய்விட்டு வரும் வழியில் துர்வாச முனிவர் பற்றி தமாஷ் (ஜோக்) செய்ததாகவும் அவர் தான் இரவு நேரம் முழுதும் பெண்ணுருவுக்கு மாறி விடுவேன் என்று சாபம் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறான்.
இதைக் கேட்ட சிகித்வஜன், அதனால் என்ன? நீங்கள் இரவில் பெண் ஆனால் தனியாக ஒரு புறத்தில் ஒதுங்கி இருந்துவிட்டுப் போங்களேன் என்று சொல்லிவிடுகிறான். இரவும் வந்தது. கும்பன் ஒரு மறைவிடத்தில் நின்றுகொண்டு தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் மிகவும் அங்கம் அங்கமாக வருணிக்கிறான். பின்னர் தான் வெளியே வரப் போவதாக எச்சரித்துவிட்டு பேரழகி போலத் தோன்றுகிறான். இனி தன் பெயர் மதனிகா என்றும் சொல்லிக் கொள்கிறான். மெல்ல மெல்ல நெருங்கிவந்து அவன் தோள் மீது கைகளை வைத்து நானும் நீயும் கணவன் மனைவி போல வாழ்வோம் என்றவுடன் சிகித்வஜனும் உடன்படுகிறான். ஆனால் அவன் மன நிலை துறவி நிலையீல் இருக்கிறது. உடல் மட்டும் பற்று இல்லாமல் மதனிகா இழுத்த இழுப்புக்கு எல்லாம் செல்கிறது. மதனிகாவுக்கு (கும்பன்=சுடாலா) மிகவும் சந்தோஷம், தனது கணவன் முதல் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டான் என்று.
இரண்டாம் சோதனை
பகல் நேரத்தில் எல்லாம் கும்பனாகவும் இரவு நேரத்தில் எல்லாம் மதனிகாவாகவும் காட்சி தரும் சுடாலா ஒரு மாய இந்திரனை தோன்றும் படி செய்கிறாள். அவன் சிகித்வஜனிடம் சென்று, “நாட்களை எல்லாம் இப்படி வீண் அடிக்கிறீர்களே! நீங்களோ தவத்தில் உயர் நிலையை எய்துவிட்டீர்கள். இந்திர லோக இன்பங்களை அனுபவிக்க என்னுடன் வாருங்களேன்” என்கிறான். அதற்கு சிகித்வஜனோ இன்பம் என்பது நம்முள் இருக்கும் போது வெளியே தேடுவது அறிவுடைமை ஆகாது” என்று கூறுகிறான். மாய இந்திரன் திடீர் என்று மறைந்து விடுகிறான். கும்பனுக்கு ( சுடாலா) ஏக மகிழ்ச்சி. தன் கணவன் இரண்டாம் சோதனையிலும் வெற்றி பெற்றுவிட்டான் என்று.
முதல் சோதனை காமம் தொடர்பான சோதனை; இரண்டாம் சோதனை மோஹம் தொடர்பான சோதனை. இதில் வெற்றி பெற்ற கணவனுக்கு க்ரோதம் (கோபம்) தொடர்பான சோதனையைத் தர சுடாலா திட்டம் தீட்டுகிறாள்.
மூன்றாவது சோதனை
ஒரு நாள் மாலை நேரத்தில், தனது யோக சக்தியால், அழகிய ஆண்மகனை உருவாக்குகிறாள். மதனிகா உருவில் அவனைக் கட்டித் தழுவி இன்பம் துய்க்கிறாள். வெளியில் இருந்து வந்த சிகித்வஜன் இதைப் பார்த்தும் மனம் சஞ்சலப்படவில்லை; கோபப்படவும் இல்லை. மதனிகா மெதுவாக அந்த ஆண்மகனை அனுப்பிவிட்டு சிகித்வஜனிடம் மன்னிப்பு கேட்கிறாள். தன்னை மீண்டும் மதனிகா என்னும் மனைவியாகக் கருத வேண்டும் என்றும் இனிமேல் தப்பு செய்ய மாட்டேன் என்றும் கெஞ்சுகிறாள்.
சிகித்வஜன், ‘’அதனால் என்ன, நீ உணர்ச்சிக்கு அடிமையாகி இதைச் செய்துவிட்டாய். அது உன் முடிவு;– எனக்குத் தொடர்பேதும் இல்லை.கணவந்மனைவி உறவு இனி தேவை இல்லை. இனி நீ இரவு நேரத்தில் மதனிகாவாகவும், பகல் நேரத்தில் கும்பனாகவும் என்னுடன் ‘’நண்பன்’’ என்ற முறையில் தங்கி இருக்கலாம் என்கிறான். கொஞ்சமும் கோபம் அடையவில்லை. மதனிகாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மூன்றாவது சோதனையிலும் கணவன் வெற்றி பெற்று விட்டான் என்று!
உடனே தனது சுயரூபத்தில் சுடாலாவாகத் தோன்றுகிறாள். சிகித்வஜனுக்கு ஒரு பக்கம் குழப்பம், மறு பக்கம் வியப்பு. தானே மதனிகாவாவும், கும்பனாகவும் தோன்றி அவனைச் சோதித்ததாகவும் அவன் இப்போது மிக உயர்ந்த ஜீவன் முக்தன் ( நடமாடும் தெய்வம்) நிலை அடைந்து விட்டதாகவும் சொல்கிறாள். தன்னை மீண்டும் பணிவுடைய சுடாலா என்னும் மனைவியாக ஏற்க வேண்டும் என்றும் மன்றாடுகிறாள். சிகித்வஜன், “வா , நானும் நீயும், துறவி ஆவோம்” என்று சொல்கிறான். ஆனால் சுடாலாவோ, நீங்கள் ராஜாவாக ஆளவேண்டும். மக்களுக்கு இப்போதுதான் சேவை செய்ய முடியும் என்கிறாள். உடனே இரண்டாவது பட்டாபிஷேகம் தடபுடலாக ஏற்பாடாகிறது. அவர்கள் இருவரும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இனிதே ஆட்சி புரிகின்றனர் என்று யோக வாசிஷ்டம் கூறுகிறது.
(வடமொழியில் 10,000 ஆண்டுகள், 60,000 ஆண்டுகள், 60,000 மனைவியர் என்று சொல்வதெல்லாம் மரபுச் சொற்றொடர்கள். அதன் உண்மைப் பொருள் “நீண்ட நெடுங்காலம்” என்பதே!)




You must be logged in to post a comment.