வள்ளுவரின் சுடும் குறள்கள்! (Post No. 2469)

punul valluvar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 8 January 2016

 

Post No. 2469

 

Time uploaded in London :–  5-16 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

திருக்குறள் தெளிவு

 

வள்ளுவரின் சுடும் குறள்கள்!

 

.நாகராஜன்

 

சுடும் குறள்கள் ஐந்து

 

வள்ளுவரின் சில குறள்கள் நம்மைக் குளிர்விக்கும். சில அறிவுரை தரும். சில கேள்விகளைக் கேட்கும். சில கேள்விகளைக் கேட்டு பதிலும் தரும்.

இன்னும் சில குறள்களோ  சுடும்

 

என்ன சுடுமா? ஆம், சுடும் குறள்கள் அனைத்தையும் இங்கு பார்ப்போம்.

 

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை    உள்ளினும் உள்ளம் சுடும்   (குறள் 799)

 

 

ஒருவனின் உள்ளம் எப்போது சுடும்?

பதில் தருகிறார் வள்ளுவர்.

மரணம் வரும் போது நினைத்தால் கூட (அடுங்காலை) உள்ளம் சுடும் – ஒரு கேடு நமக்கு வரும் போது உதவாமல் ந்ம்மைக் கைவிடுபவரின் நட்பை மரண நேரத்தில் நினைத்தால் கூட உள்ளம் சுடும்!

 

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்                உள்ளினும் உள்ளம் சுடும்    (குறள் 1207)

 

 

எனது காதலனை மறக்காமல் இடை விடாது நினைத்துக் கொண்டிருக்கும் போதே இந்த உள்ளம் சுடுகிறதே, ஒரு வேளை நினைக்காமல் மறக்க நேர்ந்தால் நான் என்ன ஆவேன்?

 

காதல் பற்றிய உணர்வை ஒரு பெண் சொல்லுகின்ற குறளில் உள்ளம் ஏன் சுடுகிறது என்பதை அறிய சுவையாக இருக்கிறது.

valluvar iyengar

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்                  தன்னெஞ்சே தன்னைச் சுடும்       (குறள் 293)

 

 

உன் நெஞ்சம் தானாகவே உன்னைச் சுடும் என்ற எச்சரிக்கைக் குறள் இது. எப்போது சுடும்?

தன் நெஞ்சம் அறிந்த உண்மையைக் கூறாமல் பொய் கூறினால் தன் நெஞ்சே தன்னைச் சுடும்.

அந்தச் சூடு இருக்க, தனியே வேறு இறந்த பிறகு மயானத்தில் சுட வேண்டாம். இறந்த பின் சுடுவது சில மணி நேரமே. ஆனால் நெஞ்சம் சுடுவதோ வாழ்நாள் இருக்கும் வரைக்கும்!

 

 

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்           ஏமப் புணையைச் சுடும்    (குறள் 306)

 

 

சேர்ந்தவுடன் ஒருவரை அழிக்கும் அபூர்வப் பொருள் உள்ளது. அது தான் நெருப்பு. சேர்ந்தாரைக் கொல்லி – நெருப்பு.

ஏமப்புணை என்பது நமக்குத் துணையாக இருக்கும் பாதுகாவலர்.

நெருப்பு பரவினால் அனைத்தையும் அல்லவா சுட்டெரிக்கும்.

 

சினம் அதாவது கோபம் நெருப்பு போன்றது. அது கோபப்பட்டவரை மட்டும் அது அழிக்காது. உடன் துணையாக இருக்கும் பாதுகாவலரையும் சுடும்.

சேர்ந்தாரைக் கொல்லி உடன் இருந்தாரையும் அல்லவா சுட்டு விடும்! ஜாக்கிரதை!

 

 

tirukkural seminar

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்             நாணின்மை நின்றக் கடை    (குறள் 1019)

 

ஒருவன் தான் கொண்ட கொள்கை தவறினால் (கொள்கை பிழைப்பின்) அது அவனுடைய குலத்தைச் சுடும்; அழிக்கும். ஆனால் செய்யத் தகாத செயல்களைச் செய்வதில் வெட்கப் படாவிட்டால் (நாணின்மை நின்றக் கடை) எல்லா நன்மையையும் அது அழிக்கும் (நலம் சுடும்)

 

ஐந்தும் சுடும் குறள்கள்.

 

ஒன்று உன் உள்ளத்தைச் சுட்டே உன்னை சாகும் வரைக்கும் எரிக்கும் என்கிறது — நெஞ்சம் அறிந்து பொய் சொல்லாதே

அடுத்தது மரண சமயத்தில் நினைத்தால் கூட உள்ளம் சுடும் என்கிறது -ஆபத்துக் காலத்தில் கைவிட்ட நண்பனை நினைத்தால்!

 

இன்னொன்று காதலியின் உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. சதா ‘அவன்’ நினைவாக இருக்கும் போதே சுடுகிறதே, மறந்தேன் என்றால், ஐயையோ… அந்த நிலையை நினைக்கவும் முடியுமா?

 

அடுத்தது கொள்கையை விட்டு விட்டால் குலம் அழியும்; வெட்கப்பட வேண்டிய செயல்களை விடாவிட்டால் எல்லா நன்மையும் அழியும் என்கிறது.

 

இன்னொன்று, கோபப்படாதே. கோபம் சேர்ந்தவரை அழிக்கும் சேர்ந்தாரைக் கொல்லி. அது உன்னை மட்டும் அழிக்காது, உன் துணையையும் அழித்து விடும் என்கிறது.

 

 

அபூர்வமான சுடும் குறள்கள் நெஞ்சத்திற்கு இதமான உண்மைகளை அல்லவா கூறுகிறது!

 

valluvar gold

 

சுடுவதை ஒப்பிடும் குறள்கள் நான்கு

 

 

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்                 சுடச்சுட நோற்கிற்பவர்க்கு  (குறள் 267)

 

தவம் செய்கிறான் ஒருவன் அவனது தவம் மேம்பட மேம்பட ஒளி மயம் ஆவான். எது போல? சுடச் சுட  மாசு நீங்கி ஒளிரும் பொன் போல! தவம் மாசைக் களையும். மாயையை அழிக்கும். ஒளியைத் தரும்!

 

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல                        விடிற் கடல் ஆற்றுமோ தீ    (குறள் 1159)

 

 

நெருப்பு தன்னைத் தொட்டவரை மட்டும் தான் சுடும். ஆனால் இந்த காம நோய் இருக்கிறதே, விட்டு நீங்கியவரை கூட சுடுகிறதே, அந்த நெருப்புக்கு இந்த ஆற்றல் இல்லையே!

நெருப்புக்கும் காம நோய்க்கும் உள்ள வேற்றுமை தெரிந்து விடுகிறது! எப்போதும் உடலை தகிக்க வைப்பது காமம்!

 

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்              பெரியார்ப் பிழைத்தொழுகுவார்   (குறள் 896)

 

தீயினால் சுடப்பட்டால் கூட ஒரு வேளை உயிர் தப்பி வாழ ஒருவனுக்கு வழி உண்டு. (எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்)

ஆனால் ஒருவன் பெரியோரிடத்தில் குற்றம் செய்து விட்டாலோ உய்வதற்கு வழியே இல்லை.

பெரியோரிடம் தவறு இழைக்காதே!

 

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே                  நாவினால் சுட்ட வடு  (குறள் 129)

 

 

தீயினால் சுட்ட புண் கூட ஆறி விடும். ஆனால் நாவினால் ஒருவனைச் சுட்டு விட்டால் அது அவன் நினைவில் நீங்காத வடுவாக அல்லவா நிலைத்து நிற்கும். நாவினால் யாரையும் சுடாதே!

 

எப்படி இருக்கிறது ஐந்து சுடும் குறள்களும் நான்கு சுடுவது பற்றி ஒப்பிடும் குறள்களும்.

 

நவ (9) குறள்களும் நவமான (புதிதாக இருக்கும்) குறள்கள் – இன்று நோக்கினாலும், என்று நோக்கினாலும்!

*******